ரெமால் சூறாவளி இலங்கையைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு முப்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் கடந்த வாரத்தில் புயலுடன் கூடிய பருவ மழையால் வெள்ளம் பாய்ந்ததோடு நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பாதிக்கப்ட்டுள்ளதுடன் குறைந்தது 30 பேர் பலியாகினர். நாடளாவிய ரீதியில் தொடரும் மழை குறித்து மேலும் எச்சரிக்கை விடுத்துள்ள அரச அதிகாரிகள், மறு அறிவித்தல் வரை மீனவர்களை படகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

1 ஜூன் 2024 அன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவெல்லவில் புவக்பிட்டியவில் வெள்ளத்தால் மூழ்கிய பிரதான வீதி மற்றும் கடைகள் [Photo by Kavidas]

மே மாதத்தின் நடுப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தொடங்கிய ரெமால் சூறாவளி, பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களைத் தாக்கியது.

66,900 குடும்பங்களைச் சேர்ந்த 253,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) நேற்று காலை தெரிவித்துள்ளது. 40க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 21 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் மரணித்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் தெற்கில் காலி, மாத்தறை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் களு கங்கை, கின் கங்கை, நில்வலா மற்றும் களனி கங்கை உட்பட பிரதான நதிகள் பெருக்கெடுத்தன. இந்த ஆறுகள் மற்றும் அதை ஒட்டிய வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கின.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின்படி, வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மீண்டும் மீண்டும் மின் தடைகள் மேலும் பதிவாகியுள்ளன. பாலங்கள் இடிந்து விழுந்ததால், நாட்டின் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து பகுதியளவில் அல்லது முழுமையாக நிறுத்தப்பட்டது.

3 ஜூன் 2024 அன்று இலங்கையின் அகுரஸ்ஸ நகரில் நீரில் மூழ்கிய தெருக்கள். 

தென் மாகாணத்தில் ஏராளமான கிராமங்கள் மற்றும் நெல் வயல்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாடசாலைகள் மற்றும் கோவில்களில் உள்ள தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு மாத்தறை மாவட்டத்தில் ஜூன் 2 அன்று அக்குரஸ்ஸ நகருக்கு வருகை தந்த பாடசாலை மாணவி ஒருவர் நில்வலா ஆறு பெருக்கெடுத்து ஓடியதில் நீரில் மூழ்கி உயிரிழந்தமை பல சோகமான சம்பவங்களில் ஒன்றாகும். அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. மற்றொரு மாணவன் மரத்தைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

ஜூன் 3 அன்று மாலை, அதே மாவட்டத்தில் உள்ள பல்லேவெல என்ற தொலைதூர கிராமத்தில், ஒரு வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில், 20 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் காயமடைந்தார்.

ஜூன் 2 அன்று, கொழும்பில் இருந்து கிழக்கே 45 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அவிசாவளைக்கு அருகில் எல்ஸ்டன் தோட்டத்தில், அதிகாலையில் அருகிலுள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அவர்களது வீடு வெள்ளத்தில் மூழ்கியதில் 36 வயதுடைய பெண், அவரது மகள் மற்றும் தந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 

களனி ஆற்றின் வெள்ளப்பெருக்கு, கொழும்பு புறநகர் பகுதிகளான புவக்வத்தை, சிங்கபுர, எகொட கொலன்னாவ, வென்னவத்தை, சலவத்தை மற்றும் பிராந்தியாவத்தை போன்ற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது.

2024 ஜூன் 4 அன்று, கொழும்பு கொலன்னாவையில் மீதொட்டமுல்லவில் உள்ள வீடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக மாசடைந்த வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

செவ்வாய்கிழமை கொலன்னாவ மீதொட்டமுல்ல பகுதிக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) நிருபர்கள் சென்ற போது நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை தொடர்ந்து அரசு அதிகாரிகள் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

ஒரு தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் WSWS செய்தியாளர்களிடம் கூறியதாவது: '2016 இல், இந்தப் பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த பேரழிவுகளைத் தடுக்க அரசாங்கங்களுக்கு எந்த திட்டமும் இல்லாத காரணத்தால், இப்போது நாங்கள் மீண்டும் வெள்ளத்தை எதிர்கொள்கிறோம். வெள்ள அபாய செய்தி கேட்டவுடன் வேலையை நிறுத்திவிட்டு அவசரமாக வீட்டுக்கு வந்தேன். இந்த பேரழிவுகளின் சுமையை நாங்கள் எப்போதும் சுமக்கிறோம்.”

மூன்று குழந்தைகளின் தாய், சிறிய அளவிலான மழைக்கு கூட அருகில் உள்ள கால்வாயில் வெள்ளம் ஏற்பட்டு, சுற்றியுள்ள வீடுகளை மூழ்கடித்து விடுகிறது என்றார். “கொழும்பு மாநகரசபை கால்வாயை சுத்தம் செய்வதில்லை. இங்குள்ள மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள்,'' என அவர் தெரிவித்தார்.

“தண்ணீர் வடிந்தாலும் கழிவறைக் கழிவுகள் இப்பகுதியில் பல நாட்களாக இருக்கின்றது, மேலும் இது மிகவும் அசுத்தமான சூழலை உருவாக்குகிறது. குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை. நாங்கள் இரண்டு நாட்கள் பசியுடன் இருந்தோம், நேற்று [ஜூன் 3] மட்டுமே உணவு கிடைத்தது. அதுவும் எங்கள் ஐந்து பேருக்கு இரண்டு பார்சல்கள் மட்டுமே,” என்று அவர் கூறினார்.

