Print Version|Feedback
Behind the UAW’s "support" for the Maruti Suzuki workers
மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு UAW தரும் "ஆதரவு"க்குப் பின்னால்
By Jerry White
5 December 2012
வட இந்திய மாநிலமான ஹரியானாவில் இருக்கும் மாருதி சுசுகி இந்தியா (MSI) கார் ஒன்றுசேர்ப்பு ஆலையில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கம் (UAW) ஆட்சேபக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
UAW தலைவரான பாப் கிங் இந்த ஜப்பானிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷின்ஸோ நகானிஷிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஆலை நிர்வாகமும் ஹரியானா மாநில அரசாங்கமும் மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தை (MSWU) அங்கீகரித்து கூட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் வந்திருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 149 தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எதிராக போலிஸ் மேற்கொண்டு வருகின்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அவர் அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரும் வாகன உற்பத்தி ஆலைகளில் ஒன்றான இந்த MSI தொழிற்சாலையில் இருக்கும் சாமானியத் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருக்கும் நிறுவன தொழிற்சங்கத்திற்கு எதிராக MSWU ஐ ஒழுங்கமைத்துள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு இந்தியாவின் ஆளும் உயரடுக்கு பயன்படுத்தி வந்திருக்கக் கூடிய கொத்தடிமை நிலைமைகளுக்கும் மற்றும் வறுமை ஊதியங்களுக்கும் எதிராக அவர்கள் தீர்க்கமானதொரு 18 மாத காலப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
ஹரியானாவில் இருக்கும் இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் இந்தப் போராட்டத்திற்கு மிருகத்தனமான ஒடுக்குமுறையின் மூலம் பதிலிறுத்துள்ளது. ஜூலை 18 அன்று நிறுவனத்தின் குண்டர்களால் தொடக்கி வைக்கப்பட்ட ஒரு கைகலப்பு ஒரு முதுநிலை மேலாளரின் மரணத்தில் முடிந்த சம்பவத்தில் இருந்து தருவிக்கப்பட்ட இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் நான்கு மாதங்களுக்கு முன்பாக MSWU இன் மொத்த தலைமை உட்பட 149 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் போலிஸ் காவலில் இருந்து வருகின்ற இந்தத் தொழிலாளர்கள் அடி உதை, மின் அதிர்ச்சி, நகரவியலாத நிலையில் முகத்தில் நீர் பாய்ச்சி சித்திரவதை செய்வது உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
சென்ற மாதத்தில், சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும், MSI தன்னுடைய தொழிலாளர்கள் படையணியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்ற 500க்கும் அதிகமான தொழிலாளர்களை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும், மற்றும் நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதற்கு முயலுகின்ற 2000க்கும் அதிகமான ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதற்குக் கோரியும் MSWU அழைப்பு விடுத்திருந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் மானேசர்-குர்கான் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த (இங்கு தான் MSI தொழிற்சாலை இருக்கிறது) பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து கொண்டனர்.
ஆயினும் MSI தொழிலாளர்களின் போராட்டமானது பெரும் தொழிலாளர் அமைப்புகளால் - இந்தியத் தொழிலாள வர்க்கத்தை மலிவு உழைப்பாளிகளாக வியாபார விளம்பரம் செய்கின்ற பொருளாதாரக் கொள்கையுடன் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்ற ஸ்ராலினிச CPI மற்றும் CPM கட்சிகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற தொழிற்சங்கங்கள் உட்பட - தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
களத்தில் இருக்கும் சுசுகி தொழிலாளர்கள் இந்தத் தனிமைப்படுத்தலை உடைத்து தமது வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது தொடுக்கப்படுகின்ற மிருகத்தனமான தாக்குதலுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமாயின் அதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேசரீதியாக வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் ஒற்றுமையும் செயலூக்கமான ஆதரவும் அவசியம். ஆசியாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும், மற்றும் பிற வறுமைப்பட்ட பிராந்தியங்களிலும் இருக்கும் தமது சகோதரர்கள் ஒட்டச் சுரண்டப்படுகின்ற வரையிலும் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் தமது வேலைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பது ஒரு அடிப்படையான உண்மையாகும்.
