World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்France: Likely Socialist Party presidential candidate wants unruly youth drafted into the military பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடலாம் என கருதக்கூடியவர் குழப்பம் விளைவிக்கும் இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்க விரும்புகிறார் By Antoine Lerougetel மே 31 அன்று முன்னாள் சோசலிஸ்ட் கட்சி குடும்பநலத்துறை அமைச்சர் செகொலென் றோயால் (Ségolène Royal) 2007 ஜனாதிபதி தேர்தல்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடுமைகொண்ட வேட்பாளராக, தான் போட்டியிடப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். முந்திய இரண்டு இரவுகள் போலீசிற்கு எதிராக இளைஞர்கள் கலவரம் செய்த Monfermeil மற்றும் Clichy-sous-Bois பகுதிகளுக்கு அருகில் உள்ள வடக்கு புறநகர் பகுதிகளில் இடம்பெற்றுள்ள Bondy யில் அவர் உரையாற்றினார். அவர் இன்றைய உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்க்கோசி போதுமான அளவிற்கு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். "இன்றைய தினம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கொள்கையில், அப்பட்டமான கையாலாகாத்தன்மையை காணமுடிகிறது. இது சட்டம் ஒழுங்கிற்கு, முக்கிய பொறுப்பு வகிப்பவரே தவறிவிட்டதை காட்டுகிறது. அவரே கொந்தளிப்புக்கள், சீர்குலைவு மற்றும் திறமைக்குறைவுக்கு பங்களிப்பு செய்பவராக இருக்கிறார். மிகவும் உறுதியான மற்றொரு கொள்கை தேவைப்படுகிறது" என்று சார்க்கோசியை விமர்சித்து அவ்வம்மையார் அறிவித்தார். சார்க்கோசி ஆளும் கோலிச UMP கட்சி தலைவர் மற்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் முன்னணி போட்டியாளர் ஆவார். அவர்தான் போலீசாரின் ஒடுக்குமுறை அதிகாரங்களை பெருக்குவதற்கான சட்டங்களை கொண்டு வந்ததற்கும் மற்றும் மூர்க்கத்தனமான மற்றும் ஆத்திரமூட்டும் போலீஸ் முறைகளை உழைக்கும் வர்க்க குடியிருப்பு (HLM) பகுதிகளில் பயன்படுத்துவதற்கும் பொறுப்பாக இருந்து வருகிறார். பிரான்சின் நகர்ப்புற சேரிப்பகுதிகளில் இளைஞர்களை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு சமூக சீர்திருத்த அணுகுமுறை ஒன்றை கடைபிடிப்பதை சோசலிஸ்ட் கட்சி பகிரங்கமாக கைவிட்டு, ஒடுக்குமுறை கொள்கையை பின்பற்றுவதை குறிக்கும் ரோயாலின் அறிக்கைகள், வலதுபுறமான ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்று பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. சோசலிஸ்ட் கட்சி, மனிதநேயக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக கூறப்பட்டு வந்த உதட்டளவிலான பேச்சுக்களும் கைவிடப்பட்டுவிட்டது. "நல்லொழுக்கத்திற்கு தீயொழுக்கம் சரியீடுசெய்வதே கபடம் ஆகும்" ("ஒழுக்கத்திற்கு துர்க்குணம் செலுத்தும் காணிக்கையே கபடம் ஆகும்") என்று 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தார்மீக நெறிமுறையாளர், François duc de la Rochefoucauld குறிப்பிட்டார். பாரம்பரிய இரட்டை வேட வடிவங்கள் கூட தற்போது அரசியல் ஸ்தாபனத்திற்குள் இடம்பெற்றுள்ள