மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று, உக்ரேனிய இரகசிய சேவையானது, அணுசக்தி மற்றும் இரசாயன பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் இகோர் அனடோல்யேவிச் கிரிலோவை (Igor Anatolyevich Kirillov) மாஸ்கோவில் அவரது வீட்டிற்கு வெளியே ஒரு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்துள்ளது.
அணு ஆயுதம் ஏந்திய ராணுவத்தில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட மிக உயர்ந்த பதவியில் இருந்த அதிகாரியாக கிரிலோவ் இருக்கின்றார். இந்தக் கொலையானது, அதன் வெட்கக்கேடான தன்மைக்காக மட்டுமல்ல, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனமும் எந்த அளவிற்கு வெளிப்படையாக அதை பாதுகாத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு போர்க்களத்திற்கு வெளியே ஒரு பயங்கரவாத குண்டுவெடிப்பில் ஒரு இராணுவத் தலைவரைக் கொல்வது, சர்வதேச சட்டத்தின் கீழ், “துரோக” நடவடிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஜெனீவா ஒப்பந்தங்களின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அப்பட்டமான போர்க்குற்றம் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஊடகங்களால் பாராட்டப்பட்டது. டைம்ஸ் ஆஃப் லண்டன் ஒரு முக்கிய தலையங்கத்தில் இதை “நியாயமான பாதுகாப்பு நடவடிக்கை” என்று குறிப்பிட்டது. அதேவேளையில் டெலிகிராப் இந்தப் படுகொலையை “புத்திசாலித்தனமானது” என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் “துணிச்சலான” படுகொலை என்றும் குறிப்பிட்டன.
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், நேட்டோ அதிகாரிகளுக்கு எதிராகவும் மற்றும் டைம்ஸ் பணியாளர்களுக்கு எதிராகவும் கூட பதிலடி கொடுக்க ஒரு மறைமுக அச்சுறுத்தலை விடுத்த பின்னர், இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் லாமி கூறுகையில், “நான் டைம்ஸ் உடன் நிற்கிறேன்,” என்று கூறினார். இதனை, இந்தப் படுகொலை “சட்டபூர்வமானது” என்ற பத்திரிகையின் தலையங்க நிலைப்பாட்டின் ஒப்புதலாக மட்டுமே பார்க்க முடியும். இந்தக் கொலையை திறம்பட ஆதரித்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜனவரி 20 அன்று வரவிருக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முந்தைய வாரங்களில் போரைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஆதரவுடன், உக்ரேனால் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான தீவிர ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இந்த படுகொலை சமீபத்தியதாகும்.
கடந்த மாதம், பைடென் நிர்வாகமும் இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கமும் ரஷ்யாவிற்குள் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்தன. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பின்னர் அமெரிக்க ATACMS பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிரிட்டிஷ் Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரேன் ரஷ்யா மீது தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கின.
அணுஆயுதம் இல்லாத நாடுகளுக்கு, அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் உதவியுடன் ரஷ்யா மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அந்த அணுஆயுத சக்திகளது தாக்குதல்களாக கருதி, ஒரு திருத்தப்பட்ட அணுஆயுத கோட்பாட்டை ஏற்றுக் கொண்டதன் மூலம் கிரெம்ளின், இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்தது. இது, நடைமுறையளவில் நேட்டோவுக்கு எதிராக, ரஷ்யாவின் ஒரு சாத்தியமான பதிலடியை திறம்பட அங்கீகரிக்கிறது.
கடந்த நவம்பர் 21ம் தேதி வெளிவந்த நியூ யோர்க் டைம்ஸ், பைடென் நிர்வாகமானது, உக்ரேனை அணுவாயுதங்களை பயன்படுத்த அனுமதிப்பது பற்றி விவாதித்து வருவதாக தகவல் வெளியிட்டது. “சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் செய்ததைப் போல, உக்ரேன் மீண்டும் அணுஆயுதங்களை வைத்திருக்க திரு. பைடென் அனுமதிக்கலாம் என்று கூட பல அதிகாரிகள் பரிந்துரைத்தனர்” என்று டைம்ஸ் எழுதியது. இதற்கிடையில், ஜேர்மனி மற்றும் பிரான்சின் அதிகாரிகள் உக்ரேனில் ஐரோப்பிய துருப்புக்களை நிலைகொள்ள வைப்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருவதாக உறுதிப்படுத்தினர்
இதற்கு விடையிறுக்கும் வகையில், ரஷ்யா உக்ரேனில் உள்ள டினிப்ரோ நகரத்தின் மீது அணுஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட, பல ஏவுகணைகளை தாங்கிச் செல்லக்கூடிய ஒரு இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது.
நேட்டோவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் நோக்கம், இன்னும் ஒரு மாதத்தில் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக “கள உண்மைகளை” உருவாக்குவதாகும்.
