பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு மாணவர்களின் ஆதரவை அணிதிரட்டுவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த மே மாதம் 2ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்கிறது.

7 மே 2024 அன்று உயர் கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் ஒரு பகுதியினர்

இந்த வேலைநிறுத்தத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, கல்வி சாரா தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் செயலூக்கத்துடன் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. இந்தப் போராட்டத்தில் இலவசக் கல்வி உரிமைக் கோரிக்கைகளுடன் மாணவர்களாகிய நாமும் பங்குபற்ற வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவுடன் செயல்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளால், தங்களது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகின்ற நிலைமையின் கீழேயே 13,000 கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர். இந்த சிக்கனத் தாக்குதல்களால் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கன நடவடிக்கைகளின் நோக்கம் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், சர்வதேச வங்கிகளிடம் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தி இலங்கையை சர்வதேச மூலதனத்தின் எவ்வித தடையுமின்றி இலாபம் அடையக்கூடிய சொர்க்கமாக ஆக்குவதே ஆகும்.

இந்தத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, “புதிய கல்விக் கொள்கைகள்” மூலம் ஒட்டுமொத்த கல்வித் துறையும் ஒரு தீர்க்கமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவக் கல்வி தனியார்மயமாக்கல் பல நடவடிக்கைகள் ஊடாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் ஒட்டுமொத்தப் பல்கலைக்கழக மாணவர்களும் மேலதிக தொழில்களைச் செய்து தங்கள் படிப்புச் செலவை சமாளிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த தசாப்தங்களில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட பொறியியல், மருத்துவம் உட்பட புதிய பீடங்களில், பீடத்தின் பெயர் பலகைகள் மட்டுமே உள்ளன. அவை மனித வளம் மற்றும் பொருள் வளங்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவளிக்கும் போது, நாம் கவனம் செலுத்த வேண்டிய சில அரசியல் விடயங்கள் உள்ளன. கல்வி மீதான அனைத்து தாக்குதல்களும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளின்படி ஒட்டுமொத்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

மாணவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் திரும்புவதன் மூலமும், அவர்களுடன் இணைந்து போராடுவதன் மூலமும் மட்டுமே அந்தத் தாக்குதல்களை முறியடிக்க முடியும். ஏனென்றால், முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதல்களைத் தோற்கடிக்கும் திறன் கொண்ட, கல்வி உட்பட சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் சோசலிச வேலைத் திட்டத்திற்கு வழியைக் காட்டக் கூடிய ஒரே புரட்சிகர வர்க்கம் தொழிலாள வர்க்கம் மட்டுமே.

இந்த உறவை நிறுவுவதன் பேரில், மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதற்கான உடனடி அடியெடுப்பாக, அவர்கள் கல்வி சாரா தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். முதலாளித்துவ ஸ்தாபனமும், அதன் தொழிற்சங்கங்களும் மற்றும் ஊடகங்களும் ஏனைய நேரங்களில் செயற்படுவது போலவே, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இந்த வேலைநிறுத்தத்திற்கு விரோதமாக நிறுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்குப் பதிலாக, அதனை பலவீனப்படுத்தும் வகையில் இணையவழி விரிவுரைகளை நடத்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கையை மாணவர்கள் நிராகரிக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

எனினும், அனைத்துப் பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் இதைப் பற்றி மௌனம் காக்கின்றது. போராட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தாலும், அது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் பரப்பும் பொய்ப் பிரச்சாரத்திற்கும், அதற்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்களுக்கும் ஆதரவளிக்கவே முன்வந்துள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் யோசனையை நாங்கள் முன்வைக்கவில்லை.

கடந்த எட்டு ஆண்டுகள் பூராகவும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அவ்வப்போது தங்களது சம்பளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், தொழிற்சங்கங்கள், நாகரீக வாழ்வு வாழ்வதற்குத் தேவையான ஊதியத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாக, முதலாளித்துவ அரசாங்கம் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்து, ஊதியப் போராட்டங்களைக் கலைத்துவிட்டன.

இப்போது தொடங்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில், தொழிற்சங்கங்களின் இந்த நடவடிக்கை இன்னும் அப்பட்டமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்த சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டு, தற்போது மாதாந்திர இழப்பீடு கொடுப்பனவான எம்.சே.ஏ. கொடுப்பனவைப் பெறுவதற்காக மட்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் முன்பு கூறிய அதே கண்கட்டி வித்தை கதைகளையே, இப்போதும் கூறத் தயாராக இருக்கின்றன.

கல்வி வெட்டு நிலைமைகளுக்கு எதிரான போராட்டமும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக நிலைமைகள் நசுக்கப்படுவதற்கு எதிரான போராட்டமும் ஒன்றே ஆகும். அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த சக்தி இயக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், கல்விசாரா தொழிற்சங்கங்கள் உட்பட இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்கள் அத்தகைய போராட்டத்தில் நுழைவதைத் தடுத்து, வரையறுக்கப்பட்ட தொழிற்சங்க கோரிக்கைகளின் அடிப்படையில், அந்தந்த துறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிதறடிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களை அழைப்பது, அவர்களின் பலத்தை சிதறடிப்பதற்கே ஆகும்.

கல்வி சாரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தையும் ஏனைய தொழிலாளர் போராட்டங்களையும் ஆதரிப்பதில், தொழிற்சங்கத் தலைவர்களின் இந்த துரோக நடவடிக்கையை தோற்கடித்து, தொழிலாளர்களை உண்மையான போராட்டத்திற்கு அணிதிரட்டும் முயற்சியுடன் மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

சர்வதேச அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலேயே இலங்கையில் தொழிலாளர்களின் போராட்டங்கள் தலைதூக்குகின்றன. குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் ஆட்சியாளர்கள், உலகை மறுபங்கீடு செய்யும் போரில் முதல் அடி எடுத்து வைக்கின்ற நிலைமையில், காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை முழுமையாக ஆதரிக்கும் இந்த ஏகாதிபத்தியவாதிகள், அதற்கு முன்னதாக உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக தொடங்கிய போர், ஈரானுக்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகள் மூன்றாம் உலகப் போரின் அபாயத்தை உக்கிரமாக்கியுள்ளன. இந்த முன்னேற்றங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை ஆழமாக்கும்.

நாம் பிரேரிக்கும் வேலைத் திட்டத்திற்கு போராடுவதற்காக மாணவர்களின் ஐக்கியம் அவசியப்படுவது இதன் காரணமாகவே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களின் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் சாராத தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளது.

விக்கிரமசிங்க அரசாங்கத்தை தூக்கி எறிந்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தைக் கட்டியெழுப்பப் போராடுவதன் மூலம் மட்டுமே, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும் என்றும், இந்தப் போராட்டம் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதி என்றும் சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) இந்த வேலைத்திட்டத்தை முழுமையாக ஆதரிப்பதுடன், இந்த வேலைத்திட்டத்தை கலந்துரையாடவும் அதற்காகப் போராடவும் IYSSEயில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading