முன்னோக்கு

தஞ்சம் கோரும் உரிமையை நீக்கும் ட்ரம்ப் பாணி நிர்வாக ஆணையை பைடென் வெளியிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க வரலாற்றில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான மிக நீண்டகால தாக்குதல்களில் ஒன்றாக, ஜனாதிபதி ஜோ பைடென் செவ்வாயன்று அமெரிக்காவில் தஞ்சம் கோரும் உரிமையை நடைமுறையளவில் ஒழிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி ஜோ பைடென் பிப்ரவரி 29, 2024 வியாழக்கிழமையன்று, டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லில் தெற்கு எல்லைக்கு விஜயம் செய்தபோது, உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் பார்த்துக் கொண்டிருக்கையில், கருத்துக்களை வழங்குகிறார். [AP Photo/Evan Vucci]

யூத இனப்படுகொலையைத் (Holocaust) தொடர்ந்து ஸ்தாபிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணாக, இந்தப் புதிய உத்தரவு, அந்நாட்டிற்குள் நுழைவதற்கான புலம்பெயர்ந்தோரின் முயற்சிகளில் ஒரு செங்குத்தான வீழ்ச்சி ஏற்படும் வரையில், அமெரிக்க-மெக்சிகோ எல்லை மற்றும் தெற்கு கடலோரங்கள் வழியாக அமெரிக்காவில் அகதிகள் தஞ்சம் கோருவதைத் தடுக்கிறது.

உள்நாட்டுத் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் கேத்தி ஹோச்சுல் (நியூயார்க்) மற்றும் மைக்கேல் லூஜன் கிரிஷாம் (நியூ மெக்சிகோ), அத்துடன் டெக்சாஸைச் சேர்ந்த மேயர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஷெரிஃப்கள் ஆகியோர் சூழ்ந்து நிற்கும்போது பைடென் பின்வருமாறு அறிவித்தார்:

எங்கள் தெற்கு எல்லையை சட்டவிரோதமாக கடக்கும் புலம்பெயர்ந்தோர் தஞ்சம் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை நான் அறிவிக்கிறேன். அவர்கள் நிறுவப்பட்ட சட்டபூர்வ வழிவகையின் மூலம் நுழைந்த பின்னர் அதை நாடாவிட்டால், புலம்பெயர்ந்தோர் எங்கள் தெற்கு எல்லையில் தஞ்சம் பெறுவதில் இருந்து தடுக்கப்படுவார்கள்.

“சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை எங்கள் அமைப்பு திறம்பட நிர்வகிக்கக்கூடிய மட்டத்திற்கு குறைக்கப்படும் வரை இந்த தடை நீடிக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

செவ்வாயன்று கையெழுத்திடப்பட்ட உத்தரவு, தினசரி “அங்கீகரிக்கப்படாத கடந்து செல்லுதல்கள்” 2,500 ஐ எட்டினால், “அவசரநிலையை” அறிவிக்க ஜனாதிபதியை அனுமதிக்கிறது. ஹிட்லர் மற்றும் நாசிக்களால் இழிவாகப் பாராட்டப்பட்ட 1924 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டத்திற்குப் பிறகு முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட கோட்டா முறையை நடைமுறைப்படுத்துவது, தற்போது உருவாக்கப்பட்ட உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று மூத்த நிர்வாக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினர்.

937 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற எம்.எஸ். செயின்ட் லூயிஸ் என்ற பயணிகள் கப்பல் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தால் 1924 சட்டத்தில் சேர்க்கப்பட்ட விதிகளின் கீழ் மியாமி துறைமுகத்திலிருந்து தடுக்கப்பட்ட நாளிலிருந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகு பைடென் தனது நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். தஞ்சம் மறுக்கப்பட்ட பின்னர், கப்பல் ஐரோப்பாவிற்குத் திரும்பியது மற்றும் அதன் நூற்றுக்கணக்கான பயணிகள் பின்னர் யூத இனப்படுகொலையில் (Holocaust) கொல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 2020 இல் பிரச்சாரம் செய்த பைடென், இப்போது அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “முஸ்லீம் தடையை” நிறுவ பயன்படுத்திய அதே ஜனாதிபதி அதிகாரத்தை (குடிவரவு மற்றும் தேசியச் சட்டத்தின் பிரிவு 212) பயன்படுத்துகிறார். பைடெனும் ஜனநாயகக் கட்சியும் “குறைந்த தீமை” என்பதற்கு வெகுதூரம் விலகி, ட்ரம்பின் பாசிசவாத புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை உத்தரவானது, எல்லையில் மேலும் இறப்பு மற்றும் இழப்புகளுக்கு இட்டுச் செல்லும் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. பைடெனின் உத்தரவு, அமெரிக்க ஏகாதிபத்திய போர்கள் மற்றும் பொருளாதார தடையாணைகளால் நாசமாக்கப்பட்ட நாடுகளில் இருந்து தப்பி வரும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் அமெரிக்காவில் பாதுகாப்பு தேடுவதிலிருந்து தடுப்பதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் இனவாத, வெளிநாட்டவர் விரோத பிரச்சாரத்தின் பாகமாகும்.