தேர்தலுக்கு முன்னதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன்-பியர் ட்ரம்ப் ஒரு “பாசிசவாதி” என்றும், அவர் “முதல் நாளிலேயே ஒரு சர்வாதிகாரியாக” இருப்பார் என்றும் எச்சரித்தார். ஆனால், ஆட்சியிலிருந்து வெளியேறும் பைடென் நிர்வாகம், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நோக்கம் குறித்த அனைத்து விமர்சனங்களையும் கைவிட்டுள்ளது.
மாறாக, ரஷ்யாவுடனான மோதலை அதிகரிப்பதே அதன் மைய முன்னுரிமையுடன், உலகெங்கிலும் வாஷிங்டனின் போர்களை தொடர்ந்து விரிவுபடுத்துவதுதான் பைடென் நிர்வாகத்தின் இந்த மாற்றத்திற்கான உள்ள ஒரே இலக்காக உள்ளது.
ட்ரம்பும் அவரது நிர்வாகத்தின் வருங்கால உறுப்பினர்களும் ரஷ்யாவிற்குள் ஆழமாக தாக்குதல் நடத்துவதற்கான பைடெனின் அங்கீகாரத்தையும், கிரிலோவ் கொல்லப்பட்டதையும் பகிரங்கமாக விமர்சித்துள்ளனர். சீனாவுடனான மோதலுக்கான தயாரிப்பில் பசிபிக் இராணுவமயமாக்கல் மீது அமெரிக்க இராணுவ முயற்சிகளை ஒருங்குவிப்பதற்காக, உக்ரேனிய போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை ஆதரிப்பதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் பிரிவுகள் தெரிவித்துள்ளன.
வெளியேறும் பைடென் மற்றும் வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகங்கள் இரண்டுமே அமெரிக்க மேலாதிக்கத்தையும் கட்டுப்பாடற்ற இராணுவ வன்முறை மூலமாக டாலரின் மேலாதிக்கத்தையும் அமுல்படுத்தும் இலக்கைப் பகிர்ந்து கொள்கின்றன. 2019 ஆம் ஆண்டில், உக்ரேனுக்கு பெரிய அளவிலான கொடிய ஆயுதங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் அளித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆவார். இது, உக்ரேனை நேட்டோவின் பினாமியாக மாற்ற உதவியதுடன், பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்பையும் தூண்டியது. 2018 இல், ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்ட ட்ரம்ப் நிர்வாகம், “பயங்கரவாதம் அல்ல, வல்லரசு போட்டியே இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முதன்மை மையமாக உள்ளது” என்று அறிவித்தது.
இரண்டு நிர்வாகங்களின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகள், உண்மைகளை முன்வைப்பதில் தங்கியுள்ளது. உலகெங்கிலும் இடம்பெற்றுவரும் வாஷிங்டனின் போர்கள் கருணைமிக்க நற்பண்பினால் தூண்டப்பட்டவை என்று பைடென் பொய்யாகக் கூறுகிறார். இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக, அமெரிக்கா போர்களை நடத்துகிறது என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், ஈராக்கிய “எண்ணெயை” அமெரிக்கா எடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையயை மிக நேரடியாக வெளிப்படுத்தினார்.
அதிகரித்தளவில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் உக்ரேனிய போரை ஏகாதிபத்திய சூறையாடல் என்ற ட்ரம்ப்பிச மொழியில் மறுவார்ப்பு செய்து வருகின்றன. இந்த மாற்றத்திற்கான தொனி அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆல் அமைக்கப்பட்டது. “அவர்கள் (ரஷ்யா) உக்ரேனில் 10 முதல் 12 ட்ரில்லியன் டாலர் வரையிலான முக்கிய கனிமங்களின் மீது அமர்ந்திருக்கிறார்கள்... அந்த பணத்தையும் சொத்துக்களையும் சீனாவுடன் பகிர்ந்து கொள்ள புட்டினுக்கு கொடுக்க நான் விரும்பவில்லை” என்று அவர் கடந்த செப்டம்பரில் வலியுறுத்திக் கூறினார்.
வாஷிங்டன் போஸ்டில் கடந்த புதனன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், மார்க் ஏ. தீஸ்ஸன் என்ற கட்டுரையாளர், “உக்ரேனின் 26 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள எரிவாயு மற்றும் தாதுப்பொருட்களை புட்டின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறாரா?” என்று வினவினார்.
கட்டுரையாளர் தீஸ்ஸன், “ஐரோப்பாவின் ரொட்டிக் கூடை மட்டுமல்ல, ஒரு கனிம வல்லரசாக இருக்கும் உக்ரேன், உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் 117 கனிமங்களில் 120 மிகப்பெரிய இருப்புக்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா அதன் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானதாக கருதும் 50 மூலோபாய கனிமங்களை அங்கு அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் பல மிகவும் அரிதானவை என்றாலும், சில உயர் மதிப்பு பயன்பாடுகளுக்கு முக்கியமானவையாக இருக்கின்றன. அவற்றில் 22 ஐ, உக்ரேன் வழங்குகிறது” என்று அறிவித்தார்.
