முன்னோக்கு

ட்ரம்ப்-மஸ்க் பட்ஜெட் தலையீடு: ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான ஒத்திகை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது கோடீஸ்வர ஆதரவாளரும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலோன் மஸ்க் ஆகியோர், பட்ஜெட் தீர்மானத்தை தகர்ப்பதற்கு தலையீடு செய்துள்ளனர். மத்திய அரசின் ஒரு பகுதி பணிநிறுத்தத்தைத் தடுக்க இந்த வார பட்ஜெட் காங்கிரஸால் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போதிலிருந்து ஒரு மாதத்திற்குப் பின்பு, வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் திரும்பியதும் அவர் நடைமுறைபடுத்தவிருக்கும் அரசியல் அதிகாரத்திலுள்ள அனைத்து வரம்புகளையும் அகற்ற முனைந்த ஒரு தொடரின் சமீபத்தியதாக நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் டெக்சாஸின் போகா சிகாவில் எலோன் மஸ்க்குடன் பேசுகிறார். செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024.  [AP Photo/Brandon Bell]

பிரச்சினையில் இருப்பது, “தொடரும் தீர்மானத்தின்” விவரங்கள் அல்ல. (பொதுவாக அதிதீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியினருக்கும் அவர்களது ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே இருந்துவரும் ஒரு அழுகிய சமரசம்) மாறாக, அது நடைமுறைப்படுத்தப்பட்ட செயல்முறையாகும். இரண்டு முதலாளித்துவக் கட்சிகளும், இரு கட்சி ஒப்பந்தத்தின் மூலம் கூட்டாட்சி நிதியுதவியின் மூன்று மாதகால நீட்டிப்புக்கு ஒன்றாக ஒத்துழைத்தன. ட்ரம்பும் மஸ்க்கும் ஜனநாயகக் கட்சியினரின் எந்தப் பாத்திரத்தையும் எதிர்ப்பது மட்டுமல்லாமல், காங்கிரஸிலுள்ள குடியரசுக் கட்சியினரின் ஈடுபாட்டையும் எதிர்க்கின்றனர்.

தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மத்தியிலுள்ள கூட்டாட்சிக் கடன் உச்சவரம்பை உயர்த்தும் ஒரு ஏற்பாட்டை தீர்மானத்தில் சேர்க்க விரும்புவதாக ட்ரம்ப் திடீரென அறிவித்ததன் மூலம் இது எடுத்துக்காட்டப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை, ட்ரம்ப் ஆதரிப்பதாகக் கூறிய கூட்டாட்சி கடன் உச்சவரம்பை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தும் திட்டத்தை குடியரசுக் கட்சியினர் முன்வைத்தனர்.

கடந்த ஆண்டுகளில், கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கு வெள்ளை மாளிகையில் உள்ள கட்சியிடம் சலுகைகளைப் பெறுவதற்கு, ஆட்சியில் இல்லாத கட்சியால் பயன்படுத்தப்பட்டன. வலதுசாரி குடியரசுக் கட்சியினர் இந்த தந்திரோபாயத்தின் முக்கிய முதலாளிகளாக உள்ளனர். மிக சமீபத்தில் 2023 இல், சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பைடென் நிர்வாகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க செலவின வெட்டுக்களை முன்வைத்திருந்தார்.

பிரதிநிதிகள் சபையில் 220-215 மற்றும் செனட்டில் 53-47 என்ற குறுகிய குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டு விளிம்புகளைக் கருத்தில் கொண்டால், ட்ரம்ப் அவரது வரவிருக்கும் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதான இந்த சாத்தியமான தடையை அகற்ற விரும்புகிறார் என்பதாகும். அனைத்திற்கும் மேலாக, செல்வந்தர்களுக்கான அவரது பல ட்ரில்லியன் டாலர் வரி விலக்குகளை நீட்டிக்க போதுமான நிதிய வாய்ப்பை உருவாக்க அவர் விரும்புகிறார்.

