இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
திங்கட்கிழமை, கொழும்பு புறநகர் பகுதியில் சுமார் 500 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் (SDO) அமைதியான போராட்டத்தின் மீது நூற்றுக்கணக்கான இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர்.
கைது செய்யப்பட்டுள்ள நான்கு பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது சட்டவிரோதமான கூட்டம் கூட்டியமை, போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தமை, பொலிசாரை காயப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பின்னர் பொலிஸ் அவர்களை டிசம்பர் 10 வரை விளக்கமறியலில் வைக்க நீதவானிடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளது.
இந்த பொலிஸ் நடவடிக்கை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும். ஜனாதிபதி திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) ஆட்சியானது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அதன் வாக்குறுதியை சவால் செய்யும் தொழிலாளர்களின் எந்தவொரு நடவடிக்கையையும் நசுக்குவதற்குத் தயங்காது.
திங்கட்கிழமை, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் (CDOA) அழைப்பு விடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், பத்தரமுல்லைக்கு அருகில் உள்ள இசுருபாயவில் கல்வி அமைச்சுக்கு வெளியே நடைபெற்றது.
விசேட அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஊழியர்கள் இலங்கை பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், “ஆட்சியாளர்களே, காலதாமதத்தை நிறுத்துங்கள்! பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளுங்கள்!” என கோஷமிட்டனர். 2021 முதல் இதே கோரிக்கைக்காக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி அமைச்சிற்குள் நுழைவதைத் தடுக்க குவிக்கப்பட்ட 200 பொலிசார், ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயன்று, அமைதியான போராட்டக்காரர்களை காலால் உதைத்து கையால் குத்தினர். போராட்ட இடத்திற்கு அருகில், பொலிசாரின் நீர் தாரை வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பொலிஸ் போராட்டக்காரர்களை வீதியில் இருந்து நடைபாதைக்குத் தள்ளியது. நான்கு ஆர்வலர்களைப் பிடித்த பொலிசார் அவர்களை முச்சக்கர வண்டியிலும் ஜீப்பிலும் தொலைவுக்கு கொண்டு சென்றனர். இந்த மோதலில் 3 பொலிசார் காயமடைந்தனர்.
எல்.பி.எஸ். அபேவிக்ரம, எச்.வை.எல். பெரேரா, கே.எம்.ஜி. கொஸ்வத்த, எச்.டபிள்யூ. ஆராச்சிகே ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் நால்வரும், திங்கட்கிழமை மாலை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை டிசம்பர் 10 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் முதலில் உத்தரவிட்டார்.
2020 இல், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம் சுமார் 50,000 பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக் கொண்டதுடன், 2022 ஜனவரியில் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளாக (EDO) அவர்களுக்கு நிரந்தர நியமனம் கொடுத்தது.
2021 இல், சுமார் 16,000 பட்டதாரிகள் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆசிரியர் சேவையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் சேவையில் உள்ள அதே தகுதிகளைக் கொண்டவர்களுக்கு கிடைப்பதை விட மாதம் 6,500 ரூபாய் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் விராஜ் மனுரங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கல்வி அமைச்சினால் போட்டிப் பரீட்சைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கடந்த ஐந்து வருடங்களாக தங்களை ஆசிரியர்களாக உத்தியோகபூர்வமாக ஒருங்கிணைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர், என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அழைப்பாளர் விராஜ் மனுரங்க உட்பட 10 பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று பிரதி கல்வி அமைச்சர் மதுர சேனாரத்னவைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசிய மனுரங்க, அமைச்சர் சேனாரத்ன 'ஒரு பிரச்சனை இருப்பதை ஏற்றுக்கொண்டார்' என்றும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
குறைந்த ஊதியம் மற்றும் மோசமான சமூக நிலைமைகள் குறித்து உறுப்பினர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்திற்கு பிரதிபலிக்கும் வகையிலேயே ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை திங்களன்று இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு கெளரவமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை வென்றெடுப்பதற்காக நடத்த வேண்டிய அனைத்து அரச ஊழியர்களின் ஒருங்கிணைந்த அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்திற்கு எதிராக, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத் தலைமையானது, தங்கள் கோரிக்கைகளை வழங்குமாறு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்கலாம் என்ற மாயையை விதைக்கவே முயற்சிக்கிறது.
பொலிஸாருக்கு ஏற்பட்ட சில காயங்கள் கூரிய ஆயுதங்களால் ஏற்பட்டுள்ளதாக கூறிய கொழும்பு ஊடகம், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்த முயற்சித்தது. இதை நிராகரித்த மனுரங்க, ஆர்ப்பாட்டக்காரர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல்கள் ஆத்திரமூட்டல்காரர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பாளர்களிடையே இருந்த ஒரு 'அந்நியரை' பிடித்து பொலிசாரிடம் ஒப்படைப்பதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
திங்கட்கிழமை பொலிஸ் தாக்குதலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோக்த்தர்கள் கைது செய்யப்பட்டமையும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அதன் பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகும். பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.வி.பி./தே.ம.ச. கேட்டுக்கொண்ட 'பலமான' அரசாங்கத்தின் உண்மையான முகம் இதுவே ஆகும்.
இப்போது ஜே.வி.பி./தே.ம.ச. அமைச்சர்களாக அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நீண்ட கால தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், திங்களன்று நடந்த போராட்டத்தை பகிரங்கமாக கண்டனம் செய்தனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளரும், தற்போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சந்தன சூரியராச்சி, தான் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாக தெரிவித்தார். அவர் அரச துறை தொழிற்சங்கங்களின் கூட்டணியான அரச மற்றும் மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்களின் கூட்டணியின் தலைவராகவும் உள்ளார்.
ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளருமான மஹிந்த ஜயசிங்க இப்போது பிரதி தொழில் அமைச்சராக உள்ளார். போராட்டக்காரர்கள் பொலிசாரை காயப்படுத்தியதற்காக குற்றம் சாட்டி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர், 'இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் [முன்பு] நடந்ததில்லை' என்று அறிவித்தார். தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்காத ஜயசிங்க, உண்மையில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அரச வேட்டையாடலை ஊக்குவிக்கின்றார்.
திங்களன்று, ஒரு 'தீர்வை' தயாரிப்பதன் பேரில், ஜே.வி.பி./தே.ம.ச. அமைச்சரவை, பல சிரேஷ்ட அதிகாரத்துவத்தினர் உட்பட பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் ஒரு 'அமைச்சரவை குழுவை' நியமித்தது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளின் 'தகுதிகள் மற்றும் தொழில் தகைமைகளை சரியாக மதிப்பீடு செய்யப்படாமல் மேற்கொள்ளப்பட்ட' ஆட்சேர்ப்பு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
'சரியான தூண்டுதல், பணியிடத்தில் பயிற்சி, தெளிவான முறையில் கடமைகளை வழங்குதல் ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக, இந்த அதிகாரிகளின் எதிர்பார்க்கப்படும் செயல்திறன் தரநிலைகளை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை தடுக்கின்றது,' என்று அவர் கூறினார். இது குறித்து அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலும், விசேட அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்தலும், திசாநாயக்கவின் அமைச்சரவையானது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் எதனையும் வழங்குவது ஒருபுறம் இருக்க, அவற்றை அணுகக் கூட மாட்டாது, என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மாறாக அது அவர்களின் 'செயல்திறன் தரங்களை' ஆராயும்.
உண்மையில், திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமானது இலங்கை முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கோபத்தின் ஒரு முனை மட்டுமே.
2022 ஏப்ரல் - ஜூலையில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன இயக்கத்தைத் தூண்டி, ஆட்சியைக் கவிழ்த்து, அவரை இராஜினா செய்ய நிர்ப்பந்தித்த, சமூகப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.
வெகுஜன எழுச்சியானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்களாலும், போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது. இவை ஜே.வி.பி. மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், ஒரு இடைக்கால ஆட்சியை ஸ்தாபிக்குமாறு மதிப்பிழந்த பாராளுமன்றத்திற்கு விடுத்த அழைப்புக்கு போராட்டத்தை அடிபணியச் செய்தன. இது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு வழி வகுத்தது. அவர், அதிக வரிகள், நலன்புரி வெட்டுக்கள் மற்றும் பிற சமூகத் தாக்குதல்கள் மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளுவது உட்பட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு உடன்பட்டு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிணை எடுப்பு கடன் பெற சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கையின் ஸ்தாபனக் கட்சிகளை எதிர்ப்பவர்களாகக் காட்டிக் கொண்டு, திசாநாயக்கவும் அவரது ஜே.வி.பி./தே.ம.ச.யும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளைப் பற்றி 'மீண்டும் பேரம் பேசுவோம்' என்று கூறினர். ஜே.வி.பி. தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்பட்ட இந்த பொய்கள், மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டன. திசாநாயக்க, நவம்பர் 21 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை அறிக்கையில், தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் என அறிவித்து, தனது வாக்குறுதியை மீறினார்.
ஒரு வெகுஜன எழுச்சி மீண்டும் தலைதூக்குவதையிட்டு அஞ்சினாலும், இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் போலவே, ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியும், அவர்களின் எஜமானர்களான சர்வதேச நாணய நிதியம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் இலங்கை பெருவணிகத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்யும். பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தே.ம.ச. வேட்பாளர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி, வரவிருக்கும் ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகத்தில் வேலைநிறுத்தங்களுக்கு முடிவுகட்டப்படும் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மீது திங்களன்று நடந்த வன்முறை பொலிஸ் தாக்குதல், அது எப்படி செய்யப்படும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான அரச தாக்குதலை பாரதூரமானதாக எடுத்துக் கொள்ளுமாறும், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கவும் அணிதிரளுமாறு, தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வலியுறுத்தியுள்ளபடி, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைவதன் மூலம் மட்டுமே, ஜே.வி.பி./தே.ம.ச. அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களுக்கு எதிராகவும் போராட முடியும். தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் எதிர்கொள்ளும் எரியும் சமூக பிரச்சனைகள் எதுவும் முதலாளித்துவ முறைமையின் கீழ் தீர்க்கப்பட முடியாது.
அனைத்து வெளிநாட்டுக் கடனையும் தள்ளுபடி செய்வது, வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது உட்பட, சோசலிச மற்றும் சர்வதேச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டமே முன்னோக்கி செல்வதற்கான வழியாகும்.
இதற்கு, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களும் கிராமப்புறங்களில் உள்ள உழைப்பாளர்களும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்னோக்கை முன் கொண்டு செல்ல தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கிறது.
மேலும் படிக்க
- இலங்கை அரசாங்கம் 1.4 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துவதை எதிர்த்திடு!
- வர்க்கப் போராட்டங்களை எதிர்வரும் தேர்தல்களுக்கு அடிபணியச் செய்யும் இலங்கை தொழிற்சங்கங்களின் முயற்சியை எதிர்த்திடு! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்! சோசலிச கொள்கைகளுக்காகப் போராடு!
- இலங்கை பொலிஸ் போராட்டம் செய்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கொடூரமாக தாக்கியது