யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைதும் இனவாதப் பிரச்சாரமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 5 அன்று, ஆறு யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மற்றும் மாதவனையில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்னர்.

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக கால்நடை விவசாயிகளின் முன்னெடுக்கும் போரட்டத்தின் ஒரு பகுதி (Photo: Facebook)

இந்த மாணவர்கள் கால்நடை மேய்ச்சல் தரை நிலத்தை பாதுகாக்க விவசாயிகளால் மேற்கொள்ளப்பபடும் பிரச்சாரத்திலேயே பங்குபற்றி இருந்தனர். அரச அதிகாரிகளால் மேய்ச்சல் தரையில் சுமார் 150 ஏக்கர் அளவில் சிங்கள விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்து அங்கு அவர்களை குடியேற்றுவதை எதிர்த்தே செப்டம்பர் 15 முதல் இந்தப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (JUSU) விடுத்துள்ள அறிக்கையின் படி, மாணவர்கள் பயணித்த பேரூந்தை இடை மறித்த பொலிஸார் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்க உத்தரவிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவர்களை பொலிஸ் தாக்கியதாக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊர்வத்தின் ஒரு பகுதி. (Photo: Facebook)

வி. விதுஸன், டி. லஜிதன், டி. சிந்துஷன், எஸ். கஜன், நெவில் குமார் மற்றும கெ. ரொபின்சன் ஆகியோரே கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஆவார்.

அவர்கள் சிந்துவெளி பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் ஏறாவூர் நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர், ஆனாலும் அவர்கள் தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தாமையால் பொலிசார் 7 ஆம் திகதியே அவர்களை விடுவித்தனர். அவர்கள் ”சட்டவிரோதமாக ஒன்று கூடியமை,” அதிவேக வீதிச் சட்டத்தின் கீழ் ”சேதம் விளைவித்தமை” ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கையும் எதிர்நோக்குகிறார்கள. அந்த வழக்கானது நவம்பர் 17 அன்று ஏறாவுர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்குபற்றியமைக்காக கைது செய்யப்பட்ட மாணவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர் (Photo: Facebook)

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் மயிலத்தமடுவில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமைகளை மீறும் பொலிசாரின் அடக்குமுறை நடவடிக்கையை கண்டிக்கின்றன. நாம், மாணவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.

பால் உற்பத்தி மட்டக்களப்பில் உள்ள விவசாயிகளின் பிரதான வருவாய்களில் ஒன்றாகும். மகாவலி கங்கையின் கரையில் அமைந்துள்ள மயிலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்கள் பசு மற்றும் காளை உட்பட சுமார் 300,00 கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையாக காணப்படுகின்றன.

1972 இல் விசேட வர்த்தமானி மூலம் இந்த இரண்டு மேய்ச்சல் வெளிகளும் தமிழ் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அவர்கள் 1983 இல் இருந்து பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களின் 26 வருட கால இனவாத யுத்தத்தின் போது அடக்குமுறைகளை எதிர்கொண்டனர்.

2007-2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொடூரமான இனவாத போரின் இறுதிக் கட்டத்தில் இந்த பிரதேசத்தில் இருந்த விவசாயிகள், அந்த மாவட்டதில் இருந்த ஏனையவர்களைப் போலவே வெளியேற்றப்பட்டனர்.

2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், விவசாயிகள் மாவட்ட அரச செயலாளரின் கட்டளைக்கு அமைய 2010 இல் மீண்டும் தமது இடங்களுக்கு குடியேறி முன்னர் போலவே இந்த நிலங்களைப் பயன்படுத்தினர். தமது அன்றாடத் தேவைகளைப் நிறைவுசெய்யப் போராடுகின்ற இந்த மக்கள் வறுமையில் வாடினர். இராணுவம் மற்றும் சிங்கள பேரினவாதக் குழுக்களால் ஊக்குவிக்கப்பட்டு சில வறிய சிங்கள விவசாயிகள் இந்த வளமான மேய்ச்சல் தரையின் ஒரு பகுதியல் குடியேற்றப்பட்டனர்.

2010 இல் இருந்து சுமார் 4,000ம் மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட மேய்ச்சல் தரை காரணமாக அவர்களின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 300 லீற்றர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரம், கால்நடைகளுக்கான தீவனங்களை அதிகவிலையில் வாங்கும் அவர்கள் தமது பாலை குறைந்த விலைக்கே விற்பனை செய்கிறார்கள்

சிங்கள விவசாயிகளுக்கு 150 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்ய அங்கீராம் வழங்கிய புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆல் 2020 இல் இருந்து இந்த நெருக்கடி தீவிரமடைந்தது.