மேலும் அவர், “உக்ரேனுக்கு உதவ அமெரிக்க மக்கள் ஏற்கனவே 183 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். … அமெரிக்க வரி செலுத்துவோருக்கு அந்த முதலீட்டில் வருவாய் கிடைக்க வேண்டாமா? உக்ரேனிய டைட்டானியம் அமெரிக்க விமானங்களுக்குள் செல்வதை நாங்கள் விரும்புகிறோமா, அல்லது அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்களுக்குள் செல்ல வேண்டுமா? உக்ரேனின் லித்தியம் மற்றும் அரிய பூமியின் வளங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்னணு மற்றும் மின்சார வாகனங்களை இயக்க வேண்டுமா அல்லது சீன வாகனங்களை இயக்க வேண்டுமா?” என்று வினவினார்.
“அமெரிக்க பின்வாங்கலின் விலை: வாஷிங்டன் ஏன் தனிமைப்படுத்தல்வாதத்தை நிராகரிக்க வேண்டும் மற்றும் முதன்மையை தழுவ வேண்டும்” என்று தலைப்பிட்ட Foreign Affairs இதழில் வெளியான ஒரு கட்டுரையில், குடியரசுக் கட்சியின் செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கொனெல், “அமெரிக்காவின் பாதுகாப்பும் செழிப்பும், அதன் இராணுவ மேலாதிக்கத்தில் வேரூன்றியுள்ளன” என்று அறிவித்தார். அவர் மேலும், “அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் கடின சக்தியின் மையப் பாத்திரத்தில் இரு கட்சிகளின் ஒருமித்த கருத்தை அமெரிக்கா அவசரமாக எட்ட வேண்டியுள்ளது” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
சீனாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரே வழி (ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய வெளியுறவுக் கொள்கையின் இலக்கு) ரஷ்யா மீது இராணுவ வெற்றியை அடைவதே என்று மெக்கனெல் வாதிட்டார். “சீனாவை எதிர்த்து நிற்பதற்கு, உக்ரேனைக் கைவிடுவதன் மூலம் அந்த சவாலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற குறுகிய பார்வை கொண்டவர்களின் ஆலோசனையை ட்ரம்ப் நிராகரிக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஐரோப்பிய மற்றும் பசிபிக் அரங்குகளின் ஒப்பீட்டளவிலான முன்னுரிமை மீது என்னதான் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்தைப் பேணுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உலகெங்கிலும் போர் தொடுப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பல தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சியை விரிவுபடுத்துவதற்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினதும் அனைத்து கன்னைகளுக்குள்ளும் ஆதரவு உள்ளது.
இந்த யதார்த்தம், உலகெங்கிலுமான இராணுவ நடவடிக்கைகளுக்கான நிதியாதாரங்களுடன் சேர்ந்து, அமெரிக்க அணுஆயுத தளவாடங்களை விரிவாக்குவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் கட்டளையிடும் வகையில், மனிதகுல வரலாற்றில் வேறெந்த நாட்டையும் விட, மிகப்பெரிய இராணுவ நிதி வழங்கும் மசோதாவான, தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்திற்கு அமெரிக்க செனட் சபை கடந்த புதனன்று பெருவாரியாக நிறைவேற்றியதில் இருந்து இந்த யதார்த்தம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
பைடெனின் உக்ரேன் கொள்கை பற்றிய ட்ரம்பின் வாய்வீச்சலான விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல், ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபனமும், காஸாவில் அமெரிக்காவினால் நிதியளிக்கப்பட்டுவரும் அழிப்புப் போரில், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் பயங்கரவாதம், படுகொலை மற்றும் இனப்படுகொலை முறைகள் மூலம் உலகம் முழுவதும் போரின் பாரிய விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது.
இத்தகைய போர்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடித் தாக்குதலின் மூலமாக விலை கொடுக்கப்பட உள்ளன. ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் இவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த நகர்வார். சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை வெட்டிக் குறைப்பதற்கும், அமெரிக்க தபால் சேவையை தனியார்மயமாக்குவதற்கும், மீதமுள்ள சுற்றுச்சூழல் மற்றும் பணியிடப் பாதுகாப்புகளை அகற்றுவதற்கும் ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நிதிய தன்னலக்குழுவின் வங்கிக் கணக்குகளை நிரப்பும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் “போர் முயற்சி” என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும்.
போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்ட இயக்கத்துடன் ஒன்றிணைப்பது இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.