இலங்கை ஜனாதிபதி மேலும் சிக்கன நடவடிக்கைகளை கோருகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 2 அன்று ஜனாதிபதி செயலக ஊழியர்களுக்கு நிகழ்த்திய தனது புத்தாண்டு உரையில் அரசாங்க ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

“ஒவ்வொரு நபரின் கடமைகளும் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மற்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே என மட்டுப்படுத்தப்பட முடியாது. அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள், உங்கள் அனைவரின் ஆதரவுடன் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று, இயல்பு நிலையை மீட்டெடுப்பேன் என்று நம்புகிறேன்” என்று அவர் அறிவித்தார்.

வேலைநிறுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்கள் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் கட்டிடத்திற்கு வெளியே 9 ஜனவரி 2023 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம். [Photo: WSWS]

விக்கிரமசிங்கவின் செய்தி, இலங்கையில் ஆமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீதும் ஏழைகள் மீதும் சுமத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கையை 'முன்னோக்கி' கொண்டு செல்வது என ஜனாதிபதி கூறுவதன் அர்த்தம் அரசாங்கத்தின் 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதே ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) ஆணையிடப்பட்டு, டிசம்பர் 8 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டம், அரசாங்க செலவினங்களில் ஆழமான வெட்டுக்களைக் கொண்டுள்ளது. இதில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது பெரும் வரி உயர்வுகள், விலை மானிய வெட்டுக்கள், அரசுத் துறையின் பாரிய வேலை வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கலும் அடங்கும்.

விக்கிரமசிங்க ஓய்வு பெறும் வயதை 65 இல் இருந்து 60 ஆகக் குறைத்த பின்னர், டிசம்பர் 31 அன்று வழக்கத்தை விட எட்டு மடங்கு அதிகமாக 30,000 அரச ஊழியர்கள் திடீரென ஓய்வு பெற்றதாக பொது நிர்வாக அமைச்சு சமீபத்தில் அறிவித்தது. அரசாங்கம் ஏற்கனவே ஆட்சேர்ப்பை முடக்கியுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார, அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

ஊழியர் பற்றாக்குறையின் தாக்கம் புகையிரத சேவையில் உடனடியாக உணரப்பட்டது. ஆண்டின் முதல் வேலை நாளில் குறைந்தது 11 ரயில்களை ரத்து செய்யவும் வாரத்தில் சேவைகளைக் குறைக்கவும் புகையிரத திணைக்களம் நிர்ப்பந்திக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த, வருடாந்தம் 4,000 ஆசிரியர்கள் பொதுவாக ஓய்வு பெறுவதாகவும் ஆனால் இம்முறை ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 10,000 முதல் 12,000 வரை அதிகரித்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டார். 4,500க்கும் மேற்பட்ட அதிபர்களுக்கு பற்றாக்குறை உள்ளதுடன் சுமார் 4.3 மில்லியன் மாணவர்களைக் கையாள்வதில் அமைச்சு பல தடைகளை எதிர்கொண்டதாக அவர் கூறினார். இதுவே வேலை நேரம் நீட்டிப்பு மற்றும் நீண்ட வேலை வாரத்திற்கான விக்ரமசிங்கவின் கோரிக்கையின் பின்னணியாகும்.

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்ட நிரல் முன்னெடுக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை விக்கிரமசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “இந்த [தனியார்மயமாக்கும் அரசு] நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்க ஒரு உரிமை நிறுவனம் அமைக்கப்படும். இம்மாதம் இரண்டாவது வாரத்தில் அது உருவாகும்” என்று அவர் அறிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, லங்கா ஹொஸ்பிடல்ஸ், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் வாட்டர்ஸ் எட்ஜ் மற்றும் ஹில்டன் கொழும்பு ஹோட்டல்களை தனியார்மயமாக்குவது அல்லது மறுசீரமைப்பது குறித்து கொழும்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.

விக்கிரமசிங்க, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து, அவர்கள் ஏன் இந்த நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்தார்கள் என்பதை விளக்கி அறிக்கைகளை கோரியுள்ளார். இந்த உத்தரவு, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் போனஸ் கொடுப்பதை நிறுத்துவது மட்டுமல்ல, தொழிலாள வர்க்கத்தின் பிற உரிமைகள் பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் ஆகும்.

