இந்தியாவின் பிரதான தேர்தலில் தோல்விகளுக்குப் பிறகு மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க.யும் ஆட்சியை பற்றிக்கொண்டன

இந்த மொழிபெயரிப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம். 

பிரதமர் நரேந்திர மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியும் (பா.ஜ.க.) இந்தியாவின் பொதுத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த பின்னர் ஆட்சியை பற்றிக்கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய ஏழு கட்ட தேர்தல் செவ்வாய்கிழமை முடிவடைந்ததுடன், வாக்கு எண்ணுதல் இன்னும் பூரணமடையவில்லை. இருப்பினும், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க., 543 ஆசனங்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையை பெறுவதற்கு வெல்ல வேண்டிய 273 தொகுதிகளை விட 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு குறையும் என்பது உறுதி.

அதன் ஆட்சி தொடர்வது என்பது இப்போது அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பங்காளிகளை சார்ந்துள்ளது. பா.ஜ.க.-என்.டி.ஏ.யின் தேர்தல் முடிவுகள் 290 முதல் 296 தொகுதிகள் வரை இருக்கும். இது 2019ல் அவர்கள் கைப்பற்றிய 353 தொகுதிகளில் இருந்தும், மோடியும் அவரது பிரதான உதவியாளரான உள்துறைச் செயலாளர் அமித் ஷாவும் பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. 400 தொகுதிகளை வெல்லும் என்று பெருமையாகக் கூறியதற்கு வெகு தொலைவில் உள்ளது.

ஜூன் 4, 2024, செவ்வாய்க் கிழமை, இந்தியாவின் புது தில்லியில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தபோது ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டார். [AP Photo/Manish Swarup]

குறிப்பிடத்தக்க வகையில், என்.டி.ஏ.யின் இழப்புகள், பா.ஜ.க. தரப்பிலேயே பெருமளவில் குவிந்துள்ளன. 2019ஐ விட 2024 இல் என்.டி.ஏ.யின் மேலாதிக்க பங்காளி 60 தொகுதிகளை இழந்துள்ளது. இதற்கிடையில், பா.ஜ.க.யின் என்.டி.ஏ. பங்காளிகளிடையே இலாபமும் நட்டமும் விளைபயனுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சித் தேர்தல் கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி அல்லது இந்தியா, 230 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது.

வெகுஜன வேலையின்மை, நீண்டநாள் பட்டினி, எப்போதும் விரிவடைந்து வரும் செல்வம் மற்றும் வருமான சமத்துவமின்மை, முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை பா.ஜ.க. பழிவாங்கியமை மற்றும் அரசியல் எதிரிகள் மீதான அடக்குமுறை போன்றவை சம்பந்தமான மக்களின் கோபத்திற்கு திட்டமிட்ட முறையில் முற்றிலும் வாய்ச்சவடாலாக வேண்டுகோள் விடுத்தது.

இந்தியப் பிரதமர்களின் மகன், பேரன் மற்றும் கொள்ளுப் பேரனான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் மற்றும் ஆசியாவின் பணக்கார மற்றும் இரண்டாவது பணக்கார கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோருடன் மோடி கொண்டுள்ள “நெருங்கிய முதலாளித்துவ” உறவுகளுக்காக அவரை மீண்டும் மீண்டும் தாக்கினார்.

30 க்கும் மேற்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு ஆட்டங்கண்ட கூட்டணியான இந்தியாவானது, மோடி மற்றும் தீவிர வலதுசாரி பா.ஜ.க.க்கு மாற்றாக ஒரு வலதுசாரி அரசாங்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மோடி ஆட்சியை விட எந்த வகையிலும் குறைவில்லாமல் பெருவணிகத்திற்கும், அது போலவே, முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தம்” மூலம் தொழிலாளர் சுரண்டலை அதிகரிப்பதற்கும் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிக்கல்லாக இருக்கும் சீன-விரோத இந்திய-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டாண்மைக்கும் அர்ப்பணித்துக்கொள்ள உறுதிபூண்டுள்ளது.