உத்தியோகபூர்வ இடதுகளின் பரவலான பிரிவுகளில் கைவிடப்பட்டுவிட்டன. இன்றைய கோலிச அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் நெருக்கடி சூழ்நிலையில் ரோயால் தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். வெகுஜன எதிர்ப்பை தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம், தனது "முதல் வேலை ஒப்பந்தத்தை" (CPE) பின்வாங்க வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டது. அந்த நடவடிக்கை, தொழிலதிபர்கள், இளந்தொழிலாளர்களை தன்னிச்சையாக வேலையில் இருந்து நீக்குவதற்கான ஒப்பந்தமாகும், அந்த நடவடிக்கைக்கு பின்னர், ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் பிரதமர் டொமினிக் டு வில்ப்பன் ஆகியோரது மக்கள் செல்வாக்கு படுமோசமாக சாதனை அளவிற்கு வீழ்ச்சியடைந்தது மற்றும் அவர்கள் பல்வேறு ஊழல் மோசடிகளில் சிக்கியுள்ளனர். புலம்பெயர்ந்த மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களுக்கு, எதிராக ரோயால் கடுமையாக பேசியிருப்பதன் மூலம் அவர், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆளும் வட்டாரங்களுக்கு, தனது தலைமையில் அமைக்கப்படுகின்ற ஒரு சோசலிஸ்ட் கட்சி நிர்வாகத்தில், அந்த ஆளும் வட்டாரங்களின் நலன்கள் பாதுகாப்பாக இருக்கும் என தெளிவான சமிக்கைகளை காட்டியுள்ளார். அதே நேரத்தில், அவரது எதேச்சதிகார போக்கு பெயரளவிற்கு சார்க்கோசிக்கு எதிராக அமைந்தது என்றாலும், ஆளுகின்ற UMP கட்சியின் வலதுசாரி பிரிவுகளோடு சம்மந்தப்பட்ட பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு நம்பகத்தன்மை ஊட்டுவதாக அமைந்திருக்கிறது. மேலும், பல்கலைக்கழக மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் CPE-க்கு எதிராக மேற்கொண்ட வெகுஜன இயக்கத்தின் மீது ஒரு மறைமுக தாக்குதலாகவும் அமைந்திருக்கிறது. அவர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று, போலீஸ் ஒடுக்குமுறைக்கு இலக்கானவர்கள், நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாமல், தங்களது சொந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பிரான்ஸ் முழுவதிலும் புலம்பெயர்ந்தோர் மற்றும் உழைக்கும் வர்க்க புறநகர் பகுதிகளில் சென்ற ஆண்டு கடைசி மாதங்கள் முழுவதிலும் போலீசாருக்கு எதிராக நடந்த கலவரங்களில் சம்மந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொதுமன்னிப்பு தரவேண்டும் என்பதாகும். சென்ற செப்டம்பர் முதல் ரோயால், 2007 ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் கொடியை தாங்கிப்பிடிப்பவராக நிற்கும் முன்னணி வேட்பாளர் என்று ஊடகங்கள் அவருக்கு முட்டுக்கொடுத்து வளர்த்து வருகின்றன. சோசலிஸ்ட் கட்சி சமூக ஜனநாயக சீர்திருத்தவாதத்தில் கடந்த காலத்தில் கொண்டிருந்த தொடர்புகளை துண்டித்துவிட்டு, பிரிட்டனின் "புதிய தொழிற்கட்சியை" சேர்ந்த பிரதமர் டோனி பிளேயரை போல் முதலாளித்துவ சந்தையில் வலுவாக கால் ஊன்றச் செய்வதற்கு பிரான்சின் அரசியல் மற்றும் வர்த்தக செல்வந்தத்தட்டுகளின் வலுவான சக்திகள் பின்புலமாக உள்ளன என்பதை அவை காட்டுகின்றன. ரோயால் திரும்பத்திரும்ப டோனி பிளேயரை