பிரெஞ்சு புதிய மக்கள் முன்னணி எவ்வாறு அதிவலதை பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஞாயிறன்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களின் முதல் சுற்றுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக, அதிவலது தேசிய பேரணி (RN) கட்சி தெளிவாக முன்னணியில் உள்ளது. கருத்துக்கணிப்பைப் பொறுத்து, 32 முதல் 36 சதவீத வாக்காளர்கள் தீவிர வலதுசாரி கட்சிக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். மேலும் 4 சதவீத வாக்குகள் RN உடனான ஒரு கூட்டணியை ஆதரிக்கும் பிளவுபட்ட வலதுசாரி குடியரசுக் கட்சியின் (LR) பிரிவால் கணக்கிடப்படுகின்றன.

போலி இடதுகளான அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி, சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் கூட்டணியான புதிய மக்கள் முன்னணி (NFP) 27 முதல் 29 சதவீத வாக்குகளுடன் மிகவும் பின்தங்கி இருக்கிறது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் தேர்தல் கூட்டணியான Ensemble கட்சி 20 சதவீதத்துடன் மிகவும் பின்தங்கியுள்ளது.

இது பாராளுமன்றத்தில் இடங்களின் பங்கீட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது ஜூலை 7 அன்று நடைபெறும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் மட்டுமே தீர்மானிக்கப்படும். முதல் சுற்றில் குறைந்தபட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலதிக உடன்பாடுகள் சாத்தியம் என்பதால், சரியான முடிவை கணிப்பது கடினம். பெரும்பாலான கணிப்புகள் RN சுமார் 250 இடங்களுடன் வலுவான நாடாளுமன்ற குழுவாக மாறும் என்று அனுமானிக்கின்றன. ஆனால் 289 இடங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவாக இருக்கும்.

WSWS ஏற்கனவே கடந்த வாரம் புதிய மக்கள் முன்னணி, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பொறி என்று எச்சரித்துள்ளது. மக்ரோன் அழைப்பு விடுத்துள்ள புதிய தேர்தல்களின் நோக்கம், '[ரஷ்யாவுக்கு எதிரான] போரின் ஒரு பாரிய தீவிரப்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் வாஷிங்டனில் ஜூலை 9 நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக உத்தியோகபூர்வ அரசியலில் ஒரு அதிவலது மறுசீரமைப்பை நடத்துவதே' ஆகும். புதிய மக்கள் முன்னணி ஒரு எதிர்ப்பாளர் அல்ல, மாறாக 'அரசியல் ஸ்தாபகத்தின் வலதுசாரி மறுஒழுங்கமைப்பில் ஒரு முழு பங்கேற்பாளர். … அது எந்த குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தங்களையும் முன்மொழியவில்லை என்பதோடு, ரஷ்யாவுடனான நேட்டோவின் போருக்கு ஆக்ரோஷமாக ஆதரவை சமிக்ஞை செய்கிறது.'

தேர்தல் பிரச்சாரத்தின் போக்கு இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. புதிய மக்கள் முன்னணியானது அது தேர்தலில் வெற்றி பெற்றால் மிகத் தீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கூட ஆதரிப்பதற்கான அதன் விருப்பத்தை இடைவிடாமல் உறுதிப்படுத்தி வருவது மட்டும் இல்லாமல், அதன் அணிகளில் உள்ள மிகவும் பிற்போக்கான சக்திகளால் முன்னோக்கி உந்தப்படுவதையும் அது அனுமதிக்கிறது.

2022 ஜனாதிபதித் தேர்தலில் அண்மித்து 8 மில்லியன் வாக்குகளைப் பெற்றவரும், 22 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் சுற்றில் மயிரிழையில் தோல்வியடைந்தவருமான அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் தலைவரான ஜோன்-லூக் மெலோன்சோன், 'வலதுக்கு எதிரான ஐக்கியம்' என்ற பெயரில் பிரான்சில் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் வெறுக்கப்படும் அரசியல்வாதிகள் சிலருடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ஜூன் 9 அன்று நடைபெற்ற ஐரோப்பியத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் (PS) முன்னணி வேட்பாளரும் புதிய மக்கள் முன்னணியின் சிற்பிகளில் ஒருவருமான ரஃபேல் குளுக்ஸ்மான், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை ஆதரிக்கிறார் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரின் முன்னோடிகளில் ஒருவராவார். பல ஆண்டுகள் ஜோர்ஜியாவிலும் உக்ரேனிலும் வாழ்ந்த அவர், சர்ச்சைக்குரிய, மேற்கு சார்புடைய ஜோர்ஜிய ஜனாதிபதி மிகைல் சாகேஷ்விலிக்கு ஆலோசகராக பணியாற்றினார். அவர் ஜோர்ஜியாவின் நீதித்துறை அமைச்சராகவும், 2014 இல் மேற்கத்திய சார்பு ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் உக்ரேனின் துணை உள்துறை அமைச்சராகவும் இருந்த எகா ஜௌலாட்ஜே என்பவரை திருமணம் செய்துள்ளார்.

