முன்னோக்கு

மக்ரோனையும் லு பென்னையும் நிராகரி! பிரெஞ்சு தேர்தல் நெருக்கடி, பாசிசத்தின் அச்சுறுத்தல் மற்றும் புதிய மக்கள் முன்னணியின் துரோகம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்த முதல் சுற்று பாராளுமன்றத் தேர்தல், மக்ரோனின் கட்சிக்கு ஒரு தோல்வியை உருவாக்கியதுடன், முதலாளித்துவ ஸ்தாபனத்தின் நாற்றம்கண்ட அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது. பிரான்சில் 57 சதவீத உடலுழைப்புத் தொழிலாளர்கள் உட்பட 11 மில்லியன் மக்கள் மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய பேரணி (RN) கட்சிக்கும் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் வாக்களித்துள்ளனர். ஒன்பது மில்லியன் மக்கள் ஜோன்-லூக் மெலன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP) கூட்டணிக்கு வாக்களித்த அதேவேளை, மக்ரோனின் கட்சி 6 மில்லியன் வாக்குககளைப் பெற்று வீழ்ச்சி கண்டுள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், வலதுபுறம், பிரெஞ்சு அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சித் தலைவர் மரின் லு பென்னை ஜூன் 21, 2022 அன்று பாரிஸில் எலிசே அரண்மனையில் சந்தித்த வேளை. [AP Photo/Ludovic Marin]

சோசலிச சமத்துவக் கட்சி (PES) சமரசமின்றி நவ-பாசிச லு பென் மற்றும் வங்கியாளரும் பிரான்சின் 'பணக்காரர்களின் ஜனாதிபதியுமான' மக்ரோன் ஆகிய இருவரையும் எதிர்க்கிறது. எவ்வாறாயினும், இது மெலன்சோனின் புதிய மக்கள் முன்னணிக்கு ஆதரவையோ அல்லது வாக்களிப்பதையோ பரிந்துரைக்கவில்லை. மக்ரோன் மற்றும் லு பென் ஆகிய இரண்டு பேர்களையும் எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குரிமையை முறையாக நீக்குவதற்கும், மக்ரோனுடன் அரசாங்கக் கூட்டணியை அமைக்க முயற்சிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைத் தடுப்பதற்கும் புதிய மக்கள் முன்னணி செயல்பட்டு வருகிறது.

தேசிய பேரணி கட்சிக்கு தொழிலாளர்களிடையே கிடைத்த வாக்குகள் என்பது, அதன் நாசி ஒத்துழைப்பு முன்னோடிகளால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் கொள்கைகளுக்கு கிடைத்த பாரிய ஆதரவை வெளிப்படுத்தவில்லை. மாறாக, இது ஒரு சிதைந்த வழியில், மக்ரோனுக்கு எதிரான கோபத்தையும் வெறுப்பையும் பிரதிபலிக்கிறது. பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் மக்ரோனின் ஓய்வூதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான வெட்டுக்களை எதிர்க்கின்றனர். அத்துடன் அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்த உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற அவரது நினைவுகூரத்தக்க பொறுப்பற்ற அழைப்பையும் எதிர்த்து வருகின்றனர்.

தேசிய பேரணி கட்சிக்கு வாக்குகள் குவிந்துள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்கள் போராடுவதற்கான வழியைத் தேடுகின்றனர். 2018-2019 இல் மக்ரோனுக்கு எதிரான 'மஞ்சள் அங்கி' எதிர்ப்புக்களில் சேர்ந்த அவர்கள், அவரது ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

சமூக மற்றும் அரசியல் அதிருப்தியிலிருந்து அதி தீவிர வலதுசாரிகள் பயனடைய முடியும் என்றால், அதற்கு, நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் பல தசாப்தங்களாக தொழிலாளர்கள் திட்டமிட்டு காட்டிக் கொடுக்கப்பட்டதே காரணம் ஆகும்.

