இலங்கை பொலிஸ் போராட்டம் செய்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கொடூரமாக தாக்கியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

26 ஜூன் 2024 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் செய்த ஆசியரியர்களின் ஒரு பகுதியினர்.

புதன்கிழமை அன்று, கொழும்பு புகையிரத நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வீதிகளில் சுமார் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்குபற்றிய ஒரு போராட்டத்தின் மீது இலங்கை பொலிஸ் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. நீர் தாரை மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளைக் கொண்டு தாக்கியதில் மூன்று ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு ஏனையவர்கள் காயமடைந்துள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத்தின் உயர்மட்டங்களால் திட்டமிடப்பட்ட இந்த பொலிஸ் தாக்குதலானது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு கூர்மையான எச்சரிக்கை ஆகும். அரசாங்கம், பாரிய சமூக எதிர்ப்புக்கு அடக்குமுறையை அதிகரிப்பதன் மூலம் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றது.

நீண்டகாலம் நிலுவையில் உள்ள சம்பள அதிகரிப்பு கொடுப்பனவைக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்கள் உள்ளடங்களாக சுமார் 250,000 கல்வியாளர்கள் அந்த நாளில் மேற்கொண்ட நாடளாவிய சுகயீன விடுமுறை நடவடிக்கையின் ஒரு பாகம் ஆகும். நுாற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள், கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் இராணுப் படைகளை அரசாங்கம் அணிதிரட்டியிருந்தது. சிலர் துப்பாக்கிகளுடனும் ஏனையவர்கள் லத்திகள் மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளுடனும் ஆயுதபாணிகளாகி இருந்ததுடன் போராட்ட இடங்களின் அருகில் நீர் தாரை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

புதன்கிழமை நடவடிக்கையானது மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) கட்டுப்படுத்தப்படும் இலங்கை ஆசியர் சேவை சங்கம் (CTSU), இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிச கட்சி சார்ந்த ஐக்கிய ஆசிரியர்கள் சேவைகள் சங்கம் உள்ளடங்களாக 20க்கும் அதிகமான ஆசிரியர் தொழிற் சங்கங்களின கூட்டணியான ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டணியால் (TPTUA) அழைப்புவிடுக்கப்பட்டது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து வந்தவர்கள உட்பட ஆயிரக்கணக்கான கல்வியாளர்கள் காலை 9 மணியளவில் கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு வெளியே ஒன்று கூடத் தொடங்கியதுடன் சில மணித்தியாலங்களில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன்பின்னர், குறிப்பிட்ட வீதிகளில் இருந்து ஆர்ப்பாட்டம் நகர்வதைத் தடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட தடை உத்தரவுடன் பொலிஸார் அங்கு வந்தனர்.

26 ஜூன் 2024 அன்று, விக்கிரமசிங்க அரசாங்கம் இலங்கையின் கொழும்பில் போராட்டம் செய்த ஆசிரியர்களுக்கு எதிராக அணிதிரட்டியிருந்த பொலிஸ் மற்றும் இராணுவம்.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நிதி அமைச்சின் தலைமை அலுவலகத்தை நோக்கி செல்லும் வீதயின் சந்தி நோக்கி நடந்து சென்றனர். ”ஆசிரியர் அதிபர் சேவைகளில் பதவி உயர்வு வழங்கு!”, ”பிள்ளைகளுக்கு குறைந்த விலைகளில் கற்றல் உபகரணங்களை வழங்கு!”, ”கல்வியை தனியார்மயமாக்குவதை நிறுத்து“, ”ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை!” ஆகிய சுலோகங்களை அவர்கள் கோசமிட்டனர்.

ஆசிரியர்கள், அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை தோற்கடிக்கவும் அழைப்புவிடுத்தனர்.

எச்சரிக்கை இன்றி, பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீர் பீச்சியும் தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் ஐம்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆசிரியர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஒரு ஆசிரியரின் ஒரு கண்ணும் மற்றொரு ஆசிரியரின் இரு கண்களும் அதி-அழுத்த தண்ணீர் தாக்குதலில் காயமடைந்து சத்திர சிகிச்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதலால் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் அதிரித்துவரும் கோபத்துக்கு முகங்கொடுத்த தொழிற்சங்கங்கள், மறுநாள் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தன. இதில் முழுமைானளவில் கல்விசார் தொழிற்சங்க அங்கத்தவர்கள் பங்கேற்றனர்.

செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை ஆசிரியர் சங்க மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்க தலைவர்களான முறையே ஜோசப் ஸ்டாலின், மகிந்ந ஜயசிங்க மற்றும் ஏனைய சில தொழிற்சங்க அதிகாரிகள் நிதி அமைச்சு அலுவலர்களை சந்தித்தனர். எனினும் வெறும் கையுடனே வெளியே வந்தனர்.

