World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு Japanese election mired in nationalism and militarism ஜப்பானிய தேர்தல் தேசியவாத, இராணுவ வாத சேற்றில் அமிழ்கிறதுBy Peter Symonds டிசம்பர் 16ம் திகதி தேர்தலுக்கு ஜப்பானில் நடக்கும் பிரச்சாரம், அரசியல் ஸ்தாபனம் முழுவதிலும் குறிப்பாக சீனாவிற்கு எதிராக தேசிய வாதம் மற்றும் இராணுவ வாதத்தை நோக்கிய ஒரு கூரிய திருப்பத்தை குறித்து நிற்கிறது. ஜப்பானிய அரசியலில் ஒரு வலதுபுற நகர்வு என்பது, உலக முதலாளித்துவத்தின் மோசமான முறிவின் விளைவாக தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் ஆபத்துக்கள் குறித்த ஓர் எச்சரிக்கையாகும்.இந்த திருப்பம் இரு பிரச்சினைகள் குறித்து சமிக்ஞை செய்கின்றன: சென்காகு/டயோயுத் (Senkaku/Diaoyu) தீவுகள் குறித்த சீனாவுடனான பூசல் மற்றும் ஜப்பானின் சமாதான விதி எனப்படுவதை அரசியலமைப்பு ரீதியாக மாற்றுதல் அல்லது அகற்றுதலுக்கான அழைப்புக்கள் என்பவையே அவை.ஆளும் ஜப்பானிய ஜனநாயகக் கட்சி (DPJ) வேண்டுமென்றே சீனாவுடன் அழுத்தங்களைத் தூண்டும் வகையில், செப்டம்பர் மாதம் பூசலுக்குட்பட்ட தீவுகளைத் "தேசியமயமாக்கியது". இதன் விளைவு ஜப்பானிய மற்றும் சீன கடற்படைக் கப்பலக்களுக்கு இடையே ஆபத்தான எதிர்நிலைப்பாடு ஆகும்; இதற்கு எதிர்க்கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) மற்றும் வலதுசாரி ஜப்பானிய மீட்புக் கட்சி (Japan Restoration Party -JRP) ஆகியவை தீவுகளில் நிரந்தரக் கட்டிடங்கள் கட்டவேண்டும் என்று முன்வைக்கும் கருத்தையொட்டி பிரச்சினையைத் தீவிரப்படுத்துகின்றன.அவருடைய வலதுசாரி தேசியவாதக் கருத்துக்களுக்காக நன்கு அறியப்பட்ட தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) இன் தலைவர் ஷின்சோ அபே (Shinzo Abe), ஜப்பான் உரிமை கோரும் அனைத்துப் பகுதிகளையும் காக்கும் வகையில், "சுய பாதுகாப்புப் படைகள்" என்பதை அரசியலமைப்பு ரீதியாக, முறையான இராணுவப் படை என மாற்ற வேண்டும் என்ற வழிவகைக்கு "கூட்டு சுய பாதுகாப்பு" என்பதில் பங்குபெறும் வகையில் மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது. "சமாதான விதி" என்பது, மத்திய கிழக்கில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரோஷப் போர்களில் ஜப்பான் பங்கு பெறுவதற்கு ஒரு தடையாகவும், அதையொட்டி ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு ஒரு தடையாகவும் உள்ளது.ஜப்பானிய மீட்புக் கட்சி (JRP) இன் தலைவர் ஷின்டரோ இஷிஹரா, இரண்டாம் உலகப் போர் முடிவில் அமெரிக்காவால் இயற்றப்பட்ட "ஆக்கிரமிப்பு" அரசியலமைப்பை முற்றிலும் உதறிவிட்டு, ஜப்பான் அதன் சொந்த அணுவாயுதங்களைக் கட்டமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். "வெளிநாட்டு-எதிர்ப்பு மற்றும் தீரச்செயல் ஈடுபாடு" ஆகியவற்றின் குறித்த ஆபத்துக்களை எச்சரித்து "பொறுப்பான பாதுகாப்பிற்கு" வாதிட்ட பிரதம மந்திரி யோஷிஹிகோ நோடா ஏற்கனவே இராணுவத்தின் அரசியலமைப்பு நெறியை உறுதிப்படுத்த திருத்தங்களுக்கும் வாதிட்டிருந்தார்.