நியூ கலிடோனியாவில் பிரெஞ்சு அவசரகால நிலைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (PES), நியூ கலிடோனியா மீது பிரான்ஸ் விதித்துள்ள அவசரகால நிலையை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்கிறது. பசிபிக் தீவுகளிலுள்ள, இந்த தீவுக்கூட்டத்தின் முக்கிய ஏற்றுமதியான நிக்கலுக்கான சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட ஒரு சமூகக் கிளர்ச்சியை நசுக்க முயற்சிக்கின்ற பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அங்கு நவகாலனித்துவ ஆட்சியை திணிக்கிறது.

அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடவும் அடக்குமுறையை ஒருங்கிணைக்கவும் வியாழன் நியூ கலிடோனியாவுக்கு வந்த மக்ரோன் கிளர்ச்சியை நசுக்க உறுதியளித்தார். கவச வாகனங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள், “வன்முறை மற்றும் ஒழுங்கின்மையின் கைகளில் இருக்கும் அனைத்து இடங்களையும் வரும் மணிநேரங்களில் மீட்டெடுக்கும்” என்று அவர் கூறினார். மேலும், டிக்டோக்கை தணிக்கை செய்வதாக மேக்ரான் அறிவித்தார். 1985-86 களில் கனக் மக்களின் எழுச்சியை நசுக்கியதிலிருந்து பிரான்சின் மிகக் கொடூரமான நடவடிக்கைகள் இவையாகும். அப்போது, பிரெஞ்சு சிறப்புப் படைகளால் ஓவியா தீவில் 19 கனக் சுதேசி மக்கள் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

வாளால் ஆட்சி செய்துவரும் மக்ரோன் தன்னை ஜனநாயகத்தின் வெற்றியாளனாக வெட்கக்கேடான பாசாங்குத்தனத்தைக் காட்டுகிறார். நியூ கலிடோனியாவிற்கு புதிதாக வந்த ஐரோப்பியர்களை உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கும் அவரது முன்மொழியப்பட்ட தேர்தல் சீர்திருத்தத்தை பாதுகாத்து விடுத்த அறிவிப்பானது, கலவரத்தைத் தூண்டியது. “நாங்கள் உண்மையில் ஒரு வித்தியாசமான நாட்டில் இருக்கிறோம். பிரான்சில், உள்ளூர் தேர்தல்களில் வெளிநாட்டினர் [ஐரோப்பியர்கள்] வாக்களிக்க அனுமதிக்கிறோம். ... ஆனால் 10 வருடங்களாக இங்கு வசிக்கும் மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்று இங்கு கூறுகிறோம்” என்று அவர் கூறினார்.

பிரான்சிலும், பசிபிக் பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் நியூ கலிடோனியாவின் கனக்ஸ் மக்களை பாதுகாக்க வேண்டும். பாரியளவு செல்வாக்கற்ற ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் கடந்த ஆண்டு நஹேலின் பொலிஸ் கொலைக்கு எதிராக பிரான்சில் வெடித்த பாரிய வெகுஜன கலவரங்களை அடக்கியது மற்றும் போர்ப் பாதையில் பிரெஞ்சு அரசாங்கத்தை வைத்திருப்பது ஆகியவை மக்ரோனின் பெரும் செல்வாக்கற்ற ஜனநாயக விரோதத் திணிப்புக்களாகும். கனக் இளைஞர்களும் தொழிலாளர்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ நலன்களுடன் நேரடியாக மோதுகிறார்கள்.

வாஷிங்டனும் பிரான்ஸ் உட்பட அதன் நேட்டோ நட்பு நாடுகளும் போரை நடத்தி வருகின்றன, மேலும் பசிபிக் பகுதியில் சீனாவுடன் போரை நடத்த தயாராகி வருகின்றன. நியூ கலிடோனியாவில் உள்ள பாரிய கனிம இருப்புக்கள் மற்றும் மூலோபாய இராணுவ தளங்களின் கட்டுப்பாட்டை வைத்திருக்க மக்ரோன் உறுதியாக உள்ளார். நேட்டோ கூட்டணியிலுள்ள தீவிர வலதுசாரி உக்ரேனிய ஆட்சியைப் பயன்படுத்தி ரஷ்யா மீது போர் தொடுத்துவரும் இந்தப் போர்க் கொள்கையானது, காஸாவில் சியோனிச இனப்படுகொலைக்கான அதன் ஆதரவுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளது.

