கொழும்பிலும் ஹட்டனிலும் சோசலிச சமத்துவக் கட்சியின் இறுதி தேர்தல் கூட்டங்கள்

சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் நவம்பர் 14 நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கான அதன் பிரச்சாரத்தின் இறுதி கூட்டங்களை நவம்பர் 9 அன்று கொழும்பில் தேசிய நூலக கேட்போர் கூடத்திலும், நவம்பர் 10 அன்று ஹட்டன் நகரசபை மண்டபத்திலும் நடத்தவுள்ளன.

சோ.ச.க., கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களில் 41 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சோ.ச.க.யின் நீண்டகால அரசியல் குழு உறுப்பினர்களான விலானி பீரிஸ், பி.ரி. சம்பந்தர், எம். தேவராஜா ஆகியோர் இந்த மூன்று மாவட்டங்களிலும் கட்சியின் வேட்பாளர்களுக்கு தலைமை தாங்குகின்றனர்.

அதிகரித்துவரும் உலகப் போர் அச்சுறுத்தல், சிக்கன வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதே சோ.ச.க.யின் தேர்தல் தலையீட்டின் நோக்கம் ஆகும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் முன்னர் தொடங்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பாராளுமன்ற பெரும்பாண்மையை பெறுவதன் பேரில் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்திக்கு (தே.ம.ச.) தலைமை தாங்கும் திசாநாயக்க, நாடு கடன் தவணைத் தவறியதை அடுத்து, ஏற்பட்ட வாழ்க்கைத் தர வீழ்ச்சிக்கு எதிராக, 2022 இல் எழுந்த  பாரிய எதிர்ப்பையே ஆட்சியைக் கைப்பற்ற சுரண்டிக்கொண்டார். எவ்வாறாயினும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டநிரல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும என பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மோசமடைந்துவரும் சமூக நெருக்கடிக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்புக்கு எதிராக தே.ம.ச./ஜே.வி.பி. அரசாங்கம் பொலிஸ்-அரச நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட தயங்காது என சோ.ச.க. தொழிலாளர்களுக்கு எச்சரிக்கின்றது. சர்வதேச நாணய நிதியமானது நாநூறுக்கும் அதிகமான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயப்படுத்துதல் / மறுசீரமைத்தல், இலட்சக் கணக்கான அரச வேலைகளை அழித்தல், அத்தியவசிய சேவைகள் மீதான மேலதிக வெட்டுக்கள், மற்றும் உழைக்கும் மக்கள் மீது மேலும் வரி சுமத்துதல் போன்றவற்றையே கோருகின்றது.

பெருகிவரும் உலகப் போர் ஆபத்துக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்யெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு முன்னெடுக்கும் போரட்டமே சோ.ச.க.யின் பிரச்சாரத்தினதும் மையம் ஆகும். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்தியுள்ள வாஷிங்டன், மத்திய கிழக்கு முழுவதும் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை நீட்டிப்பதை ஆதரிப்பதோடு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் எதிர்நோக்கும் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளில் எதுவும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளும் போட்டி தேசிய அரசுகளாக பிரிக்கப்பட்டுள்ள உலகத்திற்குள்ளும் தீர்க்கப்பட முடியாது என சோ.ச.க. வலியுறுத்துகிறது. நாம், அனைத்து விதமான தேசியவாதம் மற்றும் இனவாதங்களையும் எதிர்ப்பதோடு சமூகத்தை சோசலிசப் பாதையில் மறுகட்டமைப்பு செய்வதற்குத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் அடிப்படையில் ஸ்ரீ-லங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முயற்சிக்கின்றோம்.

ஒக்டோபர் 18 நடக்கவுள்ள கூட்டத்தில், சோ.ச.க.யின் பேச்சாளர்கள் கட்சிப் பிரச்சாரத்தின் அடிப்படை தொணிப்பொருளை விரிபடுத்தி விளக்குவார்கள். நாம், தொழிலாளர்கள், இளைஞரக்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலை தளத்தின் வாசகர்களை இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டு சோ.ச.க.யின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு பற்றிய கலந்துறையாடலில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொழும்பு: தேசிய நூலக கேட்போர் கூடம்

நவம்பர் 9, மாலை 4 மணிக்கு

ஹட்டன்: நகரசபை மண்டபம்,

நவம்பர் 10, பி.ப. 2 மணி

Loading