ஸ்டாலின், கலந்துறையாடலில் எதுவும் எட்டப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கூறினார். “இந்தப் போராட்டமானது கோடாபய இராஜபக்ஷ எப்படி வீட்டுக்குப் போனாரோ அதே போன்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவி்ன வெளியேற்றத்துடனேயே முடிவடையும்… ஆசிரியர்களின் போராட்டத்துடன் தொடங்கிய போராட்டத்திலேயே இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டார்” என ஸ்டாலின் வாய்சவாடலாக அறிவித்தார்.

ஸ்டாலினின் கருத்துக்கள், முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை பதவியில் இருந்து கீழ் இறக்கிய 2022 ஏப்ரல்-ஜூலை வெகுஜன எழுச்சியையும், சம்பளம் உயர்வு கோரியும் சம்பள முரண்பாடுகளை தீர்க்கக் கோரி 2021 ஜீலையில் இருந்து செப்டெம்பர் வரை நடந்த ஆசிரியர்களின் 100 நாள் வேலை நிறுத்தத்தைப் பற்றியும் குறிக்கின்றன.

“இந்தப் பிரச்சினைகள் ஒரு மக்கள் அரசாங்கத்தால் தீர்க்கப்படும்” என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் ஜயசிங்க ஆர்ப்பாட்டகாரர்களுக்கு கூறினார். இரு தலைவர்களும் செப்ரம்பர் மாத இறுதியிலோ அல்லது ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலோ நடபெற உள்ள வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலையே மேற்கோள் காட்டினர்.

விக்கிரமசிங்கவின் தேர்தல் தோல்வி ஊடாக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற கூற்றானது அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வளர்ந்துவரும் தொழிலாள-வர்க்க எதிர்ப்பை அரசியல் ரீதியாக தடம்புரளச் செய்வதற்கான துரோகத்தனமான முயற்சி ஆகும்.

ஜே.வி.பி. மற்றும் அதனோடு இணைந்த தொழிற்சங்கங்கள் இந்த பொய்ப் பிரச்சாரத்தை மோசமானமுறையில் ஊக்குவிக்கின்றன. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஜே.வி.பி. மற்றும் அதன் தேர்தல் முன்னணியான தேசிய மக்கள் சக்தி உட்பட சகல பாராளுமன்ற எதிர்க்கட்சிகளும், சர்வதேச நாணய நிதிய சிக்கன வேலைத்திட்டத்திற்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

அனைத்தும் தேர்தலால் தீர்க்கப்படும் என்ற வாசகம், தனது அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அவசியமான மூச்சுவிடும் இடைவெளியையும் அரசாங்கத்துக்கும், அரசுக்கும் வழங்குகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள், ஜனநயாகத்துக்கு விரோமானவை ஆகும். ஆசிரியர்களுக்கு எதிராக பொது இடத்தில் வைத்து பொலிஸாரால் அப்பட்டமாக தாக்குதல் நடத்தப்பட்ட அதே வேளை, இன்றும் மோசமான எதேச்சதிகார நடவடிக்கைகள் மூடிய கதவுகளுக்குள் கலந்துரையாடப்படுகின்றது என்பதில் சந்தேகம் கிடையாது.

ஸ்ராலினின் கணிப்பு சமீபத்திய வரலாற்றை முற்றுமுழுதாக பொய்மைப்படுத்துவதன் அடிப்படையில் ஆனதாகும். உண்மையில், 2021 இல் நடைபெற்ற ஆசிரியர்களின 100 நாள் நாடாளாவிய வேலைநிறுத்தம் முன்னாள் பிரதமராக இருந்த மகிந்த இராஜபக்ஷவுடனான சந்திப்பை தொடர்ந்து தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது. இலங்கையின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்றை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஏற்றுக்கொண்டன. அதன் பிறகு தொழிற்சங்க அதிகாரத்துமானது ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையில் வெறும் மூன்றில் ஒரு பகுதியைப் பெறவும் மிகுதியானது முதலில் 2020 ஜனவரியிலும் எஞ்சிய பகுதி 2023 இலும் வழங்ப்படும் என்ற பொய் வாக்குறுதியையும் ஏற்றுக்கொண்டது.

“ஏதோ ஒரு வகையான வெற்றியை பெற்றுள்ளதாக” கூறிக்கொண்டு ஆசிரியர் தொழிற்சங்க அதிகாரிகள் தமது காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்த முயற்சித்தனர். உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி ஆழமடைந்ததால், சம்பள அதிகரிப்பில் நிலுவையில் உள்ள மூன்றில் இரண்டு பங்கை வழங்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

ஆசிரியர்கள் மற்றும் இலங்கையின் சகல துறைத் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளும் பொருட்கள், மின்சாரம் மற்றும் பிற அத்திவசியங்களுக்கான வானளவில் அதிகரித்துள்ள செலவுகள் அதே போல் அவர்களின் சமூக நிலமைகள் மீதான அரசாங்கத்தின் திட்டமிட்ட தாக்குதல்களால் பாதிக்கப்ட்டுள்ளனர். விக்கிரமசிங்க அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதிய கட்டகைள் மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளன.