ஆயினும், UAW தலைவர் பாப் கிங் எழுதியிருக்கும் கடிதத்திற்கும் உலகளாவிய வாகனத் துறை பெருநிறுவனங்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் அமெரிக்க மற்றும் இந்தியத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. UAW அமெரிக்கத் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பேசுகிகின்றதல்ல. முக்கால் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாகனத் துறை முதலாளிகளுக்கும் முதலாளித்துவ அரசுக்கும் எதிரான வெகுஜனப் போராட்டங்கள், மறியல் ஆர்ப்பாட்டங்கள், மற்றும் கடுமையான மோதல்களின் அடிப்படையில் ஸ்தாபகமான ஒரு அமைப்புக்கும் இதற்கும் இப்போது தொடர்பேதுமில்லை.
உலகெங்குமான தேசிய அடிப்படையிலான தொழிற்சங்கங்களைப் போலவே, UAWவும், 1970கள் மற்றும் 1980களிலான உலகமயமாக்கத்திற்கு போராட்டம் எதனையும் கைவிடுவதன் மூலமும் தன்னை பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு கருவியாக உருமாற்றிக் கொள்வதன் மூலமும் பதிலிறுத்தது. 1940கள் மற்றும் 1950களில் இடதுசாரிப் போராளிகளையும் சோசலிஸ்டுகளையும் UAW அதிகாரத்துவம் வெளியேற்றியமை, அத்துடன் இலாப அமைப்புமுறையையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் பாதுகாக்கின்ற சிந்தனை பொதுவாக இருப்பதன் அடிப்படையில் பல தசாப்தங்களுக்கு அது ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி கொண்டிருந்தமை ஆகியவற்றின் தவிர்க்கவியலாத விளைவாக இது இருந்தது.
பாப் கிங் இந்த சீரழிவிற்கு மணிமகுடம் சூட்டியிருக்கிறார். ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் மனிதவள இயக்குநர் ஒருவரின் மகனான கிங், சென்ற ஆண்டில் வழங்கிய ஒரு உரையில், உலகமயமாக்கம் "20 ஆம் நூற்றாண்டின் UAW"க்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டிருந்ததாக அறிவித்தார். "21 ஆம் நூற்றாண்டின் UAW நிர்வாகங்களை இனியும் எதிரிகளாகவோ அல்லது விரோதிகளாகவோ கருதுவதில்லை, மாறாக புதுமைகளை உருவாக்குவதிலும் தரத்திலும் கூட்டாளிகளாகக் கருதுகின்றது"என்று அவர் கூறினார்.
கடந்த மூன்று தசாப்தங்களில், நூறாயிரக்கணக்கான வேலைகளையும் பல தலைமுறைகள் நடந்த போராட்டங்களில் வென்றெடுக்கப்பட்ட உரிமைகள் மற்றும் நலவுதவிகளையும் அழிப்பதில் UAW வாகன உற்பத்தித் துறை முதலாளிகளின் "கூட்டாளிகளாக"ச் செயல்பட்டிருக்கிறது. 2009 இல், புதிய தொழிலாளர்களின் ஊதியங்களைப் பாதியாகக் குறைப்பதிலும், வேலை நேரங்களை அதிரடியாக அதிகரித்து 1930களுக்குப் பின் கண்டிராத ஒரு அவசரப்படுத்தல் மற்றும் சுரண்டல் நிலைமைகளை மீண்டும் கொண்டு வருவதிலும் இது ஒபாமா நிர்வாகத்துடன் ஒத்துழைத்து வேலைசெய்தது. பிரதிபலனாக கிங்கிற்கும் மற்ற UAW நிர்வாகிகளுக்கும் மில்லியன் கணக்கான பெருநிறுவனப் பங்குகளின் கட்டுப்பாடு அளிக்கப்பட்டது.