சமீப காலம் வரை முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்த காங்கிரஸின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருபதுக்கும் மேற்பட்ட இன-பிராந்திய மற்றும் சாதியவாதக் கட்சிகள் உள்ளன. அவற்றில் பல, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாசிசவாத சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவைப் போல முந்தைய பா.ஜ.க. பங்காளிகள் ஆகும். இதில் இரண்டு ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகள், அவற்றின் இடது முன்னணி கூட்டாளிகள், மாவோயிஸ்ட் சி.பி.ஐ. (எம்-எல்) ஆகியவையும் அடங்கும்.

அதன் அங்கத்தினரின் வலதுசாரி சாகசங்களை கருத்தில் கொண்டால், பா.ஜ.க.க்கு “முற்போக்கான,” மதச்சார்பற்ற மற்றும் “மக்கள் சார்பு” மாற்றீடாக இருப்பதாக கூறும் இந்தியாவின் கூற்றுக்கள், குறைந்தபட்சபேனும் நம்பத்தகுந்தவை அல்ல. சந்தேகத்திற்கு இடமின்றி பலர் அதை அவ்வாறே பார்க்கின்றனர். இருந்தபோதிலும், இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களில்ல பெருமளவிலானவர்கள், மோடி அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக அதை ஆதரித்த தாகத் தோன்றுகிறது. அத்துடன், மக்கள் ஆதரவின் அலையில் மோடியும் பா.ஜ.க.யும் ஒரு வரலாற்று வெற்றிக்கு உந்தித் தள்ளப்படுகிறார்கள் என்ற கூற்றுகளுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் பெருநிறுவன ஊடகங்களால் எக்காளமிடப்பட்ட ஒரு பிரமாண்டமான பிரச்சாரத்தை எதிர்கொண்ட நிலையிலேயே அவர்கள் இந்தியாவை ஆதரித்துள்ளனர். 

அதன் இந்தியா கூட்டாளிகளுக்கு மதிப்பளித்து, காங்கிரஸ் 80 தொகுதிகளுக்கும் குறைவாகவே போட்டியிட்டிருந்தாலும், காங்கிரஸின் வாக்குகள் 2019 இல் அதன் வரலாற்று வீழ்ச்சியான 19.5 சதவிகிதத்திலிருந்து 21.2 சதவிகிதம் வரை 1.7 சதவிகித த்தால் அதிகரித்துள்ளது. சமீபத்திய கணிப்புகளின்படி, 2014 இல் வென்றி 44 தொகுதிகளில் இருந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாகவும், 2019 இல் பெற்ற 52 தொகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகவும் அது 99 தொகுதிகளைக் கைப்பற்றும்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உளவுத்துறை மற்றும் பொலிஸ் முகமைகள் மற்றும் நீதித்துறையைப் பயன்படுத்தி எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பா.ஜ.க. அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், “அரசியலமைப்பைக் காப்பாற்ற” நாட்டு மக்கள் வாக்களித்ததாகக் கூறினார். “நாடு, திரு நரேந்திர மோடி மற்றும் திரு அமித் ஷா எங்களுக்கு வேண்டாம் என்று கூறியுள்ளது” என அவர் அறிவித்தார். பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்யலாமா என்பது குறித்து கலந்துரையாட இந்தியா தலைவர்கள் தலைநகர் புது தில்லியில் புதன்கிழமை கூடுவார்கள் என்றும் காந்தி அறிவித்தார்.

பிந்தைய அறிக்கை, தேர்தலுக்குப் பிந்தைய மிகைப்படுத்தலைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை நிரூபிக்க வாய்ப்புள்ளது. பா.ஜ.க., தேர்தலில் இரத்தக் காயங்களுடன் தப்பியுள்ளது.  மோடி பிரியமான “இந்து பலசாலி” மற்றும் “புனித மனிதர்” என்று அவரைச் சுற்றி அது கட்டமைத்துள்ள வழிபாட்டு முறை வெற்றி பெற்றுள்ளது. எவ்வாறெனினும், வெகுஜன எதிர்ப்புக்கு மத்தியில், இந்திய ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கப் பிரிவினரால் மோடியும் அவரது பா.ஜ.க.யும் மிகவும் இரக்கமற்றவர்களாகவும் அதனால் மேலும் சிக்கன நடவடிக்கைகளையும், தனியார்மயமாக்கலையும், தொழிலாளல் சட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது உட்பட பிற “முதலீட்டாளர்-சார்பு” சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஒரு சிறந்த கருவியாகவும், மற்றும் உலக அரங்கில் தங்களின் பெரும் வல்லரசு இலட்சியங்களை முன்நகர்த்தக் கூடியவர்களாகவும் தொடர்ந்தும் கருதப்படுகின்றனர்.

