இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான முன்னோக்கிய பாதை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்களின் மூன்று நாள் சுகயீன விடுமுறைப் பிரச்சாரம் ஜனவரி 3 அன்று ஆரம்பமானது. அது, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிராக போராடுவதற்கான அவர்களின் போர்க்குணத்தையும் உறுதிப்பாட்டையும் சக்திவாய்ந்த முறையில் நிரூபிப்பதாக இருந்தது.

4 ஜனவரி 2024 அன்று கொழும்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை மீறி நடத்தப்பட்ட இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் சுமார் 26,000 இ.மி.ச. தொழிலாளர்கள் பங்குபற்றியதுடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ.மி.ச. ஊழியர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்து, கொழும்பில் உள்ள இ.மி.ச. தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தின் படிப்பினைகள் இ.மி.ச. ஊழியர்களுக்கு மட்டுமன்றி, முழு தொழிலாள வர்க்கத்திற்கும் தீர்க்கமானதாகும்.

அரச அடக்குமுறை அச்சுறுத்தல்களால் தாங்கள் அஞ்சவில்லை என இ.மி.ச. தொழிலாளர்கள் தெளிவுபடுத்தியுள்ள அதே வேளை, இலங்கை அரசாங்க ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு ஐக்கியப்பட்ட நாடு தழுவிய போராட்டத்தை அபிவிருத்தி செய்வதை, கூட்டு இ.மி.ச. தொழிற்சங்க முன்னணியின் தலைமை தொடர்ந்து தடுத்து வந்துள்ளது.

இந்த ஆண்டு தீவில் நடந்த முதல் பெரிய தொழில்துறை போராட்ட நடவடிக்கையான மின்சார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரதும் தவிர்க்க முடியாத எதிர்த் தாக்குதலை முன்னறிவிக்கிறது.

கொழும்பின் திட்ட நிரலில் இ.மி.ச., துறைமுகங்கள், புகையிரதம், ஸ்ரீலங்கன் விமானசேவை, டெலிகொம், பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் போன்ற பிரதான நிறுவனங்கள் உட்பட நூற்றுக்கணக்கான அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதும் அடங்கும். இது இலட்சக் கணக்கான வேலைகளை அழிப்பதோடு ஊதியங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கடினமான வேலை நிலைமைகளை உள்ளடக்கியதாகும்.

கொழும்பு, ஜனவரி 1 அன்று, வருமான வரி மற்றும் பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரித்து பணவீக்கத்தை 3 சதவிகிதம் வரை உயர்த்தியதுடன் மற்றும் முன்னர் வட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட சில அத்தியாவசிய பொருட்களின் விலை 18 சதவிகிதத்தால் அதிகரிக்கச் செய்தது. அரசாங்கம் பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்திலும் மேலும் வெட்டுக்களை திணித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் அதன் சிக்கனத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறது. தனது கோரிக்கைகளை “கொடூரமான சோதனை” என்று வெளிப்படையாக விவரித்த நிதியம், இல்லையேல் கொழும்பு அதன் 3 பில்லியன் கடனில் மீதமுள்ள தவணைகளைப் பெறாது என்று எச்சரித்தது. இலங்கையினால் திருப்பிச் செலுத்தப்படாத வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் முதலீட்டாளர்களின் இலாபங்களை அதிகரிப்பதற்கும் இந்த பிணை எடுப்புக் கடன் தேவை.

விக்கிரமசிங்க “சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு மாற்றீடு இல்லை” என்று வலியுறுத்துவதுடன், தொழிலாளர்களின் போராட்டங்களை அச்சுறுத்தவும் நசுக்கவும் பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு, போராட்டம் நடத்திய அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொடூரமான முறையில் தாக்குவதற்கு பொலிஸ் கலகப் படைகளை அரசாங்கம் நிறுத்தியது.

இ.மி.ச. தொழிலாளர்களின் மூன்று நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தின் முதல் நாளில், மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் போக்குவரத்து துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்து அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தை விக்கிரமசிங்க செயற்படுத்தினார்.

