இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலக சோசலிச வலைத் தள (WSW) நிருபர்கள் சமீபத்தில் மத்திய மலையகத்தில் ஹட்டனில் உள்ள பன்மூர் தோட்டத்திற்குச் சென்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர். கடுமையான வீட்டு வசதிப் பற்றாக்குறை, தீர்க்கப்படாத குடிநீர்ப் பிரச்னை, நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சுகாதார வசதிகள், அதிக வேலைச்சுமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எந்தவகையிலும் பொருந்தாத குறைந்த பட்ச ஊதியம், அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை உட்பட அவசர பிரச்னைகள் குறித்து அவர்கள் விரிவாக விளக்கினர்.
ஏனைய தோட்டத் தொழிலாளர்களைப் போலவே, பன்மூர் தோட்டத் தொழிலாளர்களில் பலர் காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இல்லாத இருண்ட லயன் வீடுகளில் வாழ்கின்றனர். வழக்கமாக, இந்த வீட்டின் பரப்பளவு 300 சதுர அடி மட்டுமே. அவற்றில் பெரும்பாலானவற்றில், தொழிலாளர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் குடும்பங்களும் வசிக்கின்றன. சிலர் ஓய்வு பெறும்போது கிடைக்கும் சொற்ப உதவித்தொகையை தங்கள் பிள்ளைகளின் குடும்பங்களுக்கு வீட்டில் மேலதிக அறை ஒன்றை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தியுள்ளதோடு, அவர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் பிள்ளைகளை நம்பியிருக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த ஊதியம் ரூபா 1,350 ஆகம். சமீபத்திய மத்திய வங்கி அறிக்கையின்படி ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு அவர்களின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 150,000 ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள், மாத நடுப்பகுதியில் பெற்றுக்கொள்ளும் முற்பணம் மற்றும் பிற கட்டணங்களைக் கழித்துவிட்ட பின்னர், மாத இறுதியில் 15,000 அல்லது அதற்கு குறைவான ஊதியமே பெறுகின்றனர்.
40 வருடங்களுக்கு மேலாக பன்மூர் தோட்டத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றுள்ள கோவிந்தம்மாள், 1978 இல் முதன் முதலில் அவர் வேலைக்குப் போன போது கிடைத்த சம்பளத்தில் செய்ததை, இப்போது அதைவிட தொகையில் அதிகமான ஊதியத்தில் செய்ய முடியாது என கூறினார். “அன்றும் நாங்கள் வாழ்க்கையை சிரமத்துடன் ஓட்டினோம், இன்று அதை விட கடினம்” என அவர் கூறினார்.
“எனது மகன் தனியார் பிஸ்கட் கம்பனியிலும் மருமகள் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்கின்றனர். இருவரின் வருமானத்தை விட செலவு அதிகம். இருவருக்கும் சேர்த்து ஒரு இலட்சம் வருமானம் கிடைக்கிறது என்று எடுத்துக்கொண்டால், அவர்க்கள் இருவருக்கும் போக்குவரத்து செலவே மாதம் 30 ஆயிரம் ஆகிறது. பிள்ளைக்கு பால்மா வாங்க மட்டும் மாதம் 5 ஆயிரம் செலவாகும். அந்த காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட் 22 ரூபாய் இப்போது அது 490 ரூபாவிற்கு விற்கப்படுகிறது,” என கோவிந்தம்மாள் விளக்கினார்.
பெருந்தோட்டங்கள் அரசாங்கத்தின் கீழ் இருந்தபோது லயன் வீடுகள் திருத்திக் கொடுக்கப்பட்டன ஆனால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் படிப்படியாக அது கைவிடப்பட்டது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்: “1992இல் தேயிலைத் தோட்டங்களை தனியாருக்கு விற்றனர். கம்பனிகள் வீடுகளை திருத்தி கொடுப்பதில்லை. தொழிற்சங்கங்கள் தேர்தல் காலத்தில் வீடு கட்டுகிறோம், ரோடு போடுகிறோம் என வாக்குறுதி கொடுக்கின்றன. பின்னர் தொழிலாளர்களுக்கு சில கூரைத் தகரங்களை கொடுத்து சமாளித்துவிடுகின்றன.”
தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தொழிற்சங்கங்கள் வேண்டும் அவற்றுக்கு சந்தாப்பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த கோவிந்தம்மாளிடம், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்றனவா எனக் கேட்ட போது அவர் பின்வருமாறு கூறினார்:
“ஓய்வூதியத்தை எடுத்துதான் வீட்டை திருத்திக்கொண்டோம். சங்கங்களிடம் சொல்லி பிரயோசனம் இல்லை என்பதால் நாங்கள் கேட்பதில்லை. நாங்கள் உழைப்பதால்தான் கம்பனிகள் கோடிக்கனக்கில் இலாபம் சம்பாதிக்கின்றன. எங்காவது கேள்விபட்டிருக்கின்றீரகளா கம்பனி தொழிலாளர்களுக்கு உதவி செய்துள்ளதை? வேலை நிறுத்தம் செய்தாலும் சம்பளத்தை கூட்டிக் கொடுக்க மாட்டார்கள். கம்பனி (தொழிற்) சங்கத்து உதவி செய்கிறது சங்கம் கம்பனிக்கு உதவி செய்கிறது.”
பன்மூர் தோட்டத்தில் மருந்தகமோ மருத்துவ வசதியோ இல்லை. மகப்பேறு மருத்துவத்துக்கோ அல்லது வேறு எந்த நோய்க்கும் சிகிச்சை பெற வேண்டுமெனில் அவர்கள் சுமார் 12 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிளங்கன் வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் வறுமை நிலைமையின் காரணமாக, அவர்கள் விசேட வைத்திய நிபுணரை சந்திப்பது என்பது மிகவும் கடினமாகும். பெருந்தோட்டங்களில் நான்கு ஐந்து தோட்டங்களுக்கு ஒரு அம்புலன்ஸ் வண்டி மட்டுமே இருக்கும்.
59 வயதான கோசலை நெஞ்சுவலி காரணமாக முன்கூட்டியே ஓய்வுபெற்றுவிட்டார். அவரது கனவர் 47 வயதிலேயே சுகயீனத்தால் மரணமடைந்துவிட்டார். “தோட்டத்தில் ஆஸ்பத்திரி இல்லாததால் கிளங்கனுக்குத்தான் போக வேண்டும். அதுவும் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டுதான் போக வேண்டும். வைத்திய நிபுணரை பார்க்க வேண்டுமென்றால் நான்கு அல்லது ஐந்து ஆயிரம் தேவை. அதற்கு கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். மகன் வாங்கும் சம்பளம் சாப்பாட்டுக்கும் பிள்ளைகளின் படிப்பு செலவுக்குமே போதாது. பிள்ளைகள் இல்லையென்றால் ஓய்வுபெற்றவர்களை பராமரிக்க வழியே இல்லை,” என அவர் கூறினார்.
கோசலையின் வீட்டில் சிறிய வரவேற்பரை, படுக்கை அறை மற்றும் சமையலறையுமாக மூன்று அறைகள் மட்டுமே உள்ளது. “இந்த சிறிய வீட்டில் என் குடும்பத்தில் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுமாக ஆறுபேர் வாழ்கின்றோம். ஒரு நாள் விட்டுவிட்டுத்தான் தண்ணீர் திறந்து விடுவார்கள். அதற்கு மாதம் 200 ரூபா கட்ட வேண்டும்”, என அவர் தெரிவித்தார்.
“அரச ஊழியர்களுக்கு மாத சம்பளம் உண்டு. எங்களுக்கும் மாத சம்பளம் வேண்டும். எனினும் தொழிற்சங்கங்கள் அதற்காகப் போராடுவதில்லை,” என அவர் கூறனார்.
தோட்டத் தொழிலாள்களும் ஏனைய தொழிலாளர்களும் ஐக்கியப்பட்டு பெருந்தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்குப் போராடினால் மட்டுமே எல்லா தொழிலாளர்களுக்கும் கன்னியமாக வாழக்கூடிய உழைப்புக்கேற்ற ஊதியமும் மாத சம்பளம் கிடைப்பது சாத்தியமாகும், என தெளிவுபடுத்திய பின்னர், “நீங்கள் சொல்வதுடன் உடன்படுகிறேன், ஆனால் இதைப் பற்றி ஏனைய தொழிலாளர்களுடனும் கலந்துரையாட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
42 வயது தோட்டத் தொழிலாளியான தர்மராஜ் கூடியதாவது: “எங்களது குடும்ப செலவை எப்படியும் சமாளிக்க முடியாது. பாடசாலை போனால் ஒவ்வொரு நாளும் எதையாவது பிள்ளைகள் கேட்பார்கள். அதற்கு செலவிட வேண்டும். விலைவாசி உயர்கிறது. நாங்கள் கீழேதான் போகிறோம், மேலே போகவில்லை. தொழிறசங்கங்கள் தொழிலாளர்களின் அமைப்பு என்று கூற முடியாது. அவை கம்பனிகளுக்காகவே வேலை செய்கின்றன.”