2012 முதல் 2017 வரை பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்தஹாலண்ட், சோசலிஸ்ட் கட்சி (PS) சார்பில் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்திற்கு போட்டியிடுகிறார். ஹாலண்ட் பதவியில் இருந்த காலம் தொழிலாள வர்க்கத்தின் மீதான கடுமையான தாக்குதல்களால் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது. பிரான்சில் வசித்து வந்த ரோமாக்களை கிழக்கு ஐரோப்பாவிற்கு நாடு கடத்திய அவர், மாலியில் பிற்போக்குத்தனமான போரைத் தொடங்கி, இரண்டாண்டு கால அவசரகால நிலையைத் திணித்து, ஒரு பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்தை நிறைவேற்றினார். இதற்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர். இறுதியில், அவர் மிகவும் செல்வாக்கிழந்தார். அவர் இரண்டாவது பதவிக்காலத்திற்கு போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்தார்.

பிரான்சுவா ஹாலண்ட், அவருக்குப் பின்பு வந்த 'பணக்காரர்களின் ஜனாதிபதி' இமானுவல் மக்ரோனின் அரசியல் வழிகாட்டியாகவும் இருக்கிறார். ஹாலண்ட், அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அவர் ஒரு சுயாதீன முதலீட்டு வங்கியாளரான மக்ரோனை ஜனாதிபதி பதவிக்கு ஆலோசகராகவும் துணைச் செயலாளராகவும் கொண்டு வந்தார். அதன் பின்னர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்தார்.

ஹாலண்ட் மற்றும் மக்கள் முன்னணியின் மற்ற வலதுசாரி உறுப்பினர்கள் இப்போது முதன்மையாக தாங்கள் முறையாக கூட்டணி வைத்துள்ள மெலன்சோனுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மெலோன்சோனை வாயை மூடுமாறு ஹாலண்ட் பகிரங்கமாக அழைப்புவிடுத்துள்ளார். 'அவர் புதிய மக்கள் முன்னணிக்கு உதவ விரும்பினால், அவர் ஒதுங்கி நின்று வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்' என்று ஹாலண்ட் ஒரு தேர்தல் நிகழ்வில் கூறினார்.

சோசலிஸ்ட் கட்சியின் (PS) முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் மெலோன்சோன் ஒரு தீர்வு அல்ல என்று அறிவித்தார். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தலைவரான ஃபாபியன் ரூசெல் 'ஜோன்-லூக் மெலோன்சோன் புதிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலப்பரப்பின் பாகமாக இல்லை' என்று கூறினார். மெலோன்சோன் ஒருபோதும் பிரதம மந்திரியாக ஆக மாட்டார் என்று பசுமைக் கட்சித் தலைவர் மரின் டோன்டேலியர் அறிவித்தார்.

இத்தகைய தாக்குதல்களுக்கு மெலோன்சோன் அவரது சொந்த கொள்கைகளுக்காக தொடர்ந்து மன்னிப்பு கேட்பதன் மூலமாகவும், அவர்தான் அவர்களுக்கு வாக்குகளைக் கொண்டு வந்து அவர்கள் பதவிக்குத் திரும்புவதற்கு பாதை அமைக்க வேண்டும் என்றும் அவரது கூட்டாளிகளிடம் மன்றாடுவதன் மூலமாக விடையிறுக்கிறார். திங்களன்று France2 தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பிய பேட்டி ஒன்றில் இது குறிப்பிடத்தக்க வகையில் தெளிவாகக் காட்டப்பட்டது.

அரசாங்கத்தின் தலைவர் பதவிக்கு அவர் கோரவில்லை என்பதை மெலோன்சோன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அழைக்கப்பட்டால் அவ்வாறு செய்ய அவர் தயாராக இருக்கிறார், 'ஆனால் நான் என்னை திணிக்க மாட்டேன்' என்று அவர் சுட்டிக்காட்டினார். இறுதியாக, அவர் இரண்டு முறை வலியுறுத்தினார்: 'நான் எதற்காகவும் போட்டியிடும் வேட்பாளர் அல்ல.' சோசலிஸ்ட் கட்சிக்குள்ளாக (PS) இருக்கும் அவரது விமர்சகர்களையும் அவர் இவ்வாறு எச்சரித்தார்: 'மெலோன்சோன் தொழிலாள வர்க்கப் பகுதிகளில் கதவுகளைத் திறக்கும் ஒரு மனிதராவார். ஹாலண்ட் மக்களை நெருக்கமாக்குகிற ஒரு மனிதர்.' புதிய மக்கள் முன்னணிக்கு அவர் 'ஒரு துருப்புச் சீட்டாக' இருப்பதையும் மெலோன்சோன் சேர்த்துக் கொண்டார்.

சோசலிஸ்ட் கட்சியின் (PS) முற்றிலும் மதிப்பிழந்த அரசியல்வாதிகளை ஊக்குவிப்பதே தனது பணியாக அவர் காண்கிறார் என்பதை மெலோன்சோனால் இதைவிட தெளிவுபடுத்த முடியவில்லை.