ஏனைய துறைகளில் உள்ள தமது சமதரப்பினரைப் போலவே ஆசிரியர் தொழிற்சங்க தலைமைத்துவமும் ஒழுங்குமுறையற்ற, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களுடன் இந்த சமூகத் தாக்குதல்களுக்கு பிரதிபலித்தன. இவை அனைத்தும், தமது அங்கத்தவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் கோபத்தை கலைப்பதற்கு வடிவமைக்கபட்டவை ஆகும்.

ஜனவரி மாதத்தில் இருந்து தொழிற் சங்க அதிகாரிகள் சம்பள உயர்வு மற்றும் தனியார்மயமாக்கலை எதிர்த்து மின்சாரம், சுகாதாரம், பல்கலைக்கழகம், துறைமுகம், தாபல் அஞ்சல் மற்றும் கல்வித் துறைகளில் வேலை நிறுத்தத்திற்கும் போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்தனர். எவ்வாறாயினும், ஒன்றிணைந்த நாடுதழுவிய நடவடிக்கையை இந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் கடுமையாக எதிர்த்தன.

ஆசிரியர்களின் போராட்டத்தையும் தற்போது தொடர்ந்துகொண்டிருக்கும் பல்கலைக்கழக கல்வி-சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தையும் தெளிவாகக் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு எந்தவித சம்பள அதிகரிப்பையும் வழங்காது என்று வியாழன் அன்று மீண்டும் கூறினார். அடுத்த ஆண்டு இது கவனத்தில் எடுக்கப்படலாம், ஆனாலும் இது அரசாங்கத்தால் செலவுகளை சமாளிக்க முடியுமா என்பதிலேயே தங்கியிருக்கின்றது -உதாரணமாக இன்னும் பாரிய வரி அதிகரிப்பு மற்றும் சமூக வெட்டுக்கள் ஊடாக சமாளிப்பதிலேயே தங்கியுள்ளன- என அவர் கூறினார்.

அரசாங்கம் சகல அத்தியவசியங்கள் மீதான பெறுமதி சேர் வரி அதிகரிப்பு, பொருட்களுக்கும் சேவைகளுக்குமான விலை அதிகரிப்பு, தனியார்மயப்படுத்துதல் மற்றும் வர்த்தகமயபபடுத்தலுக்காக அரச நிறுவனங்களை மறுகட்டமைப்பு செய்தல் ஊடாகவும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை ஏற்கனவே பிழிந்து எடுக்கின்றது.

போராட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் மீதான அரசாங்கத்தின் மோசமான பொலிஸ் தாக்குதலும் அரச ஊழியர்களுக்கு இந்த ஆண்டு எந்தக் கொடுப்பனவு உயர்வும் கிடையாது என்ற தொடர்ச்சியான அறிவிப்புகளும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்திற்கும் இலாப முறைமைக்கும் எதிரான அரசியல் போராட்டத்தில் இருப்பதை தௌவுபடுத்துகின்றது.

புதன்கிழமை அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் ஆசிரியர்களின் போராட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே உள்ள பாடசாலைகளிலும் ”வர்க்கப் போராட்டங்களை எதிர்வரும் தேர்தல்களுக்கு அடிபணியச் செய்யும் இலங்கை தொழிற்சங்கங்களின் முயற்சியை எதிர்த்திடு! அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு பொதுவேலை நிறுத்தத்திற்கு தயார் செய்! சோசலிச கொள்கைளுக்காகப் போராடு!” என்ற சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் பிரதிகளை விநியோகித்து தலையீடு செய்தனர்.

அந்த அறிக்கையானது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவை கூடி வேலை செய்கின்ற முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமாகப் பிரிந்து ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தாயரிப்பு செய்ய, வேலைத்தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்களிலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கபட்ட நடவடிக்கை குழுக்களை அமைக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. சிக்கன தாக்குதலை தோற்கடிக்கவும், வெகுஜனங்களி்ன் சமூக தேவைகளை பாதுகாக்கவும், ஆட்சியின் அப்பட்டமான எதேத்சதிகார வடிவங்களை திணிப்பதற்கு எதிராகவும் போராடுவதற்கு உள்ள ஒரே வழி இதுவே ஆகும்.

“ஒரு அரசியல் பொது வேலை நிறுத்தத்தின் வெற்றிக்காக, தீவு முழுவதிலும் நடவடிக்கை குழுக்களில் இருந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சோசலிசத்துக்கும் ஜனநாயகத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்வது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ தாக்குதலை எதிர்கொள்ள இந்த வேலைத்திட்டத்தை 2022 ஜுலை மாத நடுப்பகுதியில் தொடக்கி வைத்தது

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தும் ஆளும் கட்சிகளின் முதலாளித்துவ அரசாங்கம், அல்லது ஐ.ம.ச. இல்லையேல் ஜே.வி.பி. அல்லது வேறு எந்த அரசாங்கமும் தொழிலாளர்களுக்குத் தேவையில்லை. சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமே அவர்களுக்கு அவசியமாகும். முதலாளித்துவ அரசைத் துாக்கியெறிந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் தொழிலாள வர்க்கப் புரட்சிகர சக்தியை, இந்த ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாடு தயார்படுத்தி அணிதிரட்டும்.”

Loading