அவர்களில் சிலர், பா.ஜ.க.யின் “அதிகப்படியான செயல்களை” நினைத்து தங்கள் கைகளைப் பிசைந்துகொள்வதோடு அதன் இந்து மேலாதிக்கவாதம் எதிர்ப்பைத் தூண்டுவிடுவதோடு இந்திய அரச கட்டமைப்பை சீர்குலைக்கும் என்று கவலைப்படலாம். ஆனால், கீழிருந்து வரும் அச்சுறுத்தலையிட்டு பீதியடைந்துள்ள இந்திய முதலாளித்துவம், நீண்டகால வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான சமூக கோபத்தையும் விரக்தியையும் பிற்போக்கான பிளவுபடுத்தும் வழிகளில் திசைதிருப்பிவிடும் ஒரு வழிமுறையாக வகுப்புவாத மற்றும் சாதிய மோதல்களை தூண்டிவிடுவதை நீண்ட காலமாக முன்னெடுத்து வருகின்றது.

இந்திய-அமெரிக்க சீன-விரோத மூலோபாய கூட்டு

உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் நேட்டோ தூண்டிவிட்டுள்ள போர், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஏகாதிபத்திய ஆதரவுடன் கூடிய இஸ்ரேலிய இனப்படுகொலை, சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாயத் தாக்குதல் ஆகிய மூன்று பிரதான களமுனைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடங்கப்பட்டுள்ள உலகப் போர் பற்றி எந்த கலந்துரையாடலும் இல்லாமை இந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

இந்தப் போரில் குறிப்பாக சீனாவை மூலோபாய ரீதியாக சுற்றி வளைத்து அதன் எழுச்சியை பொருளாதார ரீதியாக முறியடிக்கும் உந்துதலைப் பொறுத்தவரை, வாஷிங்டனுக்கு இந்தியா தீர்க்கமான ஆதரவை வழங்கி வருகிறது. மோடியின் கீழ், இந்தியா, அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-மூலோபாய உறவுகளின் விரிவாக்க வலை மூலம், வாஷிங்டனுடன் எப்போதும் இறுக்கமாக பிணைக்கப்பட்ட ஒரு அமெரிக்க முன்னரங்க அரசாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய கப்பல்களை பழுதுபார்ப்பதற்கும், மறுவிநியோகம் செய்வதற்கும் இந்தியத் துறைமுகங்கள் இப்போது திறந்துவிடப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கை மறுசீரமைப்பதற்கான அமெரிக்காவின் திட்டத்தில் இந்தியாவும் ஆழமாக உட்படுத்தப்பட்டுள்ளது. இது I2U2 (இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) குழுவின் ஒரு பகுதியாகும். வாஷிங்டன் இந்தக் குழுவை போர், இராஜதந்திர சூழ்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் “மத்திய கிழக்கு பொருளாதார நுழைவாயிலாக” மாற்ற விரும்புகிறது. இதன் மூலம் அது பிராந்தியத்தில் ஈரானை பலவீனப்படுத்தவும், கீழ்ப்படுத்தவும் ரஷ்ய மற்றும் சீன செல்வாக்கை எதிர்கொள்வதற்கும் முனைகின்றது.

