மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ், உளவு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், அவர் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக வாதிடுவதற்கான உரிமைக்காக, தனது இறுதி மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். ஒரு நிராகரிப்பு, அவரை பிரிட்டிஷ் சட்ட அமைப்பில் வேறு வழிகள் இல்லாமல் போய்விடும் என்பதால், அதே நாளில் அவரை ஒரு விமானத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பப் படலாம்.
பிரிட்டன், அமெரிக்கா, அவரது தாயகமான ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் அசாஞ்சேயின் விடுதலை கோரப்பட வேண்டும்.
போர்க்குற்றங்கள், தொழில்துறை அளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதற்காக, 14 ஆண்டுகளாக ஏகாதிபத்திய சக்திகளின் புலனாய்வு அமைப்புகளால் அசாஞ் வேட்டையாடப்பட்டு வருகிறார். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள், இங்கிலாந்தின் பெல்மார்ஷ் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டுள்ள சிறையில், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் உள்ள அசாஞ்சுக்கு, ஜாமீன் உட்பட அவரது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
அசாஞ்சின் வழக்கு, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம், போர்-எதிர்ப்பு உணர்வை நசுக்க பயன்படுத்தப்படும் சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் அனைத்தையும் நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் பொய் பிரச்சாரத்தை உள்ளடக்கியிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில், அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள சர்வாதிகாரங்களுடன் அவர்கள் நடத்திய சதிகள் பற்றிய கசிந்த ஆவணங்களின் விவரங்களை வெளியிட்டதற்காக, அவர் வாஷிங்டன் மற்றும் லண்டனால் குறிவைக்கப்பட்டார். ஆளும் வர்க்கம் செய்யக்கூடிய மிருகத்தனத்தைப் பற்றி மக்களை எச்சரிக்க முயன்ற அசாஞ், விக்கிலீக்ஸை மக்களின் புலனாய்வு நிறுவனம் என்று வர்ணித்தார்.
இந்த எச்சரிக்கைகள் தினசரி பயங்கரமாக உறுதிப்படுத்தப்படுகின்றன. உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போரினால், நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், மற்றும் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையால் ஏற்கனவே, முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30,000ம் பேர்கள் இறந்துள்ளனர். இவை இரண்டும், ஏகாதிபத்திய சக்திகள் பூகோளத்தையும் அதன் மக்களையும் அதன் வளங்களையும் மறுபங்கீடு செய்ய வேண்டும் என்ற உந்துதலில் வேரூன்றி உள்ளன. இது, மூன்றாம் உலகப் போரை நோக்கி ஆழமாக இறங்குவதைக் குறிக்கிறது.
சி.ஐ.ஏ. யின் படுகொலை சதியை உள்ளடக்கிய அசாஞ் மீதான துன்புறுத்தலானது, அவரது உடல்நிலையை பாழாக்கி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவரது வாழ்நாளை ஏற்கனவே கொள்ளையடித்துள்ளது. இது இப்போது நடந்து கொண்டிருக்கும் இராணுவ வன்முறை வெடிப்பதற்கான தயாரிப்பில், போருக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு முன்னோடியாக இருந்து வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போர்த் திட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மௌனிக்கப்படுவார்கள் மற்றும் அழிக்கப்படுவார்கள் என்பதற்கு ஒரு உறையவைக்கும் முன்னுதாரணமாக இது அமைந்துள்ளது.
அசாஞ்சில் இருந்து தொடங்கிய பத்திரிகையாளர்களை கொடூரமாக மௌனமாக்கும் முயற்சி, இப்போது பாரிய படுகொலைக் கொள்கைக்கு இட்டுச் சென்றுள்ளது. உண்மை வெளிப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில், இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைகள் பற்றிய தெளிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த நான்கு மாத இடைவெளியில் கிட்டத்தட்ட 100 ஊடக ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
“பொய்களால் போர்கள் தொடங்கப்பட்டால் ... உண்மையால் அமைதியை ஆரம்பிக்க முடியும்” என்று 2011 இல் லண்டனிலுள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணியில் அசான்ஜ் கூறினார். அன்றிலிருந்து போர்களுக்கும் பொய்களுக்கும் பஞ்சமில்லை.
உக்ரேனில் நேட்டோ சக்திகள், பாசிச சக்திகளுடன் இணைந்து ரஷ்யாவை வலுவிழக்க வைக்க மற்றும் ஸ்திரமின்மைக்கு ஆளாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட கடைசி மனிதனுக்கான சண்டைக்கு மக்களை இழுத்துச் செல்வதன் மூலம் “இறையாண்மை” மற்றும் “ஜனநாயகத்தைப்” பாதுகாப்பதாக கூறுகின்றன.
காஸாவில், பாலஸ்தீனியர்கள் மீதான இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்த, இஸ்ரேலின் “தற்காப்பு உரிமைக்கான” பிரதம மந்திரி நெதன்யாகுவின் இழிந்த கோரிக்கையை அவர்கள் ஆதரிக்கின்றனர்.