புகழ்ந்தேற்றினார். கவனமாக தயாரிக்கப்பட்ட குறிப்புகளில் இருந்து ரோயால் பாண்டியில் உரையாற்றினார். அவர் "குடும்பங்கள் அரசின் வழியை பின்பற்றச் செய்ய வேண்டும்" ("Remettre au carré les familles,") என்று குறிப்பிட்டார். இந்த சொற்றொடர் இராணுவ உட்பொருள் அடங்கியதாகும். சீர்குலைவில் ஈடுபடும் குழந்தைகள் "தோற்கின்றவர்களாக இருக்கலாம், அவர்கள் மீது கருணை காட்டுவதற்கு வழியில்லை" என்று குறிப்பிட்டார். ஆரம்பப்பள்ளி பிள்ளைகள் ஒழுங்கு தவறி நடந்து கொள்வார்களானால் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பது குறித்து கட்டாய பயிற்சி தரும் முறையை கொண்டுவர வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். மற்றும் குடும்ப நலன்புரி அரசு சலுகைகள் வழங்குவது நிர்வாகத்தின் கையில் இப்போது இருப்பதுபோல் அமையாமல், சமுதாய ஒருங்கிணைப்பில் பெற்றோருக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் அவை செயல்படுத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேல்நிலைப்பள்ளி கல்வியை பொறுத்தவரை "ஒட்டுமொத்த பள்ளிக்கூடத்தின் ஒழுங்கை சீர்குலைத்து இடையூறு செய்துவருகின்ற எட்டு, பத்து மாணவர்களை அந்தப் பள்ளியிலிருந்து நீக்கிவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இந்த நடவடிக்கை மூலம் அவர்கள் (கல்வித்துறை மற்றும் விடுதி நிலையங்கள்) பள்ளிகளுக்கு அருகில் internats-relais-TM தானாகவே இடம்பெறுவர்" என்றும் ஆலோசனை கூறினார். 16 வயதிற்கு மேற்பட்ட ஒழுங்கு தவறிய இளைஞர்களுக்கு மிகக்கொடூரமான முன்மொழிவை ரோயால் தெரிவித்தார். அத்தகைய இளைஞர்களை இராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றார். "முதல் தடவை ஒழுங்கு தவறி நடத்தல்" என்பதிலிருந்து அவர்கள் "தாமாகவே இராணுவ கண்காணிப்பில் ஒரு சேவையில் வைக்கப்படவேண்டும்" என அவர் கோரினார். "அந்த இளைஞர்களை பொறுத்தவரை இது கட்டாய இராணுவ சேவைக்கு புத்துயிரூட்டுவதாக அமையும், இராணுவத்தில் அவர்கள் குடியுரிமை பயிற்சியை கற்றுக் கொள்வார்கள்" என அவ்வம்மையார் மேலும் குறிப்பிட்டார். சோசலிஸ்ட் கட்சியின் தேசியத் தலைமை ஜூன் 6-ல் நடாத்திய கூட்டத்தில் ரோயாலின் முன்மொழிவுகளின் பொருளை உள்ளடக்கிய, 2007 தேர்தல் நகல் அறிக்கையை வெளியிட்டது. அதே நேரத்தில் இராணுவம் பற்றிய குறிப்பை நீக்கிவிட்டது. இந்த வகையில் கட்சி ஒரு எதேச்சாதிகார போக்கை மேற்கொண்டிருக்கிறது. கோலிஸ்ட்டுகளும் தீவிர வலதுசாரிகளும் உடனடியாக இதை உணர்ந்து கொண்டனர். சார்க்கோசி கருத்துத் தெரிவிக்கும்போது "ரோயால் அம்மையாரே உங்கள் துணிச்சலை பாராட்டுகின்றேன், நீங்கள் சரியான வழியில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார். "நாங்கள் செல்கின்ற அதே வழியில் அவரும் சென்று கொண்டிருப்பதை நான் கவனித்து வருகிறேன்" என்று பிரதமர் டு வில்பன் கூறினார். Saône-et-Loire பகுதி UMP நாடாளுமன்ற உறுப்பினர் "ரோயல் அம்மையார் சரியான வழியில் வந்துவிட்டார். அவர் ஒரு உண்மையான அதிகாரியின் மகள்" என்று குறிப்பிட்டார். Rhône பகுதிக்கான UMP நாடாளுமன்ற உறுப்பினர் Georges Fenech "ரோயால், சோசலிசம் என்கின்ற இரத்தம் கசியும் இதயத்திலிருந்து முறித்துக் கொண்டார் என்று அவரது களிப்பை வெளிப்படுத்தினார், "சிகாகோவின் பூட் காம்ப் மாதிரியில் இராணுவ நிலையங்களை" (கடுமையான கட்டுப்பாடுகளை கொண்ட இராணுவ முகாம்: இராணுவ விதிமுறைகளில் தவறிழைக்கும் இளைஞர்களுக்கான சிறை) அமைக்க வலியுறுத்தியுள்ளார் என்று வெளிப்படுத்தினார்.