இன்று, டெட்ராயிட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற வாகன உற்பத்தித் துறை நிறுவனங்கள் மெக்சிகோவிலும், சீனாவிலும் மற்றும் பிற மலிவூதிய நாடுகளிலும் இருக்கும் தங்கள் ஆலைகளிலான உற்பத்தியை சற்று குறைத்து விட்டு அமெரிக்காவிற்குள்ளேயே "உழைப்புக் கொள்முதல்"செய்து கொள்கின்ற அளவுக்கு GM, போர்டு மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்களின் அமெரிக்க ஆலைகளில் உழைப்புக்காகும் செலவுகளைக் குறைத்திருப்பதாக UAW பெருமையடித்துக் கொள்கிறது.
மாருதி சுசுகி தலைமை நிர்வாக அதிகாரிக்கு மட்டுமின்றி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2008 இல் பணியில் இருந்து அகற்றப்பட்ட 27 தொழிலாளர்களை மீண்டும் பணியிலமர்த்தும்படி அதன் தலைமை நிர்வாக அதிகாரியான போ ஷின் சியோவுக்கும் கிங் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொழிலாளர் சங்கத்தை (HMIEU) அங்கீகரிக்க வேண்டும் அல்லது பெரும்பான்மை தொழிற்சங்கத்தைத் தீர்மானிக்க ஒரு நியாயமான தேர்தலை நடத்த வேண்டும், அத்துடன் சமீபத்தில் முடிவுக்கு வந்த ஒரு ஊதிய உடன்பாட்டை ஐக்கிய ஹூண்டாய் தொழிலாளர்கள் சங்கத்துடன் (UUHE) மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகத்திற்கு அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்திய-ஆசிய செய்திச்சேவை அறிவித்தபடி, "ஆசியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இரண்டு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் UAW கடிதம் எழுதியுள்ள அதேவேளையில் அமெரிக்காவின் பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் (FMC) இந்தியத் துணைநிறுவனத்திற்கு - இங்கும் இதேபோன்ற தொழிலாளர் பிரச்சினை நிலவியபோதிலும்- அது கடிதம் எதுவும் எழுதவில்லை. ஃபோர்டு இந்தியா தொழிலாளர் சங்க(FIEU)நிர்வாகி ஒருவர் கூறுகையில் FMC இன் துணை நிறுவனமான ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு UAW நிர்வாகிகள் FMC உடன் பேசி வருவதாகக் கூறினார்.
ஃபோர்டு நிறுவனத்தில் பெரும் பங்குதாரர்களாக இருக்கும் கிங்கும் UAWவும் ஃபோர்டு நிறுவனம் ஆசியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அதன் போட்டி நிறுவனங்களுடனான போட்டியில் அனுகூலம் பெறுவதற்கு உதவ பெரும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் கிங் சுசுகிக்கும், ஹூண்டாய்க்கும் மற்றும் இந்திய அரசுக்கும் "தொழிலாளர் உறவுகள்" குறித்து ஆலோசனை வழங்குவதற்கான பிரதானமான காரணம், அவரும் அவை போலவே, இந்திய வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களிடையே பெருகும் போர்க்குணத்தின் தாக்கம் குறித்து அஞ்சுவதால் தான். மிகவும் ஒடுக்கப்பட்ட நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த இயக்கம் உலகெங்குமான வாகன உற்பத்தித் தொழிலாளர்களை எதிர்ப்பில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்தும்.
இந்த தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை கிங் வற்புறுத்துவதன் காரணம், இலாப அமைப்புமுறையைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களின் போர்க்குணப் போக்கை முறியடிப்பதற்குமான ஒரு "கூட்டுப் பேர" ஆட்சிமுறைக்குள்ளாக தொழிலாளர்களை முடக்கும் நோக்கத்துடனும் அத்துடன் இத்தொழிற்சங்கங்களைக் கொண்டு தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு சோசலிச எதிர்ப்பணி அபிவிருத்தியடைவதைத் தடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையாலும் தான்.
