மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
போக்டனை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திடுமாறு உலக சோசலிச வலைத் தளம் அதன் வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னர், ஏப்ரல் 25, 2024 அன்று, உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக் உக்ரேனில் பாசிசவாத ஜெலென்ஸ்கி ஆட்சியின் அரசு பாதுகாப்பு சேவையான SBU ஆல் கைது செய்யப்பட்டார். 25 வயதான போக்டன், உக்ரேன், ரஷ்யா மற்றும் ஒட்டுமொத்த முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் செயலூக்கத்துடன் செயல்படும் ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவருமாவார்.
“போக்டன் இராணுவச் சட்டத்தின் கீழ் உயர் தேசத்துரோக” குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். உண்மையில், போக்டன் போரை எதிர்த்ததற்காகவும், உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் தொழிலாள வர்க்கத்தை போருக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தப் போராடியதற்காகவும் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்.
போக்டான் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர், போருக்கான எதிர்ப்பு உக்ரேனுக்குள் அதிகரித்து வருகிறது. கட்டாய இராணுவ சேவைக்கு எதிராகவும் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போனதற்கு எதிராகவும் இந்த வாரம் கியேவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போரில், நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இந்த உண்மை உக்ரேனிய அரசாங்கத்தால் மூடிமறைக்கப்பட்டுள்ளது.
போக்டனின் விடுதலைக்கான மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடரும் என்றும் அவரது வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகோலயேவில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் காவலில் வைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னரும், போக்டன் இன்னும் அவரது உத்தியோகபூர்வ குற்றச்சாட்டு மற்றும் நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கிறார்.
“இந்த விசாரணை மூர்க்கத்தனமானது” என்று உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் கூறினார். “இது ஜனநாயகத்திற்கான போர் என்ற வாதங்கள் ஒரு பொய் என்ற உண்மையை போக்டன் சிரோட்டியுக் மீதான துன்புறுத்தல் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆட்சி முற்றிலும் அலட்சியமாக உள்ளது, இது உக்ரேனிய மக்களை பீரங்கிக்கு இரையாக பயன்படுத்தி வருகிறது.”
“SBU [உக்ரேனின் பாதுகாப்பு சேவை] ஆவணங்கள் வெறுமனே போக்டானுக்கு எதிரானவை அல்ல. அவை, ஒட்டுமொத்த இடதுசாரிகள் மீதும் மற்றும் ஜெலென்ஸ்கி ஆட்சிக்கு எதிரான சோசலிச எதிர்ப்பாளர்கள் மீதும், குறிப்பாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்பின் ஒரு முழு வீச்சிலான போர் பிரகடனமாகும்” என்று நோர்த் மேலும் தெரிவித்தார்.
போக்டன் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான பிரச்சாரம் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க விடையிறுப்பைப் பெற்றுள்ளது. அவரை விடுதலை செய்யக் கோரி 3,800-க்கும் மேற்பட்டோர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த பிரச்சாரத்திற்கு பிங்க் ஃபிலாய்ட் இணை நிறுவனர் ரோஜர் வாட்டர்ஸ் மற்றும் பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டெய்ன் ஆகியோரும் ஆதரவு அளித்துள்ளனர். “இது ஒரு கேலிக்கூத்து, அவர் விடுதலை செய்யப்பட்டு அவரது அரசியல் பணியைத் தொடர சுதந்திரமாக விட வேண்டும்” என்று ஸ்டெய்ன் கூறினார்.
போக்டானும், YGBL உம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உடனான அரசியல் ஐக்கியத்தை கொண்டிருக்கின்றார்கள். சோசலிச சர்வதேசியவாத நிலைப்பாட்டில் இருந்து உக்ரேனிய போரை எதிர்க்கிறார்கள். மேலும், ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியத்தை கோருகின்றார்கள் என்பதால் அவர் கைது செய்யப்பட்டார்.
முக்கிய ஆதாரமாக, உலக சோசலிச வலைத் தளத்துடனும் சோசலிசத்திற்கான அவரது போராட்டத்துடனும் போக்டனுக்கு இருந்த தொடர்பை அரசு தரப்பு மேற்கோள் காட்டியது. குற்றச்சாட்டுக்களின்படி, போக்டன் “ரஷ்ய பிரச்சார மற்றும் தகவல் நிறுவனமான உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதிகளால் நியமிக்கப்பட்ட பிரசுரங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்.” உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிரான இந்த அவதூறு, “உலக சோசலிசப் புரட்சியின் மூலம் உலக சோசலிசத்தை நிறுவும் நோக்கத்துடன், முதலாளித்துவ சந்தை முறைக்கு புரட்சிகர எதிர்ப்பின் நிலையிலிருந்து உலகெங்கிலும் உள்ள முக்கிய சமூக-அரசியல் பிரச்சனைகளை WSWS உள்ளடக்குகிறது” என்ற அறிக்கையுடன் இணைந்திருந்தது.
