இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் வடகீழ் பருவக் காற்றுடன் ஆரம்பமான கடும் மழை வீழ்ச்சி காரணமாக கடந்த வாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் பெருக்கெடுத்துள்ளதால் தாழ்வு நிலப்பகுதியில் இருக்கும் குடியிருப்புக்கள் நீரில் மூழ்கின. வீதிகளை மூடி இடுப்பு அளவுக்கும் மேலாக வெள்ளம் பாய்ந்தது. போக்குவரத்துக்கள் தடைப்பட்டதுடன் பாடசாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்தும் மழை பெய்துகொண்டிருக்கின்றது. மலையகப் பகுதியான ஊவா மாகாணத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு வருகின்றது.

கிராஞ்சி மற்றும் பல்லவராயன் கட்டுக்கு இடயிலான செம்புவெளி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

டிசம்பர் 18 அன்று, அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஊவா மாகாணத்திலும் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“உள்நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்ட கடும் காற்று இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது அவர்களுக்கு உதவுவதற்கோ அரசாங்கம் எந்தவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர் வீடுகளிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

டிசம்பர் 20 அன்று வெளியான செய்திகளின் படி, வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதிமுகாம்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் படி, அந்த மாவட்டத்தில் 1,364 குடும்பங்களைச் சேர்ந்த 4,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பாதிப்பின் தாக்கங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் அதிகரித்துச் செல்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் தாழ்வுப் பகுதிகளில் அமைந்துள்ள கண்டாவளை, தர்மபுரம், பிரமந்தனாறு, முரசுமோட்டை, புன்னைநீராவி, பெரியகுளம், குமரபுரம், ஊரியான், உமையாள்புரம், பரந்தன், புளியம் பொக்கணை மற்றும் பன்னங்கண்டி போன்ற கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்கும் வேலையை கிராம சேவகர்கள் செய்த போதும் அவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அரசாங்கத்தினால் செய்யப்படவில்லை. தஞ்சமடைந்துள்ளவர்கள் தனி நபர்களின் உதவியிலேயே தங்கியுள்ளனர். கண்டாவளை, பொன்னகர், அக்கராயன் போன்ற பிரேசங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதோடு அங்கு இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு, நுளம்பு வலை, போர்வை ஆகிய தேவைகள் கிடைக்காத நிலையில் அவர்கள் நோய்வாய்ப்படும் ஆபத்தில் உள்ளனர்.

மழைநீர் தேங்குவதால் நுளம்புகள் பெருகி, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 19 அன்று மட்டும் 110 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறிய விவசாயிகளாகவும் விவசாய கூலித்தொழிலாளிகளாகவும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும், 1950 மற்றும் 70களில், சிங்களப் பேரினவாத குண்டர்களின் வன்முறை தாக்குதல்கள் காரணமாக மலையகப் பெருந்தோட்டப் பிரதேசத்தில் இருந்தும் மற்றும் 1990களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இருந்தும் வந்து குடியேறியவர்களாவர்.

இந்தப் பிரதேசம் தாழ்வு நிலப் பகுதி ஆகையால், பருவ மழையால் பாதிக்கப்படும் இந்த மக்கள், இரணமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் போதெல்லாம் இத்தகைய அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். 2019 ஆண்டு வெள்ளப் பெருக்கின் போதும் இந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள், கொழும்பு அரசாங்கங்கள் 30 ஆண்டுகாலமாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போரினால் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வந்ததோடு 2009 மே மாதம் பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலையுடன் யுத்தம் முடிவுக்கு வந்த போது, தங்கள் இருப்பிடங்கள், உடமைகள் மற்றும் உறவினர்களையும் இழந்து இராணுவத்தால் நடத்தப்பட்ட அகதி முகாம்களில் இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் அந்த மக்களை அவரவர் இருப்பிடங்களில் அற்ப உதவிகளுடன் கொண்டு கொட்டியது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி சமூகச் செலவினங்களை வெட்டித் தள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனால், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களை அது கைவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள கொழும்பு அரசாங்கத்தை ஆட்டங்காணாமல் பார்த்துக்கொள்ளும் தமிழ் கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய வாய்ப்பேச்சோடு நிறுத்திக்கொள்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தலைவரான எஸ். ஸ்ரீதரன், கொழும்பு அரசாங்கத்தை அதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கும் தெளிவான முயற்சியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனி நபர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து கொழும்பு அரசாங்கங்களால் நடத்தப்பட்ட ஏறக்குறைய 30 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாதப் போர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அடிப்படை சமூக உட்கட்டமைப்புகளை அழித்துவிட்டது. 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அவற்றை மீளமைக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அந்த நிலைமையானது வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ளது. இம்மக்கள் வறட்சி காலத்தில் விவசாயம் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். தற்போது மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் அதிகாரிகளின் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்வது பற்றிய அலட்சியத்தின் விளைவு இதுவாகும். இது, 1948ல் சுதந்திரம் என்று அழைக்கப்பட்டதில் இருந்து இப்போது ஏழு தசாப்தங்களுக்கும் மேலான முதலாளித்துவ ஆட்சியின் மீதான குற்றப்பத்திரிகை ஆகும்.

கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில கிராமங்களுக்கு சென்றிருந்தனர். இதன் போது, இரணமடு குளத்தின் வான்கதவுகள் யாவும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், தாழ்வுப் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

வெள்ள நீருடன் முதலைகளும் வீட்டருகே வந்து கால்நடைகளை கொண்டு செல்வதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். வீதிகள் மற்றும் வயல்கள் மூழ்கியபடி இருந்தன. கிளிநொச்சிப் பிரதேசத்தின் இரண்டாவது வாழ்வாதாரமான கால்நடைகள் போதுமான உணவு மற்றும் தங்குமிடம் இன்றி குளிரில் நடுங்கிக் கொண்டு திரிகின்றன.

தம்பிராச சண்முகம்பிள்ளை

மருதநகர் கிராமத்தில், தம்பிராச சண்முகம்பிள்ளையிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. “நாங்கள் இங்கு 40 வருடங்களாக வாழ்கின்றோம். இரணமடு கதவுகள் திறக்கப்படும் போதெல்லாம் நாங்கள் இந்த நிலமையை அனுபவித்து வருகின்றோம். நான் ஒரு கூலித் தொழிலாளி. இப்போது மழை காரணமாக வேலை இல்லை. தற்போது இருக்கிறதை வைத்து தான் சாப்பிடுகின்றோம். இல்லாவிட்டால் பட்டினி கிடக்க வேண்டியது தான்,” என அவர் கூறினார்.

அவரது வீட்டின் கூரை தகரப்பந்தலால் வேயப்பட்டுள்ளது. மரத்துக்குப் பதிலாக இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் பலவீனமான ஒரு கொட்டகையாகவே அவரது வீடு உள்ளது. வெய்யில் காலத்தில் வெப்பத்தை வீசக் கூடிய கூரையாக அது உள்ளது. “நாங்கள் 2009 இறுதி யுத்தகாலப் பகுதியில் அகதிகளாக வவுனியாவுக்கு சென்று, அங்கு இரண்டு வருடங்களாக அடைத்து வைக்கப்பட்ட பின்னர், மீளக் குடியேறும்போது தந்த ஒரு தகரப்பந்தல்தான் இந்த வீடு. நான், சீமெந்துக் கற்களை வாங்கி அந்தப் பந்தலைச் சுற்றி சுவர் கட்டியுள்ளேன். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் செல் தாக்குதலில் எனது அப்பா அந்த இடத்திலேயே பலியானார். எனது தாயாரின் காலில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது,” என அவர் விளக்கினார்.

அதே இடத்தைச் சேர்ந்த இளம் சாரதியான ஆர். செந்தூரனின் வீட்டுக்கு சென்றபோது, அவரது வீட்டின் பாதி இடத்திற்குள் தண்ணீர் புகுந்து நிரம்பிக்கொண்டிருந்தது. அவரது மனைவி 50 நாட்களுக்கு முன்னர்தான் குழந்தையொன்றைப் பிரசவித்திருந்தார். ஈரத்திலும் குளிரிலும் இருந்து தப்புவதற்காக அவர்கள் ஒரு மரக் கட்டிலையே பாவிக்கின்றனர். “சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் வந்தபோது அருகில் இருக்கும் முன்பள்ளிக் கட்டிடத்தில் தங்கி, வெள்ளம் வடிந்த பின்னர் வீட்டுக்குத் திரும்பினோம், ஆனால் மீண்டும் வெள்ளம் வந்துவிட்டது” என அவர் கூறினார்

செந்தூரன் மேலும் கூறியதாவது: “எனது மனைவி இந்த இடத்தில் தான் பிறந்து வளர்ந்துள்ளார். நாங்கள் வருடாவருடம் இந்த மாதிரியான துன்பத்தையே அனுபவித்து வருகின்றோம். இது ஒரு மேய்ச்சல் தரை என்று கூறி அதிகாரிகள் எமக்கு வீட்டுத் திட்டம் தர மறுக்கின்றார்கள். வேறு நல்ல இடம் கேட்டபோது, இந்த இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தைக் காட்டுகின்றார்கள். எமது தொழில் வாழ்வாதாரம் எல்லாம் இங்கிருக்கும்போது, எப்படி நாங்கள் தூர இடங்களுக்கு செல்ல முடியும்? அருகிலேயே குடியிருப்புக்கு தகுந்த நிலத்தை தரலாம்தானே. இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்து பார்க்கவில்லை. தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே வருவார்கள் இவ்வாறான நேரங்களில் எங்களை வந்து பார்ப்பதில்லை” என்று குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள கிளிநொச்சி முருகானந்தா கனிஷ்ட வித்தியாலயம்

எமது நிருபர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சமடைந்திருந்த பன்னங்கண்டி வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி முருகானந்தா கனிஷ்ட்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர். இந்தப் பாடசாலைகளுக்கு அப்போது தான் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்து வெளியேறி இந்தப் பாடசாலைகளுக்குள் வந்திருந்தார்கள். தாங்கள் தங்குவதற்கான இடத்தினை தாங்களே ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். சில தனியார்கள் அவர்களுக்கு தற்காலிகமாக பேக்கரி உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.

