இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்கு மூன்றாம் ஆண்டை எட்டியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த மார்ச் 15 அன்று, 22 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சாமிமலையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட வழக்கு, ஜூன் 2 ஆம் தேதிக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டமா அதிபர் இதுவரை எந்த குற்றச்சாட்டையும் இவர்கள்மீது தாக்கல் செய்யவில்லை.

28 ஆகஸ்ட் 2022 அன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்காக தொழிலாளர்கள் மஸ்கெலியாவில் உள்ள சாமிமலையை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர். 

முடிவில்லாது ஒத்திவைக்கப்படும் இந்த வழக்கும், மற்றும் துன்புறுத்தப்படும் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசும் மற்றும் சட்டமா அதிபரும் குற்றச்சாட்டுகளை சுமத்தத் தவறியமையும், இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என சோசலிச சமத்துவக் கட்சியும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் வலியுறுத்தி வருவதை உறுதிப்படுத்துகிறது.

சுமார் 500 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் பெப்ரவரி 2, 2021 அன்று, 1,000 ரூபாய் ($US3.13) தினசரி ஊதியத்தைக் கோரி வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். பெப்ரவரி 5 அன்று இதே கோரிக்கைகளை முன்வைத்து இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் (இ.தொ.கா.) அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்திலும் இவர்கள் இணைந்து கொண்டனர்.

நிர்வாகத்தின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மார்ச் 26 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். பெப்ரவரி 17 அன்று நடந்த போராட்டத்தின் போது தோட்ட முகாமையாளரை மற்றும் உதவி முகாமையாளரை உடல்ரீதியாக தாக்கியதாகவும், முகாமையாளரின் பங்களாவை சேதப்படுத்தியதாகவும் நிர்வாகம் பொய்யாக குற்றம் சாட்டிய பின்னர், 22 தொழிலாளர்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 22 பேர் உட்பட 34 தொழிலாளர்கள், ஓல்டன் தோட்டத்தை கட்டுப்படுத்தும் ஹொரண பெருந்தோட்டக் கம்பனியால், குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவித விசாரணையும் இன்றி விரைவாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பழிவாங்கலில் ஈடுபட்ட இ.தொ.கா. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தொழிலாளர்களின் பெயர்களை கம்பெனிக்கு வழங்கியது.

இந்த சோடிக்கப்பட்ட வழக்கு தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுவரும் நிலையில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொழிலாளர்கள் 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராக வேண்டியிருந்தது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் பேருந்து பயணத்திற்கு 340 ரூபாயும், சட்டத்தரணியின் கட்டணமாக 1,500 ரூபாயும் செலவாகிறது. ஹொரண பெருந்தோட்டக் கம்பனி கொழும்பில் இருந்து நான்கைந்து சட்டத்தரணிகளை வேலைக்கு அமர்த்தி வைத்துள்ளதுடன், இந்த வழக்குக்கு ஆடம்பரமாகச் செலவு செய்து தொழிலாளர்களை மேலும் தண்டிக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த வறுமையில் வாடும் தொழிலாளர்கள், வழக்கு தொடர்பான தொழிலாளர் நீதிமன்ற விசாரணைக்காக ஹட்டனுக்குச் செல்ல வேண்டும். கடந்த மார்ச் 21ஆம் தேதி, திட்டமிடப்பட்ட தொழிலாளர் நீதிமன்ற விசாரணை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில்: “இந்த வழக்கின் காரணமாக நாங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். இதனால், நான் வேறொரு தோட்டத்தில் சாதாரண வேலையைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். காலை 7.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி மாலை 6 மணிக்குத் திரும்புவதால் குழந்தைகளைக் கவனிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 1,000 (3 டொலர்கள்) ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அது எங்கள் சாப்பாட்டுக்குப் போதாது, இந்த நிலைமையில் நீதிமன்ற வழக்குகளுக்கு நாங்கள் எப்படி பணத்தை செலுத்துவது? என்று கேட்டார்.

'நான் தொழிலாளர் தேசிய சங்கத்தில் [NUW] உறுப்பினராக இருக்கிறேன். இந்த சங்கம் முன்பு அதன் உறுப்பினர்களுக்கான வழக்கறிஞர் கட்டணத்தை செலுத்துவதாக உறுதியளித்தது. ஆனால், இப்போது அதைச் செய்ய மறுக்கிறது. இ.தொ.கா. தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபோது, ​​நாங்கள் அதில் கலந்துகொண்டோம். ஆனால், இப்போது நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் எங்களை கைவிட்டுவிட்டன,” என்று அவர் கூறினார்.

22 பிராந்திய நிறுவனங்களுக்கு தோட்டங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும், அவை அரசாங்க சொத்தாகவே இருக்கின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்தான முகாமையாளரின் வாசஸ்தலத்தை சேதப்படுத்தியுள்ளதாகவும், இலங்கையில் பிணையில் வெளிவர முடியாத குற்றமாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், பொலிசார் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், தொழிலாளர்கள் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்.