ஜூன் 3 அன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை தடை செய்தது. அப்போதிருந்தே, யுத்தத்துக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேலும் மேலும் கொடூரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரேன் அதிகரித்தளவில் “ஒரு சர்வாதிகார அரசின் குணாம்சங்களை” எடுத்து வருவதாக உக்ரேனிய தலைமறைவு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பான assembly.org.ua உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தது.
“பொது இடங்களில் ஆண்களின் தொகை இல்லை, கார்கோவில் ஹிட்லரின் ஆக்கிரமிப்பு காலத்தில் இருந்தது போன்று தெருக்களில் வேன்கள் ஓடுகின்றன. பாதாள அறைகளில் வழிப்போக்கர்களைப் பிடித்து அடித்து துன்புறுத்தப்படுகின்ற நிலையில், உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பற்றி பேசுகிறது“ என்று அந்த அமைப்பு கூறியது.
ஜெலன்ஸ்கி ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்கிறார். அவர் தேர்தல்களை நிறுத்தி, இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அனைத்து இடதுசாரி மற்றும் சோசலிச அமைப்புகளையும் தடை செய்துள்ளார். கியேவ் ஆட்சியின் ஜனநாயக-விரோத மற்றும் வன்முறை ஒடுக்குமுறை இயல்பு மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை கூட அதன் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தால் மே மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மிக மோசமான அத்துமீறல்களில் சிலவற்றை குறிப்பிட நிர்பந்திக்கப்பட்டது.
அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களில்:
பலவந்தமாக காணாமல் ஆக்குதல், சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை; கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சிறை நிலைமைகள்; தன்னிச்சையான கைது அல்லது தடுப்புக்காவல்; நீதித்துறையின் சுதந்திரத்துடன் கடுமையான பிரச்சினைகள்; ஊடகவியலாளர்கள் உட்பட கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது வன்முறை அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன...
போக்டனின் கைது ஏகாதிபத்திய சக்திகளின் உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது. அவை “ரஷ்ய எதேச்சதிகாரத்திற்கு” எதிராக உக்ரேனில் “சுதந்திரத்திற்காகவும்” “ஜனநாயகத்திற்காகவும்” போராடி வருவதாக கூறுகின்றன. உக்ரேனிய அரசு ஒரு ஜனநாயக அரசு அல்ல, மாறாக பாசிசவாத கூறுபாடுகள் மற்றும் குற்றகரமான செல்வந்த தட்டுக்களால் தலைமை கொடுக்கப்படும் ஒரு சர்வாதிகார அரசாகும். இவர்கள், அவர்களின் ரஷ்ய சகாக்களைப் போலவே, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதிலும் அவற்றின் மூலங்களைக் கொண்டுள்ளனர். தங்கள் பிற்போக்குத்தனமான நலன்களைப் பாதுகாப்பதற்காக, உக்ரேனிய தன்னலக்குழுக்களும் அவர்களின் பாசிச குண்டர்களும் தங்கள் நாட்டின் தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்திய போர் வெறியர்களின் பீரங்கிக்கு இரையாக வழங்கி வருகின்றனர்.
பிப்ரவரி 2022 இல் உக்ரேன் மீதான நேட்டோவினால் தூண்டப்பட்ட ரஷ்ய படையெடுப்புக்குப் பின்னர், நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் ஏற்கனவே போர்முனையில் பலியிடப்பட்டுள்ளனர். “சுதந்திரம்” மற்றும் “ஜனநாயகம்” அல்லது “உக்ரேனின் சுதந்திரத்திற்காக” அல்ல, மாறாக ஏகாதிபத்திய சக்திகளின் உறுதியான புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்காகவே இவர்கள் பலியிடப்பட்டனர்.
ஏகாதிபத்திய சக்திகளின், பிரதானமாக வாஷிங்டன் மற்றும் பேர்லினின் முக்கியமான நோக்கம், உக்ரேனில் ரஷ்யா மீது ஒரு “மூலோபாய தோல்வியை” ஏற்படுத்துவதாகும். இது சீனாவிற்கு எதிராக போர் தொடுப்பதற்காக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கீழ்ப்படுத்தும் இன்னும் விரிவான இலக்கின் பாகமாகும். காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலை, மேலும், லெபனான், ஈரான் மற்றும் இறுதியில் ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்படும் மற்றும் நிதியுதவி பெறும் முழு பிராந்தியத்திலும் அதன் போர் விரிவாக்கமும் இந்த இலக்கை நிறைவேற்றுகிறது. மத்திய கிழக்கு மற்றும் உக்ரேனில் இடம்பெற்றுவரும் போர்கள் ஒட்டுமொத்த உலகையும் மறுபங்கீடு செய்வதற்கும் அடிபணியச் செய்வதற்குமான ஏகாதிபத்திய முனைவின் பாகமாக இருக்கின்றன.
இந்த உள்ளடக்கத்தில், போக்டானின் விடுதலைக்கான போராட்டத்தின் முக்கியத்துவம் உக்ரேனையும் தாண்டிச் செல்கிறது. அனைத்து போர் முனைகளிலும் ஏகாதிபத்திய போர் விரிவாக்கத்துடன் சேர்ந்து, உலகெங்கிலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன என்பதை போக்டனின் ஆறு மாத சிறைவாசம் தெளிவுபடுத்துகிறது. இதே அபிவிருத்திகள் ஐரோப்பாவிலும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆளும் வர்க்கம் அதன் போர் மற்றும் சமூக சீரழிவுக் கொள்கைகளைத் திணிப்பதற்காக, அது பாசிசவாத சக்திகளுடன் நட்புறவு பாராட்டி வருவதுடன், அவற்றின் எதேச்சதிகார வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறது. ஜேர்மனியில், அதிவலது சக்திகளால் சூழப்பட்டுள்ள உள்நாட்டு இரகசிய சேவை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவும், YGBL இன் சகோதர அமைப்புமான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை (SEP) “அரசியலமைப்புக்கு-விரோதமானது” என்று வகைப்படுத்தி அதை கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளது. SEP ஆனது, “தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதம் என்று சொல்லப்படுவதற்கு எதிராகவும்” மற்றும் ஒரு “ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமூகத்திற்காகவும்” போராடுகிறது என்பதே கொடுக்கப்பட்ட விளக்கமாகும்.
இவை அனைத்தும் போக்டன் சிரோடியுக் விடுதலைக்கான பிரச்சாரத்தின் பிரமாண்டமான அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அவருக்கு எதிரான விரைவு நீதிமன்ற விசாரணை, உக்ரேனிலும் மற்றும் உலகெங்கிலும் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எல்லா இடங்களிலும், ஆளும் வர்க்கம் புரட்சியின் பூதத்தை கண்டு அஞ்சுகிறது. போருக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. மிருகத்தனமான அடக்குமுறை இருந்தபோதிலும்கூட, சிப்பாய்கள் உக்ரேனில் கூட்டம் கூட்டமாக ஓடுகின்றனர். ஏனெனில், அவர்கள் உக்ரேனிய தன்னலக்குழுக்கள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்காக படுகொலை செய்யப்படுவதை விரும்பவில்லை.
இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் காஸா மீதான இனப்படுகொலை, உலகெங்கிலும் போருக்கு எதிரான எதிர்ப்பிற்கு, ஒரு வலுவான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. ஏகாதிபத்தியம் மற்றும் அதன் குற்றங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்த வெறுப்பு, இப்போது வர்க்கப் போராட்டத்தின் ஒரு சக்திவாய்ந்த அபிவிருத்தியுடன் பொருந்தி வருகிறது. அமெரிக்காவில், 33,000 போயிங் தொழிலாளர்கள் இவ்வாரம் இரண்டாவது முறையாக ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்ததுடன், அவர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்வதுக்கு வாக்களித்தனர். இது போயிங் நிர்வாகத்திற்கும் எந்திரவியலாளர்களின் சர்வதேச சங்கத்தின் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் ஒரு தீவிர அடியைக் கொடுத்தது.
உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் போக்டன் சிரோட்டியுக்கிற்கு எதிரான சதியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து ஒரு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர், இந்த பிரச்சாரம் முன்னெப்போதையும் விட முக்கியமானதாக ஆகியுள்ளது. உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி உறுதிப்படுத்துகின்றன.
ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பாசிசவாத அபாயத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் ஒரு வர்க்க நனவான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். இந்த அடிப்படையில்தான், தோழர் போக்டன் சிரோட்டியுக்கை விடுவிக்க முடியும், விடுவிக்கப்படுவார்! இந்த பிரச்சாரத்தை ஆதரிக்கும் அனைவரையும் போக்டானை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திடுமாறும், அவரது விடுதலைக்கான பிரச்சாரத்தை சாத்தியமான அளவுக்கு பரவலாக விளம்பரப்படுத்துமாறும் நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்!