இக்கருத்துக்கள் ஜப்பானிய இராணுவ வாதத்தைப் புதுப்பித்து, 1930, 1940களில் ஆசியா முழுவதும் ஜப்பானிய ஏகாதிபத்தியம் மற்றும் அதன் போர்கள் நிகழ்த்திய கொடூரமான குற்றங்களை மறைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆகும். அபே, தன்னுடைய செயற்பட்டியலுக்கு அடையாளம் காட்டும் வகையில் ஜப்பானின் போரில் இறந்தவர்களுக்கான யசுகுனி நினைவாலயம் என்னும் இழிந்த இடத்திற்குச் சென்றதின் மூலம் அடையாளம் காட்டி, ஜப்பானின் போர்க்கால வரலாறு குறித்த "நியாயமற்ற" உணர்வு முற்றிலும் திருத்தப்பட வேண்டும் என்றும் அழைப்புக் கொடுத்துள்ளார். அவருடைய வாதம் போல் அப்பட்டமாக இல்லாவிட்டாலும், நோடா முன்பு ஜூனிசிரோ கொய்சுமி 2001 முதல் 2006 வரை பிரதம மந்திரியாக இருந்தபோது யசுகுனி நினைவாலயத்திற்கு சென்றதற்கு ஆதரவைக் கொடுத்திருந்தார்.ஒபாமா நிர்வாகம் இத்தகைய ஜப்பானின் இராணுவ வாதப் போக்குகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது; இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆக்கிரோஷம் மிகுந்த அமெரிக்க உந்துதலின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை, மற்றும் சீனாவுடன் நெருக்கமாக உறவுகள் ஆகியவற்றிற்கு வாதிட்ட DPJ தலைவர யுகியோ ஹடயோமா 2010 நடுவில் இராஜிநாமா செய்வதற்கும் வாஷிங்டன் காரணமாக இருந்தது. அவருக்குப் பதிலாக பிரதம மந்திரி பதவிக்கு வந்த நாவோடோ கான் அமெரிக்கக் கூட்டிற்கு விரைவில் ஆதரவை உறுதிப்படுத்தி சீனாவுடன் முக்கிய இராஜதந்திர பூசலை உருவாக்கும் வகையில் செப்டம்பர் 2010ல் சென்காகு/டயாயூத் தீவுகளுடனான மோதலில் ஈடுபட்டார்.ஆனால் , மேலும் அடிப்படையில் ஜப்பானிய ஆளும் வர்க்கம் தேசியவாதம், இராணுவவாதம் ஆகியவற்றிற்கு திரும்புவது, நாட்டின் ஆழ்ந்த பொருளாதார, அரசியல் நெருக்கடியின் விளைவாகும். ஜப்பானின் வர்த்தக உபரி, சீனாவில் ஒரு மந்த நிலை, ஐரோப்பாவின் பெரும்பகுதியில் மந்த நிலை மற்றும் அமெரிக்காவின் உறுதியற்ற தன்மை இவற்றிற்கு இடையே ஒரு பற்றாக்குறையாக மாறிவிட்டது. இரண்டு தசாப்தங்களாகப் பொருளாதாரத் தேக்கத்திற்குப்பின், பொருளாதாரம் இப்பொழுது மூன்றாம் காலாண்டில் 3.5% சுருக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் மந்தநிலையை நோக்கிச் செல்லுகிறது.ஜப்பானிய முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தன்மை பொருந்திய பலவீனம்—அது எப்பொழுதுமே மூலப்பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதிச் சந்தைகளில் பெரும் நம்பிக்கையைக் கொண்டது—கடந்த ஆண்டு நில அதிர்வு மற்றும் சுனாமியால் ஏற்பட்ட "மூன்று பேரழிவுகள்" என அதன் அணு சக்தி தொழில்துறையில் பெரும்பாலவற்றை மூடும் கட்டாயத்திற்கு உட்பட்ட நிலையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகள், எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற்றீடு என்ற முறையில், வணிகப் பற்றாக்குறைக்கு முக்கிய அளிப்புக்களைக் கொடுக்கின்றன.