சாதாரண சூழ்நிலைகளின் கீழ், மார்ச் 14, 2025 வரை செலவின அதிகாரத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பது புதிய நிர்வாகத்திற்கு மிகவும் சாதகமானதாக கருதப்படும். ஏனென்றால், இராணுவத்துக்கு அல்லாத வரவு-செலவு திட்டக்கணக்கு விடயங்கள் மீதான அனைத்து முக்கிய முடிவுகளும் ஒத்திவைக்கப்படும். அப்போது குடியரசுக் கட்சியினர் வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸின் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்கள். (குறிப்பிடத்தக்க வகையில், பென்டகனின் முன்னுரிமைகளை நிர்ணயிக்கும் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம், ஏற்கனவே காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி பைடெனால் சட்டமாக கையெழுத்திடப்பட்டுள்ளது.)

ஆனால், இவை சாதாரண காலங்கள் அல்ல. வாஷிங்டனில் நெருக்கடி மற்றும் செயலிழந்த சூழலை உருவாக்கவும், முன்னெப்போதும் இல்லாத வகையில், ஜனாதிபதி நடவடிக்கைக்கான எரியூட்டும் கோரிக்கைகளை உருவாக்குவதற்கும், ட்ரம்ப் தனது பதவியேற்பு நாளான ஜனவரி 20 வரை மத்தியிலுள்ள கூட்டாட்சி பணிநிறுத்தத்தை விரும்புவது மிகவும் சாத்தியமாகும்.

1933 இல், ஜேர்மனியில் சான்சிலர் அடோல்ஃப் ஹிட்லருக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கிய “நிறைவேற்றும் சட்டத்தின்” ஒரு அமெரிக்க பதிப்பை நடைமுறைப்படுத்துவதோ அல்லது ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தவுடன் அதற்கு சமமான விளைவைக் கொண்டிருக்கக்கூடிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பிப்பதோ இதில் உள்ளடங்கி இருக்கும்.

ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால்நிலை மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி குறித்த அதன் அலட்சியத்தின் காரணமாக, கடந்த நவம்பர் 5 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அதிலிருந்து ட்ரம்ப், அவரது புதிய எதேச்சதிகார ஆட்சிக்கான உருமாற்றத்தை இரண்டு இணையான பாதைகளில் முன்னேறி வருகிறார்.

முதலாவது, தனது சொந்த கட்சிக்குள்ளேயே எந்தவொரு எதிர்ப்பையும் அடையாளம் கண்டு குறிவைப்பதாகும். அமைச்சர் பதவிகள் மற்றும் முக்கிய காபினெட் அந்தஸ்துள்ள பதவிகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள் ஒரு அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்: அது, முழுமையான விசுவாசம் மற்றும் சட்டம் அல்லது அரசியலமைப்பையும் மீறி, தனது உத்தரவுகளை நிறைவேற்றும் விருப்பத்தை காட்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இப்போது, பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சனுக்கு ஜனவரி 3 அன்று, புதிய சபை கூடும்போது, பட்ஜெட் தீர்மானத்தின் வழியில் செல்லாவிட்டால் அவர் நீக்கப்படுவார் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில், ஜனாதிபதியின் அதிகாரத்தை தடையின்றி செயல்படுத்துவதற்கு இன்னும் என்னென்ன நிறுவன கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறித்து ட்ரம்ப் ஆராய்ந்து வருகிறார். செனட் சபையின் பணியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்த உத்தரவிடலாம் என்றும், “இடைக்கால நியமனங்கள்” மூலம் தனது நியமனங்களை நிறுவலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். உயர்மட்ட அதிகாரிகளின் விசுவாசத்தை (அரசியலமைப்புக்கு அல்ல, ஜனாதிபதிக்கு) ஆராயவும், அந்த தேர்வில் தோல்வியுற்றவர்களை களையெடுக்கவும் ஒரு இராணுவக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

சபாநாயகர் ஜோன்சனுக்கு குழிபறிப்பதன் மூலம், ஜோன்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கும், ட்ரம்புக்கு இன்னும் நேரடியாக அடிபணிந்த ஒரு புதிய சபாநாயகரைத் திணிப்பதற்கும் ட்ரம்ப் பாசிசவாதிகளின் மிகவும் தீவிர கன்னைக்கு, பிரதிநிதிகள் சபையின் சுதந்திர உள்குழு என்றழைக்கப்படுவதற்கு களம் அமைத்து வருகிறார். மேலும், சில பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினர், அவர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர், பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், எலன் மஸ்க் மசோதாவை நிரப்பலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.

ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான கேபிட்டோலை தாக்கிய பாசிச குண்டர்களுக்கு ஒட்டுமொத்தமாக மன்னிப்பு வழங்குவது, மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் கைது செய்யப்படுவதற்கும், சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுவதற்கும் மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கும் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை பாரியளவில் சுற்றி வளைப்பது உட்பட அவர் “முதல் நாளிலேயே ஒரு சர்வாதிகாரியாக” செயல்படப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். பிந்தைய நடவடிக்கைக்காக, அவர் அமெரிக்க இராணுவத்தை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில், சிவில் சட்ட அமலாக்கத்திற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவது Posse Comitatus சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த சில நாட்கள் மற்றும் வாரங்களில் நிகழ்வுகளின் ஏற்ற இறக்கங்கள் என்னவாக இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயமானது: ட்ரம்பும் அவரது அடிவருடிகளும் சர்வாதிகார அதிகாரத்தை உறுதிப்படுத்த முன்னேறி வருகின்ற நிலையில், பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியில் உள்ள அவரது பெயரளவிலான எதிர்ப்பாளர்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை.

வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலர் கரின் ஜோன்-பியர் வரவு-செலவுத் திட்ட தீர்மானத்தின் நடைமுறையளவிலான ட்ரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தைப் பற்றி மட்டுமே புலம்ப முடிந்தது. “ஒரு ஒப்பந்தத்தில் ஒரு ஒப்பந்தம்,” என்றும், “குடியரசுக் கட்சியினர் தங்கள் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்” என்றும் அவர் புலம்பினார். செனட் சபையிலுள்ள பெரும்பான்மை தலைவர் சக் சூமர் கூறுகையில், பிரதிநிதிகள் சபை ஒரு தொடர்ச்சியான தீர்மானத்தை நிறைவேற்றும் வரை காத்திருப்பதாகக் கூறியதுடன், “குடியரசுக் கட்சியினருடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது, நாங்கள் அதைக் கடைப்பிடிக்கிறோம்” என்பதையும் சேர்த்துக் கொண்டார். பிரதிநிதிகள் சபையிலுள்ள சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறுகையில், “பிரதிநிதிகள் சபையில் உள்ள குடியரசுக் கட்சியினர், அரசாங்க பணிநிறுத்தத்தால் அமெரிக்க மக்களுக்கு ஏற்படும் எந்தத் தீங்குக்கும், அல்லது அதைவிட மோசமானவற்றுக்குமான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வர்” என்றார்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தொடர்வதற்கும், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையைத் தொடர்வதற்கும், ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில் ஒரு பரந்த போரைக் கட்டியெழுப்புவதற்கும் அவர்கள் சாத்தியமான அளவுக்கு நிதியுதவி வழங்க அழுத்தம் கொடுப்பதில் மட்டுமே ஜனநாயகக் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.

இந்தக் கட்டுரை ஆசிரியரான பட்ரிக் மார்ட்டின் “சட்டம் மற்றும் சீர்குலைவு” என்ற தலைப்பில் போட்காஸ்டில் அமெரிக்க அரசியல் நெருக்கடி குறித்து பேட்டியளித்துள்ளார். இந்த நேர்காணல், நியூயோர்க் நகரில் WBAI இல் டிசம்பர் 23ம் திகதி, திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு, 99.5 FM மற்றும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள 150 பிற வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும். இந்த ஒலிபரப்பை lawanddisorder.org இலும் வாசகர்கள் கேட்கலாம்.

Loading