மின்சார ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய பொலிஸ் மற்றும் கடற்படை சிப்பாய்கள் நீர்தாரை பீரங்கிகளுடன் கொழும்பு போராட்ட தளத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தனர். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபையின் மேலதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த நடவடிக்கைகளை வெற்று அச்சுறுத்தல்களாக சித்தரிக்க முயற்சிக்கின்ற நிலையில், இ.மி.ச. தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் பெருவணிகம், சர்வதேச மூலதனம் மற்றும் பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தை தோற்கடிப்பதில் உறுதியாக உள்ள ஒரு அரசாங்கத்தை தாங்கள் எதிர்கொள்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இ.மி.ச. ஊழியர்களும் முழு தொழிலாள வர்க்கமும் அரசாங்கத்தையும் அதன் அனைத்து தீய சமூக தாக்குதல்களையும் தோற்கடிக்க அரசியல் ரீதியாக தயாராக வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்கள் தனிமையில் இல்லை. அவர்கள் தங்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீது இதேபோன்ற தாக்குதலை எதிர்கொள்கின்ற சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு படைப்பிரவினர் ஆகும்.

தொழிற்சங்கங்கள் ஆற்றும் வகிபாகம் என்ன?

டிசம்பர் 28 அன்று, இ.மி.ச., டெலிகொம், தபால் மற்றும் அரச வங்கிகள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கொழும்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தினர். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்பதை அரசாங்கம் நிறுத்தாவிட்டால், ஒரு “கூட்டுப் போராட்டத்தை” ஏற்பாடு செய்வோம் என்று பெருமையாகக் கூறினர்.

இறுதியில், சிதறுண்டு, தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களை நடத்துவதே அவர்களது முடிவாக இருந்தது. இந்த நடவடிக்கைகளின் ஒரே நோக்கம், தொழிலாளர்களின் போராட்ட வலிமையைக் குறைப்பதும், அவர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்குவதும் மட்டுமே.

இத்தகயை நடவடிக்கையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள், பிரதானமாக ஐக்கியமக்கள் சக்தி (ஐ.ம.ச.) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), பெருந்தோட்டங்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி, அத்துடன் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புக்களும் சுயாதீன தொழிற்சங்கங்கள் என்று அழைத்துக்கொள்ளும் சங்கங்களுமாக அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இந்தத் தொழிற்சங்கங்கள் எதாவதொரு தொழில்துறை நடவடிக்கைக்கும் அழைப்பு விடுத்தாலும் கூட, அது தொழிலாளர்களின் பெருகிவரும் கோபத்தைக் கலைக்கவும், தடம் புரட்டி விடவும் மட்டுமே ஆகும். இதனால் அரசாங்கம் அதன் வேலை-அழிப்புக் கொள்கைகளை செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

மூன்று நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்குப் பின்னர், மின்சார ஊழியர் சங்கத்தின் தலைவரும் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினருமான ரஞ்சன் ஜயலால், இ.மி.ச மறுசீரமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது தொழிற்சங்கங்கள் மற்றுமொரு போராட்டத்தை நடத்தும் என அறிவித்தார்.

அது பலனளிக்கவில்லை என நிரூபிக்கப்பட்டால், தொழிற்சங்கம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும், தவறினால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜயலால் கூறினார். இது ஒரு அரசியல் புதைகுழியாகும், மேலும் இது தொழிலாளர்களின் மன உறுதியைக் குலைத்து, போராடுவதற்கான அவர்களின் உறுதியை சிதறடிக்க உருவாக்கப்பட்டதாகும்.

அரசாங்க துறை தொழிற்சங்கங்கள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும், சம்பள உயர்வு கோரியும் டசின் கணக்கான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் இ.மி.ச. தொழிலாளர்கள் மற்றும் துறைமுகங்கள், தபால் சேவை, தொலைத்தொடர்பு, பொது சுகாதாரம், பல்கலைக்கழக துறைகள் மற்றும் அரச நிர்வாக சேவைகளும் உள்ளடங்கும். அரசாங்கத்திற்கு “அழுத்தம்” கொடுப்பதாகக் கூறப்படும் பயனற்ற எதிர்ப்புகள் அல்லது அடையாள வேலைநிறுத்தங்கள் என்று மட்டுப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன.

2022 இல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின் போது, இந்த தொழிற்சங்கங்கள் ஒரு இடைக்கால முதலாளித்துவ நிர்வாகத்திற்கான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. விடுத்த அழைப்புகளுக்கு ஆதரவாக மில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்குள் திசை திருப்பி விட்டன. இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்த போதிலும், முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவுடன் தொழிற்சங்கங்களின் இந்த அரசியல் காட்டிக்கொடுப்பு, மதிப்பிழந்த பாராளுமன்றத்தின் மூலம் அமெரிக்க சார்பு கைக்கூலியான விக்கிரமசிங்கவை அதிகாரத்திற்கு உயர்த்துவதற்கு வழிவகுத்தது.

தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களால் தனியார்மயமாக்கல் மற்றும் ஏனைய சமூகத் தாக்குதல்களைத் தோற்கடிக்க முடியும் என்று இன்னமும் வலியுறுத்துகின்றனர்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 4 ஜனவரி 2024 அன்று கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இ.மி.ச. தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், மின்சாரத்தை நிறுத்துவதற்கும், அனைத்து தொழிற்துறைகளையும் ஸ்தம்பிக்க வைப்பதற்கும் மின்சாரத் தொழிலாளர்களுக்கு உள்ள திறன் அவர்களுக்கு “தனித்துவமான பலத்தை” தருவதாக அறிவிக்கின்றனர். துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, புகையிரதம் மற்றும் பிற அரச நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களும் இதையே உச்சரிக்கின்றனர்.

இ.மி.ச. தொழிலாளர்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள ஊழியர்களும் இந்த மாயையில் சிக்கிக் கொள்ள கூடாது.

ஆம், தொழிலாளர்கள் பொருளாதாரத்தை நிறுத்துவதற்கு மகத்தான தொழில்துறை வலிமையைக் கொண்டுள்ளனர். ஆனால் அதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தவில்லை எனில், முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒரு சுயாதீனமான வேலைத்திட்டத்தில் அணிதிரட்டவில்லை எனில் அவர்கள் தோற்கடிக்கப்பட முடியும்.

1996 ஆம் ஆண்டு மின்சார ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் அடக்குமுறை அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி நசுக்கப்பட்டது. தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களின் சொத்துக்களை அபகரிக்க அச்சுறுத்தப்பட்டது. அரசாங்கத்தையும் அதன் அடக்குமுறையையும் தோற்கடிக்க முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்கள் தொழில்துறை போராட்ட நடவடிக்கையை மூடிவிடுகின்றன.

ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கண்டிக்கும் அதே வேளை, சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை வஞ்சகத்தனமாக சுரண்டிக்கொண்டு, அதை இந்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலில் இந்த கட்சிகளுக்கு ஆதரவாக திசைதிருப்ப முயற்சிக்கின்றன.

இந்தக் கட்சிகளை ஆதரிக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், இந்த அமைப்புகளால் நடத்தப்படும் எதிர்கால அரசாங்கங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று தொழிலாளர்களிடம் பொய்யாகச் சொல்கிறார்கள். எவ்வாறாயினும், ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.க்கு சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுடன் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போதைய ஆட்சியைப் போலவே ஈவிரக்கமின்றி சர்வதேச வங்கியின் கட்டளைகளை திணிக்கும்.

இ.மி.ச. தொழிலாளர்களை பின்வரும் கோரிக்கைகளுக்காக போராட அழைக்கிறோம்:

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்! இ.மி.ச. ஊழியர்கள் மீதான அனைத்து சமூக ஊடக கட்டுப்பாடுகளையும் நீக்கு!

தனியார்மயமாக்கல் மற்றும் பிற சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளையும் தோற்கடிக்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் உட்பட ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பை கட்டியெழுப்பு!

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க ஐ.ம.ச., ஜே.வி.பி. அல்லது வேறு எந்த முதலாளித்துவ கட்சி அல்லது தொழிற்சங்கங்களை சார்ந்திருக்க முடியாது. முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு பணியிடங்களிலும், தோட்டங்களிலும் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம் அவர்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

விக்கிரமசிங்கவின் அனைத்து சமூகத் தாக்குதல்களையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பொதுவான நடவடிக்கையைத் தீர்மானிக்க, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை ஸ்தாபிக்க வேண்டியது அவசியமாகும்.

தனியார்மயம் வேண்டாம் என்று சொல்லுங்கள். முதலாளித்துவ அமைப்பில் உழைக்கும் மக்களுக்கு தீர்வு இல்லை. அனைத்து அரச நிறுவனங்கள், பெரிய தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். அனைத்து வெளிநாட்டு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் கிராமப்புற மக்களை அணிதிரட்ட வேண்டும் மற்றும் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப போராட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சியானது, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு வழி வகுக்கும்.

Loading