அவர், 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர உருவாக்கப்பட்ட வலதுசாரி அமைப்புகளில் ஒன்றான வியத்மகவின் செயற்பாட்டாளராக இருந்தார். யகம்பத் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை என தனது செயலை நியாயப்படுத்தினார். இந்தக் கூற்று பொய்யானது.

யகம்பத், இராணுவம், பொலிஸ் மற்றும் சிங்கள பேரினவாதக் குழுக்கள் சிங்கள விவசாயிகளைக் குடியேற்றுவதில் அக்கறை காட்டுவது அந்த ஏழைகள் மீதான கரிசனையில் அல்ல. இந்த நடவடிக்கைகள் கொழும்பு சிங்கள ஆளும் உயரடுக்கின் நீண்டகால கொள்கையைச் சுட்டிக்காட்டுகின்றது.

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து அவர்கள் நிலமற்ற ஏழைச் சிங்கள விவசாயிகளின் துன்பங்களை சுரண்டிக் கொண்டுள்ளதோடு தமிழ் மற்றும் முஸ்லீம்கள் பெரும்பாண்மையாக வாழுகின்ற குறிப்பாக கிழக்கில் அவர்களைச் குடியமர்த்தும் தீட்டங்களைத் தொடங்கினர். சிங்கள ஏழைகளை தமிழ் மற்றும் முஸ்லீம் ஏழைகளுக்கு எதிராக நிறுத்துவதே அவர்களின் விஷமத்தனமான நோக்கமாக இருந்து வருகிறது.

இது தொழிலாள வர்க்கத்தையும் ஏழைகளையும் பிளவுபடுத்தவும், அதே போல் தமது முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதன் பேரிலும் இனவாத அமைதியின்மையை துண்டிவிடுதற்கு கொழும்பு அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் பின்பற்றும் மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும். 1948 இல் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் பேசும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியுரிமையை அபகரித்து இனவாதப் பாகுபாட்டை தூண்டிவிட்டது. இதுவே தொடர்ந்துவந்த தசாப்தங்களில் தீவிரப்படுத்தப்பட்டு 1983 இல் இனவாதப் போரில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்த இனவாதத்திற்கு எண்ணெய் வார்த்து, மட்டக்களப்பில் உள்ள பௌத்த விகாரையை தளமாகக் கொண்ட பொளத்த பிக்குவான அம்பிட்டிய சுமனரத்தின ஒக்டோபர் 15 அன்று முன்னாள் ஆளுநர் யகம்பத்தின் பங்குபற்றுதலுடன் பௌத்த சிலை ஒன்றை மேய்ச்சல் தரை பகுதியில் நிறுவியுள்ளார். ”ஒவ்வொரு தமிழனையும் துண்டு துண்டாக வெட்டுவேன்” என அவர் ஆவேசப்படும் வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்கமோ அல்லது பொலிசோ இந்தப் பிக்குவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பௌத்த ஸ்தாபனங்கள் அவரை கைது செய்யக் கூடாது என வலியுறுத்தி உடனடியாகத் தலையீடு செய்தன. அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதியான மெதகம தம்மாநந்த, ”அவரின் (சுமனரத்ன) நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது தான், இருப்பினும் அவரும் அவரது சமூகமும் எதிர்நோக்கியுள்ள சில தனித்துவமான பிரச்சினைகள் அவர்களை அவ்வாறு செய்யச் துாண்டியுள்ளன” மோர்னிங் செய்தித் தாளுக்கு தெரிவித்தார்.

பௌத்த ஸ்தாபனம் நாட்டில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபாண்மையினருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தை ஊக்குவிப்பதில் பிரதானமான தளமாக உள்ளன. பௌத்தத்தை அவமதித்தாக போலி குற்றங்களை சுமத்தி நபர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க அவை பிரச்சாரம் செய்கின்றன.

2019 இல், விருது பெற்ற இலங்கை எழுத்தாளர் சத்திக சத்குமார தனது முகநூலில் பதிவிட்ட ஒரு சிறு கதையில் பொளத்தத்தை இழிவுபடுத்தியதாக கூறி, பௌத்த தீவிரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்

2020 இல், கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

நீதிமன்ற வழக்குகளில் அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என நிரூபிக்கபட்டன.

2023 மே மாதத்தில், இலங்கையின் நகைச்சுவை நடிகையான நடஷா எதிரிசூரி, ஏப்பரல் மாதம் நடத்திய ”மோடாபிமானய” (முட்டாள்களின் பெருமை) என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் போது ”பௌத்தத்தை அவமதித்ததாக” குற்றம்சாட்டப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்ட்டார்.