2023 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் நீங்கள் சம்பாதிக்குமளவுக்கான வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது பல அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாயை விளைபயனுடன் வெட்டியது. இலங்கையில் அதிக பணவீக்கம் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி, தொழிலாளர்களின் ஊதியத்தின் மதிப்பை மேலும் சிதைத்து வரும் நிலையிலேயே இது நடந்துள்ளது. உயர் வரி விகிதங்களை நியாயப்படுத்திய திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, 'இலங்கை இன்னும் கடினமான சூழ்நிலையில் உள்ளதுடன் [மேலும்] மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது,' என்றார்

மின் கட்டணத்தை சராசரியாக 65 சதவீதம் உயர்த்த அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகரிக்கப்பட்ட 75 சதவீதத்துக்கும் மேலான அதிகரிப்பாகும். சமீபத்திய அதிகரிப்பானது குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்கள் குழுவை இலக்கு வைத்ததாகும். அவர்களின் மின் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது.

பிரதானமாக, பெருவணிகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சடித்ததன் காரணமாக, செப்டம்பரில் 73 சதவீதம் என்ற சாதனை அளவை எட்டிய பின்னர், இலங்கையில் பணவீக்கம் தற்போது 57 சதவீதமாக உள்ளது. உலகிலேயே அதிக பணவீக்கம் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள முதல் பத்து நாடுகளில் இலங்கையும் உள்ளது. உலக உணவுத் திட்டத்தின்படி, 6.3 மில்லியன் மக்கள் அல்லது ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் 'உணவுப் பாதுகாப்பற்றவர்கள்' மற்றும் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்கள் ஆவர்.

2022 ஆம் ஆண்டில், வெளிநாட்டு கையிருப்பு வறண்டு போனதால், இலங்கை அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ போரினால் நாட்டின் கடன் நெருக்கடி தீவிரமடைந்தது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், கடன் மறுசீரமைப்பு மற்றும் இரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு உடன்பட்டு 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக சர்வதேசநாணய நிதியத்துடன் கொழும்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. எவ்வாறாயினும், கடன் வழங்கும் நாடுகள், இலங்கைக்கான சலுகைக் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு உடன்படத் தவறியதால், சர்வதேச நாணய நிதியம் அதன் பிணை எடுப்பு கடனை வழங்குவதை தாமதப்படுத்த வழிவகுத்தது.

ஜனவரி 1 அன்று, CBS இன் 'ஃபேஸ் த நேஷன்' நிகழ்ச்சியில் தோன்றிய சர்வதேச நாணயநிதிய நிர்வாக இயக்குனர் கிரிஸ்டலினா ஜியோர்ஜிவா, 'வளர்ந்து வரும் சந்தைகளில் 25 சதவிகிதம் இக்கட்டான பகுதிகளில் வர்த்தகம் செய்து வருவதால், உலகப் பொருளாதாரம் ஒரு மோசமான திகைப்பில் இருக்கக்கூடும். அதனால்தான் இந்த நாடுகளுக்கான கடன் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச நாணய நிதியம் மிகவும் கடினமாக உழைக்கிறது,” என்று எச்சரித்தார்.

உலகப் பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு இந்த ஆண்டு மந்தநிலையால் பாதிக்கப்பட்டு, 2022 ஐ விட 'கடினமான' ஆண்டை எதிர்கொள்ளும், என்றுஜோர்ஜீவா தொடர்ந்தார். உக்ரைனில் போர், விலைவாசி உயர்வு, அதிக வட்டி விகிதங்கள் மற்றும் சீனாவில் கோவிட்-19 பரவலும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர் மேலும் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், இலங்கை ஒருபுறம் இருக்க, எந்தவொரு நாட்டிற்கும் நிதி மீட்சி ஏற்படாது, மாறாக பொருளாதார நெருக்கடியே ஆழமடையும்.

