ஐ.நா.வில் நெதன்யாகு முழு அளவிலான போரை அறிவித்த பின்பு, பெய்ரூட்டில் இஸ்ரேல் நூற்றுக்கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் முழுமையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவில் தெளிவாக நம்பிக்கை கொண்ட பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு முழுவீச்சிலான போரை நடைமுறையளவில் பிரகடனம் செய்ய ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு வழங்கிய தனது உரையைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 வது அமர்வில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றுகிறார்.  செப்டம்பர் 27, 2024 வெள்ளிக்கிழமை [AP Photo/Richard Drew]

பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் மற்றும் அதன் கூட்டாளிகளால் கூறப்படும் போர்நிறுத்த முன்மொழிவுகளை மேலும் கேலிக்கூத்தாக்கும் வகையில் நெதன்யாகு, இஸ்ரேல் ஈரான் மற்றும் அதன் பினாமிகளுக்கு எதிராக உயிர்பிழைப்புக்கான “ஏழு முனையிலும் போரை” நடத்தி வருவதாகவும், காஸா மற்றும் லெபனானில் “முழு வெற்றி” கிடைக்கும் வரையில் அது போரிடும் என்றும் அறிவித்தார்.

“இஸ்ரேலின் நீண்ட கரங்களால் அடைய முடியாத இடம் ஈரானில் இல்லை. இது முழு மத்திய கிழக்கிற்கும் பொருந்தும்,” என்று அவர் அச்சுறுத்தினார்.

நெதன்யாகு பேசி முடித்த ஒரு மணி நேரத்திற்குள் அவருடைய ஆட்சியானது, அந்த உறுதிமொழியின் இனப்படுகொலை உள்ளடக்கத்தை நிரூபித்துக் காட்டியது. அதிக மக்கள் தொகை கொண்ட தெற்கு பெய்ரூட்டை பெரும் குண்டு வெடிப்புகள் துவம்சம் செய்தன. குறைந்தபட்சம் ஆறு குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, மேலும் அதிலிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நெதன்யாகு நியூ யோர்க்கில் இருந்தபோது தனிப்பட்ட முறையில் இறுதி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையில், ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை படுகொலை செய்து, லெபனானின் முழு மக்களையும் பயமுறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரேலிய விமானப்படை, அமெரிக்கா வழங்கிய லேசர் வழிகாட்டுதல் கொண்ட பாரிய பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை ஏவியது.

யூத ஓய்வுநாளில் பயணம் செய்வதற்கு எதிரான வழக்கமான விதியை மீறி அவர், உடனடியாக நாடு திரும்புவார் என்று நெதன்யாகுவின் அலுவலகம் கூறியது. மேலும், நியூயோர்க்கில் உள்ள ஒரு தற்காலிக கட்டளை மையத்தில் உள்ள தரைவழி தொலைபேசி வழியாக, இத்தாக்குதலுக்கு பிரதமர் உத்தரவிடும் புகைப்படத்தை அது வெளியிட்டது.

நேற்றிரவு வரை, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும், கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும் இத்தகைய குண்டுவீச்சுகள் தொடர்ந்தன. இது, ஏற்கனவே கடந்த ஆண்டு காஸா மக்கள் மீது சுமத்தப்பட்டதைப் போன்ற அழிவு மற்றும் மனிதப் பேரழிவு மட்டத்தை தோற்றுவித்து வருகிறது.

பெய்ரூட் மீதான குண்டுவீச்சுக்களில் முழு இறப்பு எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆரம்ப தகர்ப்பில் 300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளதாக ஹாரெட்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

“குடியிருப்பாளர்களைக் கொண்ட ஆறு கட்டிடங்கள் உண்மையில் தூசியாக்கப்பட்டன. இந்த கட்டிடங்களில் பொதுமக்கள் இருந்ததாக” பெய்ரூட்டை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர் ஹலா ஜாபர் தெரிவித்தார். தற்போது உடல்களை கண்டுபிடிப்பதில் மீட்புப் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

“அவர்கள் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அப்பகுதியில் இருந்த மக்களிடம் பேசினோம், அவர்கள் அவசர சேவைகள் மூலம் வெளியே எடுக்கப்பட்ட மற்றும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட குழந்தைகளின் உடல்களைப் பார்த்த சாட்சிகள் தெரிவித்ததாக” அல் ஜசீரா செய்தி வெளியிட்டது.