இந்த பேரழிவுகளுக்கு காரணமான ஏகாதிபத்திய மனநோயாளிகளுக்கு எதிராக, ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியில், அசாஞ்சின் தலைவிதியும் அவரது விடுதலைக்கான போராட்டமும் தங்கியுள்ளது.
இந்த இயக்கமானது, காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை நிறுத்தக் கோரி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் பாரிய எதிர்ப்புகளுடன் தொடங்கியது. எண்ணெய் வளம் நிறைந்த பிராந்தியத்தின் மீது, அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்காக, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளான யேமன், சிரியா மற்றும் லெபனான் ஆகியவற்றிற்கு எதிராக, அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளால் மத்திய கிழக்கு முழுவதும் நடத்தப்பட்டுவரும் போரின் முதல் கட்டம் மட்டுமே இதுவாகும்.
இந்த வெகுஜன இயக்கமானது, இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தின் மையத்தில் அசான்ஜின் விடுதலைக்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டும்.
இந்த நிலைமைகளின் கீழ், அசாஞ்சேயின் வழக்கு அதன் அடுத்த கட்டத்தில் வெடிக்கும் அரசியல் பரிமாணங்களை எடுக்கும். அது இங்கிலாந்தின் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு அல்லது அமெரிக்காவில் தற்காப்பு வடிவத்தில் இருக்கும். வாஷிங்டனில் அவரைத் துன்புறுத்துபவர்கள் தாங்கள் தண்டனையின்றி செயல்பட முடியும் என்று நினைக்கலாம். ஆனால், அவர்கள் அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸ் மீதான பிரமாண்டமான மக்கள் அனுதாபத்தை கணக்கிடவில்லை.
தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் ஒரு தேர்தல் ஆண்டின் தொடக்கத்தில் உள்ளனர். அதில் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட இரண்டு பிரதான கட்சிகளும் வெறுக்கப்படுகின்றன. (அமெரிக்காவில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி, பிரிட்டனில் பழமைவாத மற்றும் தொழிற் கட்சி) எந்தவொரு நாட்டின் ஆளும் வர்க்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில், சட்டரீதியாக ஆபாசமான ஒப்படைப்பு மற்றும் வழக்குத் தொடரும் வலிமையான நிலையில் இல்லை.
அசாஞ்சை அவர்கள் துன்புறுத்தி வருகையில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், காவலில் இருந்த ஒரு இனவெறி வஞ்சகரான அலெக்ஸி நவல்னியின் மரணத்தை, புட்டின் ஆட்சியின் குற்றவியல் தன்மைக்கான இறுதி ஆதாரம் என்று பிரகடனம் செய்து, சமுத்திரமளவுக்கு கண்ணீர் வடிப்பதையிட்டு, யாருக்கும் இழப்பு இல்லை. “இனப்படுகொலை ஜோ பைடென்” மற்றும் ரிஷி சுனக் ஆகியோரால் காஸாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள புதிய குற்றங்களுக்கு எதிராக, அவர்கள் வாரந்தோறும் அணிதிரளும்போது, முந்தைய போர்க் குற்றங்களை வெளிப்படுத்திய ஒருவரைத் தண்டிக்கும் ஆளும் உயரடுக்கின் உரிமையை மில்லியன் கணக்கானவர்கள் ஏற்க மாட்டார்கள்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்டுவரும் ஜூலியன் அசாஞ் மீதான இடைவிடாத துன்புறுத்தலுக்குப் பிறகு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அவரது விடுதலைக்கான போராட்டத்தின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். இந்த இக்கட்டான தருணத்தில், ஜூலியன் அசான்ஜின் விடுதலைக்கான போராட்டத்துடன், போருக்கு எதிரான போராட்டத்தை ஒன்றிணைப்பது அவசர அவசியமாகும்.
கடந்த காலத்தின் அனைத்து பெரிய பாதுகாப்பு பிரச்சாரங்களைப் போலவே, ஜூலியன் அசான்ஜை விடுவிப்பதற்கான போராட்டமும், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் அளவிற்கு மட்டுமே வெற்றியடைய முடியும். அசாஞ்சை விடுவிப்பதற்கான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன், வேலைகள், ஊதியங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான மிருகத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
காஸாவில் இனப்படுகொலை மற்றும் அசாஞ் மீதான துன்புறுத்தலுக்கு வழிவகுத்த இங்கிலாந்தில் தொழிற்கட்சி முதல் அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சி வரை அனைத்து அரசியல் சக்திகளையும் நனவாக நிராகரிப்பதை இப்போராட்டம் உள்ளடக்கியுள்ளது.
உலக சோசலிச வலைத் தளம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகள், இந்தப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட ஒரு அசைக்க முடியாத, உறுதியான போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்.