இலங்கையின் பொருளாதாரம் 10 வீதத்தால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ள அதேவேளை, கடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அது கிட்டத்தட்ட 12 வீதத்தால் சுருங்கியது. சர்வதேசநாணய நிதியம் கட்டளையிட்ட கொள்கைகள் மற்றும் உலகளாவிய நெருக்கடியின் தாக்கமானது அதிக சுருக்க விகிதத்துக்கு பகுதியளவு காரணமாக இருந்தது.

விக்கிரமசிங்கவின் சிக்கன நடவடிக்கைக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. நேற்று பொது மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை ஊழியர்கள் வேலை வெட்டு மற்றும் வட்டி விகித உயர்வுகளை எதிர்த்தும் ஊதிய உயர்வு கோரியும் வேலை நிறுத்தத்துக்காக வெளிநடப்பு செய்தனர்.

டிசம்பரில், ஆயிரக்கணக்கான காப்புறுதி, வங்கி, மின்சாரம், இரயில், தபால், சுகாதாரம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் வேலை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களைத் தடுத்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை ஊக்குவித்தன. உதாரணமாக, நேற்று, சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவமனை ஊழியர்கள் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியை 'புரிந்து கொண்டுள்ளனர்' என்றும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கத்திடம் இருந்து ஒரு வாக்குறுதியே அவர்களுக்குத் தேவை என்றும் அறிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள்விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) போன்ற எதிர்க் கட்சிகளுக்கு விக்கிரமசிங்கவின் கொடூரமான வரவு செலவுத் திட்ட வெட்டு நடவடிக்கைகள் சம்பந்தமாக அடிப்படை முரண்பாடுகள் கிடையாது.

ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி., தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் நிலவும் வெகுஜன எதிர்ப்பை திசைதிருப்பி அதை சுரண்டிக்கொள்ளும் முயற்சியில் பொதுத் தேர்தல்களைக் கோருகின்றன. அவை ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதே சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளை செயல்படுத்தும்.

நேற்று, ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச, 'வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் மற்றவர்களை விட என்னை அதிகம் நம்புகிறார்கள்' என்று பெருமையாக கூறினார். ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தனது அரசாங்கத்தின் கீழ் 'இரண்டு வருட கடின உழைப்பினால்' இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று பிரகடனம் செய்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொழிலாளர்கள் இந்த முதலாளித்துவக் கட்சிகளையும் அவற்றின் தொழிற்சங்கங்களையும் நிராகரிக்க வேண்டும். மாறாக, தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத் தளங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை குழுக்கள் பின்வருவனவற்றை கோர வேண்டும்:

*சர்வதேச நாணயநிதிய சிக்கன திட்ட நிரல் வேண்டாம்! ஊதிய வெட்டு மற்றும் வேலை வெட்டுக்கள் வேண்டாம்! ஓய்வூதிய வெட்டு வேண்டாம்!

* அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ப ஒழுக்கமான ஊதியம்வேண்டும்! உயர் பணவீக்கத்தை எதிர்கொள்ள ஓய்வூதியத்தை கண்ணியமான அளவில் உயர்த்து!

*உதவி தேவைப்படும் அனைவருக்கும் நலத்திட்டங்கள் வேண்டும்!

*அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! அதி செல்வந்தர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்கு!

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான மற்றும் சோசலிச கொள்கைகளுக்கான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான வழிமுறையாக, நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப பிரச்சாரம் செய்து வருகிறது.

அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்தல் மற்றும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களைத் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல் உட்பட, சோசலிச நடவடிக்கைகளுக்கு வழி வகுத்து, சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை தொழிலாளர்களால் தோற்கடிக்க முடியும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும், இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டம்

அரசாங்க-விரோத போராட்டங்களை நசுக்கப் போவதாக இலங்கை ஜனாதிபதி மிரட்டுகிறார்

இலங்கையில் முதலாளித்துவக் கட்சி-தொழிற்சங்க கூட்டணிகள் வேண்டாம்! அரசாங்க-ச.நா.நி. சிக்கன நடவடிக்கைகளை தோற்கடி! ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்பு!

Loading