மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
நான் இவ்வளவு தூரம் குருதியில் நடந்திருக்கிறேன்,
இனி நான் அதில் மூழ்குவதை நிறுத்திவிட்டால்,
முன்னோக்கி செல்வதை விட
திரும்பிச் செல்வது சோர்வாக இருக்கும்.
மாக்பெத், அங்கம் 3 காட்சி 4 (வில்லியம் ஷேக்ஸ்பியர்)
* * *
கடந்த செவ்வாய்கிழமை மாலை, மூடிய கதவுகளுக்குப் பின்னால் உள்ள அதன் மரண அறையில், மார்செல்லஸ் “கலீஃபா” வில்லியம்ஸை கொடிய நச்சு ஊசி மூலம் மிசோரி மாநில அரசு படுகொலை செய்தது.
கருணை மனுவில் கையெழுத்திட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் மனுக்கள், உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் சீற்றம், மற்றும் வில்லியம்ஸ் தவறாக தண்டிக்கப்பட்டார் என்பதற்கான தெளிவான சான்றுகள் ஆகியவை இருந்தும், எந்த உணர்ச்சியையும் காட்டாத முதலாளித்துவ நீதியின் கரங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஆறு கறுப்பு அங்கி அணிந்த பாசிஸ்டுகள் இந்த குற்றத்திற்கு தங்கள் ஒப்புதலை வழங்கியதுடன், கடைசி நிமிட இரண்டு முறையீடுகளையும் நிராகரித்தனர். அதன் மௌனத்தின் மூலம், பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் வில்லியம்ஸின் கொலையை ஆதரித்துள்ளது. துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது நீதிமன்றத்தில் மரண தண்டனையை நியாயப்படுத்தியிருந்தார். கடந்த மாதம் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக ஹாரிஸை பரிந்துரை செய்த ஜனநாயகக் கட்சி, அதன் தேர்தல் பிரச்சார மேடையில் இருந்து மரண தண்டனைக்கு பெயரளவிலான எதிர்ப்பை காட்டியது.
1998 இல் செயின்ட் லூயிஸ் நிருபர் ஃபெலிசியா கெய்ல் கொலை செய்யப்பட்டதில் வில்லியம்ஸ் நிரபராதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் (இரத்தம் தோய்ந்த கைரேகைகள், கால் தடங்கள் மற்றும் முடிகள்) அவரை குற்றம் நடந்த இடத்துடன் இணைக்கவில்லை. மாறாக, தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு $10,000 டாலர் வெகுமதியை எதிர்பார்த்து, வில்லியம்ஸ்சின் முன்னாள் சிறை நண்பரும், காதலியுமாக இருந்த ஒருவரால் அவர் சிக்கவைக்கப்பட்டார். கெய்லின் மடிக்கணினி, அவரது காரின் டிக்கியில் காணப்பட்டது. இது முன்னாள் காதலியால் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை அவரது விசாரணையில் ஒருபோதும் ஜூரி கேட்கவில்லை.
வில்லியம்ஸ் தனது மரணம் வரை குற்றமற்றவராகவே இருந்தார். அவரது மரணதண்டனையை, கெயிலின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு ஆரம்பத்தில் மரண தண்டனை விதித்த ஜூரிகள் மற்றும் அவரை குற்றவாளி என்று அறிவித்து தண்டனையை ரத்து செய்ய முயன்ற வழக்கறிஞர் அலுவலகத்தினர் எதிர்த்தனர்.
சவூதி அரேபியா, எகிப்து, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சேர்த்து தொடர்ந்தும் இழிவான மரணதண்டனைகளை நிறைவேற்றும் சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவில், எட்டு மாநிலங்களில் 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் மூன்று மரணதண்டனைகள் உட்பட இந்த ஆண்டு மேலும் ஒன்பது மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன.
1976 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை மீண்டும் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, 1,598 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை 1, 2024 நிலவரப்படி, மத்தியிலுள்ள கூட்டாட்சி சிறை மற்றும் இராணுவ தடுப்புக்காவல் உட்பட 2,213 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் பல தசாப்தங்களாக மரணதண்டனை நிறைவேற்றுபவர்களின் கைகளில் அல்லது கடைசி நிமிட அவகாசத்திற்காக காத்திருக்கின்றனர்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரே நிரபராதி வில்லியம்ஸ் மட்டும் அல்ல என்பது உறுதி. 1973 முதல் 200 மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அல்லது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 பேர் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு தவறாக மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவிகளின் மிகவும் வெட்கக்கேடான வழக்குகளில் கேரி டைலரும் உள்ளார். கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் சிறைக்குப் பிறகு இறுதியாக 2016 இல் விடுவிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்கர்கள் ஏதோவொரு வடிவிலான நீதித்துறை மேற்பார்வையின் கீழ் உள்ளனர். அவர்களில் இரண்டு மில்லியன் பேர் சிறைகள் மற்றும் சிறைச்சாலைகளின் காட்டுமிராண்டித்தனமான வலைப்பின்னலில் வாடுகின்றனர். கைதிகள் மனிதாபிமானமற்ற நிலைமைகள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது, 2020 ஆம் ஆண்டில், 6,000 க்கும் மேற்பட்ட கைதிகளின் மரணத்திற்கு வழிவகுத்தது. சிறுவர்கள் வழக்கமாக, பெரியவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு நிபந்தனையின்றி ஆயுள் தண்டனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சிறைச்சாலை சுவர்களுக்கு வெளியே, ஒரு ஆக்கிரமிப்பு படையாக, தெருக்களில் சுற்றித் திரியும் பொலிசார், ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் அதிகமானவர்களைக் கொல்கின்றனர், ஆயிரக்கணக்கானவர்களை எந்த பின்விளைவுகளும் இல்லாமல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர்.