ஜோன் மரி லு பென்னின் நவீன பாசிஸ தேசிய முன்னணியின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகின்ற Karl Lang "லூ பென்னின் கருத்துக்கள், மக்களது உள்ளங்களில் எங்களது நம்பிக்கைகளுக்கும் அப்பால் முன்னேறிக் கொண்டிருக்கிறது" என்று தனது வியப்பை வெளியிட்டார். சோசலிஸ்ட் கட்சியின் சில பிரிவினர் அவர் இவ்வளவு பகிரங்கமாக, எதேச்சதிகார போக்கை ஆதரிப்பது தங்களுக்கு, சங்கடம் தருவதாக கருதினர் மற்றும் இராணுவ கண்காணிப்பு முன்மொழிவை அவர்கள் விமர்சித்து ரோயாலை தாக்குதலுக்குட்படுத்திய பொழுது, அதற்கு மிகக்கடுமையாக எதிர்தாக்குதல் தொடுத்தார். "இராணுவ சேவையை ஒழித்துக்கட்டியது ஒரு தவறாகும், எனவே மற்றொரு வழியை நாம் வகுத்தாக வேண்டும்" என்று அவர் கூறினார். சோசலிசத்திற்கும், சீருடை அணிந்த இராணுவத்தினருக்கும் இடையில் எந்த முரண்பாட்டையும் சுட்டிக்காட்டுமாறு தன்னை கண்டித்தவர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்," "உலகில் எங்கு மனிதநேய சீரழிவுகள் தோன்றினாலும் அங்கே யார் நேரடியாகவும் உடனடியாகவும் செல்கிறார்கள்? இராணுவமும் தீயணைப்பு படைவீரர்களும், தரைப்படை வீரர்களும், அதாவது "சீருடைணிந்த வாழ்க்கைத்தொழிலை உடையவர்கள்" தானே அங்கு பணியாற்ற செல்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். கட்சிக்குள் உள்ள இதர சக்திகள் ரோயாலின் முன்மொழிவுகளை ஆதரித்தன. கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும், L.C.R.-ன் முன்னாள் உறுப்பினருமான Julien Dray, அவரது கருத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். அதேபோன்று பாரிஸ் நகரத்தின் சோசலிஸ்ட் கட்சி மேயர் Bertrand Delanoë யும் வேறு பலரும் ஆதரித்தனர். முன்னாள் பிரதமர் லியோனல் ஜோஸ்பன் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதை ஆதரிக்கும் Manuel Valls சொன்னார்: "அவர் சொன்னதை - அதாவது சட்டம்-ஒழுங்கு அதிகாரத்தை நிலைநாட்டுவது, விதிகளின்படி நடப்பது, ஆகியவற்றிற்குதான் முன்னுரிமை தரவேண்டும் என்று சொன்னதை கேள்விப்பட்டேன் மற்றும் வாசித்தேன் அதில் எதுவும், எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவர் மேலும் கூறினார்: "இது வழி தவறியது என்று நான் நினைக்கவில்லை, உழைக்கும் வர்க்க புறநகர் பகுதிகளில் எதிர்பார்க்கப்படுவதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்." ரோயாலின் பொதுச்சட்டப்படியான கணவரும், சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலாளருமான பிரான்சுவா ஹாலன்ட் கூறினார்: "உழைக்கும் வர்க்க மக்களிடம் பேசும்போது அந்த மக்கள் அனுபவிக்கின்ற சங்கடங்களை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், அதாவது குழப்பமான சமுதாயநிலை மற்றும் ஆபத்தான