பாடசாலைக் கட்டிடங்கள் திறந்த நிலையில் இருப்பதால் மக்கள் குறிப்பாக சிறுவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள், நுளம்பு வருவதை தடுக்க முடியவில்லை. காற்றினால் தண்ணீர் பாடசாலைக்குள்ளும் விசிறி அடித்தது. அவர்கள் உறங்குவதற்காக தங்களிடம் இருக்கும் துணிகளையே பயன்படுத்தப்போவதாக கூறினார்கள். பாடசாலையில் உள்ள மலசல கூடங்கள் போதுமானவை அல்ல. சுகாதார திட்டமிடல்கள் இருக்கவில்லை.

கணேசன் தங்கையாவின் வீட்டு வாசலில் வெள்ள நீர் நிரம்பிக்கொண்டிருந்த போது

பன்னங்கண்டி வித்தியாலயத்தில் தங்கியுள்ள விவசாயியான 60 வயது கணேசன் தங்கையா, “நாங்கள் 1977 காலப்பகுதியில் இனப் பிரச்சினை காரணமாக, மலையகத்தில் இருந்து இங்கு வந்து குடியேறி வாழ்ந்து வருகின்றோம்” என்றார். “அடிக்கடி இவ்வாறு, வெள்ளப் பெருக்கில் சிக்கிக்கொள்கிறோம், யுத்தத்தினாலும் அகதிகளாக ஓடினோம் வெள்ளத்தினாலும் அகதிகளாக வாழ்கின்றோம். இந்த இடத்தில் நாங்கள் விவசாயம் செய்கின்ற காரணத்தினால், இந்த இடத்தைவிட்டு எங்கும் செல்ல முடியாதுள்ளது,” என மேலும் கூறினார்.

“நான் 10 ஏக்கர் நிலத்தில் நெல் விதைத்துள்ளேன். எனது பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இம்முறை எனக்கு நட்டம் ஏற்படும். 72 கிலோ உர மூடை 8,000ம் ரூபா முதல் 9,000ம் வரை விற்கப்படுகின்றது. இவ்வாறு எல்லா விவசாய உள்ளீடுகளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதனால் எமது விவசாயத்தில் இலாபம் ஈட்டுவது என்பது மிகவும் கஸ்ட்டமானது” என தங்கையா தெரிவித்தார்.

போரில் தன் அனுபவத்தையும் அவர் விளக்கினார்: “அதை யாராலும் மறக்க முடியாது. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். எமது கண்முன்னால் பலர் செத்து மடிந்தார்கள். எந்த சர்வதேச நாடுகளும் எங்களைப் பாதுகாக்க முன்வரவில்லை. நாங்கள், பல இடங்களுக்கு அகதிகளாக ஓடிச் சென்று, இறுதியில் வவுனியா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தோம். பின்னர், எமது ஊரில் குடியேறினோம். அதிஷ்டவசமாக எமது குடும்பத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை, ஆனால் எமது சொத்துக்கள் அனைத்தும் அழிந்துபோயின. மீளக்குடியேறிய போதிலும், எமக்கான வாழ்வாதாரங்கள் சரியான வகையில் வழங்கப்படவில்லை.”

அந்த முகாமில் தங்கியுள்ள உறவினரைப் பார்க்க வந்திருந்த கே. ராஜா, தமிழ் தேசியவாத முதலாளித்துவ அரசியல் கட்சிகளை குற்றஞ்சாட்டினார்: “இந்த மக்கள் எவ்வளவு காலம்தான் இப்படி அலைய முடியும்? தேர்தல் காலங்களில் மக்களிடம் வருகை தரும் அரசியல்வாதிகள் இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வருவதில்லை. மக்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்தி தமது தேர்தல் அரசியலை நடத்துவதற்காக வருவார்கள். தேர்தல்களின் போது மட்டும், எமது மக்கள் எமது தேசம் என்று கூறுவார்கள், பின்னர் மக்களுடன் அவர்கள் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்வதில்லை” என்று தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கில் பத்தாயிரக்கணக்கானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைதும் இனவாதப் பிரச்சாரமும்

ஏகாதிபத்திய போர் தயாரிப்புகளுக்கு மத்தியில் இலங்கை தமிழ் கட்சி தலைவர்களை அமெரிக்க தூதுவர் சந்தித்தார்

Loading