பாரிய சமூக மற்றும் அரசியல் அதிருப்தியின் வெடிப்பைத் தூண்டியுள்ள மக்ரோனின் தேர்தல் சீர்திருத்தமானது, கடந்த வாரம் கலவரமாகவும் தெருக்கள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமிப்பதாகவும் வளர்ந்தது. உள்ளூர் அதிகாரிகள், “சுதந்திரத்திற்கு ஆதரவானவர்களாக” இருந்தாலும் அல்லது வெளிப்படையாக பிரான்சுக்கு ஆதரவாக இருந்தாலும், அவர்கள் நிலைமையின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். தலைநகரான நௌமியா பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 300 பேர் காயமடைந்த நிலையில், இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட 6 உயிர்களை கலவரம் பலிகொண்டுள்ளது.

பொது ஒழுங்குக்கான அச்சுறுத்தல் முதன்மையாக கிளர்ச்சி செய்யும் மக்களிடமிருந்து வரவில்லை. மாறாக, பீதியடைந்த மற்றும் இரத்தவெறி கொண்ட முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து வருகிறது. 1954 முதல் 1962 வரை அல்ஜீரிய சுதந்திரப் போரின் போது அரேபியர்களை படுகொலை செய்ய “எலி வேட்டைகளை” ஏற்பாடு செய்த பிரெஞ்சு குடியேற்றவாசிகளைப் போல “கால்டோச்” உயரடுக்குகள் (ஐரோப்பிய வம்சாவளியினர்) கொலைக் குழுக்களை ஏற்பாடு செய்கின்றனர்.

“கொல்லப்பட்ட முதல் இரண்டு பேர்கள் கால்டோச்சால் கொல்லப்பட்ட இரண்டு கனக் இளைஞர்கள் என்று ஒரு ஆதாரம் லூ மொன்ட் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளது”. ஆயுதமேந்திய “ஆயுததாரிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கப்படுகிறார்கள்” என்று ஒரு போலீஸ் கமிஷனரை லூ மொன்ட் மேற்கோள் காட்டி எழுதியது. இப்பத்திரிகை பின்வருமாறு கூறுகிறது:

“ஆயுததாரிகள், இந்த வார்த்தை, 1980 களின் பயங்கரத்தை நினைவுபடுத்துகிறது -இங்கு ‘நிகழ்வுகள்’ என்று குறிப்பிடப்படுகிறது- மேலும் பெரும்பான்மையான கனக் சுற்றுப்புற மக்களின் இதயங்களில் அச்சத்தை விதைக்கிறது. சரிபார்க்க முடியாத வதந்திகள், வண்ணமயமான ஜன்னல்கள் கொண்ட பிக்-அப் டிரக்குகளின் படங்கள், உடனடி செய்தி சேவைகளில் பரவுகின்றன, இளம் பொலினேசியர்கள் வேட்டையாடப்படும் தண்டனைப் பயணங்களைப் பற்றி பேசுகிறார்கள்.”

உண்மையில், சொத்துடைமை வர்க்க உறுப்பினர்களின் குற்றவியல் நடத்தைக்கான ஆதாரங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே, மக்ரோன் டிக்டோக்கை தணிக்கை செய்துள்ளார்.

பிரான்ஸ், பசிபிக் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் நியூ கலிடோனியாவில் போராடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும். மீண்டும் உலகப் போரில் மூழ்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியில் வேரூன்றிய அரசியல் நெருக்கடிக்கு தீவுக்கூட்டத்திற்குள் தேசிய தீர்வு எதுவும் இல்லை. இந்த அரசியல் யதார்த்தம் “சுதந்திர சார்பு” கனக் மற்றும் சோசலிச தேசிய விடுதலை முன்னணியின் (FLNKS) திவால்நிலையில் விளக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயக அதிகாரத்துவத்துடன் தொடர்புடைய FLNKS இன் தலைவர்கள், மக்ரோனைச் சந்திக்க விரைகிறார்கள். இருந்தபோதிலும், தாங்களாகவே இருந்தாலும், கீழிருந்து தொடங்கிய இயக்கத்தின் கழுத்தை நெரிக்க அவர்கள் முயல்கின்றனர்.

