முன்னோக்கு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் இனப்படுகொலையை இயல்பாக்குவதும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த வியாழனன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் ஆகியோரை போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது செய்வதற்கான பிடியாணைகளை உத்தியோகபூர்வமாக பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் டெல் அவிவில் உள்ள கிரியா இராணுவத் தளத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகின்றனர். சனிக்கிழமை, அக்டோபர் 28, 2023 [AP Photo/Abir Sultan]

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையானது, அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் தொடுக்கப்பட்டுவரும் அழித்தொழிப்பு போரின் குற்றத்தன்மைக்கு ஒரு சான்றாகும். இதன் விளைவாக, காஸாவில் குறைந்தது 42,000 மற்றும் 183,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காஸா மீதான படையெடுப்புக்கு முந்தைய மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். முழு சனத்தொகையும் கடுமையான உணவு, தண்ணீர் பற்றாக்குறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோடு பெரும்பான்மையான வீடுகள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, நெதன்யாகு மற்றும் கேலண்ட் மீது “பட்டினியைப் போர் முறையாகப் பயன்படுத்துதல் போர்க்குற்றம்” என்றும், கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

காஸா இனப்படுகொலைக்கு எதிராக உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களால் நடத்தப்பட்டு வருகின்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் இந்த தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது. மேலும், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் இந்தப் போராட்டங்களை யூத-எதிர்ப்புவாதத்தால் உந்துதல் பெறுவதாக பொய்யாக கண்டனம் செய்து வருகின்றன.

நெதன்யாகு மேற்கொண்டுவரும் குற்றம் ஏகாதிபத்தியத்தின் குற்றமாகும். பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியில் இருந்து குடியரசுக் கட்சி மற்றும் வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் வரையில், ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் இனப்படுகொலையை ஆதரித்து வருவதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவைக் கண்டிப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

வியாழனன்று வெளிவிட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க செனட்டர் ரொம் காட்டன், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கவும், அல்லது அதன் தலைவர்களை படுகொலை செய்யவும் அச்சுறுத்தல் விடுத்தார். அதேவேளையில், செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் இரு கட்சி செனட்டர்கள் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அழைப்புகளுக்கு வெள்ளை மாளிகை திறந்த மனதுடன் இருக்கிறது.

ஜனாதிபதி ஜோ பைடென் காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் போருக்கு ஒரு பகிரங்க ஒப்புதலுடன் இந்த பிடியாணைகளுக்கு பதிலளித்தார். “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எதைக் குறிப்பதாக இருந்தாலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் எந்த சமநிலையும் கிடையாது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாங்கள் எப்போதும் அதற்கு துணை நிற்போம்” என்று பைடென் அறிவித்தார்.

உண்மையில், இங்கு எந்த சமநிலையும் இல்லை. பாலஸ்தீனியர்கள் பல தசாப்தங்களாக இஸ்ரேலின் கைகளில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஆவர். இஸ்ரேல், ஏகாதிபத்திய சக்திகளால் நிதியளிக்கப்பட்டுவரும் ஒரு பாரிய ஆயுதமேந்திய அரசாக இருந்து வருவதுடன், சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டுக்கள் இஸ்ரேலை மட்டுமே கண்டிக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் நன்கு அறிவர். ஒரு குற்றத்திற்கு நிதியுதவி செய்பவர்கள், இயக்குபவர்கள் மற்றும் ஒப்புதல் அளிப்பவர்கள், நீதிமன்ற கமிஷனில் குற்றவாளிகள் என்பது நன்கு நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடாகும்.

நெதன்யாகுவுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு மீதான அவர்களின் தாக்குதலுக்கு நியாயப்படுத்தல்களை வழங்க அமெரிக்க அதிகாரிகள் அக்கறை காட்டும் மட்டத்திற்கு, குறிப்பாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன்-பியரின் வார்த்தைகளில் கூறுவதானால், “இந்த விஷயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று அவர்கள் வெறுமனே கூறிவிட்டனர்.

இது ஒரு மோசடியாகும். பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று சர்வதேச நீதிமன்றம் இந்த ஆண்டு திட்டவட்டமாக தீர்ப்பளித்தது. அதேபோல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் பாலஸ்தீனத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கொண்டுவர முடியும் என்று தீர்ப்பளித்தது.

காஸா மீதான இனப்படுகொலையானது, முன்னாள் காலனித்துவ உலகை ஏகாதிபத்திய சக்திகளுக்கு முழுமையாக அடிபணிய வைக்கும் நோக்கில், ரஷ்யா, சீனா, வட கொரியா மற்றும் ஈரானை மையமாக இலக்கில் வைத்து, ஏகாதிபத்திய போரின் ஓர் உலகளாவிய வெடிப்பின் பாகமாக உள்ளது. Foreign Affairs இதழின் சமீபத்திய பதிப்பில் வெளிவந்த முதன்மைக் கட்டுரை பின்வருமாறு வலியுறுத்துகிறது:

மட்டுப்படுத்தப்பட்ட யுத்த சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது; ஒரு விரிவான மோதல்களின் யுகம் தொடங்கியுள்ளது. உண்மையில், இன்று உலகம் பார்த்துக் கொண்டிருப்பது கடந்த காலத்தில் கோட்பாட்டாளர்கள் “மொத்த போர்” என்று அழைத்ததற்கு ஒத்ததாகும். இதில் போரிடுபவர்கள் பரந்த ஆதார வளங்களைப் பெறுகிறார்கள், அவர்களின் சமூகங்களை அணிதிரட்டுகிறார்கள், மற்ற அனைத்து அரசு நடவடிக்கைகளையும் விட போருக்கு முன்னுரிமை அளித்து, பரந்த அளவிலான இலக்குகளைத் தாக்குகிறார்கள். மேலும், அவர்களின் பொருளாதாரங்களையும் மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் மறுவடிவமைக்கிறார்கள்.

