முன்னோக்கு

போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரம்: 2024 தேர்தல்களில் இருந்து முக்கியமான பிரச்சினைகள் விலக்கப்பட்டுள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், முன்னொருபோதும் இல்லாத நெருக்கடி மற்றும் சமூக சிதைவின் பின்னணியில் நடைபெறுகிறது. அரசியல் அமைப்புமுறை செயலிழந்து, மக்களுடைய தேவைகளுக்கு பதிலளிக்க இயலாது, வன்முறையான உள்நாட்டு மோதலை நோக்கிச் செல்கிறது என்ற பரவலான உணர்வு உள்ளது.

பொதுத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் போது, ​​பக்ஸ் கவுண்டி நிர்வாகக் கட்டிடத்திற்கு வெளியே வாக்காளர்கள் வரிசையில் நிற்கின்றனர். நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை [AP Photo/Michael Rubinkam]

தேர்தல் நாளுக்கு இன்னும் குறிப்பிட்ட மணி நேரமே உள்ள நிலையில், அரசியல் சூழல் சதி பற்றிய வதந்திகளால் நிரம்பி வழிகிறது. தேர்தல் முடிவு முடிவற்றதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அங்கே பரவலாக உள்ளது. அத்துடன் —மொத்த வாக்குகள் என்னவாக இருந்தாலும்— ட்ரம்பும் அவரது பாசிசவாத கூட்டுச் சதிகாரர்களும் ஒரு சாதகமற்ற முடிவை ஏற்க மாட்டார்கள். தேர்தல் செயல்முறையைச் சூழ்ந்துள்ள உறுதியற்ற தன்மை மற்றும் அச்சுறுத்தலின் அளவு அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவின் அளவைப் பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவின் அரசியல் கலாச்சாரம் ஆதாள பாதாளத்தை எட்டியுள்ளது என்பது தெளிவாகிறது. ட்ரம்பின் ஒழுங்கமைக்கப்பட்ட பேரினவாத அழுக்கு நீரோட்டமானது, அமெரிக்க சமூகத்தில் சீரழிந்த மற்றும் பிற்போக்குத்தனமான அனைத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது. கமலா ஹாரிஸ், பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் நலன்கள் மற்றும் உளவுத்துறை முகமைகளின் சதிகளை மூடிமறைப்பதற்காக, வெற்றுரைகள், சூழ்ச்சிகள் மற்றும் அடையாள அரசியல் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தும் ஒரு கட்சியின் சிடுமூஞ்சித்தனம் மற்றும் பாசாங்குத்தனத்தின் உருவகமாக திகழ்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பது, காஸா இனப்படுகொலைக்கான முழு ஆதரவு, அவரை ஒரு ஒரு குற்றவியல் முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதியாக அம்பலப்படுத்துகிறது.

இந்த சூழலில் “குறைந்த தீமை” என்ற யோசனை ஒரு அபத்தமானது. ஒரு வேட்பாளர் பாசிசத்தை ஊக்குவிக்கும் அதேவேளை, மற்றவர் போர் மற்றும் இனப்படுகொலைக்கான ஆதரவை உள்ளடக்கிய ஒரு தளத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலைமைகளின் கீழ், தேர்வு என்பது பெரிய மற்றும் குறைவான தீமைகளுக்கு இடையில் அல்ல, மாறாக பேரழிவுக்கான இரண்டு பாதைகளுக்கு இடையில் உள்ளது. அனைத்து அவதூறுகளுக்கும் மத்தியில், ட்ரம்ப் மற்றும் ஹாரிஸ் இடையே உள்ள பிளவுகள், தொழிலாள வர்க்கத்திலிருந்து இந்த இரண்டு கட்சிகளையும் பிரிக்கும் இடைவெளியுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஆழமான பிரச்சினைகள் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முறையாக புறக்கணிக்கப்படுகின்றன. இது ஏனென்றால் அவையனைத்தும், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தாலும் நிபந்தனையின்றி பாதுகாக்கப்படுகின்ற ஒரு அடிப்படை ஆதாரத்தில் இருந்து, அதாவது முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையில் இருந்து எழுகின்றன. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்காவில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் மையப் பிரச்சினைகள் எதுவும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய இயக்கத்திற்கு வெளியில் தீர்க்கப்பட முடியாது. 2024 தேர்தல்கள் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமா அல்லது சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுகட்டுமானம் செய்வதா என்ற மாற்றீடுகளை அப்பட்டமாக முன்நிறுத்துகின்றன.

1. அணுஆயுத போரை நோக்கிய விரிவாக்கம்

விரிவடைந்து வரும் உலகப் போர் நிலைமைகளின் கீழ் இந்த தேர்தல்கள் கட்டவிழ்ந்து வருகின்றன. மூடிய கதவுகளுக்குப் பின்னால், வெள்ளை மாளிகையில் யார் இருந்தாலும், பாரிய போர் விரிவாக்கம் பற்றிய விவாதங்கள் உள்ளன. ஜேபி மோர்கன் சேஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் போன்ற செல்வந்த தட்டுக்களின் முக்கிய உறுப்பினர்கள், “மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது” என்று அறிவிக்கின்றனர். அமெரிக்கா அதன் அணுஆயுத தளவாடங்களை மேம்படுத்துவதில் முன்னொருபோதும் இல்லாத வகையில் 1.7 ட்ரில்லியன் டாலரை முதலீடு செய்து வருகிறது. மேலும், இதற்கான இருகட்சியினதும் அர்ப்பணிப்பு, தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் அது முன்னேறும்.

பைடென் நிர்வாகத்தின் நான்காண்டு காலத்தின் மைய முன்னுரிமை போர் ஆகும் — முதலாவதாக, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தூண்டுதல், பின்னர் காஸா இனப்படுகொலை, இந்த இரண்டுமே ஹாரிஸால் முழுமையாக ஆதரிக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரின் முழு ஆதரவுடன் வரம்பற்ற அமெரிக்க ஆயுதங்கள் இஸ்ரேலில் கொட்டிக் கிடப்பதால், காஸா மற்றும் மேற்குக் கரையில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதற்கு அமெரிக்கா உடந்தையாக உள்ளது.ன் ஒரு பெரிய விரிவாக்கம், ஜனாதிபதி தேர்தலுக்கும் ஜனவரியில் பதவியேற்பு தினத்திற்கும் இடையே உள்ள வாரங்களில் கூட நடக்கக்கூடும். B-52 குண்டுவீச்சு விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் கடற்படையின் நாசகாரி கப்பல்கள் உட்பட மத்திய கிழக்கில் கூடுதல் அமெரிக்க இராணுவப் படைகளை அனுப்ப வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளதாக பென்டகன் வெள்ளியன்று அறிவித்தது.

ஈரானை “நிர்மூலமாக்குவதற்கும்” காஸாவில் இஸ்ரேல் தனது “வேலையை முடிப்பதற்கும்” அழைப்பு விடுத்துள்ள ட்ரம்ப்— போரின் ஒரு எதிர்ப்பாளராக காட்டிக் கொள்வது நகைப்புக்குரியதாகும்.

சமூகத்தின் ஆதார வளங்கள் அனைத்தையும் போருக்குக் கீழ்ப்படியச் செய்வது உலகப் போருக்கு அவசியமாகும். அமெரிக்க புவிசார் அரசியல் மூலோபாயத்தின் ஒரு முன்னணி வெளியீடான Foreign Affairs இன் மிக சமீபத்திய பதிப்பில் வெளியான பிரதான கட்டுரை, “முழுமையான போரின் மீள்வருகை” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் மாரா கார்லின் பின்வருமாறு எழுதுகிறார்:

மத்திய கிழக்கைப் போலவே உக்ரேனிலும், 9/11 சகாப்தத்திற்குப் பிறகு போரை வரையறுத்த ஒப்பீட்டளவில் குறுகிய நோக்கம் கணிசமாக விரிவடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. மட்டுப்படுத்தப்பட்ட யுத்த சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. விரிவான மோதல்களின் ஒரு சகாப்தம் தொடங்கியுள்ளது. உண்மையில், இன்று உலகம் பார்த்துக் கொண்டிருப்பது கடந்த காலத்தில் கோட்பாட்டாளர்கள் “முழுமையான போர்” என்று அழைத்ததற்கு ஒத்த நிகழ்வையாகும். இதில் போரிடுபவர்கள் அளப்பரிய ஆதாரவளங்களைத் திரட்டுகிறார்கள், அவர்களின் ஒட்டுமொத்த சமூகங்களையும் ஈடுபடுத்துகிறார்கள், மற்ற அனைத்து அரசு நடவடிக்கைகளையும் விட போர்முறைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், பரந்த அளவிலான இலக்குகளைத் தாக்குகிறார்கள், மேலும் அவர்களின் பொருளாதாரங்களையும் மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் மறுவடிவமைக்கிறார்கள்.