மயிலத்தமடு, மாதவனை விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் ஒரு தனிப்பட்ட நடவடிக்கை கிடையாது. கடந்த மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் இடங்களை தேடுவதற்கு அரசாங்கத்தின் அணுசரனையுடன் பௌத்த பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். இதன் நோக்கம், தொல்பொருள் தளங்களை கண்டுபிடிப்பது அன்றி, பௌத்த விகாரைகளை கட்டுவதும் இனவாத அமைதியின்மையைத் துாண்டி விடுவதுமே ஆகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்துார்மலை பிரதேசத்தில் தீவிரமான பிரச்சாரம் இடம்பெற்றது. இந்த சர்ச்சைக்குரிய இடத்தில் அரசாங்கம், இராணுவம் மற்றும் பொலிசின் ஆதரவுடன் சிங்கள-பௌத்த குழுக்கள் அங்கு புராதன பௌத்த கோவில் இருந்ததாக கூறி ஒரு புதிய விகாரையை கட்டியெழுப்பி வருகின்றன. இந்த இடத்தில் இந்துக்களின் சிவன் வழிபாட்டுத் தளம் ஏற்கனவே உள்ளது.

மயிலத்தமடு, மாதவனையில் பதற்றம் அதிகரிக்கும் போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ் தேசியவாதக் கட்சிகள் ஏழைத் தமிழர்களின் துயரங்களைச் சுரண்டிக்கொள்ளவும், அவர்களைச் ஏழைச் சிங்கள விவசாயிகளுக்கு எதிராக நிறுத்தவும் இதில் தலையீடு செய்கின்றன.

அவர்களுக்குத் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது எவ்வித அனுதாபமும் கிடையாது. மாறாக, வடக்கு கிழக்கில் அதிகாரப் பரவலாக்கலுக்காக கொழும்பு அரசாங்கத்துடன் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் பேரம் பேசுவதற்கான தங்களது பிரச்சாரத்துக்கே தமிழர்களின் அவல நிலையை சுரண்டிக்கொள்ள முற்படுகின்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ”நாங்கள் இந்த விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்தோ-பசிபிக் ஆணையாளர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகாரச் செயலாளர்களிடமும் சுட்டிக்காட்டியுள்ளோம். இது ஒரு சாதாரண பிரச்சினை கிடையாது” என கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியில் ஒரு தலைவருமான எம்.ஏ. சுமந்திரன், குடியமர்த்தப்பட்ட இந்த விவசாயிகளை அகற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆனால் அது செயற்படுத்தப்படாமல் உள்ளது எனவும் கூறினார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதியுடன் கலந்துரையாடியதாகவும், ஜனாதிபதி இந்த விவசாயிகளை வௌியேற்றுவதாக உறுதியளித்த போதிலும், எதுவும் நடக்கவில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்தார். ”நாங்கள் மீண்டும் இந்த உயர் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த நீதிமன்றில் மேலமுறையீடு செய்ய உள்ளோம்,” என சுமந்திரன் கூறினார்.

இந்தக் கட்சிகளின் கொள்கைகள் சிங்கள ஆளும் வர்க்கத்தின் இனவாத கொள்கைகளை பிரதிபலிப்பதோடு, சர்வதேச சக்திகளிடம் மன்றாடுகின்றன. அவை தமிழ் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாக்க அமெரிக்காவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் மூலோபாய நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும் இந்த கட்சிகளையும் அவற்றின் இனவாதக் கொள்கைகளையுமே பின்பற்றி வருகின்றது.

1948 சுதந்திரம் எனப்படுவதில் இருந்து ஆளும் வர்க்கத்தால் தமிழ் சிறுபாண்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நீண்டகால விசமத்தனமான இனவாத பாகுபாடே தலை தூக்கி உள்ளது. சாராம்சத்தில் தமிழ் சிங்கள தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் வறுமை மற்றும் அடக்குமுறை ஆட்சியின் கீழ் அனைத்து வெகுஜனங்களையும் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு முதலாளித்துவ முறைமையைப் பாதுகாக்கவுமே இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் தற்போதைய காலகட்டத்தில் பிரதானமாக இனவாத பதற்றங்களை தூண்டிவிடுவது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமாகும். கிழக்கு மாகாணத்தில் விவசாயிகளின் மேய்ச்சல் தரை பிரச்சினை இதன் ஒரு பகுதியே ஆகும். தொழிலாளர்கள் இந்த ஏழைகளுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள எதிர்க்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஏழை உழைக்கும் மக்களின் போராட்டங்களின் ஒரு புதிய சுற்று வெடிப்பையிட்டு ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது. தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள தாக்குதல்களை ஆதரிக்கின்றன.

சோ.ச.க. மற்றும ஐ.வை.எஸ்.எஸ்.இ. சர்வதேச சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏழைத் தொழிலாளர்களை அணிதிரட்டவும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகவும் போராடுகின்றது.

இனவாத பாகுபாடுகளைப் பயன்படுத்தும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் இனவாதத்தை ஒழிக்க முடியாது. அதனாலேயே தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைக்கின்றோம்.

Loading