வேலைநிலைமைகள் [précarité] மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஆகியவற்றை அவர்களுக்கு தெளிவுப்படுத்தியாக வேண்டும்." பின்னர் அவர் ரோயால் இராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்திலிருந்து தன்னை தூரவிலக்கி வைத்துக்கொண்டார். பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பான, CFDT-ன் பொதுச்செயலாளர் François Chérèque ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது ரோயால் வெளியிட்ட அறிக்கைகள் "அதிர்ச்சி" தருபவையாக இருந்தாலும், ஒழுங்கீனங்களுக்கு எதிரான போராட்டத்தில் அந்த "பிரச்சினையை எழுப்புவதற்கு அவருக்கு உரிமையுண்டு." இந்த பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளாவிட்டால், "இடதுசாரிகள் ஒரு பெரிய தவறை செய்தவர்களாக ஆகிவிடுவர்." "நாம் அதைப்பற்றி விவாதிக்கவில்லை என்ற உண்மைதான் எனக்கு அதிர்ச்சியை தருகிறது" என்று அவர் கூறினார். மேலும் இராணுவ கண்காணிப்பு பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் "சற்று கடுமையானவை" என்று அவர் கூறினார். பிரான்சின் மிகப்பெரும் தொழிற்சங்க அமைப்பான CFDT, சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக உள்ளது மற்றும் மாணவர் மற்றும் தொழிலாளர்களின் 12 அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அமைந்த Intersyndicale, CPE-க்கு எதிராக நடைபெற்ற வெகுஜன இயக்கத்தை மூச்சுத்திணறச்செய்வதற்கு முன்னணிப் பங்கை ஆற்றியது. ஊடகங்கள், ரோயாலின் கருத்துக்களை பாராட்டி அவரது "துணிச்சலை" புகழ்ந்துரைத்தன. அவரது கருதத்துக்களின் "சொந்தத்தன்மைக்கு" பாராட்டுக்கள் குவிந்தன, என்றாலும் பிரெஞ்சு அரசியலில் தீவிர வலதுசாரிகள் விட்ட பொழுதுபோக்கு குதிரை ஆட்டங்களைத்தான் அவர் திரும்பவும் விட்டிருக்கிறார். முதலாளித்துவ அறிவுஜீவிகளின் மைய இடது பத்திரிகையாக பொதுவாக கருதப்படும் Le Monde பத்திரிகை, ஜூன் 3-ல் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: "ரோயால் அம்மையாரின் துணிச்சல் உண்மையானது, அவர் பழைய சம்பிரதாய சடங்குகள் பற்றி கவலைப்படவில்லை, அவர் நேரடியாக பேசுகிறார். அவரது அரசியல் நண்பர்கள் பலரை மெய்சிலிர்க்க செய்யும் முன்மொழிவுகளை எடுத்து வைத்திருக்கிறார். ஒடுக்குமுறை பற்றிய அவரது சொற்கள் பொதுவாக இடதுகளிடமும், குறிப்பாக சோசலிஸ்ட்டுகள் காதுகளிலும் எரிச்சல் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. வலதுசாரிகள் மட்டுமே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ஏகபோகம் படைத்தவர்கள் என்பதற்கு எதிராக ரோயால் முன்னறிவிப்பு கொடுத்திருக்கிறார் என்பது தெளிவான சிறப்பாகும், இதுதான் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட இருப்பவருக்கு சிறப்பை தருவதாகும்." அதே நாளில், பழமைவாத Le Figaro உற்சாகமாக தலையங்கம் எழுதியது: "அவர் இதை துணிச்சலாக செய்திருக்கிறார்!. ஒழுங்கீனங்கள், வேலையில்லாத நிலையோடு சேர்ந்து 'சமூக துன்பத்திற்கு' பிரதான காரணமாகும் என்று துணிவாகக் கூறுகிறார். இந்த கருத்துக்கள் புதுமையானவை அல்ல என்றாலும், எங்கிருந்து வருகின்றன என்பதை பார்க்கும்போது