இலங்கை ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களின் கோபத்தை கலைப்பதற்கு சம்பள உயர்வை அறிவித்தார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 1 அன்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக (5.72 டொலர்) அதிகரித்துள்ளதாக, அறிவித்தார். எனினும் பெருந்தோட்டக் கம்பனிகள் இதுவரை இந்த சம்பள உயர்வை வழங்கவில்லை.

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசினால் (இ.தொ.கா.) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தினக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அதிகரிப்பை அறிவித்தார்.

கொட்டகலையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 2024 மே தினக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது. [Photo: Sri Lankan President Media Unit]

அதற்கு முதல் நாள், அரசாங்க வர்த்தமானியை வெளியிட்டு, தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு விக்கிரமசிங்க விடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு ஒரு மோசடியாகும். இ.தொ.கா தலைவரும் தற்போதைய பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் ஊடகங்களும், இந்த அதிகரிப்பு பாரியளவிலான 70 வீத சம்பள உயர்வு என பொய்யாகப் பிரகடனப்படுத்தினர்.

எவ்வாறாயினும், 1,700 ரூபாய் நாளாந்த சம்பளமானது 1,350 ரூபாய் தினசரி ஊதியம் மற்றும் 350 ரூபாய் “நாளாந்த வரவு-செலவு திட்டம் சார்ந்த நிவாரணத் தொகை” அல்லது நாளாந்த விசேட கொடுப்பனவு அடங்கியதாகும் என்று வர்த்தமானி அறிவித்தல் தெளிவுபடுத்துகிறது.

தோட்ட நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தினசரி இலக்குகளை விட, தொழிலாளர்கள் அதிக தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து அல்லது கூடுதல் இறப்பர் பாலை சேகரித்தால் மேலும் 80 ரூபாய் வழங்கப்படும். இந்த இலக்குகள் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், தற்போது தேயிலை தொழிலாளர்கள் நாளொன்றுக்கு குறைந்தது 18 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறிக்க வேண்டியுள்ளது. இது மிகவும் கடினமான தொகையாகும். அவர்கள் இந்த இலக்கை அடையவில்லை என்றால் அவர்களின் சம்பளம் வெட்டப்படும்.

“நாளாந்த வரவு-செலவு திட்ட நிவாரண உதவித்தொகை” அல்லது “நாளாந்த விசேட கொடுப்பனவு” யார் கொடுப்பார்கள் என்று வர்த்தமானி கூறவில்லை. இந்த தொகைகள் வழங்கப்பட்டாலும், ஓய்வூதிய நிதியை கணக்கிடும்போது உத்தேச 1,350 ரூபாய் நாளாந்த சம்பளமே உண்மையான சம்பளமாக கருதப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, வர்த்தமானியில், “முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், 15 மே 2024 அன்று மதியம் 12.00 மணி வரை என்னால் [ தொழில் ஆணையாளர்] ஏற்றுக்கொள்ளப்படும்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு (RPC) இந்த அதிகரிப்பை எதிர்ப்பதற்கான தெளிவான அழைப்பாகும். கம்பனிகள் தாக்கல் செய்யும் ஆட்சேபனைகள் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படும் வரை சம்பள உயர்வு இருக்காது.

தனது அறிவிப்பை வெளியிட்டு, விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர்கள் மீது கரிசனை இருப்பதாக காட்டிக் கொண்டார். “கடினமான காலங்களில் அதிக கஷ்டப்பட்டவர்கள் மலையக மக்களே. மலையக மக்களே தேயிலை உற்பத்தியில் கடுமையாக உழைத்து அன்னியச் செலாவணியை உறுதி செய்தவர்கள்” என அவர் பிரகடனப்படுத்தினார்.

தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை விக்கிரமசிங்க திடீரென கண்டுபிடித்திருப்பது நகைப்பிற்குரியது. அரசாங்க அமைச்சராகவும் மற்றும் பல முன்னைய ஆட்சிகளில் பிரதமராகவும் இருந்துள்ள அவர். எதிர்கட்சி சகாக்களைப் போலவே, இந்த தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதே நேரத்தில் தோட்டங்களின் இலாபங்களை அதிகரிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார்.

