ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The danger of nuclear war between the US and China

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அணுஆயுத போர் அபாயம்

By Peter Symonds
30 May 2016

ஜப்பானில் கடந்த வார ஜி7 உச்சிமாநாட்டில் ஒன்றொடொன்று பிணைந்த இரண்டு பிரச்சினைகளான உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியும் மற்றும் குறிப்பாக தென் சீனக் கடலில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அதிகரித்து வரும் ஒரு மோதல் அபாயத்துடன் தொடர்புபட்ட போர் முனைப்பும் மேலோங்கி இருந்தன. பொருளாதார நிலைமுறிவுக்கு மிகச் சிறியளவிலான தீர்வைக் கூட வழங்க திராணியற்ற பிரதான சக்திகள், தேசிய விரோதங்களுக்கு எரியூட்டி, மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

சீனா உரிமைகோரிய தீவுத்திட்டுக்களைச் சுற்றி 12 கடல்மைல் எல்லைக்குள் அமெரிக்க இராணுவ ஊடுருவல்களுடன் ஆத்திரமூட்டலை அதிகரிப்பதை நியாயப்படுத்தும் விதமாக, சீனாவை விமர்சிக்கும் பலமான அறிக்கை ஒன்றுக்காக அமெரிக்காவும் ஜப்பானும் ஜி7 கூட்டத்தில் கடுமையாக அழுத்தமளித்தன. இம்மாத ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை தென் சீனக்கடலில் Fiery Cross குன்றுக்கு அருகே மூன்றாவது முறையாக "கடற்போக்குவரத்து சுதந்திரம்" என்று கூறப்படும் நடவடிக்கையை மேற்கொண்டது. இது பெய்ஜிங்கிடமிருந்து ஒரு கோபமான எதிர்வினையை உருவாக்கியதுடன், அப்பகுதியில் அதன் பாதுகாப்புகளை அது பலப்படுத்தும் என்ற அறிவிப்புகளையும் கொண்டு வந்தது.

அதிகரித்து வரும் அணுஆயுத மோதல் அபாயம் குறித்து மக்களின் நனவை மழுங்கடிக்கும் நோக்கில், தற்போது அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலிலும் மற்றும் ஆஸ்திரேலிய மத்திய தேர்தலிலும் நடந்து வரும் பிரச்சாரங்களில், போர் தயாரிப்புகள் மீது ஒரு மவுனமான சூழ்ச்சி நடந்து வருகிறது. அணுஆயுதமேந்திய இரண்டு சக்திகள் தென் சீனக் கடலில் மட்டும் எதிரெதிராக நிற்கவில்லை, மாறாக வடகொரியா மற்றும் தாய்வான் போன்ற ஏனைய அபாயகரமான வெடிப்பு புள்ளிகளிலும் அவ்வாறே உள்ளன. இவ்விரண்டு பகுதிகளும் வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னிலை" மற்றும் அப்பிராந்தியத்தில் அதன் இராணுவ ஆக்கிரமிப்பு கட்டமைப்பால் பிரமாண்டமாக ஆபத்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஓர் ஆயுத போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இது அணுஆயுதங்கள், அவற்றை செலுத்தும் முறைகள் மற்றும் அது தொடர்புபட்ட தொழில்நுட்பகளத்தில் அதன் மிகவும் துல்லியமான வெளிப்பாடுகளைக் கண்டு வருகிறது. ஆசியா மற்றும் உலகெங்கிலுமான அதன் மேலாதிக்கத்தை பேணுவதற்கு தீர்மானகரமாக உள்ள அமெரிக்கா, அடுத்த மூன்று தசாப்தங்களில் பல வகைப்பட்ட அதிநவீன அணுஆயுதங்களையும் மற்றும் அவற்றை அவற்றின் இலக்குகளுக்கும் அனுப்பும் முறைகளையும் அபிவிருத்தி செய்ய 1 ட்ரில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டு வருகிறது. சீனாவின் அணுஆயுத கிடங்குகளை துடைத்தழிப்பதற்கான வழிவகைகளையும் மற்றும் அவ்விதத்தில் ஒரு எதிர்தாக்குதலை நடத்த தனது ஆற்றலை அதிகரித்துக் கொள்வதன் மூலமாக அணுஆயுத முன்னிலையைப் பாதுகாத்துக் கொள்வதுமே பெண்டகனின் அறிவிக்கப்படாத நோக்கமாகும். அதேயளவிற்கு பிற்போக்குத்தனமாக, சீனா அமெரிக்காவில் பத்து மில்லியன் கணக்கானவர்களை கொல்லும் விதத்தில் திருப்பித் தாக்கும் ஆற்றலை அது தக்க வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதே அதன் பிரதிபலிப்பாக உள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள Union of Concerned Scientists (UCS) வெளியிட்ட அறிக்கை ஒன்றால், இத்தகைய அபாயங்களது யதார்த்தம் எடுத்துக்காட்டப்பட்டது. அது அச்சுறுத்தும்வகையில் பின்வருமாறு எச்சரித்தது:

“அமெரிக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசாங்கங்கள், ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும், ஓராண்டின் 365 நாட்களும் வேகமாக தீவிரமடைந்து அணுஆயுத பரிமாற்றங்களில் போய் முடியக்கூடிய ஒரு போரைத் தொடங்குவதற்கான முடிவுகளில் இருந்து வெகு குறைந்த தூரத்திலேயே நிற்கின்றன. போருக்கான சாத்தியக்கூறு மற்றும் அதன் விளைவாக அணுஆயுதங்களைப் பிரயோகிக்கக் கூடிய சாத்தியக்கூறு ஆகிய இரண்டு தவறான பொருத்தமுள்ள கருதுகோள்களும் அதிகரித்து வருகின்றன. தவறான செய்தி பரிமாற்றங்களோ அல்லது தவறான புரிதலோ ஒரு மோதலைத் தூண்டிவிட்டுவிடும், அதை நிறுத்த முடியாதளவிற்கு அவ்விரு அரசாங்கங்களும் சிரமத்தைக் காணக்கூடும்,” என்றது குறிப்பிட்டது.

மோதலைத் தவிர்க்க, அபாயங்களை ஒப்புக்கொண்டு இரு தரப்பும் இராஜாங்க முயற்சிகளை அதிகரிக்குமாறு UCS பகுப்பாய்வு அயைப்புவிட்ட போதினும், அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதன் மீது அது வெகு குறைவான நம்பிக்கையே வெளியிட்டது. அந்த அறிக்கை கவலையுடன் பின்வருமாறு அறிவித்தது:

“அவற்றின் கருத்து முரண்பாடுகள் விட்டுக்கொடுப்பின்றி இருக்கின்றன என்ற அதிகரித்து வரும் உணர்வும் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின்மையும், அவ்விரு அரசாங்கங்களையும் தொடர்ந்து இராணுவ தீர்வுகளைக் காண—அதாவது இன்னும் அதிகமாக தங்களது பாதுகாப்பை உணர உதவும் வகையில் அச்சுறுத்தலின் புதிய வழிவகைகளைக் காண—நாட்டம் கொள்கின்றன. அவ்விரு அரசாங்கங்களும் நம்பிக்கையின்மைமிக்க ஒரு நடவடிக்கையாக தொழில்நுட்பரீதியில் அனைத்து முயற்சிகளையும் எடுக்க நிற்க ஒவ்வொரு முயற்சியும் நிலையில், ஏறத்தாழ 70 ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் சீன மக்கள் கட்சியின் தலைவர்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்கி உள்ள உடன்பாடின்மைகள், பகையுணர்ச்சிகள் மற்றும் ஐயுறவுகளுக்கு இராஜாங்கரீதியிலான தீர்வுகள் மீது நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு அவசியமான பொறுப்புகளை ஸ்தாபிப்பது முற்றிலும் சிக்கலாக உள்ளது,” என்றது குறிப்பிட்டது.

தீவிரமடைந்து வரும் இராணுவ போட்டி ஒன்றுடன் ஒன்று பொருத்தமற்றதாகும். இது போர் பதட்டங்கள் மற்றும் அபாயங்கள் அதிகரிக்க மட்டுமே செய்கின்றன. அணுஆயுத தளவாடங்களைப் பொறுத்த வரையில், சீனா அதன் எண்ணிக்கையிலும் தொழில்நுட்பரீதியிலும் பின்தங்கி உள்ளது. சீன இராணுவம் இதை ஈடுசெய்துகொள்ள பெரும்பிரயத்தன முயற்சியில் இருந்தாலும், அதன் ஆயுத தகைமையில் பல தலைமுறைகள் பின்னோக்கி உள்ளது, மேலும் அமெரிக்கா சுமார் 7,000 அணுவாயுத குண்டுகளை கொண்டிருப்பதுடன் ஒப்பிடுகையில் சீனா 260 குண்டுகளையே வைத்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஒரு நம்பகமான அணுஆயுத அச்சத்தை உறுதிப்படுத்தினால், அமெரிக்காவின் முதல் தாக்குதலில் இருந்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதே சீன தலைமையின் பிரதான நோக்கமாக உள்ளது. ஆனால் பெய்ஜிங் போலன்றி, வாஷிங்டன் முதலில் அணுஆயுத பிரயோகிப்பது என்பதை ஒருபோதும் நிராகரிக்கவில்லை.