FLNKS தலைமையானது, “FLNKS ஐ உருவாக்கிய அனைத்து அழுத்தக் குழுக்களுடன் (UC, PALIKA, UPM, RDO) சேர்ந்து” ஒரு அறிக்கையில், மக்ரோனின் வருகை சமாதானமான மற்றும் அமைதியான பேச்சுவார்த்தை, புதிய வாழ்க்கையை அளிக்கும் என்று நம்புகிறது. புதனன்று வெளிவந்த ஒரு செய்திக்குறிப்பில், அமைதிக்கு அழைப்பு விடுத்த FLNKS “எங்கள் மாணவர்கள், எமது மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்கள் மற்றும் பொதுவாக, இந்த சூழ்நிலையால் மிகவும் பலவீனமடைந்துள்ள ஒட்டுமொத்த கலிடோனிய மக்களையும், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பிற்கு திரும்ப அனுமதிக்க வேண்டும்” என்று கூறியது.

FLNKS ஒரு உள்ளூர் குட்டி முதலாளித்துவத்தின் சார்பாக பேசுகிறது, இது பிரான்ஸ் தீவுக்கூட்டத்தின் மீது சுமத்துகின்ற பொருளாதார ரீதியாக ஊனமுற்ற மற்றும் புதிய காலனித்துவ அமைப்பிற்குள் அதன் சலுகைகளை அனுபவிப்பதைத் தாண்டி தெளிவான கொள்கையை கொண்டிருக்கவில்லை. மகத்தான வளங்கள் இருந்தபோதிலும் (உலக நிக்கல் இருப்புக்களில் 30% வரை), நியூ கலிடோனியா 2023 இல் 230,000 டன்களுடன் உலகின் மூன்றாவது உற்பத்தியாளராக உள்ளது. இது சீன முதலீட்டுடன், கடந்த பத்தாண்டுகளில் 1.8 மில்லியன் டன்களுடன் அதன் உற்பத்தியை 10 ஆல் பெருக்கிய இந்தோனேசியாவை விட இது மிகவும் பின்தங்கி உள்ளது.

நியூ கலிடோனியாவில் தேர்தல் பங்கேற்பைக் கட்டுப்படுத்தும் தற்போதைய பிற்போக்குத்தனமான சட்டம், கனாக் மக்களை ஆசிய மற்றும் ஐரோப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கிறது. முன்னாள் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பனின் சோசலிஸ்ட் கட்சியால் கையொப்பமிடப்பட்ட 1998 இன் Noumea உடன்படிக்கைகளின் விளைவு, சுதந்திர சார்பு மற்றும் பிரெஞ்சு சார்பு சக்திகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு “சமரசம்” ஆகும். இது தீவுக்கூட்டத்தில் பிரான்சின் பிடியைத் தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் உண்மையில் மக்ரோனுடன் வேலை செய்யும் சுதந்திர சார்பு சக்திகளுக்கு, மக்ரோன் மற்றும் அவரது இராணுவ பொலிசால் உந்தப்படும் அரசியல் அமைப்பின் சீர்திருத்தத்தை எதிர்க்கும் பணியை தொழிலாளர்கள் கொடுக்க முடியாது.

மக்ரோனை சந்திப்பதன் மூலம், சீனாவிற்கு எதிராக பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் வாஷிங்டனின் போர் சதி ஆகியவற்றுடன், கனக் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சங்கிலியால் பிணைக்கும் நோக்கில் சுதந்திர ஆதரவு இயக்கம் ஒரு பொறியை அமைத்து வருகிறது. ஆனால், இப்பகுதி முழுவதும் ஒரு சமூக வெடிமருந்தாக உள்ளது. ஜனவரி மாதம், பப்புவா நியூ கினியாவில் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் சமூக அதிருப்திக்கு எதிராக கலவர அலை வெடித்தது.

“தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற எதிர்-புரட்சிகர ஸ்ராலினிச பொய்யான கோட்பாட்டை ட்ரொட்ஸ்கி எதிர்த்தார், அதேபோல் ஒற்றை பசிபிக் தீவுக்கூட்டத்தில் சோசலிச முன்னோக்கு இல்லை. மேலும், மக்ரோன் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை. மக்ரோனுக்கு எதிராக மட்டுமல்ல, FLNKS மற்றும் பிரெஞ்சு ஸ்ராலினிச மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கு எதிராகவும் ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதும், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பதும், தொழிலாளர் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்காக போராடுவதும்தான் முன்னோக்கி செல்லும் பாதையாகும்.

Loading