அதே பகுதியில் வசிக்கும் திலின குமார, “அரசாங்கம் [முதலீட்டாளர்களுக்கு] இடங்களை விற்க மக்களை வெளியேற்றுகிறது. கொலன்னாவையில் உள்ள பெற்றோலியக் களஞ்சியசாலைக்கு குழாய் அமைப்பதற்கு இந்தப் பிரதேசம் தேவை எனக் கூறி மக்களை வெளியேற்றினர். சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டன, ஆனால் மற்றவர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளில் குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

3 ஜூன் 2024 அன்று இலங்கையின் அகுரஸ்ஸவில் சேதமடைந்த வீடுகள்

அரசு ஏற்பாடு செய்த நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வெள்ள நிவாரண உதவி வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் பொருள், தற்போது தங்கள் உறவினர்களுடன் தங்கியுள்ள வெள்ளத்தில் இருந்து தப்பிய பலருக்கு அரசு உதவி எதுவும் கிடைக்காது என்பதாகும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொடிய எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்துள்ளது. இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 24,815 டெங்கு நோயாளர்களுடன் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், “வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பிடும் செயல்முறையை முடித்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்” என்றும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த காலங்களில் இது போன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட போதும், போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை அல்லது எதுவும் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பகுதிகளில் “அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் பிரச்சினைகளை மதிப்பிடுவதற்காக” திங்கட்கிழமை “கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தை” மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஆடம்பரமாக வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பல நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் வாழும் கொலன்னாவைக்கு விக்கிரமசிங்கவின் விஜயத்தின் போது, ​​வெள்ளத்தில் தப்பியவர்கள் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

3 ஜூன் 2024 அன்று, இலங்கையின் அகுரஸ்ஸவில் ஒரு வீடு நிலச்சரிவினால் சேதமடைந்துள்ளது

தங்களுடைய வீடுகள் அசுத்தமான கறுப்பு நீரால் சூழப்பட்டிருப்பதாகவும், இரண்டு வாரங்களாக யாரும் தங்களைப் பார்க்கவில்லை என்றும் குடியிருப்பாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். அரசாங்க நிவாரணத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் 'மற்ற பிரச்சினைகளைத் தீர்க்க ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும்' என்று அவர் ஆணவத்துடன் பதிலளித்தார்.

களனி ஆற்றின் கரையோரத்தில் புதிதாக கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதை நிறுத்தவும், சட்ட விரோதமான நிர்மாணங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றவும், தற்போது நடைபெற்று வரும் மண் நிரப்பும் நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், வடிகால் அமைப்புகளை சீர்செய்து புனரமைக்கவும் அரச அதிகாரிகளுக்கு விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதேபோன்ற வெற்று வாக்குறுதிகள் கடந்த அரசாங்கங்களினாலும் வழங்கப்பட்டன.

வெள்ளத்தில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான சூழ்நிலையானது, பல தசாப்தங்களாக இலங்கை அரசாங்கங்கள் அடிப்படை உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மறுத்ததன் நேரடி விளைவாகும். அரசாங்க கணக்கெடுப்பின்படி, கொழும்பில் 87,000 வறுமையில் வாடும் குடும்பங்கள் வசிக்கும் 55,865 வீடுகளுடன் 1,360 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அடிப்படை வசதிகள் இல்லாத குடிசைகள் அல்லது சிறிய வீடுகள் ஆகும்.

கொலன்னாவ மீதொட்டமுல்ல பிரதேசத்தில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி, பாரிய குப்பை மலை சரிந்தது. இது ​​நாட்டின் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மிக மோசமான அனர்த்தங்களில் ஒன்றாகும். இந்த விபத்தில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதுடன், 146 வீடுகளை சேதமாகியதுடன் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட்டனர். 

உள்ளூர்வாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், அந்த இடம் கொழும்பு மாநகர சபையால் குப்பை மேடாக பயன்படுத்தப்பட்டது. எனினும், குப்பை கிடங்கிற்கு அருகில் வசிக்கின்றமைக்காக உள்ளூர்வாசிகளை அரசு அதிகாரிகளே குற்றம் சாட்ட முயன்றனர்.

மீதொட்டமுல்ல அனர்த்தம் இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகத்தில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தார். இந்த சமூகப் பேரழிவிற்குப் பதிலளித்த அரசாங்கம், பாதிக்கப்பட்ட குடும்பங்களை வேறொரு பகுதியில் உள்ள வசதியற்ற அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றியது. இந்த நிலங்களை, சொத்து உடைமையாளர்கள் மற்றும் பிற பெரிய வணிக முதலீட்டாளர்களுக்கு விற்பதற்காக தற்போதைய அரசாங்கம், இந்த மக்களை மீண்டும் இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய விக்கிரமசிங்க எடுத்த முடிவு, உயிர் பிழைத்தவர்கள் மீதான அனுதாபத்தினால் வந்தது அல்ல. மாறாக வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது பொதுப் பிம்பத்தை உயர்த்துவதற்கான அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

அவரது போலியான அக்கறை மற்றும் வெற்று வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 2021 இல் 13 சதவீதத்தில் இருந்து கடந்த ஆண்டு 26 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான இலங்கையர்கள் அவரது அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனக் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். தற்போதைய வெள்ளப் பேரழிவு ஏழைகள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான சமூக நிலைமைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Loading