மெலன்சோன் மற்றும் புதிய மக்கள் முன்னணி தொழிலாளர்களுக்கு, போர் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய இயக்கத்தை கட்டியெழுப்ப ஒரு வழியை வழங்கவில்லை. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் 'மஞ்சள் அங்கி' போராட்டக்காரர்களை தனிமைப்படுத்தி, இரத்தம் தோய்ந்த போலீஸ் அடக்குமுறைக்கு அவர்களை ஆட்படுத்திய விதத்தில் இருந்து அவர்கள் அரசியல் படிப்பினைகளைப் பெறவில்லை. மேலும், சாமானிய தொழிலாளர்களின் போராட்டத்தின் போர்க்குணமிக்க இயக்கத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் போராடவில்லை.

மாறாக, புதிய மக்கள் முன்னணியானது அத்தகைய போராட்டத்தின் கழுத்தை நெரிப்பதற்கு வேலை செய்கிறது. இது மக்ரோனுடன் ஒரு முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்காக தேர்தல் ஒப்பந்தங்களையும் தொகுதிவாரி தொகுதிகளையும் குறைத்து வருகிறது, அதில் மெலன்சோன் மக்ரோனின் பிரதம மந்திரியாக பணியாற்றலாம். மக்ரோன் ஏற்கனவே பிரெஞ்சு அரசியலமைப்பின் 16 வது பிரிவைச் செயல்படுத்துவதாக அச்சுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, அவரை பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் இடைநிறுத்த அனுமதிக்கும் மற்றும் அத்தகைய அரசாங்கம் வங்கிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கைகளை ஆதரிக்கும் பட்சத்தில் ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய அனுமதிக்கும்.

ஆயினும்கூட, இந்த அடிப்படையில் மக்ரோனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதன் மூலம், மெலன்சோன் நவ-பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை தயார் செய்யவில்லை. 'இடதுகள்' மக்ரோனின் கூட்டாளிகள் மற்றும் வங்கிகளின் பலமற்ற கருவிகளாக இருப்பதால், பிரெஞ்சு தொழிலாளர்கள் மக்ரோனை எதிர்க்க தேசிய பேரணியை ஆதரிக்க வேண்டும் என்று அது வாதிடுவதுக்கு மெலன்சோன் அனுமதிக்கிறார். இது, 21 ஆம் நூற்றாண்டின் முழு பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் பயணமும் அதி தீவிர வலதுசாரிகளை பலப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.

மக்ரோனுடன் புதிய மக்கள் முன்னணி கூட்டணியே சிறந்ததாக இருக்கும் என்றும், புரட்சிகர இடதுசாரி அரசியலுக்கு எந்த ஆதரவும் இல்லை என்ற வாதங்களை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. 1934-1938 ஆம் ஆண்டு மக்கள் முன்னணியின் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தாராளவாத சக்திகளுக்கு ஒரு அரசியல் மாற்றாக நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதுக்கு போராடிய போது, ​​நீண்ட காலத்திற்கு முன்பே ட்ரொட்ஸ்கி இந்த வாதங்களுக்கு பதிலளித்தார். அந்த நேரத்தில் பிரான்சில் இருந்த பெரும் விவசாயிகளில் பாசிசத்தை நோக்கிய இயக்கத்தின் ஆபத்து மற்றும் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு அவர்களின் ஆதரவின்மை பற்றி பேசுகையில், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

தற்போதைய குட்டி முதலாளித்துவ வர்க்கம் 'தீவிர நடவடிக்கைகளுக்கு' அஞ்சுவதால் தொழிலாளர் வர்க்க கட்சிகளிடம் செல்லவில்லை என்று உறுதிப்படுத்துவது பொய்யானது. மூன்று மடங்கு தவறானது. இதற்கு மிகவும் மாறாக, கீழேயுள்ள குட்டி முதலாளித்துவ வர்க்கம், அதன் பெரும் மக்கள், தொழிலாளர் வர்க்கக் கட்சிகளில் பாராளுமன்ற இயந்திரங்களை மட்டுமே பார்க்கின்றது. அவர்கள் தங்கள் வலிமையிலோ, போராடும் திறனிலோ, இந்த நேரத்தில் போராட்டத்தை இறுதிவரை வழிநடத்தும் அவர்களின் விருப்பத்திலோ அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

இன்று, உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்ப்பதால் தேசிய பேரணி கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்று வலியுறுத்திக் கூறுவது மூன்று மடங்கு பொய்யானது. மாறாக, புதிய மக்கள் முன்னணியிலுள்ள கட்சிகளின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுடன் பல தசாப்தங்களாக நீண்ட மற்றும் கசப்பான அனுபவத்தைக் அவர்கள் கொண்டிருக்கின்றனர். புதிய மக்கள் முன்னணியானது, (பெருவணிக சோசலிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் மிலோன்சனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சி) 1930களில் இருந்த மக்கள் முன்னணி அல்ல.