அவர்கள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான சமூகப் படுகுழியில் இருந்து அவர்களை மீட்பது ஒருபுறம் இருக்க, விக்கிரமசிங்கவின் சம்பள உயர்வு எனப்படுவது, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைச் செலவிலான பிரமாண்ட அதிகரிப்பை சமாளிக்க கொஞ்சமும் போதாது.

2019 ஆம் ஆண்டு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்கள் கடுமையான வறுமை, வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வீடு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சரியான அடிப்படை சமூக வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்த 2023 ஆம் ஆண்டு குடும்ப ஆய்வின்படியும், இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்தின்படியும், பெருந்தோட்டத் துறை மக்களின் வீட்டுச் செலவுக்கான செலவு கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் 90.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் 2023 அறிக்கையானது தோட்ட மக்களிடையே ஒட்டுமொத்த இரத்த சோகை தற்போது 14.3 வீதமாக காணப்படுவதாக கண்டுள்ளது. 6 முதல் 59 மாதங்களுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு 40.3 சதவீதமாக உள்ளதுடன், 33.1 சதவீதம் பேர் வளர்ச்சி குறைந்தவர்களாக மற்றும் 30.2 சதவீதம் பேர் எடை குறைந்தவர்களாக உள்ளனர். மேலும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கட்டப்பட்ட 10x10 அடி (3x3 மீட்டர்) வரிசையான லைன் அறைகளிலே வாழ்கின்றனர்.

விக்கிரமசிங்கவின் சம்பள அதிகரிப்பின் உண்மையான நோக்கம், அவரது அரசாங்கத்திற்கும் மற்றும் அனைத்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் அதிகரித்து வரும் அரசாங்க-விரோத கோபத்தை தணிப்பதாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக சமிக்ஞை செய்துள்ள விக்கிரமசிங்க, தொழிற்சங்கங்கள் குறிப்பாக இ.தொ.காவின் உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை தோட்ட உரிமையாளரின் சங்கம் (PA) மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் (EFC) உடனடியாக அரசாங்கத்தின் சம்பள முன்மொழிவை நிராகரித்ததுடன், அது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் என்றும், தேவைப்பட்டால், அதைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தது. தோட்ட முகாமையாளர்களின் ஊடக அறிக்கையானது, “அரசாங்க அதிகாரிகளின் அறிவித்தல் மற்றும் ஊடகத் தகவல்களின் தொனியும், ஏமாற்றம், அவமதிப்பு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் வகையில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்வது மிகவும் கவலை அளிக்கிறது” என்று கூறியது.

இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான் சக்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 நாளாந்த சம்பளம் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது, தோட்டக் கம்பனிகள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். இல்லை என்றால் அரசு அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும் இதேபோன்ற போலி அச்சுறுத்தலை விடுத்தார்: “ஒன்று அவர்கள் அதைச் செய்வார்கள் அல்லது நாங்கள் பிராந்திய தோட்டக் கம்பனிகளை திரும்பப் பெறுவோம்” என அவர் கூறினார்.

மார்ச் மாதத்தில், அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு இரண்டு எதிர் முறைமைகளை தோட்ட உரிமையாளர் சங்கம் முன்வைத்தது. முதலாவதாக தொழிலாளர்களின் வருகையுடன் பிணைக்கப்பட்ட 1,200 ரூபாய் நாளாந்த சம்பளம். கம்பனி விதித்துள்ள வருகை விதியை தொழிலாளர்கள் கடைபிடிக்கத் தவறினால், அவர்களுக்கு 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும். இரண்டாவது முன்மொழிவு 1,300 ரூபாய் நாளாந்த சம்பளம், ஆனால் வேலைச்சுமை அதகரிக்கப்பட்டு பறிக்கவேண்டிய கொழுந்தின் அளவு 20 கிலோகிராமாக அதிகரிக்கப்படும். தற்போதைய 18 கிலோ தேயிலைக் கொழுந்தை விட இரண்டு கிலோ அதிகமாகும். ஒரு தொழிலாளி 20 கிலோவுக்கு மேல் பறித்தால் கிலோவுக்கு 65 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.

ஏப்ரல் 5 ஆம் திகதி கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் ஆர்ப்பாட்டத்தின் போது தோட்டத் தொழிலாளர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

2021 ஏப்ரலில், ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷவின் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 1,000 ரூபா நாட் சம்பளத்தை அறிவித்தது. தோட்ட முதலாளிமார் சங்கம் ஆரம்பத்தில் அதனை நிராகரித்தது நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டது, இருப்பினும், அதிக நாட் சம்பளத்தை வழங்குவதைத் தவிர்ப்பதற்காக, தினசரி உற்பத்தி இலக்குகளை அதிகரிப்பது உட்பட பல்வேறு முறைகளை அது திணித்தது.

இ.தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட ஏனைய அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும் விக்கிரமசிங்கவின் புதிய சம்பள முன்மொழிவை அங்கீகரித்துள்ளன. LJEWU தவிர இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. எவ்வாறாயினும், தோட்டங்களில் இந்தச் சங்கத்துக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லாத அதே நேரம் எப்போதும் ஏனைய தொழிற்சங்கங்களின் கம்பனி சார்பு சம்பளக் கொள்கையுடன் உடன்படுகின்றது.

ஒரு தசாப்த காலமாக பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தித்திறன் அடிப்படையிலான வருமானப் பங்கீட்டு முறையை (RSM) சுமத்த முயன்றன. இதன் கீழ் சுமார் 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட தேயிலை செடிகள் ஒரு தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பராமரிக்கவும் அறுவடை செய்யவும் ஒதுக்கப்படுகின்றன. இந்த முறைமையின் கீழ் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் உட்பட தொழிலாளர்களின் அடிப்படை சமூக உரிமைகள் அகற்றப்படுகின்றன. தேயிலைக் கொழுந்துகளைப் பறித்த பின் கம்பனிகள் தங்கள் செலவுகள் மற்றும் இலாபத்தை கழித்த பிறகு வருமானத்தில் ஒரு பகுதியை மட்டுமே தொழிலாளர்களுக்கு கொடுக்கின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் இந்த சுரண்டல், செலவுக் குறைப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்ட பல தோட்டங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் அதே வேளை, பிராந்திய தோட்டக் கம்பனிகள், அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்த பிற்போக்கு முறைமையை திணிக்க கூட்டாக தொடர்ந்து செயல்படுகின்றன. கென்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் போட்டியிடுவதற்காக, அதிக உற்பத்தியைக் கோரும் அதே நேரம், இலங்கையில் “உழைப்புச் செலவுகள் அதிகம்” என கம்பனிகள் தொடர்ந்து புகார் செய்கின்றன.

மே 2, செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் ப. திகாம்பரம், நாட் சம்பள முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தோட்டங்களின் சில பகுதிகள் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “ஒரு கிலோ தேயிலைக்கு 100 ரூபாய் செலுத்துவது இந்தப் பிரச்சனையை தீர்க்க ஒரு சிறந்த வழியாகும்” என்று அவர் அறிவித்தார்.

கன்னியமான சம்பளம் மற்றும் அவர்களின் அடிப்படை சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை நம்பியிருக்க முடியாது, மாறாக இந்த போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தம், அரசாங்கம், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் திணிக்கப்படும் சம்பள ஒப்பந்தத்தை நிராகரிப்பது, மருத்துவ விடுமுறை மற்றும் ஒழுக்கமான வீடுகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை உட்பட வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப கன்னியமான மாத சம்பளத்திற்கான அவர்களின் சொந்த சுயாதீனமான கோரிக்கையை முன்னெடுப்பதாகும்.

இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைக்க, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாகவும், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் ஏனய தொழிலாளர்களுடன் ஐக்கியமாகவும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு தோட்டத்திலும் அமைக்க வேண்டும்.

சர்வதேச அளவில் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதுடன் பெருந்தோட்டங்கள், வங்கிகள் மற்றும் பிற முதலாளித்துவ பெருநிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கீழ் தேசியமயமாக்குதல் உட்பட சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டத்தின் அடிப்படையில், அத்தகைய போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.


Loading