அதேநேரத்தில், RN தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அரசாங்கத்தை அமைத்தால், அதற்கு எதிரான எந்தவொரு அணிதிரள்வையும் அவர் நிராகரிக்கப் போவதாகவும் மெலோன்சோன் தெளிவுபடுத்தினார். தீவிர இடது அல்லது வலது தேர்ந்தெடுக்கப்படுவது 'உள்நாட்டுப் போருக்கு' வழிவகுக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் முன்னதாக ஒரு போட்காஸ்டில் (podcast) எச்சரித்திருந்தார். தேர்தல் அவர் விரும்பியபடி நடக்கவில்லை என்றால் அவசரகால நிலையை பிரகடனம் செய்து எதேச்சதிகார ஆட்சியை ஸ்தாபிக்க மக்ரோன் பரிசீலித்து வருகிறார் என்பது கடந்த வாரம் ஏற்கனவே அறியப்பட்டிருந்தது.

RN தலைவர் ஜோர்டான் பார்டெல்லாவின் கீழ் மக்ரோன் ஒரு அரசாங்கத்தை நியமித்தால் அவர் விசுவாசமான எதிர்க்கட்சியின் பாத்திரம் வகிக்க இருப்பதாக மெலோன்சோன் இப்போது உறுதியளித்துள்ளார். RN பெரும்பான்மையை வென்று அரசாங்கத்தை அமைத்தால் 'வாக்குச் சாவடிகளின் தீர்ப்பை' அவர் மதிப்பாரா என்று கேட்கப்பட்டதற்கு, 'வரையறையின்படி, ஆம்' என்று அவர் பதிலளித்தார். பிரெஞ்சு முதலாளித்துவ குடியரசையும் அதன் 'அடிப்படைக் கோட்பாடுகளையும்' RN மதிக்கிறதை உறுதிப்படுத்துவதே அவரது பாத்திரமாக இருக்கும் என்று மெலோன்சோன் வாதிட்டார்.

மெலோன்சோன் அவரது வலதுசாரி கூட்டாளிகளுக்கு அடிபணிந்து நிற்பதும் RN அரசாங்கத்தின் கீழ் ஒரு விசுவாசமான எதிர்க்கட்சியாக சேவையாற்ற அவர் விருப்பம் கொண்டிருப்பதும் ஒரு தவறான புரிதல் அல்ல. சில சமயங்களில் தீவிரமான நடத்தை கொண்டவராக இருந்தாலும், அவரே ஒரு முழுமையான முதலாளித்துவ அரசியல்வாதிதான். பல ஆண்டுகள் முதலாளித்துவ சார்பு சோசலிஸ்ட் கட்சியின் (PS) உறுப்பினராக இருந்த அவர், லியோனல் ஜோஸ்பனின் கீழ் அமைச்சராகவும் கூட பணியாற்றினார். கடந்த காலத்தில், அவர் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் ஜனாதிபதி லு பென் இருவரின் கீழும் பிரதம மந்திரியாக வருவதற்கான தனது விருப்பத்தை கூட அறிவித்தார்.

தெளிவற்ற ஜனரஞ்சகவாதத்திற்கு ஆதரவான வர்க்கப் போராட்டத்தை அவர் வெளிப்படையாக நிராகரிக்கிறார். அவரது சமூகக் கொள்கை செல்வந்தர்களுக்கான குறைந்தபட்ச வரி அதிகரிப்புகளுக்கு அப்பால் செல்லவில்லை. முதலாளித்துவத் தனிச் சொத்துடைமையை அவர் தொடுவதில்லை.

புதிய மக்கள் முன்னணியின் கொள்கையானது RN இன் எழுச்சியைத் தடுக்கவில்லை, மாறாக அதற்கு சாதகமாக உள்ளது. அதி தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல் பற்றிய பிரச்சினை தேர்தல் தந்திரோபாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக வர்க்கப் போராட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். மற்றய நாடுகளில் RN மற்றும் அதேபோன்ற கட்சிகளின் எழுச்சியானது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் வலதை நோக்கிய திருப்பத்தின் கூர்மையான வெளிப்பாடு மட்டுமே ஆகும். அவர்களுடைய போர், இராணுவவாதம் மற்றும் சமூக வெட்டுக் கொள்கைகள் ஜனநாயகத்துடன் இயைந்து இருக்க முடியாது.

போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு இயக்கம் கீழிருந்து தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம்தான் கட்டியெழுப்ப முடியும். அதுபோன்றவொரு இயக்கத்தின் பணியானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மீதோ, மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி மீதோ, அல்லது ஏனைய ஸ்தாபக கட்சிகளோ அவற்றின் கொள்கைகளை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பது அல்ல. அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.

ஒரு சுயாதீனமான இயக்கமானது முதலாளித்துவத்தை அகற்றி, ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவி, சமூகத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்க போராட வேண்டும். நிதி மூலதனம் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை உடைக்காமல், எந்தவொரு பிரச்சினையும் கூட தீர்க்கப்பட முடியாது. அதுபோன்றவொரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை சர்வதேச அளவில் புதிய கட்சிகளை கட்டியெழுப்புவதன் பாகமாக பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l'égalité socialiste-PES)  கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading