இலங்கை சோ.ச.க. வடக்கில் தனது தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிரான சட்டவிரோத அரச துன்புறுத்தலை நிறுத்துமாறு கோருகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலாம்.

இலங்கை பொலிஸ் அதிகாரிகள், கடந்த இரண்டு வாரங்களாக, நவம்பர் 14 நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேட்பாளர்களில் ஒருவரை சட்டவிரோதமாக விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்காக, ​​20 ஆகஸ்ட் 2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பாணி விஜேசிறிவர்தன உரையாற்றுகிறார்.

தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தல் முடிவடைந்த மறுநாள், ஒக்டோபர் 12 அன்று, சிவில் உடையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோ.ச.க. யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் இராசரத்தினம் திருஞானவேலின் வீட்டிற்குச் சென்றபோது, இந்த மிரட்டல்​​ தொடங்கியது. மாலை சுமார் 5 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்த பொலிசார் அவர் எங்கே என கேட்டுள்ளனர். அவர் இல்லை என்று அவரது தாயார் கூறியதையடுத்து, அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு திருஞானவேலின் தொலைபேசி எண்ணைப் பெற்றனர்.

வேரவில் துணைப் பொலிஸ் நிலையம் மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு, இரு பொலிசார் திருஞானவேலை கடற்கரையில் போய் சந்தித்து விசாரித்துள்ளனர். அவர் தனது வீட்டு முகவரியில் ஏன் இல்லை, மற்ற சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் மற்றும் அவர் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தாரா என்பது உட்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டதோடு ஒரு புகைப்படத்தை தருமாறும் உத்தரவிட்டனர். சோ.ச.க.யின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து சில பெயர்களை மேற்கோள் காட்டிய பொலிசார், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டனர்.

சோ.ச.க. வேட்பாளர்கள் பற்றிய தேவையான அனைத்து தகவல்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த விவரங்களையும் பொலிசாருக்கு வழங்க முடியாது என்றும் திருஞானவேல் போலீசாரிடம் உறுதியாக மறுத்துள்ளார். தாம் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்ததில்லை என்றும் அவர் மறுத்தார்.

மறுநாள் திருஞானவேலை தொலைபேசியில் அழைத்த பொலிசார் அவரின் படம் ஒன்றைக் கேட்டனர். தேர்தல் வேட்பாளர்களுக்கு அப்படியொரு சட்ட ரீதியான கடப்பாடு இல்லை என்று சுட்டிக்காட்டிய திருஞானவேல், புகைப்படம் தர மறுத்தபோது, ​​படம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு சிரேஷ்ட அதிகாரிகள் தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தனர். மற்ற வேட்பாளர்களின் புகைப்படங்கள் ஏற்கனவே தங்களிடம் இருப்பதாகவும், அவரது புகைப்படம் இல்லாததால் கேட்கிறோம் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

அக்டோபர் 14, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருஞானவேலுக்கு ஒரு பொலிஸ் அதிகாரி தொலைபேசியில் அழைத்து, படம் ஒன்றை ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுக்க, இந்த ஆத்திரமூட்டும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து வந்துள்ளது.

சக வேட்பாளர் மீதான இந்த துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 24 அன்று சோ.ச.க.யின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரின் தலைவரான திருஞான சம்பந்தர், பொலிசாரை தொலைபேசியில் அழைத்த போது, ​​கிராம அதிகாரியிடம் தேவையான தகவல்களைப் பெற்றதாகக் கூறி, பொலிசார் பிரச்சினையை மூடிமறைக்க முயன்றனர்.

சோ.ச.க. வேட்பாளர் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் பல கேள்விகளை எழுப்புகிறது. சோ.ச.க. வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் அவர்கள் இருக்கும் இடத்தை பொலிஸ் சேகரிப்பது ஏன்? அவர்கள் கூறுவது போல், மேலிடத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் செயல்பட்டால், இந்த உத்தரவுகளை பிறப்பித்தது யார்? அவர்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும்/அல்லது திசாநாயக்க நிர்வாகத்தில் இருந்து வந்துள்ளார்களா?