கடந்த வாரம் கார்டியன் அறிவித்தது, சீனா முதல்முறையாக பசிபிக் பகுதி ரோந்து நடவடிக்கையில் அணுஆயுதமேந்திய நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப இருக்கிறது. அத்தகையவொரு நகர்வு, போர்தளவாடங்களும் ஏவுகணைகளும் பிரத்தியேகமாக உயர்மட்ட தலைமையின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படும் என்ற தற்போதைய கொள்கையை முறித்துக் கொள்வதைச் சமிக்ஞை காட்டுவதாகும். போர் சமயத்தில் அமெரிக்க கண்டத்திற்கு எதிராக அணுஆயுமேந்திய ஏவுகணைகளை உடனடியாக ஏவுவதற்கு உதவியாக அணுஆயுதமேந்திய நீர்மூழ்கி கப்பல்களில் அவை இப்போது நிரப்பப்படும்.

வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பால், குறிப்பாக சீனாவின் தகைமைக்கு ஈடுகொடுத்து திருப்பித் தாக்கும் நோக்கில் தொலைதூர ஏவுகணை எதிர்ப்பு உபகரணங்களை நிலைநிறுத்தியமை, சீனத் தலைமையை அத்தகைய நடவடிக்கைகள் எடுக்க உந்தி உள்ளது. எவ்வாறிருப்பினும் சீனாவின் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒப்பீட்டளவில் இரைச்சல் அதிகமுள்ளவை, இது அமெரிக்க தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களால் அவற்றைக் கண்டறிந்து அழிப்பதை சுலபமாக்குகிறது. பதட்டமடையும் ஒரு சீன தளபதி உத்தரவைத் தவறாக புரிந்துகொண்டு, உடனடியாக ஏற்படக்கூடிய தாக்குதலுக்கு அஞ்சி, முன்-தீர்மானிக்ப்பட்ட இலக்குகளுக்கு எதிராக நீர்மூழ்கிக்கப்பல் ஏவுகணைச் செலுத்தும் ஒரு புதிய சூழலும் ஏற்படலாம்.

அணுஆயுத போரை பிரதான சக்திகளுக்கு இடையிலான இராஜாங்க நடவடிக்கைகளைக் கொண்டு தடுக்க முடியாது, சர்வதேச அணுஆயுத குறைப்பைக் காட்டுவது அல்லது அணுஆயுத போர் என்பது மிகவும் பயங்கரமானது என்பதால் அது கருத்தில் எடுக்கப்படாது என்ற வெற்று நம்பிக்கை ஆகியவை மதிப்பற்றவையாகும். அணுஆயுத மூலோபாயவாதிகள் ஒரு அரை நூற்றாண்டு காலமாக "சிந்திக்க முடியாததை சிந்தித்து" வருகிறார்கள். கடந்த உலக போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டு, சுமார் 200,000 பேர் கொல்லப்பட்டதுடன் அது முடிவுக்கு வந்தது. ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வாரம் ஹிரோஷிமாவில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்க மறுத்தமை, புதிய ஒன்றுக்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பதற்கான ஒரு நிச்சயமான அறிகுறியாகும்.

அணுஆயுதமேந்திய விரோதிகளுக்கு இடையே ஒரு புதிய உலக போரை நோக்கிய இடையறாத இந்த உந்துதல், முதலாளித்துவ நெருக்கடி மற்றும் அதன் தீர்க்கவியலாத முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. இந்த இலாபகர அமைப்புமுறை மற்றும் அதன் காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாக, தொழிலாள வர்க்கம் மட்டுமே போர் அபாயத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இது தான், சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் நடத்தி வரும் போராட்டத்தின் முக்கியத்துவமாகும்.