முந்தைய அரசாங்கங்கள் மற்றும் ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) / மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசாங்கத்தைப் பற்றி பேசுகையில், மற்றொரு தொழிலாளி கூறியதாவது: “இதுவரை எந்த அரசாங்கமும் எங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமும் அவ்வாறே உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சரியாக முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. அப்படியென்றால் நாங்கள் தலை தூக்க முடியாது.”
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்பட்ட கடுமையான சிக்கனக் கொள்கைகளை அமுல்படுத்துவதால், தோட்டத் தொழிலாளர்களின் சொற்ப சம்பளத்தின் முழு மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அவர்கள் அரை பட்டினியிலும் வறுமையிலும் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட தொழிற்சங்கங்கள் எவ்வாறு தொழிலாளர்கள் மீதான இந்தத் தாக்குதல்களைத் தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு எவ்வாறு செயற்படுகின்றன என்பதை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் விளக்கியபோது, அவர் அதை 'முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்தார்.
33 வயது இளம் தொழிலாளியான என்லின், வறுமை காரணமாக பத்தாம் வகுப்புடன் பாடசாலையை விட்டு நின்றுவிட்டார். தோட்டத் தொழிலாளி ஆவத்கு முன்னர் அவர் 17 வயதில் ஒரு இரும்புக் கடையில் வேலைசெய்துகொண்டிருந்த போது நடந்த விபத்தில் அவரது ஒரு கண் குருடாகிவிட்டது. “அதன் பின்னர் 825 ரூபா நாள் சம்பளத்துக்கு பாதுகாப்பு உத்தியோகத்தராக வேலை செய்தேன். இருவு பகலாக நித்திரை விழித்து வேலை செய்ய முடியாத பட்சத்தில் நின்றுவிட்டேன்”.
பின்னர் அவர் ஹட்டன் நகரில் ஒரு துணிக் கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை விட அங்கு சம்பளம் அதிகமாக இருந்தாலும், நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கு அது போதாது. தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமே தோட்டத்தில் உள்ள லயன் வீடு அவருக்கு நிரந்தரமாகும். அதனால் அவர் மீண்டும் தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
மேலும் அவர் கூறியதாவது: “மேலதிகமாக கொழுந்து பறித்தால் கிலோவுக்கு 60 ரூபா மட்டுமே கிடைக்கும். பண்டிகை முற்பணம் மற்றும் முற்கொடுப்பனவுகள் எல்லாம் வெட்டிக்கொண்ட பின்னர் சுமார் 10 ஆயிரம் ரூபா மட்டுமே சம்பளம் கிடைக்கும்.”
பெற்றோரின் ஓய்வூதியத்தை எடுத்து அவரது லயன் வீட்டை விரிவாக்கி திருத்தும் நடவடிக்கை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிற்கின்றது. “எனக்கு உள்ள பிரதான பிரச்சினை வீட்டை கட்டி முடிக்க வேண்டும். அக்கா திடீரென இறந்து போனதால் மரணச் சடங்கிற்காக கடன் வாங்கினேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனைவி ஒரு கடையில் 15,000 ரூபா சம்பளத்துக்கு வேலை செய்கிறார். நாம் கடையில் கடன் வாங்கியுள்ளதால் அதை சம்பளத்தில் குறைத்துக்கொள்கின்றனர். எஞ்சிய பணத்தில் வீட்டுக்கு பொருட்கள் வாங்கிக்கொள்வார். அவரின் ஊதியம் கையில் கிடைப்பதில்லை.
“எங்களது சம்பளத் துண்டுக்கு வங்கியில் கடன் தரமாட்டார்கள். ஆயரிக்கணக்கானோர் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தோட்டத்தில் உள்ள பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காக தொழிற்சங்கங்களுக்கு மாதம் 335 ரூபா சந்தா கட்டுகிறோம். ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு சங்கங்கள் ஒன்றும் செய்வதில்லை.