சமீபத்திய தலைமுறை 5,000-பவுண்டு நிலவறைத் தகர்ப்பு GBU-72 ஏவுகணைகளின் பயன்பாடு, 2001 இல் அமெரிக்க விமானப் படைக்காக உருவாக்கப்பட்டது. இந்த காட்டுமிராண்டித்தனத்தின் ஆதாரம் இஸ்ரேலில் உள்ள சியோனிச ஆட்சியில் மட்டும் அல்ல, அதன் வேர்கள் வாஷிங்டனில் உள்ளது என்பதை மீண்டும் காட்டுகிறது. இந்த குண்டுகளின் முந்தைய பதிப்புகள் 1991 மற்றும் 2003 இல் ஈராக்கில் அமெரிக்காவாலும், 2021 இல் காஸாவில் இஸ்ரேலாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விளைவாக ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை, லெபனான் முழுவதிலும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 700 க்கும் மேற்பட்ட மக்களால் அதிகரிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் கண்மூடித்தனமான பேஜர் தாக்குதல்களால் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகளுக்கு அதிகமாக இந்த வாரம் மேலும் பலர் ஊனமுற்றுள்ளனர்.

நெதன்யாகுவின் போர்-வெறி உரையுடன் இணைந்து, இஸ்ரேலின் வாஷிங்டன்-ஆதரவிலான போரின் மேலதிக காட்டுமிராண்டித்தனமான விரிவாக்கம் எப்போதும் அதன் பின்னால் இருந்து வந்துள்ள நிகழ்ச்சி நிரலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது, ஒட்டுமொத்த மூலோபாய மற்றும் ஆதாரவளம் நிறைந்த பிராந்தியத்தின் மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க ஒரு பரந்த மோதலைத் தூண்டிவிட வேண்டும்.

நெதன்யாகு குறிப்பாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன மேற்குக் கரையையும், அத்துடன் லெபனான், காஸா, ஈராக், சிரியா, யேமன் மற்றும் ஈரானையும் இஸ்ரேலிய போரின் “போர் முனைகளாக” பெயரிட்டார். பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் ஆயுதங்களால் தைரியமடைந்த அவர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் இணையுமாறு அனைத்து “பொறுப்பான அரசாங்கங்களுக்கும்” அழைப்புவிடுத்தார்.

ஐ.நா.வில் முன்பு செய்ததைப் போலவே, இஸ்ரேலிய தலைவரும் முழு மத்திய கிழக்கையும் ஒரு “சபிக்கப்பட்ட” மண்டலமாக சித்தரிக்கும் வரைபடங்களை வெட்கமின்றி உயர்த்திப் பிடித்தார். சமாதானம் மற்றும் செழிப்பின் ஒரு “ஆசீர்வதிக்கப்பட்ட” பிராந்தியமாக கூறப்படுவதை, சாத்தியமானளவுக்கு இந்த சர்வாதிகார சவூதி ஆட்சியின் பங்காண்மையுடன், ஸ்தாபிப்பதற்காக, ஈரானிய செல்வாக்கு அகற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவர் காட்டிய வரைபடங்கள் காஸா மற்றும் மேற்குக் கரையை இஸ்ரேலின் பகுதிகளாகக் காட்டின.

முன்னதாக ஒரு சில அரசாங்கத் தலைவர்கள் ஐ.நா. பொதுச் சபையில் போர்நிறுத்தம் அல்லது “போர் விரிவாக்கத்தை குறைப்பதற்கு” வேண்டுகோள் விடுத்த பின்னர், சில பிரதிநிதிகள் அவரது உரைக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். “யூத அரசை எதற்கும் பேய்த்தனமாக சித்தரிக்கும் தன்னியக்க பெரும்பான்மையுடன், யூத எதிர்ப்பு பித்தத்தின் சதுப்பு நிலமாக “ ஐ.நா இருப்பதாக நெதன்யாகு குற்றஞ்சாட்டினார்.

யதார்த்தத்தை முற்றிலும் தலைகீழாக மாற்றி, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, நாஜி பாணியிலான இனப்படுகொலையை நாடுவதாக ஹமாஸை குற்றஞ்சாட்டிய நெதன்யாகு, பாரிய கற்பழிப்புகள், தலை துண்டிக்கப்படுவது மற்றும் குழந்தைகள் உயிருடன் எரிக்கப்படுவது குறித்த பொய்களை மீண்டும் வலியுறுத்தினார். 40,000 க்கும் மேற்பட்ட மக்களை கொன்று கிட்டத்தட்ட முழு மக்களையும் இடம்பெயர்த்துள்ள காஸா மீதான இஸ்ரேல் ஒரு வருடகால தாக்குதலை தீவிரப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையிலும், மற்றும் மேற்குக் கரையில், 12 மாதங்களில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றுள்ள நிலையிலும் இது நடந்துள்ளது.

மனிதகுலத்திற்கு எதிராக பெருகிவரும் இந்த குற்றங்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் பாதுகாப்பை அனுபவித்து வருகிறார் என்பதை அறிந்த நெதன்யாகு, அவருக்கும் இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி யோவ் கெலண்ட்டுக்கும் எதிராக கைது பிடியாணைகள் பிறப்பிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கண்டனம் செய்தார்.

ஒரு முழு அளவிலான போருக்கான இந்த உந்துதல், லெபனானில் “உடனடியாக” 21 நாள் போர்நிறுத்தத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற கூட்டாளி நாடுகள் புதன்கிழமை விடுத்த கூட்டு அழைப்பின் மோசடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த பாசாங்கு, தாக்குதலுக்கு ஒரு மூடிமறைப்பை வழங்கியதுடன், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தயாரிப்பின் இறுதி கட்டத்தை அறிந்திருந்தனர்.

மீண்டுமொருமுறை, பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் சமீபத்திய அட்டூழியங்கள் குறித்து முன்கூட்டியே எதுவும் தெரியாது என்று மறுத்தது, அதேவேளையில் இஸ்ரேலுக்கான அதன் அசைக்க முடியாத ஆதரவையும் தெளிவுபடுத்தியது. லெபனானில் இஸ்ரேலின் நோக்கம் “ஒரு முக்கியமான மற்றும் நியாயமான ஒன்று” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். “பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு,” என்றாலும் “அது அவ்வாறு செய்யும் விதம் முக்கியமானது” என்று அவர் மேலும் கூறினார். பிந்தைய சொற்றொடர் இஸ்ரேலின் ஆயுதக்கிடங்கில் தொடர்ந்து ஆயுதங்களை ஊற்றுவதற்கு ஒரு மெல்லிய மேற்பூச்சு ஆகும்.

உண்மையில், இந்தப் பிராந்தியத்தில் அதன் படைகளை மேலும் அதிகரிக்க விரைவாக நகர்ந்த வாஷிங்டன், அவ்விதத்தில் ஒரு பரந்த போருக்கான அதன் தயார்நிலையை எடுத்துக்காட்டியது. ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கில் “படை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அமெரிக்க நோக்கங்களின் முழு வீச்சையும் ஆதரிக்கவும்” “தேவையான அமெரிக்க படை நிலைப்பாட்டை மதிப்பீடு செய்து சரிசெய்ய” பென்டகனுக்கு உத்தரவிட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சுமார் 40,000 அமெரிக்க துருப்புக்கள் ஈராக் மற்றும் சிரியா உட்பட மத்திய கிழக்கு எங்கிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கி கப்பல் இப்பகுதியில் உள்ளது, யுஎஸ்எஸ் ஹாரி எஸ். ட்ரூமன் அப்பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை ஈரானும் ஹிஸ்புல்லாவும் ஆத்திரமூட்டல்கள் தீவிரமடைந்த போதிலும்கூட, இஸ்ரேலுடன் முழுப் போரைத் தவிர்க்க உறுதியாக உள்ளன. லெபனானில் உள்ள ஈரான் தூதரகம், பெய்ரூட் மீதான தாக்குதலை “ஆபத்தான விளையாட்டை மாற்றும் விரிவாக்கம்” என்று விவரித்தது.