'ஏனைய அனைத்து அரசு நடவடிக்கைகளையும் விட போர்முறைக்கு முன்னுரிமை அளிப்பது' என்பது தொழிலாள வர்க்கத்தை ஈவிரக்கமின்றி போருக்கு அடிபணிய வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஒவ்வொன்றும் போரின் பலிபீடத்திற்காகவும் மற்றும் அதை நடத்த அவசியமான பரந்த ஆதாரவளங்களுக்காகவும் தியாகம் செய்யப்பட வேண்டும்.

2. பொருளாதார நெருக்கடி, சமூக சமத்துவமின்மை மற்றும் தன்னலக்குழுவினது ஆட்சி

ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய காரணி அமெரிக்க முதலாளித்துவத்தின் தீவிரமடைந்து வரும் நெருக்கடியாகும். அமெரிக்க கடன் அண்மித்து 36 ட்ரில்லியன் டாலருக்கு வெடித்துள்ளது. டாலர் மீதான கடுமையான அழுத்தங்களை பிரதிபலிக்கும் வகையில் தங்கத்தின் விலை சாதனை அளவில் உயர்ந்துள்ளது.

ஆளும் வர்க்கம், 2008 மற்றும் கோவிட் தொற்றுநோயின் முதல் ஆண்டான 2020 உட்பட வங்கிகளின் தொடர்ச்சியான பாரிய பிணையெடுப்புகள் மூலமாக பொருளாதார நெருக்கடியைத் தடுக்க முனைந்துள்ளது. இது சமூக சமத்துவமின்மையில் பெரும் அதிகரிப்புக்கு பங்களிக்கும் அதே வேளையில், நெருக்கடியை உயர் மட்டத்திற்கு மீண்டும் உருவாக்கியுள்ளது.

ஒரு சிறிய உயரடுக்கு மக்கள்தொகையின் அடிமட்ட பாதிப்பேரை விட அதிக செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவில் செல்வக் குவிப்பு கோரமான அளவை எட்டியுள்ளது. அமெரிக்க பில்லியனர்களின் செல்வ வளம் இப்போது 5.5 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இது பெருந்தொற்றுநோய் தொடங்கியதற்குப் பின்னர் இருந்து அண்மித்து 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த செல்வ வளத்தின் அதீத திரட்சி இரண்டு கட்சிகளாலும் பாதுகாக்கப்படுகிறது. ஹாரிஸ் மற்றும் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரங்கள் செல்வந்தர்களிடம் இருந்து முன்னொருபோதும் இல்லாத அளவில் பெற்றுக்கொண்ட தொகைப் பணத்தால் சூழப்பட்டுள்ளது.

பணவீக்கம் நிஜமான ஊதியங்களை அரித்து, உணவு முதல் வீட்டுவசதி வரையில் அத்தியாவசிய பொருட்களை மில்லியன் கணக்கானவர்களுக்கு கட்டுப்படியாகாததாக ஆக்கியுள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வீடுகளும், வாடகைக் குடும்பங்களில் அரைவாசியும் தங்கள் வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் மேலாக வீட்டுக்காக செலவிடுகின்றனர். மொத்த நுகர்வோர் கடன் அண்மித்து 18 ட்ரில்லியன் டாலரில் உள்ளது. இது, ஒரு சாதனையளவிலான உயர்வாகும். இதில் மாணவர்களுக்கான கடனில் 1.75 ட்ரில்லியன் டாலரும் உள்ளடங்கும்.

பணிநீக்கங்கள், பள்ளி மூடல்கள் மற்றும் பொறிவின் விளிம்பில் உள்ள சுகாதார அமைப்புமுறை ஆகியவை உட்பட ஒரு பாரிய சமூக நெருக்கடியை தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வருகிறது. கல்வித்துறையில், அவசரகால நிதி சமீபத்தில் காலாவதியானது, கல்வியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிகள் மூடப்படுவதற்கும் இது வழிவகுத்ததோடு, மில்லியன் கணக்கான மாணவர்களையும் பாதித்துள்ளது.