இ.தொ.கா. இந்த பழிவாங்கலை வெளிப்படையாக ஆதரித்துள்ளது. அதே வேளையில், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட ஏனைய தோட்டத்துறை தொழிற்சங்கங்கள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் ஒழுங்கமைக்க மறுத்துள்ளதோடு, தோட்ட நிர்வாகத்தின் சோடிப்பு வழக்குக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றன.

கோவிட்-19 முடக்ககால நிவாரணம் கோரி வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.  [Photo: K. Kishanthan]

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான துன்புறுத்தலானது, அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் எதிரான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். குறைந்த ஊதியம், அதிகரித்த பணிச்சுமை மற்றும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

ஜூன் 2021 இல், ஹட்டனில் உள்ள வெலிஓயா தோட்டத்தில் கோவிட்-19 முடக்கத்தின் போது, ஐந்து தொழிலாளர்கள் அரசாங்கத்தின் உணவு நிவாரணத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர். வெலிஓயா தோட்ட தொழிலாளர்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்படவில்லை. அதே தோட்டத்தில் வசிக்கும் பத்து தொழிலாளர்கள், அதே போல் ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் நடத்துனர் மற்றும் ஒரு சமுர்த்தி (அரசு நலன்புரி) தொழிலாளி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டதுக்காக ஒரு விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

செப்டம்பர் 29, 2021 அன்று, ஒரு பெண் தொழிலாளியான பி. பொன்னீர்செல்வி பாதிக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலைநிறுத்தக்காரர்களுக்கும் தோட்ட முகவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, 11 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். கடுமையான நிபந்தனைகளில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்கள், தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

ஒக்டோபர் 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் வழியில் பாதிக்கப்பட்ட, கடுமையான பிணை நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்ட கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள்.

இலங்கையின் முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்துள்ள தோட்டத் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாகவும் செயற்படுகின்றன. இத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படுகின்றன. அரசுக்கு சேவகம் செய்யும் இவர்கள், சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை அனுபவிக்கிறார்கள். தேர்தல்களின் போது தொழிலாளர்களின் வாக்குகளைச் சுரண்டும் இந்தக் கட்சிகள், தங்கள் உறுப்பினர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதோடு, அரசாங்கம் திணிக்கும் கொள்கைகளையும் ஆதரிக்கின்றன.

இந்த தொழிற்சங்கங்கள் அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளையும் நாசமாக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியால் அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளையும் ஆதரிக்கின்றன. அத்தோடு, அதிக உற்பத்தித்திறன் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கான தோட்ட நிர்வாகங்களின் கோரிக்கைகளையும் இவை ஆதரிக்கின்றன.

விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் உள்கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான், மார்ச் 10 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் நடவடிக்கை எடுப்பதைக் கண்டனம் செய்தார். 'இந்தப் போராட்டங்களை அனுமதிக்க கூடாது, ஏனெனில் அவை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி' என்று அவர் அறிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவுடன் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சாராமல், சுயாதீனமான ஒரு நடவடிக்கைக் குழுவை நிறுவியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடரும் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தவும் கோரும் பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

பெப்ரவரி 6 அன்று தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி: 

“ஓல்டன், வெலிஓயா மற்றும் கட்டுக்கலை தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவை அங்கீகரித்துள்ளன. இவையும் மற்ற அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும் இந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் நிராகரித்துள்ளன.

“தேயிலை தொழில்துறையின் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்களாகிய நாங்கள் பொறுப்பல்ல. இது முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாகும். சமூக அவலங்களை எதிர்கொண்டு தலைமுறை தலைமுறையாக உழைத்து, தேயிலை நிறுவனங்கள் குவிக்கும் பாரிய இலாபத்தின் உண்மையான உற்பத்தியாளர்கள் நாங்களே. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் தற்போதைய விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக எமது வாழ்க்கை நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.

'அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதற்கும் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான எங்களது பிரச்சாரம், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

'பாதிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தவும், அனைத்து பொலிஸ் குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளக் கோரியும், கீழே உள்ள முகவரிகளுக்கு கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம், இந்த பாதுகாப்பு பிரச்சாரத்தை உருவாக்க அனைத்து தொழிலாளர்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

“தயவுசெய்து உங்களது கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் நகல்களை, இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவுக்கு (PACSL) அனுப்புவதோடு, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எங்களைத் தொடர்பு கொள்ளவும். இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவை கட்டியெழுப்புவதற்காக பெருந்தோட்டங்களிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் முக்கிய கூட்டங்களை நடத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.”

தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரையும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Attorney General
Mr. Sanjay Rajaratnam
No. 159, Hulftsdorp, Colombo 12.
Email:administration@attorneygeneral.gov.lk

Secretary, Ministry of Public Security
Mr. P.V. Gunatillake
Email:civilsecurity@defence.lk

Inspector General of Police
Mr. C. D. Wickramaratne
Email:telligp@police.lk

Send copies to the SLPAC:
Email:plantationacsl@gmail.com

Loading