ரஷ்யாவுடனான அதன் மூலோபாய உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கைகளுக்கு புது தில்லி அடிபணியவில்லை என்றாலும், அது ரஷ்யாவின் ஆயுதங்கள் மீதான அதன் சார்புநிலையைக் குறைப்பதற்கு செயற்படுகின்ற மறுபக்கம், பூகோள ரீதியில் வாஷிங்டனுடனான அதன் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கின்றது. மிகவும் அடிப்படையில், இந்தோ-பசிபிக் அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு புது டெல்லி அளித்து வரும் ஆதரவு, எல்லா இடங்களிலும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலை முன்னெடுக்க பலப்படுத்துகிறது. கடந்த கோடையில், தாய்வான் சம்பந்தமாக அமெரிக்க-சீனா போர் நடந்தால், புது தில்லி எத்தகைய ஆதரவை வழங்கும் என்ற பென்டகனின் அவசர கோரிக்கைக்கு இந்திய இராணுவம் பதிலளிப்பதாக அறிவித்தது.

ஆயினும்கூட, இவை எதுவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக செயற்பாடாக தூக்கிப்பிடிக்கப்படும் தேர்தல் காலத்தில் எந்த விவாதத்திற்கும் உட்படுத்தப்படவில்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பற்றி ஏதாவது கலந்துரையாடல் இருந்திருந்தால், அது சீனா மீது “மிகவும் மென்மையாக” நடந்துகொள்வதாக மோடி மீது காங்கிரஸ் கட்சி நடத்திய தாக்குதல்களைச் சுற்றியதாகவே இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்தியாவும் சீனாவும் தங்கள் சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் இராணுவ விட்டுக்கொடுப்பற்ற நிலையில் இருந்த போது, மோடி அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை அங்கு நிலை நிறுத்தியிருந்த சூழலிலும், காங்கிரஸ் இந்த தாக்குதல்களை தொடுத்தது.

இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மை மற்றும் வளர்ந்து வரும் உலகப் போரில் இந்தியாவின் பங்கு பற்றிய மௌனமான சதிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, வாஷிங்டன் ஆக்கிரமிப்பு மற்றும் உலகப் போரின் மூலம் அதன் பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட தீவிர முயற்சியில் ஈடுபடும் நிலையில், இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் கட்சிகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்து விரிந்த செல்வாக்கில் தொங்கிக்கொண்டு இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றும் ஈவிரக்கமற்ற மூலோபாயத்திற்காக முன் நிற்கின்றன.

இரண்டாவதாக, இந்திய மக்கள் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு மறைந்திருப்பது பற்றி அவர்கள் விழிப்படைந்திருப்பதோடு, இந்தியா எந்த அளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய ஆட்சியாக மாற்றப்பட்டுள்ளது என்பதையும் அது பிராந்தியத்திலும் உலக பூராவும் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் பற்றிய நுண்ணறிவைப் பெறுமளவுக்கு தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதையிட்டும் பீதியடைந்தும் உள்ளது.

இவை அனைத்திலும் இங்கு இரட்டை ஸ்ராலினிசக் கட்சிகளும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் சிறிய, ஆனால் பழைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - மற்றும் மாவோயிஸ்ட் CPI (M-L) கட்சியும் குறிப்பாக தீங்கு விளைவிக்கும் பாத்திரம் வகிக்கின்றன. அவர்கள் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டணிக்கு எதிரானவர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களது இந்தியா பங்காளிகளை சங்கடப்படுத்தாமல் இருக்கவும், அதைவிட முக்கியமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இயக்குபவர்களுடனான கூட்டுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தலைதூக்கவிடாமல் இருக்கவும், அவர்கள் தங்கள் “எதிர்ப்பை” அவ்வப்போது வெளியிடும் ஊடக அறிக்கைகளுக்கு மட்டுப்படுத்துகிறார்கள். இதுபோன்ற காரணங்களுக்காக, ஸ்ராலினிஸ்டுகள் காசாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிராக கடந்த நவம்பரில் தாங்கள் தாமதமாக ஏற்பாடு செய்திருந்த போராட்டங்களை கைவிட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலக்கப்பட்ட மற்றொரு முக்கியமான விடயம், நடந்துகொண்டிருக்கும் COVID-19 தொற்றுநோய்க்கு “உயிருக்கு மேலாக இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும்” இந்தியாவின் அழிவுகரமான பிரதிபலிப்பாகும். அதிகாரப்பூர்வமாக இந்தியா சுமார் 533,000 கோவிட்-19 இறப்புகளை ஒப்புக்கொள்கின்ற போதிலும், அதிகப்படியான இறப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டவாறு, உண்மையான எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக உள்ளது. உழைக்கும் மக்களின் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதார அமைப்பின் பரிதாபகரமான நிலை குறித்த மோடி அரசாங்கத்தின் முழுமையான அலட்சியத்தை இந்த தொற்றுநோய் வெளிப்படுத்தியது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்தியாவின் இந்த தொற்றுநோய்க் கொள்கைக்கு முற்றிலும் உடந்தையாக இருப்பதால் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. அவை அரசாங்கத்தை அமைத்த மாநிலங்களில், வைரஸ் காட்டுத்தீ போல பரவியபோதும் வேலைக்குத் திரும்புமாறு மக்களை இழுத்துச் சென்றனர்.