அன்றைய காலத்தில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மக்கள் முன்னணிக்குள் இருந்த தொழிலாள வர்க்க கட்சிகளின் பாரிய அடித்தளத்திற்குள் வேலை செய்து, லியோன் ப்ளூமின் சமூக ஜனநாயக SFIO கட்சிக்குள் நுழைந்தனர். ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக ப்ளூமின் கசப்பான விரோதம் இருந்தபோதிலும், அன்றைய கால மக்கள் முன்னணியானது, பாசிச தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் இயக்கத்தை பாதுகாக்க TPPS (எப்போதும் சேவை செய்யத் தயார்) போராளிகளை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள், SFIO க்குள் தொழிலாளர்கள் மத்தியில் சோவியத் யூனியனுடன் அனுதாபம் கொண்டவர்களையும், SFIO ஆல் முன்மொழியப்பட்ட எட்டு மணி நேர வேலை மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் போன்ற முக்கிய சமூக சீர்திருத்தங்களால் ஈர்க்கப்பட்டவர்களையும் கண்டறிந்தனர்.

எவ்வாறாயினும், புதிய மக்கள் முன்னணியின் சமூக அடித்தளமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் கல்விசார் நடுத்தர வர்க்கத்தின் செல்வந்த போலி இடது மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அடுக்குகளுக்கும் இடையிலான கூட்டணியாகும். அதனது வேலைத்திட்டம், உக்ரேனுக்கு 'அவசியமான ஆயுதங்களை வழங்கி', உக்ரேனுக்கு 'அமைதிகாப்பாளர்களை அனுப்புவதன்' மூலம் ரஷ்யாவுடனான போரை தீவிரப்படுத்த அழைப்பு விடுக்கிறது. அது மக்ரோனின் பொலிஸ் அரசை ஆதரிப்பதோடு, 'அனைத்து இராணுவ போலீஸ் பிரிவுகளையும் பராமரிக்க வேண்டும்' என்றும், பிரெஞ்சு உளவுத்துறை சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது.

புதிய மக்கள் முன்னணி, அதன் வேட்பாளராக பரவலாக வெறுக்கப்பட்ட சோசலிசக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டை நிறுத்துகிறது. எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு நவ பாசிஸ்டுகளை பகிரங்கமாக அழைத்த முதல் பிரெஞ்சு ஜனாதிபதியான ஹாலண்ட், பல் மருத்துவத்துக்கு வசதியில்லாத தொழிலாளர்களை 'பல் இல்லாதவர்கள்' என்று இழிவான முறையில் கேலி செய்தார். தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெட்கமற்ற எதிரியான ஹாலண்ட், 2012 இல் லண்டன் வங்கியாளர்களிடம் தனது ஜனாதிபதியாகும் முயற்சிக்கு நிதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், 'இன்று பிரான்சில் கம்யூனிஸ்டுகள் இல்லை. இடதுசாரிகள் பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, நிதி மற்றும் தனியார்மயமாக்கலுக்கு சந்தைகளைத் திறந்துள்ளனர். ஆகவே, பயப்படுவதுக்கு ஒன்றுமில்லை”என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய மக்கள் முன்னணி முன்வைப்பது வர்க்கப் போராட்டத்திற்கான முன்னோக்கை அல்ல. மாறாக, பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்போடு மோதக்கூடிய ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கான முன்னோக்கையே முன்வைக்கிறது. இந்தக் கொள்கைக்கான புதிய மக்கள் முன்னணியின் பகுத்தறிவு ஒரு அரசியல் பொய்யாகும். ஏனெனில், முழுக்க முழுக்க நவ-பாசிஸ்டுகளால் நிரப்பப்பட்டுள்ள, உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானினிடம் இருந்து தொடங்கும் மக்ரோனின் போலீஸ் அரசு இயந்திரமானது, நவ-பாசிசத்திற்கு எதிரான அரண்மனையாக செயல்படும் என்று அது வாதிடுகிறது.

2002 ஜனாதிபதித் தேர்தலின் நெருக்கடியிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான சோசலிசக் கட்சிக்கான வாக்குகள் சரிந்து வலதுசாரி வேட்பாளர் ஜாக் சிராக்கிற்கும் நவ-பாசிச ஜோன்-மேரி லு பென்னுக்கும் இடையே ஒரு போட்டிக்கு வழிவகுத்தது. வாக்குச்சீட்டில் ஒரு நவ-பாசிஸ்ட் இருப்பதை எதிர்த்தும், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட தவறான தேர்வுக்கு எதிராகவும் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. மில்லியன் கணக்கானவர்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ​​நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொழிலாளர்களின் தேர்தல் புறக்கணிப்புக்காக போராடும் ஒரு தீவிரமான கொள்கைக்கு அழைப்பு விடுத்தது. அது பின்வருமாறு குறிப்பிட்டது:

மே 5 (2002) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில், தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்க முற்படும் ஒவ்வொரு அமைப்பும் ஒரு புறக்கணிப்புக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். லு பென் அல்லது சிராக்கிற்கு அரசியல் ஆதரவு இல்லை! இந்த தவறான மற்றும் ஜனநாயக விரோத 'தேர்வுக்கு' எதிராக பிரெஞ்சு உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்ட வேண்டும். …

ஏன் புறக்கணிப்பு? ஏனென்றால், இந்த மோசடித் தேர்தலுக்கு எந்தச் சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை என்பதை மறுப்பது அவசியம். ஏனெனில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் பாதையை உருவாக்குவது அவசியம். ஏனெனில் ஒரு தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான புறக்கணிப்பு, தேர்தலுக்குப் பின் எழும் அரசியல் போராட்டங்களுக்கு சிறந்த சூழ்நிலையை உருவாக்கும்.

சோசலிசக் கட்சி, மிலோன்சோன், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பப்லோவாதிகள் அனைவரும் இந்தக் கொள்கையை நிராகரித்தனர். ஜனநாயகத்தின் பாதுகாவலராக சிராக்கை அங்கீகரித்த இவர்கள் அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிரான எதிர்ப்பின் பாத்திரத்தை நவ-பாசிஸ்டுகளுக்கு திறம்பட விட்டுக்கொடுத்தனர். முதலாளித்துவ அரசியல்வாதிகளை ஜனநாயகவாதிகளாக மாற்றும் இந்த பேரழிவுகரமான கொள்கை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அதி தீவிர வலதுசாரிகளின் பாரிய வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மக்ரோனுடன் தேர்தல் கூட்டணிக்குள் நுழையும் புதிய மக்கள் முன்னணி, இன்று அதையே மீண்டும் மீண்டும் செய்து, லு பென்னை மேலும் பலப்படுத்துகிறது.

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே போர் மற்றும் பாசிச பிற்போக்குத்தனத்தை நிறுத்த முடியும். இது வாக்குப்பெட்டிக்கூடாக நிறுத்தப்பட முடியாது. மக்ரோனின் திடீர் தேர்தல்களின் முடிவு என்னவாக இருந்தாலும், இயக்கத்தில் இருப்பது தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்திற்கும் இடையே வெடிக்கும் மோதலாகும்.

எவ்வாறாயினும், புதிய மக்கள் முன்னணி போன்ற அதிகாரத்துவங்களைச் சாராமல், சாமானிய தொழிலாளர்களிடையே ஒரு இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதனை செயல்படுத்த முடியும். அத்தகைய போராட்டத்தின் அரசியல் அடிப்படையாக, ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியையும் பாதுகாத்து வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, மக்கள் முன்னணி மற்றும் போலி-இடதுகளுக்கு எதிராக சர்வதேச சோசலிசப் புரட்சிக்காக முன்னெடுத்துவரும் போராட்டம் இருக்கிறது.

Loading