3. பாசிசமும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகார அச்சுறுத்தலும்

ட்ரம்ப் பிரச்சாரத்தின் மூலமாக, குடியரசுக் கட்சி இன்னும் பகிரங்கமாக ஒரு பாசிசவாத குணாம்சத்தைப் பெற்று ஒரு அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்து வருகிறது. , அமெரிக்க அரசியலில் பாசிசம் வழமைப்படுத்தப்பட்டு வருகிறது.

உண்மையில், நவம்பர் 5ம் தேதி தேர்தல் தினம், முழு அரசியல் அமைப்புமுறையிலும் பெருகிவரும் நெருக்கடியில் ஒரேயொரு கணத்தை மட்டுமே குறிக்கும். ட்ரம்ப் ஏற்கனவே “திருடப்பட்ட தேர்தல்” என்ற சொல்லாடலை ஊக்குவித்து, வன்முறையைத் தூண்டி வருகிறார். சட்டபூர்வ வழக்குகள் மற்றும் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் நடவடிக்கைகள் மூலம், அவருடைய வெற்றிக்கு இட்டுச் செல்லாத எந்த முடிவையும் நிராகரிக்க அவர் சதி செய்து வருகிறார். , “நாட்டுக்குள்ளே இருக்கும் எதிரிக்கு” எதிராக இராணுவத்தை நிலைநிறுத்தவும் மற்றும் பத்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை ஒழுங்கமைக்கவும் அச்சுறுத்தியுள்ளார்.

சமீபத்திய வாரங்களில், ஹாரிஸ் அவ்வப்போது ட்ரம்பை ஒரு 'பாசிசவாதி' என்று குறிப்பிட்டார். ஆனால், இது விரைவில் கைவிடப்பட்டது. இந்த வாரம் ஹாரிஸின் 'இறுதி வாதத்தில்' வெளிப்படுத்தப்பட்டதைப் போல, உள்நாட்டில் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் வெளிநாட்டில் போரை நடத்துவதற்கும் குடியரசுக் கட்சியினருடன் 'ஐக்கியத்தை' பேணுவதில் ஜனநாயகக் கட்சியினரின் கவனம் குவிந்துள்ளது. அவர்களின் மையக் கவலை, பாசிச வலதின் வளர்ச்சி அல்ல. மாறாக, முழு அரசியல் அமைப்புமுறையின் முறிவும் கீழிருந்து வெளிப்படும் ஒரு இயக்கத்தின் அபாயமும் ஆகும்.

இரு கட்சிகளுமே ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுவதிலும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதிலும் ஆழமாக உடந்தையாக உள்ளன. காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீதான கைது மற்றும் வெளியேற்ற அலையை பைடென்-ஹாரிஸ் நிர்வாகமே மேற்பார்வையிட்டுள்ளது. இரு கட்சிகளுமே எதிர்ப்பு போராட்டத்தை நசுக்குவதற்காக அரசின் இராணுவமயமாக்கலை ஆதரிக்கின்றன. அதன் அர்த்தம், போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்குவது அல்லது வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக போலீஸை அணிதிரட்டுவதாகும்.

4. COVID-19 தொற்றுநோய் மற்றும் சுற்றுச்சூழல் சரிவு

நவீன காலத்தில், மிகப்பெரிய சமூக மற்றும் சுகாதார நெருக்கடியான கோவிட்-19 பெருந் தொற்றுநோய் தொடங்கி இப்போது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில், தொற்றுநோய் மையப் பிரச்சினையாகவும், குடியரசுக் கட்சியினரின் பாசிசக் கிளர்ச்சியின் மையமாகவும், ஜனநாயகக் கட்சியினரின் “அறிவியலைப் பின்பற்றுவதற்கான” உறுதிமொழிகளாகவும் இருந்தது. இந்த தேர்தலில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்தொற்றுக்கு உயிரிழக்கின்ற நிலையிலும், தற்போதைய தொற்றுநோய் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, கடந்த காலத்துக்கு உரியதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த தேர்தலுக்குப் பிந்தைய இறப்பு எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகிறது: கோவிட்-19 தொடர்பான காரணங்களால் 1.2 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்துள்ளனர். இதில் ட்ரம்பின் கீழ் 400,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் (ஜனவரி 2021 வரை) மற்றும் பைடெனின் கீழ் 800,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த நான்கு ஆண்டுகளில் 24 மில்லியன் அதிகப்படியான இறப்புகளின் உலகளாவிய எண்ணிக்கையின் ஒரு பாகமாக உள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரமாண்டமான மரணம் மற்றும் பலவீனம் ஆளும் வர்க்கக் கொள்கையின் நேரடி விளைவு ஆகும். பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் ட்ரம்பின் குற்றகரமான “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையை முழுமையாக அமுல்படுத்தியது. மேலும், மே 2023 இல், கோவிட்-19 நிவாரணத்திற்கான அவசரகால நிதி காலாவதியாக ஆக்கப்பட்டது. இதனால், நிரம்பி வழிந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், குறைவான பணியாளர்களுடன் நிதியில்லாமல் இருந்தன.