ஒரு பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது மளிகைக் கடையில் ஒவ்வொரு பாரிய துப்பாக்கிச் சூடு நடந்த பிறகும், ஜனாதிபதி பைடெனும் மற்றவர்களும் “அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை” என்று வழக்கமாக கூறுகிறார்கள். ஆனால், அவர் அர்த்தப்படுத்துவது என்னவென்றால், அமெரிக்க அரசும் ஆளும் வர்க்கமும் காஸாவில் அதன் இனப்படுகொலையில் இருந்து மரண அறைகள் வரையில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்கும் நோக்கில் வன்முறை மீது ஒரு ஏகபோகத்தைப் பராமரிக்க உத்தேசித்துள்ளன என்பதாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோசப் கிஷோர் மார்செல்லஸ் வில்லியம்ஸ் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதுக்கு விடையிறுப்பாக பின்வருமாறு குறிப்பிட்டார்:
மரண தண்டனையின் காட்டுமிராண்டித்தனம் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் உண்மையான இயல்பை வெளிப்படுத்துகிறது. அது வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதன் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்புமுறையாகும். பெரும்பாலும் முடிவான ஆதாரமோ அல்லது ஒரு நியாயமான விசாரணையோ இல்லாமல், அதன் சொந்த குடிமக்களை தூக்கிலிடுவதற்கான அரசின் அதிகாரமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த வன்முறையைப் பிரதிபலிக்கிறது, அது உலகளாவிய மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுள்ளது.
அமெரிக்காவில் மரண தண்டனை தொடர்ந்து நீடிப்பது, ஒவ்வொரு துளையில் இருந்தும் அழுக்கை வெளியேற்றும் முதலாளித்துவ அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் குற்றவியல் தன்மை மற்றும் வன்முறையின் இன்னுமொரு உறுதிப்படுத்தலாகும்.
ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதான ஒரு வக்கிரமான தாக்குதலின் மீது ஒருங்குவிந்த ஒரு பாசிசவாத இயக்கத்தைக் கட்டமைத்து வருகின்றனர். ஜனநாயகக் கட்சியினர் பரந்த பெருந்திரளான மக்களின் நலன்களை நிவர்த்தி செய்வதற்கு இலாயக்கற்றவர்களாக இருப்பதுடன் அதனை எதிர்த்து வருகின்றனர் என்பதோடு, விரிவடைந்து வரும் ஓர் உலகப் போரின் இரத்தத்தில் நனைந்துள்ளனர்.
போர் மற்றும் இனப்படுகொலை மூலம் வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்வதற்கான வன்முறை தவிர்க்க முடியாமல் உள்நாட்டிற்குள் வர்க்க உறவுகளின் தன்மையில் அதன் வெளிப்பாட்டைக் காண்கிறது.
போலாந்து-ஜேர்மன் புரட்சியாளர் ரோசா லுக்செம்பேர்க் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பாக மரண தண்டனையை ஒழிக்க அழைப்புவிடுத்தபோது பின்வருமாறு குறிப்பிட்டார்:
கொடூரமான வர்க்க உணர்வு மற்றும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தால் செறிவூட்டப்பட்டுள்ள இப்போதைய ஒழுங்குமுறை அமைப்பு தீவிரமாக மாற்றப்பட வேண்டும். ஆனால் ஒரு முழுமையான சீர்திருத்தம், சோசலிச உணர்வுடன் இசைந்து, ஒரு புதிய பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியும்; ஏனெனில், இறுதிப் பகுப்பாய்வில், குற்றம், தண்டனை ஆகிய இரண்டுமே சமூக அமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.
மரண தண்டனையை ஒழிப்பதற்கும், பொலிஸ் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இனப்படுகொலை மற்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குமான போராட்டத்திற்கு, இந்த வன்முறை வேரூன்றியுள்ள முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் அவசியமாக தேவைப்படுகிறது.