மற்றொரு ஆபத்தான உண்மை என்னவென்றால், அனைத்து வேட்பாளர்களின் புகைப்படங்களையும் விபரங்களையும் சேகரித்துள்ளதாகவும், திருஞானவேலின் படத்தை மட்டுமே பெறவேண்டும் என்றும் பொலிசார் கூறுகின்றனர். எங்கள் வேட்பாளர்கள் யாரும் தங்களது நிழற்படங்களை பொலிசாருக்கு கொடுக்கவில்லை, எனவே இந்த படங்களை பொலிஸ் எவ்வாறு பெற்றது? இதன் அர்த்தம், நமது தோழர்களை பொலிஸ் தொடர்ந்து கண்காணித்து, எதிர்கால அடக்குமுறை நடவடிக்கைகளுக்குத் தயாராகும் வகையில், அவர்களின் விபரங்களைச் சேகரித்து வருகிறது என்பதா?

புகைப்படங்கள் உட்பட தனிப்பட்ட விபரங்களை பொலிசார் சேகரிப்பதானது முற்றிலும் சட்டவிரோதமானதும் சோ.ச.க. மற்றும் அதன் உறுப்பினர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலுக்கு தயாராகும் வகையில், யாழ்ப்பாணத்தில் உள்ள எமது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் அப்பட்டமான முயற்சியாகும். எமது தோழரை அவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினரா என்று கேட்பது மிகவும் மோசமான மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இனப் பாகுபாடுகளைக் கடந்து, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து தரப்பினரையும் ஐக்கியப்படுத்துவதற்காக போராடுவதில், சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் (பு.க.க.), கொள்கைப்பிடிப்பான அரசியல் சாதனைகளை பற்றி, இலங்கை பொலிஸ், இராணுவம் மற்றும் அந்தந்த உளவுத்துறை சேவைகளும் முழுமையாக அறிந்திருக்கின்றன.

சோ.ச.க./பு.க.க., அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களின் தமிழர்-விரோத இனவாதப் போரையும், அத்துடன் விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தையும், முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசு கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட அனைத்து முதலாளித்துவ தமிழ் கட்சிகளையும் மற்றும் ஏனைய அனைத்து தமிழ் தேசியவாதக் கட்சிகளையும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.. இது வடக்கு உட்பட நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட விடயமாகும்.

பல தசாப்தங்களாக சோ.ச.க./பு.க.க. முன்னெடுத்த உறுதியான போராட்டமானது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் மற்றும் புலிகளாளினதும் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளது.

கொழும்பின் இனவாதப் போருக்கும் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக கட்சி முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக, 1998 ஆகஸ்டில், இராசேந்திரம் சுதர்சன், திருஞானசம்பந்தர், ராஜரத்தினம் இராஜவேல் மற்றும் காசிநாதன் நகுலேஸ்வரன் ஆகியோரை புலிகள் கைது செய்தனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் சோ.ச.க.யும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக முன்னெடுத்த சர்வதேச பிரச்சாரத்தின் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

7 ஆகஸ்ட் 2006 அன்று மாலை, சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ், அவரது வீட்டின் கதவுக்கு வெளியே இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அனைத்து ஆதாரங்களும் இராணுவம், பொலிஸ் மற்றும் ஒரு துணை இராணுவக் குழுவின் தலையீட்டை சுட்டிக்காட்டின.

2007 மார்ச்சில், உள்நாட்டுப் போரின் போது ஊர்காவற்துறையில் புங்குடுதீவிற்கும் வேலணைக்கும் இடையில் உள்ள கடலைக் கடக்கும் பாலத்தில் வைத்து சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் 'காணாமல் போனார்கள்'. அவர்கள் காணாமல் போனதில் இலங்கை கடற்படையினரின் தொடர்பு இருப்பதையே அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. விமலேஸ்வரன் மற்றும் மதிவதனனுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் அரசாங்கமும் இராணுவமும் வெளியிட வேண்டும் என்று சோ.ச.க. தொடர்ந்து கோரிவருகின்றது.

2020 ஆகஸ்டில் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத் தேர்தலில் போட்டியிடும் சோ.ச.க.யின் மூன்று பிரதான உறுப்பினர்களை நேரில் சென்று விசாரித்தனர். சோ.ச.க.யின் ஜனநாயக உரிமைகள் இவ்வாறு நேரடியாக மீறப்படுவதற்கு எதிராக சோ.ச.க.யும் உலக சோசலிச வலைத் தளமும் சர்வதேச பிரச்சாரத்தை ஆரம்பித்ததுடன், தீவின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் வாழும் எமது தோழர்களைப் பாதுகாக்குமாறு கோரின.

தேவையான விபரங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, நமது தோழர்களின் படங்கள் மற்றும் அவர்களைப் பற்றிய மேலதிக விபரங்களைக் கோருவதற்கோ அல்லது வேறு எந்த வேட்பாளரைப் பற்றியும் விசாரிப்பதற்கோ அரசுக்கும் அதன் பொலிசுக்கும் உரிமை கிடையாது.

மேலும், வழக்கமான வேலையிலேயே தாம் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் கூறும் அப்பட்டமான பொய்யை சோ.ச.க. நிராகரிக்கின்றது. 2009 இல் புலிகளின் இரத்தக்களரி இராணுவத் தோல்விக்குப் பின்னர், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தக்கவைப்பதில் இலங்கைப் பொலிசார் பிரதான பங்காற்றுகின்றனர். தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் மீதான அரச துன்புறுத்தல்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் அன்றிலிருந்து முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) / தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான விஜித ஹேரத், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறும், 'அரசியல் தலையீடுகளுக்கு' ஆளாகாமல் இருக்குமாறும் பொலிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராகத் துன்புறுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள்,தொடர்ந்து பயன்படுத்தப்படும் நிலைமைகளின் கீழ் அவரது பிரகடனம் வந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க, 24 செப்டம்பர் 2024 அன்று கொழும்பில் இராணுவத் தளபதிகளைச் சந்தித்த போது [Photo: Sri Lankan Presidents' Media Division]

அண்மையில் நடைபெற்ற இலங்கையின் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தின் போது, கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதி திஸாநாயக்கவிடம், விசேட அதிரடிப் படையின் (STF) பொலிஸ் கட்டளைத் தளபதி, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான அனைத்து அடிப்படை உரிமைகள் வழக்குகளையும் நீக்குமாறும், குற்றவியல் பாதாள உலகத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான உத்தரவுகளை நீக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையிலும் வன்முறையைப் பயன்படுத்த பொலிசுக்கு சுத்தந்திரம் வழங்க வேண்டும் என்ற நேரடி கோரிக்கையாக இது இருந்தது. அதிரடிப்படை அதிகாரிகள் மீது தற்போது 17 அடிப்படை உரிமைகள் வழக்குகள் உள்ளன.

இலங்கை ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான திஸாநாயக்க, 'அத்தகைய [பொலிஸ்] உறுப்பினர்களுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு உடனடியாகத் தலையிட வேண்டும்' என்று சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தி பதிலளித்தார்.

இந்த உத்தரவும் மற்றும் பொலிஸ்-அரச வழிமுறைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்திலான மற்ற நடவடிக்கைகளும், இந்த மாதம் யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. வேட்பாளர்கள் மீதான துன்புறுத்தலின் பின்னணியும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும்.

சோ.ச.க./பு.க.க., சிங்களப் பேரினவாதத்தையும் புலிகள் மற்றும் ஏனைய முதலாளித்துவ தமிழ் அமைப்புகளால் தமிழ் தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுவதையும் எதிர்ப்பதில் ஒரு தைரியமான மற்றும் கௌரவமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக போராடுவதில் அது மீறப்படாத சாதனையை கொண்டுள்ளது. இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான நமது போராட்டத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

சோ.ச.க., வடக்கில் கட்சியின் தேர்தல் வேட்பாளர்கள் மீதான அரசின் சட்டவிரோத மிரட்டல்களை உடனடியாக நிறுத்தக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளது. இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு மோசமான தாக்குதலாகும்.

Loading