“பெய்ரூட்டில் பல குடியிருப்பு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத வான்வழித் தாக்குதல்” “அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் விடுத்த போர்நிறுத்த அழைப்பு, சியோனிச ஆட்சி பாலஸ்தீனிய மற்றும் லெபனான் மக்களுக்கு எதிரான அதன் குற்றங்களைத் தொடர்வதற்கான நேரத்தை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அப்பட்டமான தந்திரம்” என்பதைக் காட்டுகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

பாசிசவாத அதிவலது அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கிய இஸ்ரேலிய ஆட்சி, அது பரவலான அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தும், அதன் தாக்குதலைத் தீவிரப்படுத்த தீர்மானகரமாக உள்ளது. குடியிருப்பு கட்டிடங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசுவதால் அவை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையின் (IDF) செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

காஸா முழுவதும் செய்து வருவதைப் போலவே, இஸ்ரேலிய இராணுவம் இழிந்த முறையில் சிவிலிய இலக்குகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில், சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுகிறது. அந்த வகையில், ஹமாஸும் ஹஸ்புல்லாவும் அத்தகைய கட்டிடங்களின் கீழ் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறுகிறது. அந்த அடிப்படையில், காஸா மற்றும் தெற்கு, கிழக்கு லெபனானின் முழு மக்களும் இலக்காக ஆக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் ஏற்கனவே லெபனான் மீது படையெடுக்கும் திட்டங்களை அடையாளம் காட்டியுள்ளது. மிக சமீபத்தில் 2006ல் செய்தது போல் 1,100க்கும் மேலானவர்களைக் கொன்று ஒரு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை இதுவரையில் “வடக்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக போருக்காக” 6வது மற்றும் 228வது படைப்பிரிவுகளான இரண்டு ரிசர்வ் பிரிகேட்களை அணிதிரட்டியுள்ளது.

காஸாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள அல்-பலூஜா பள்ளியின் மீது இஸ்ரேல் வியாழக்கிழமை நடத்திய குண்டுவீச்சில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான வஃபா நேற்று மேலும் இஸ்ரேலிய தாக்குதல்களை அறிவித்தது. பெத்லஹேமுக்கு தெற்கே உள்ள அல்-காதர் நகரத்தின் மீதான தாக்குதல், ஹெப்ரோனுக்கு மேற்கே உள்ள இத்னாவில் வசிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் நப்லஸுக்கு தெற்கே உள்ள பீட்டா நகரில் சட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு எதிரான அணிவகுப்பின் மீதான தாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

இஸ்ரேலும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அக்டோபர் 7 தாக்குதல்களை காசாவில் ஒரு இனப்படுகொலையை நடத்துவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக பிராந்தியம் தழுவிய போரைத் தூண்டுவதன் மூலம் மத்திய கிழக்கை முற்றிலுமாக மேலாதிக்கம் செலுத்த முனையவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் எச்சரிக்கைகளை லெபனானில் போர் விரிவாக்கம் உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், யூரேஷிய நிலப்பரப்பின் விண்வெளி அறையிலான இந்த மோதல், ஒரு அணுஆயுத போர் அபாயத்தின் மத்தியிலும் கூட, உலகெங்கிலும் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான ஓர் உலகளாவிய தாக்குதலில் ஒரு முனையாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, யூரேசிய நிலப்பரப்பிற்கான இந்த மோதல் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான உலகளாவிய தாக்குதலின் ஒரு முன்னோடியாகும். இது, அணு ஆயுதப் போரின் ஆபத்தில் கூட, உலகம் முழுவதும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Loading