ஜப்பானிய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை இராணுவ வாதத்திற்கு திரும்புதல் என்பது ஆசியாவில் மேலாதிக்கம் கொண்ட ஏகாதிபத்திய சக்தி என்னும் அதன் நிலைமைக்கு ஊக்கம் அளிக்கும் அவநம்பிக்கையான முயற்சியாகும். இது சீனாவின் எழுச்சியால் அச்சுறுத்தப்படுகிறது; சீனா கடந்த ஆண்டு ஜப்பானை மறைத்து உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரம் என்ற இடத்திற்கு வந்துவிட்டது. தேசியவாதத்தைத் தூண்டுதல் என்பது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இயக்கப்படுவதாகும்; அடுத்த அரசாங்கத்திற்கான தயாரிப்புக்களில் – எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும்; நாட்டின் பெரும் பொதுக்கடனைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்படும்.ஜப்பானிய முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடி ஆழந்த வரலாற்று ஒலிக்குறிப்புக்களைக் கொண்டுள்ளது. 1920களில் Taisho ஜனநாயகம் என்று அறியப்பட்ட குறுகிய காலம் விரைவில் வலதுசாரித் தேசிவாத நிகழ்ச்சி நிரலான இராணுவ வாதம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அடக்குமுறை என்பதற்கு வழிவிட்டது. 1925ம் ஆண்டு சமாதானப் பாதுகாப்புச் சட்டம் சோசலிசத்திற்கு வாதிடும் அனைத்துக் கட்சிகளையும் சட்டத்திற்குப் புறம்பாகத் தள்ளி, வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை நசுக்குவதற்கு வழி செய்தது.ஜப்பானியப் பொருளாதாரத்தின் பாதிக்கப்படும் தன்மை 1929 வோல்ஸ்ட்ரீட் சரிவினாலும் உலகம் முழுவதும் மந்தநிலை ஏற்பட்டதாலும் தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டது. ஜப்பானிய ஏற்றுமதிகள் ஓரே இரவில் பாதியாயின; இது ஆளும் வட்டங்களில் பெரும் திகைப்பைத் தூண்டியது; காலனித்துவ வெற்றிகளைக் காண்பதின் மூலம், குறிப்பாக சீனாவை வெற்றிக் கொள்ளுதல் என்பதின் மூலம் இதைக் கடப்பதற்கும் மீண்டும் ஆயுதங்களை மேற்கொள்ள உந்துதலுக்கும் இது தூண்டியது. பேரரசரின் ஆதரவிற்கு உட்பட்ட இராணுவம், அரசியல் மேலாதிக்கத்தைப் பெற்றது; 1931ம் ஆண்டு மஞ்சூரியா மீது படையெடுத்தது; 1937ல் சீனா முழுவதற்கும் எதிராகப் படையெடுத்தது. இராணுவ வாத ஆட்சி, பெரிய கிழக்கு ஆசிய ஒருங்கிணைந்த வளப் பகுதி என்பதற்கான திட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் மோதியது; இறுதியில் 1941ம் ஆண்டு பசிபிக் போருக்கு வழிவகுத்தது.இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவின் வழிகாட்டலில் ஜப்பானிய முதலாளித்துவம் மறுஸ்திரப்பாட்டிற்கு உட்பட்டது ஜப்பானிய இராணுவவாதம், போர், இழப்புக்கள் ஆகியவற்றிற்கு விரோதப் போக்கு கொண்டிருந்த எழுச்சி பெற்ற தொழிலாள வர்கத்தை நசுக்குவதில் தங்கியிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கு முக்கிய அரசியல் பொறுப்பு ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியிடம்தான் இருந்தது; அது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு தொழிலாளர்களை தாழ்த்தியது, அமெரிக்கத் தலையீடு ஜப்பானில் ஜனநாயகப் புரட்சி நடத்தப்படுவதற்கு உதவும் என்று கூறியது.உண்மையில் , ஜப்பானின் போருக்குப் பிந்தைய ஜனநாயகம் எப்பொழுதுமே குறுகிய வளர்ச்சியைத்தான் கண்டது. பொருளாதார விரிவாக்கத்திற்கு வடிவமைத்த அமெரிக்க உடன்பாட்டை நம்பியிருந்த நிலையில் LDP அது நிறுவப்பட்ட 1955ல் இருந்து 2009 வரை தொடர்ச்சியாக பதவியில் இருந்தது. கட்சி ஒருபொழுதும் ஜப்பானின் கடந்த கால இராணுவ வாதத்தில் இருந்து முறித்துக் கொண்டதில்லை; அபே இன் பாட்டனார் நோபுசுகே கிஷி —போருக்கு முன் இருந்த மந்திரி சபையில் உறுப்பினராக இருந்தவர்—1957ல் பிரதமரானவர் போன்றோரைக் கொண்டிருந்தது. LDP அரசாங்கங்கள் மட்டுமே மிகவும் தயக்கத்துடன் ஜப்பானின் போர்க்குற்றங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மன்னிப்புக் கோரல்களை அளித்தது.1991 ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, பனிப்போரின் முடிவு மற்றும் பிரதான சக்திகளின் போட்டிகள் மீண்டும் வெளிப்பட்டமை ஆகியவை ஜப்பானிய அரசியலில் மறுகட்டமைப்பை விரைவுடுத்தியது; ஆளும் வர்க்கம் தன் பொருளாதார, மூலோபாய நலன்களை பெருகியமுறையில் உறுதியற்று உள்ள உலகில் தொடர விரும்ப முற்பட்ட நிலையில், 2008 ல் உலக நிதிய நெருக்கடி வெடித்தது, ஆளும் வட்டங்களிடையே உணரப்பட்ட அவசரநிலையை அதிகப்படுத்தியது. 2012 தேர்தலில் உருவாக்கப்படுவது, தற்போதைய ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கு பிற்போக்குத்தன சிந்தனைப்போக்கு மற்றும் 1930களின் வழிவகைகள்தான் – ஒரு 21ம் நூற்றாண்டு வடிவத்தில்—.போர் , பொருளாதார இடர்கள் மற்றும் மந்தநிலை ஆகியவற்றையே கொண்டுவந்த ஜப்பானிய இராணுவ வாதத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால ஆழ்ந்த எதிர்ப்பு, வெளிப்பாட்டிற்கு உரிய இடத்தைக் காணவில்லை. மாறாக அனைத்துக் கட்சிகளிடம் இருந்தும் ஆழ்ந்த அன்னியப்பட்ட தன்மைதான் கொண்டுள்ளது. இதில் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியும் அடங்கும்; இது தேசியவாதத்தில் மூழ்கி இருப்பதுடன், அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. உண்மையான புரட்சிகரக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக, ஜப்பானியத் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்களுடைய சர்வதேச சகோதர, சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கும், போர், சிக்கன நடவடிக்கை இவற்றைத் தவிர வேறு எதையும் அளிக்க இலாயக்கற்ற முதலாளித்தவ அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குக் கட்டமைக்கப்பட வேண்டும்.
|
|