மோடி அரசாங்கம்: அதிதீவிர நெருக்கடி நிறைந்த ஆட்சி

WSWS முன்பு குறிப்பிட்டது போல், ஏழு கட்ட தேர்தல்கள் வெளிவருகையில், பா.ஜ.க. அதன் முடிவைப் பற்றி அச்சமடைந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, பா.ஜ.க. பொருளாதார வளர்ச்சி பற்றிய தனது வாக்குறுதிகளையும், இந்தியாவின் “உலகை வெல்லும்” பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக அரங்கில் அதிகரித்து வரும் செல்வாக்கு பற்றிய கொண்டாட்ட அறிவிப்புகளையும் பெருமளவில் கைவிட்டது. மாறாக, அதன் தலைமைப் பிரச்சாரகர்களான, மோடி, ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மிகவும் பிற்போக்கான மற்றும் மோசமான வகுப்புவாத தூண்டுதல்களை இரட்டிப்பாக்கினர். எதிர்க் கட்சிகள் இந்தியா “தாய் மற்றும் மகள்களின்” செல்வத்தை அபகரித்து “ஊடுருவல்காரர்கள்”, “ஜிஹாதிகள்” மற்றும் “அதிக எண்ணிக்கையில் பிள்ளைகளைப்” பெற்றவர்களுக்கு வழங்குவதற்காக அது குற்றஞ்சாட்டியதும் இதில் அடங்கும் - இவை அனைத்தும் முஸ்லிம்களை சுட்டிக் காட்டும் வார்த்தைகள்.

இதனால் பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. பா.ஜ.க.யின் பாரம்பரிய மையமான வட இந்திய இந்தி பேசும் பகுதியில் பல மாநிலங்களில் அது குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்தது. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் மோடியின் ஆதரவாளரான இந்து மத சாமியாரும், முஸ்லிம்-விரோத வன்முறையைத் தூண்டியவராக குற்றம்சாட்டப்பட்டவருமான யோகி ஆதித்யநாத் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்யும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் குறிப்பாக இந்த இழப்பு உண்மையாக இருந்தது, உத்திரப்பிரதேசத்தில், பா.ஜ.க.-என்.டி.ஏ. 26 தொகுதிகளை இழந்து, அதன் வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட 10 சதவீத புள்ளிகளால் குறைந்துள்ளது.

பா.ஜ.க. மற்றும் அதன் ஆர்.எஸ்.எஸ். கூட்டாளிகள் அணிதிரட்டிய அடிப்படைவாத வெறியர்களால், 16 ஆம் நூற்றாண்டு பள்ளிவாசலான பாபர் மசூதி 30 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட இடத்தில், ஜனவரியில் புராண இந்துக் கடவுளான ராமருக்குக் கோயில் கட்டி திறந்து வைக்கப்பட்ட பைசாபாத்தின் (அயோத்தியின்) பா.ஜ.க. மக்களவை உறுப்பினரும் தோற்கடிக்கப்பட்டவர்களுள் அடங்குவார். ஜனவரியில், பா.ஜ.க.யின் மறுதேர்வுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கவும், “இந்து தேசமாக” இந்தியாவின் “மறுபிறப்பை” குறிக்கும் வகையிலும் தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சியின் ஒரு பகுதியாக மோடி கோயிலைத் திறந்து வைத்தார்.