கிங் "அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள்" என்று கூறுகிற தேசியவாத கண்ணோட்டத்தை கொண்டிருந்தபோதிலும் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு அவர் புதியவரல்ல. அமெரிக்காவில் இருக்கும் இந்நிறுவனங்களின் ஆலைகளில் UAW ஐ அங்கீகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்குக் கிட்டக் கூடிய செலவுக் குறைப்பு அனுகூலங்களைக் குறித்து ஏற்கனவே அவர்களுக்கு இவர் கடிதம் எழுதியிருக்கிறார்.
UAW ஏதேனும் "சர்வதேசியவாத"த்தை செயல்படுத்துகிறது என்றால் அது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்ற நாடுகளிலும் இருக்கும் அவற்றின் தொழிலாளர் படைகளைச் சுரண்டுவதற்கு உதவுவதற்கே அது பயன்படுகிறது. சென்ற வருடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐரோப்பிய ஓபல் துணை நிறுவனத்தில் பெரும் வேலை மற்றும் ஊதிய வெட்டுகளுக்கு முன்னதாக கிங்கை அங்கு இயக்குநர்களில் ஒருவராக நியமித்தது. ஐரோப்பியத் தொழிலாளர்கள் மீது அமெரிக்க-பாணி ஆலை மூடல்களையும், பெரும் ஆட்குறைப்புகளையும் அத்துடன் தொழிலாளர் "நெகிழ்நிலை"யையும் இறக்குமதி செய்வதற்கே அவர் அனுப்பப்பட்டார்.
ஏகாதிபத்தியப் போர்களையும், ஆளில்லா விமானத் தாக்குதல்களையும், மத்திய மற்றும் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் மக்களுக்கு எதிராக இரத்தம் வடிகிற ஆக்கிரமிப்புகளையும் அதிகப்படுத்தியிருக்கக் கூடிய ஒபாமா நிர்வாகத்திற்கு UAW அளிக்கின்ற ஊக்கமான ஆதரவே சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கான அதன் குரோதத்திற்கு மிகத் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.
கடந்த பல வருடங்களில் அமெரிக்க வாகனத் துறை தொழிலாளர்களிடையே UAWக்கு எதிரான ஒரு கலகப் போக்கு பெருகி வந்திருக்கிறது. MSI ஆலையில் இருந்ததைப் போன்ற ஒரு நிறுவனத் தொழிற்சங்கமாகவே தொழிலாளர்கள் அதனைக் காண்கின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன முழக்கத்தைப் பெற்றிருக்கிறார்கள், கூட்டங்களில் இருந்து தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள், அத்துடன் அவர்களது தொழிலாளர்களை அடமானம் வைக்கும் ஒப்பந்தங்கள் எல்லாம் சாமானிய வாகனத்துறை தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
MSI தொழிலாளர்கள் தமது போராட்டத்தில் ஒரு மிக முக்கியமான சந்திக்கு முகம் கொடுக்கின்றனர். நீதிமன்றங்களுக்கோ அல்லது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கோ விண்ணப்பம் செய்வதன் மூலமாக அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. தமது மிக அடிப்படையான உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இருக்கும் வாகனத் துறை தொழிலாளர்களின் ஆதரவு இருப்பது அவசியம், கட்டாயம் இருந்தாக வேண்டும்.
UAW அல்லது வேறு எந்த பெருநிறுவனவகை தொழிற்சங்கங்களாலும் இதனைச் சாதிக்க முடியாது. தொழிற்சங்கங்கள், பெருவணிக அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் பாதுகாக்கக் கூடிய முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றில் இருந்து சுயாதீனப்பட்டு உலகெங்கும் வாகனத் துறை தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டம் கையிலெடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதில் உலக சோசலிச வலைத் தளம் மிகச் சக்தி வாய்ந்ததொரு ஆயுதமாக நிரூபணமாகும்.