உலகளாவிய போர்முறையின் இந்த புதிய சகாப்தம், “பல்வேறு வகையான இலக்குகளைத் தாக்குவதற்கு” நாடுகளை அனுமதிக்கிறது என்று அறிவிப்பது, சர்வதேச சட்டங்கள் இடைநிறுத்தப்படுகிறது என்பதாகும். மேலும் பொதுமக்கள், மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் அனைத்தும் இலக்குகளாக உள்ளன என்று கூறுவது ஒரு பேச்சுவழக்கு வழியாகிவிட்டது. “இஸ்ரேலிய மாதிரி” என்பது ஏகாதிபத்திய சக்திகளால் எதிர்காலத்தில் போர் தொடுப்பதற்கான தரநிலையாக மாற்றப்படுகின்றது.

நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியதற்கு அமெரிக்காவின் வக்கிரமான விடையிறுப்பானது, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அதன் பிராந்தியத்தின் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, பைடெனும் இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரும் ரஷ்யாவிற்குள் நேட்டோவின் தொலைதூர ஏவுகணைகளை ஏவுவதற்கு ஒப்புதல் அளித்து வெறும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் வந்துள்ளது.

காஸா இனப்படுகொலைக்கு ஏகாதிபத்திய சக்திகள் அனுசரணை வழங்குவது என்பது ஒரு எச்சரிக்கையாகும்: அவர்கள் தங்கள் புவிசார் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக, அவர்களின் எதிரிகள் மற்றும் அவர்களின் சொந்த குடிமக்கள் இரண்டினதும் எண்ணற்ற எண்ணிக்கையிலான மக்களை மரணத்திற்குள் தள்ளுவதற்கு தயாராக உள்ளனர். ஒரு வருடத்திற்கும் மேலாக, பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கள் (இரண்டு ஹிரோஷிமா அளவிலான அணுகுண்டுகளுக்கு சமம்) செய்த அழிவுகளை ஒரு நவீன அணு ஆயுதத்தின் மூலம் ஒரு நொடியில் செய்துவிட முடியும்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணையை, அமல்படுத்தாது என்று உறுதிபடக் கூறும் ஜேர்மன் அரசாங்கம், “இஸ்ரேலுடன் நாம் தனித்துவமான உறவுகளையும் பெரும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கிறோம் என்பது ஜேர்மன் வரலாற்றின் ஒரு விளைவாகும்” என்று அறிவித்தது. “நாஜி வரலாற்றின் காரணமாக ஜேர்மனி நெதன்யாகுவை கைது செய்யாது” என்று டெலிகிராப் இந்த அறிக்கையை மிகவும் சாதாரணமாக பேச்சுவழக்கில் கூறியது.

இது உண்மைதான், ஆனால் டெலிகிராப் அதைக் குறிப்பிடும் விதத்தில் அல்ல. மாறாக, சிறிய அளவில் என்றாலும், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி ஜேர்மனி தொடுத்த அதே “அழித்தொழிப்பு போரை” இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்தி வருகிறது. இந்த போர் வழிமுறையானது, ஏகாதிபத்திய சக்திகளால் தொடுக்கப்படும் உலகளாவிய போர்களில் மேலும் மேலும் வழக்கமாகிவிடும்.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு அதன் 2024 புத்தாண்டு அறிக்கையில் பின்வரும் எச்சரிக்கையை விடுத்தது:

நாகரீகத்தை காட்டுமிராண்டித்தனத்திலிருந்து பிரிக்கும் “சிவப்புக் கோடுகள்” அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. முதலாளித்துவ அரசாங்கங்களின் குறிக்கோள் இதுதான்: அதாவது “குற்றமற்ற எதுவும் நமக்கு அன்னியமானது அல்ல.” அணுஆயுதப் போர் “இயல்பாக்கப்படுகிறது”, இனப்படுகொலை “இயல்பாக்கப்படுகிறது”, பெருந்தொற்று நோய்கள் மற்றும் பலவீனமானவர்கள் மற்றும் வயதானவர்களை வேண்டுமென்றே கொல்வது “இயல்பாக்கப்படுகிறது”, செல்வக் குவிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மையின் அளவிட முடியாத அளவுகள் “இயல்பாக்கப்பட்டுள்ளன”, ஜனநாயகத்தை நசுக்குவதும், எதேச்சதிகாரம் மற்றும் பாசிசத்தை நாடுவதும் “இயல்பாக்கப்படுகின்றன.”

கடந்த காலத்தின் முதலாளித்துவ அரசாங்கங்களால் பிறழ்ச்சிகள் என்று கண்டிக்கப்பட்ட நாஜி ஜேர்மனியின் குற்றங்கள், தற்போது ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை நடத்துவதற்கான ஒரு முன்மாதிரியாக மேலும் மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெதன்யாகுவுக்கு எதிரான அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு ஏகாதிபத்திய சக்திகளின் பதிலானது, காஸா மீதான இனப்படுகொலைக்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்க உத்தேசித்துள்ளன என்பதையும், அதன் கொடுங்கோலர்களை பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாத்து வருகின்றன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளன. இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டம் அவசியமாக ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்கான ஒரு போராட்டம் என்பதையும், அதற்கு தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தின் வளர்ச்சி தேவை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

Loading