இடது கட்சிகள் என்று அழைக்கப்படுபவை உட்பட, சம்பந்தப்பட்ட சக்திகளின் வலதுசாரித் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியத் தேர்தல்களால் பிரமாண்ட வெகுஜன கோபத்தைப் பற்றிய ஒரு வெளிறிய மற்றும் மிகவும் சிதைந்த அறிகுறியை மட்டுமே கொடுக்க முடிந்தாலும், அதுவும் பா.ஜ.க.க்கு எதிராகவும் உண்மையில் முழு இந்தியாவின் அழுகிப்போன முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கும் எதிராக தலைதூக்கும் கோபத்தை வெளிக்காட்டியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், வாகனத் தொழிலாளர்கள், மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்து ஆணைய (MSRTC) தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், அத்துடன் பெரிய விவசாயிகள் போராட்டங்கள் மற்றும் மீண்டும் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் போராட்டம் மற்றும் இரண்டு நாள் எதிர்ப்பு பொது வேலைநிறுத்தங்கள் உட்பட எண்ணற்ற கசப்பான தொழிலாள வர்க்கப் போராட்டங்களை இந்தியா கண்டுள்ளது. ஆனால் இந்தப் போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் திட்டமிட்ட முறையில் தனிமைப்படுத்தப்பட்டு, அரசியல் ரீதியாக வரையறுக்கப்பட்டதுடன் ஸ்ராலினிச சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ.யினாலும் பிஜேபி-விரோத வலதுசாரி முதலாளித்துவ எதிர்க் கட்சிக்குப் பின்னால் கட்டிவைக்கப்பட்டுள்ளன. 

மோடி அரசாங்கம் ஒரு தடுத்து நிறுத்த முடியாத சக்தியாக அன்றி, ஒரு அரசியல் மற்றும் சமூக எரிமலையின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு அதிதீவிர நெருக்கடி மிகுந்த ஆட்சி என்பதை தேர்தல்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.

ஆனால் வகுப்புவாத பிற்போக்கையும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. அரசாங்கத்தின் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான புதிய சுற்றுத் தாக்குதலையும் மற்றும் ஆளும் வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய போருக்கு இந்தியாவைப் பயன்படுத்துவதைத் தோற்கடிக்கவும், இந்திய முதலாளித்துவத்திற்கும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களை ஐக்கியப்படுத்தி அதன் சுயாதீன வர்க்க பலத்தை அணிதிரட்ட வேண்டும்.

ஸ்ராலினிச சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. மாவோயிஸ்டுகளும் அவர்களுடன் இணைந்த தொழிற்சங்கங்களும், மோடிக்கு எதிரான முதலாளித்துவ எதிர்க்கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ள அதிர்ஷ்டத்தை, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக இந்திய கூட்டணிக்குள் அடிபணியச் செய்ய பயன்படுத்த முயலும் அதே நேரம், வர்க்கப் போராட்டத்தை திட்டமிட்டு நசுக்கும். இந்த முயற்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் நிரந்தரப் புரட்சியின் ட்ரொட்ஸ்கிச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய பாதையை அபிவிருத்தி செய்ய வேண்டும். நிரந்தரப் புரட்சியே 1917 அக்டோபர் புரட்சியையும் மற்றும் அது ஸ்டாலினிச-தேசியவாதத்தால் சீரழிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தையும் உயிர்ப்பித்தது. ஸ்டாலினிச காட்டிக்கொடுப்பின் உச்சக் கட்டமாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதோடு அங்கு முதலாளித்துவம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.

தொழிலாள வர்க்கம் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் கிராமப்புற உழைப்பாளிகளை அதன் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு சோசலிசத்திற்கான உலகத் தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலை அபிவிருத்தி செய்ய வேண்டும். சமூக சமத்துவத்திற்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான போராட்டம், ஏகாதிபத்திய போருக்கும் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டணிக்கும் எதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட வேண்டும்.

Loading