தஞ்சம் கோரும் உரிமை மீதான தாக்குதல் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். கடந்த இரண்டு மாதங்களாக, பைடென் காஸாவில் அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக வளாக தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் தாக்குதல்கள் மற்றும் பாரிய கைதுகளின் ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு தலைமை கொடுத்துள்ளார்.

குடியரசுக் கட்சி பாசிசவாதிகளுடன் இணைந்து, பைடென் பத்தாயிரக் கணக்கான யூத மாணவர்கள் பங்கெடுத்துள்ள பல்கலைக்கழக வளாக போராட்டங்களை “யூத-எதிர்ப்பு” என்று சாடியுள்ளார்—அதேவேளையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பாரிய படுகொலை, மருத்துவ சேவை அழிப்பு மற்றும் வலிந்து திணிக்கப்பட்ட பஞ்சம் ஆகியவற்றுக்கான தாக்குதலைப் பாதுகாத்தும் ஆயுதமளித்தும் வருகிறார். இதில் ஏற்கனவே சுமார் 45,000 பாலஸ்தீனர்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய பைடென், 95 பில்லியன் டாலர்கள் கூடுதல் இராணுவக் நிதிக் கோரிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்-விரோத தொகுப்பை ஏற்காததன் மூலம் எல்லையில் அவரது கையை பலவந்தப்படுத்தியதற்காக பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியினரை குற்றஞ்சாட்டினார்.

பூகோளப் போர் மசோதாவுக்கு ஆதரவைக் கோருகையில், பைடென் புலம்பெயர்ந்தோர்-விரோத மசோதாவை ஆதரிப்பதில் “என்னுடன் சேருமாறு” ட்ரம்பிடம் மன்றாடினார். அந்த மசோதாவில், எல்லையில் கெஸ்டாபோவுக்கான பில்லியன் கணக்கான டாலர்களுக்கு கூடுதலாக, பைடென் இப்போது நிர்வாக உத்தரவின் மூலம் தொடங்கியுள்ள தஞ்சம் கோருவோருக்கு எதிரான விதிகளும் உள்ளடங்கி இருந்தன.

ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக பைடென் கூறுவது ஒரு மோசடியாக மேலும் அம்பலமாகி வருகிறது. பைடெனையும் ஜனநாயகக் கட்சியையும் உந்துவது ஆளும் வர்க்க பூகோள போர்க் கொள்கையாகும், முதலும் முக்கியமுமாக ரஷ்யாவுக்கு எதிரான போரின் பொறுப்பற்ற விரிவாக்கம், இது ஒரு அணுஆயுத பிரளயத்தைத் தூண்ட அச்சுறுத்துகிறது. உலகப் போரின் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்காவிற்குள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான ஒரு முழுவீச்சிலான தாக்குதல் அவசியமாகும்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜோசப் கிஷோர் இந்த நடவடிக்கையை பின்வருமாறு அறிவித்தார்:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் ஆதரிக்கப்படும் ஒரு கொள்கை என்பதை பைடென் நிர்வாகம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது. பைடெனுக்கு எதிரான சோசலிச எதிர்ப்பை “தனிச்சலுகை பெற்றவை” என்று கண்டனம் செய்ய புலம்பெயர்ந்தவர்கள் மீது ட்ரம்பின் கொள்கைகளின் தாக்கத்தை மேற்கோளிட்ட ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்றவர்களை இது அம்பலப்படுத்துகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கிஷோர் அது அப்படி இல்லை என்று கீழ்வருமாறு விளக்கினார் :

அமெரிக்காவில் சமூக நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள் விரக்தியடைந்த அகதிகள் என்பதற்கு மாறாக, சமூகத்தின் ஆதார வளங்களை சூறையாடும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மீதான சுரண்டலின் விளைபொருளான ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் செல்வ வளத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தன்னலக் குழுவாகும்.

அனைத்து முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராக, கிஷோர் தொழிலாள வர்க்கத்திற்கு “திறந்த எல்லைகள் என்ற கோட்பாட்டை —அதாவது தொழிலாளர்கள் எந்த நாட்டை தேர்வு செய்தாலும் முழு குடியுரிமைகளுடன் வாழவும் வேலை செய்யவும் உள்ள உரிமையை” நிலைநிறுத்துமாறு” அழைப்புவிடுத்தார்.

அவர் கீழ்கண்டவாறு கூறினார்:

தேசியம், வகுப்பு, இனம், நிறம் மற்றும் ஏனைய ஒவ்வொரு வகையின் அடிப்படையிலும் தொழிலாளர்களைப் பிளவுபடுத்த ஆளும் வர்க்கம் அதனால் முடிந்த அனைத்தையும் செய்கிறது. நமது நலன்கள் ஒன்றே என்பதை நாம் புரிந்து கொள்வதைத் தடுக்கும் முயற்சியில் அது இதைச் செய்கிறது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது ஏகாதிபத்தியப் போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். இந்தப் போராட்டமானது, போர் மற்றும் பாசிசத்துக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத்தால் தலைமை கொடுக்கப்பட வேண்டும்.

Loading