இந்த அறிக்கை ஒரு சம்பவமாகும்: 1980-களின் நடுப்பகுதியிலிருந்து, ஒரு இளைத்து களைத்துவிட்ட மார்க்சிசத்தின் சிதைவுகளில் இருந்து சோசலிஸ்ட் கட்சியை மேலாதிக்கம் செலுத்திய, 'மனிதவாதத்தின் உரிமைகள்' என்ற இரத்தம் சிந்தும் இதயத்திலிருந்து முற்றிலும் முறித்துக்கொள்வதை பிரதிநிதித்துவம் செய்கிறது." அந்த தலையங்கத்தை எழுதியவர்கள், நீண்டகாலமாக எள்ளிநகையாடப்பட்டு வரும், "குடும்பம், பணி, அதிகாரம், தகுதி, திறமை, நாடு" பற்றி பேசுவது மீண்டும் பாணியாகிவிட்டது என்று மகிழ்ச்சியடைந்தனர். 53 வயதான ரோயால், அன்றைய பிரான்சின் மேற்கு ஆபிரிக்க காலனியான செனெகல் நாட்டில் ஒரு பீரங்கிப்படை கேர்னலின் புதல்வியாக பிறந்தார். அவரது சகோதரரும் ஒரு இராணுவ வீரர்தான். அவர், உலக சமாதான இயக்கமான கிரீன் பீஸ் அமைப்பின் ரெயின்போ வாரியர் என்ற கப்பலை நியூசிலாந்தில் பிரான்சின் இரகசிய ஒற்றர்கள், 1985-ல் கடலில் மூழ்கச் செய்வதில் சம்மந்தப்பட்டிருந்தார். அந்த கப்பல், பசிபிக் மகா சமுத்திரத்தில், அன்றைய சோசலிஸ்ட் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் மற்றும் பிரதமர், லோரன் பாபியுஸ் ஆகியோரின் சோசலிஸ்ட் அரசாங்கம், அணு ஆயுதங்களை வெடித்து சோதனையிடுவதற்கு எதிராக கண்டன இயக்கத்தில் சம்மந்தப்பட்டிருந்தது. ENA ( பிரான்சின் அரசியல் மற்றும் ஆட்சித்துறைப்பணியின் செல்வந்தத்தட்டு பயிற்சிபெறும் நிர்வாக தேசிய பள்ளியில்) பட்டம்பெற்ற அவர், 1982-ல் மித்திரோனின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வந்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, பிரான்சுவா ஹாலந்தின் மனைவியாக இருந்துவரும் இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன.லியோனல் ஜோஸ்பனின் பன்மை இடது அரசாங்கத்தில் (1997-2002) அவர் ஒரு இளைய அமைச்சராக பணியாற்றி வந்தார். 2004-ல் நடைபெற்ற பிராந்திய தேர்தல்களில் வெற்றி பெற்று தற்போது அவர், Poitou-Charente பிராந்திய கவுன்சில் தவைராக பணியாற்றி வருகிறார். மித்திரோனை சுற்றியிருந்த நிர்வாக மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு தட்டை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். மார்க்சிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கான எந்த புரட்சிகர முன்னோக்கிற்கும் மூர்க்கத்தனமாய் குரோதம் உடைய இந்த தேசியவாத தட்டினர், கடந்த காலத்தில் ஒர் இன சேர்க்கை உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் பெண்ணியம் ஆகியவற்றை பாதுகாத்ததுடன் தொடர்புடைய தட்டாகும், லூ பென்னின் தேசிய முன்னணிக்கு எதிராக ஜனநாயக கொள்கைகளை பாதுகாப்பவராக தம்மை முன்னிறுத்திக் கொண்ட தட்டும் ஆகும் . இனியும் அது வழக்கில் இல்லை. ரோயாலால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் கடும் வலதுசாரி மாற்றமானது, அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் ஆழமாகிக் கொண்டுவரும் பூகோள நெருக்கடியால் உந்தப்படும், அரசியல் ஸ்தாபனங்களுக்குள்ளே பொதுவாக ஜனநாயகக் கொள்கைகளை கைவிடுவதன் ஒரு பகுதி ஆகும். இந்நெருக்கடி பிரான்சில் கடுமையான வடிவத்தை எடுத்துள்ளது. |