அதே நேரத்தில், காலநிலை மாற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுற்றுச்சூழல் பேரழிவுகளை உந்தித் தள்ளுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவைத் தாக்கிய இரண்டு பெரிய சூறாவளிகள் உட்பட, பேரழிவு தரும் வெள்ளத்தை இவை உருவாக்கியுள்ளன. விஞ்ஞானிகள் ஒரு தீவிரமடைந்து வரும் மற்றும் உயிர்பிழைப்புக்கான நெருக்கடி குறித்து எச்சரித்து வருன்றனர். ஆனால், காலநிலை மாற்றத்திற்கான எந்தவொரு உண்மையான விடையிறுப்பும் இரு தரப்பினருக்கும் நிதியளிக்கும் பெருநிறுவனங்களின் நலன்களை அச்சுறுத்தும் என்பதால், இரு கட்சிகளுமே இந்தப் பிரச்சினையை தீவிரமாக அணுகப் போவது கிடையாது. ஜனநாயகக் கட்சியினர் இதற்கான தங்கள் அடையாள சைகைகளைக் கூட கைவிட்டுவிட்டனர். குடியரசுக் கட்சியினர் வெளிப்படையாக காலநிலை மாற்றத்தை ஒரு மோசடி என்று உதறித் தள்ளுகின்றனர்.

***

அமெரிக்காவின் அரசியல் அமைப்புமுறை முற்றிலும் இழிந்த தன்மையுடனும் ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் உள்ளது. அதன் கட்டமைப்பின் ஒவ்வொரு அம்சமும் (மூன்றாம் இடத்திலுள்ள கட்சியினரை இலக்காகக் கொண்ட வாக்குச்சீட்டு சட்டங்களை அணுகுவதில் இருந்து, பணத்தின் மேலாதிக்கம் வரையில், பிரதான ஊடகங்களின் பாத்திரம் வரையில்) தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் எந்தவொரு உண்மையான வெளிப்பாட்டையும் திட்டமிட்டு விலக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், பாரிய சமூக கோபம் மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. காஸாவில் அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலையை மில்லியன் கணக்கானவர்கள் எதிர்த்து வருகின்றனர். ஒரு பிரதான இராணுவ ஒப்பந்ததாரர் மற்றும் விமான நிறுவனமான போயிங்கில் இடம்பெற்றுவரும் 33,000ம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் உட்பட, முக்கிய தொழில்துறைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தை தேர்தல் தினத்திற்கு முன்னதாக மூடுவதற்கு தொழிற்சங்க எந்திரம் பெரும்பிரயத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.

தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு சோசலிச அரசியல் தலைமையை அபிவிருத்தி செய்வதே மையப் பிரச்சினையாகும். இந்த நெருக்கடி அதன் வேரிலேயே தீர்க்கப்பட வேண்டும். இந்த நெருக்கடியின் வேர்கள் முதலாளித்துவ இலாப அமைப்புமுறை ஆகும். நாடுகடந்த பெருநிறுவனங்கள், உலகளாவிய ஏகாதிபத்திய போர் மற்றும் உலகளாவிய தொற்றுநோயின் ஒரு சகாப்தத்தில், அங்கே எந்தவொரு தேசிய தீர்வும் கிடையாது. சர்வதேச தொழிலாள வர்க்கம் தான் இந்த பூகோளத்தின் மிக பலம்வாய்ந்த சக்தியாகும். ஆகவே, அதன் நிஜமான நலன்களை வெளிப்படுத்துகின்ற ஒரு அரசியல் வேலைத்திட்டத்தால் அது ஆயுதபாணியாக்கப்பட்டாக வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

தொழிலாள வர்க்கம் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுடன் முறித்துக் கொண்டு, ஒரு சர்வதேச, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அதற்கு முன்னிருக்கும் ஒரே பாதை என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புடன், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், சமூகத்தை முழுமையாக மறுஒழுங்கமைப்பதும் அவசியமாகும்.

Loading