UAW இன் தேர்தலை நீட்டிக்கக் கோரும் வில் லெஹ்மனின் வழக்கை பெடரல் நீதிபதி விசாரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

UAW தேர்தல் காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்கக் கோரியும், அனைத்து தொழிலாளர்களும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யுமாறும் ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) தொழிற்சங்கத்தின் தலைவருக்கான வேட்பாளர் வில் லெஹ்மன் தொடுத்த வழக்கில் செவ்வாயன்று பிற்பகல் ஃபெடரல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வாதங்களைக் கேட்டார். விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UAW மற்றும் நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர், உறுப்பினர்களுக்கு முறையாகத் தெரிவிக்கவும், அவர்கள் வாக்குச் சீட்டுகளைப் பெற்றிருப்பதை உறுதி செய்யவும் தவறியதால், Lehman மற்றும் தொழிற்சங்கத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களின் நியாயமான தேர்தலுக்கான உரிமைகளை மீறுவதாக, Lehman v. The UAW வழக்கு வாதிடுகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, 10 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர், தபால் மூலம் வாக்குச் சீட்டுகளைப் பெறுவதற்கு வரும் திங்கட்கிழமை வரை காலக்கெடு உள்ளது.

வாதங்களை மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி டேவிட் எம். லோசன் கேட்டார். UAW வும் கண்காணிப்பாளரும் லெஹ்மனின் நீட்டிப்புக்கான கோரிக்கைக்கு எதிராக வாதிடும் தனித்தனி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர், மேலும் லெஹ்மனை எதிர்த்து தொழிலாளர் துறை ஒரு அமிக்கோஸ் கூரியே ('நீதிமன்றத்தின் நண்பர்') சுருக்கத்தை சமர்ப்பித்தது.

லெஹ்மனின் வழக்கறிஞர் எரிக் லீ ஆல் வழங்கப்பட்ட வழக்கில் உள்ள சிக்கல்களின் முழுமையான விளக்கத்துடன் விசாரணை தொடங்கியது, நீதிபதி லோசன் லீயிடம் கேட்ட கேள்விகள் பெரும்பாலும் சட்ட-தொழில்நுட்பத் தன்மை கொண்டவையாக இருந்தன, UAW, கண்காணிப்பாளர் மற்றும் அமெரிக்க தொழிலாளர் துறையின் வாதங்களுக்கு பதிலளிக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார், ஏனெனில் லெஹ்மன் வழக்கைத் தாக்கல் செய்யும் 'நிலையில்' இல்லை, ஏனெனில் அவர் ஒரு தனிநபராக வாக்குச்சீட்டைப் பெற்று வாக்களிக்க முடிந்தது.

மிகக் குறைவான வாக்குப்பதிவு லெஹ்மன் உட்பட UAW இல் உள்ள அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் மீறுகிறது என லீ விளக்கினார். “UAW இன் 900,000 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இது ஒரு அர்த்தமுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையைப் பற்றியது” என்று லீ கூறினார். “வாக்குச்சீட்டை வழங்குவது மட்டும் போதாது என்று சட்டம் கூறுகிறது. அர்த்தமுள்ள வாக்களிக்கும் உரிமை இருக்க வேண்டும்.' ஆனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாதபோது இந்த உரிமை 'அர்த்தமுள்ளதாக' இல்லை, ஏனெனில் அவர்களுக்கு சரியாக அறிவிக்கப்படவில்லை.

வில் லெஹ்மன்

தொழில்நுட்ப கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர், லீ இந்த வழக்கில் உள்ள பரந்த சிக்கல்களைப் பற்றி பேசினார். அதே தலைமையை சூழ்ந்துள்ள பாரிய ஊழல் காரணமாக மட்டுமே நேரடி தேர்தல்கள் நடத்தப்படும் போதிலும், தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து தெரிவிக்கும் முழு செயல்முறையும் UAW தலைமையின் கைகளில் விடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

UAW இன் பொருளாளர்-செயலர் ஃபிராங்க் ஸ்டக்ளின், சட்டத்தை மீறியதற்காகவும், தனக்காக பிரச்சாரம் செய்ய தொழிற்சங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் கண்காணிப்பாளரால் மேற்கோள் காட்டப்பட்டாலும், அஞ்சல் பட்டியல்களுக்குப் பொறுப்பாக அவர் விடப்பட்டார் என்று லீ குறிப்பிட்டார்.

அக்டோபரில் UAW தலைவர் ரே கார்ரி வெளியிட்ட DetroitNews பத்தியில் கடந்த ஆண்டு வாக்கெடுப்பில் 14 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததை லீ மேற்கோள் காட்டினார். 'நாங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும்,' என்று கரி எழுதினார். 'ஒரு உறுப்பினர் எந்த வேட்பாளரை ஆதரித்தாலும் பரவாயில்லை, எங்கள் பெரிய தொழிற்சங்கத்தின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளலாம், எங்கள் உறுப்பினர்களில் வெறும் 20% மட்டுமே தீர்மானிக்க முடியாது.'

வாக்குப்பதிவு 20 சதவீதத்தை விட மிகக் குறைவாக இருக்கும் நிலையில், மேலும் 30 நாள் நீட்டிப்புக்கான நிவாரணம் மிகவும் எளிமையானது, UAW தலைமை ஏன் அதை எதிர்க்கிறது? என லீ கேட்டார்,

லோசன் லீயிடம் முக்கியமாக தொழில்நுட்ப ரீதியான விஷயங்களில் கேள்வி எழுப்பியபோது, UAW மற்றும் கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்தபோது, பரிமாற்றங்கள் அத்தியாவசியப் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தின அதாவது: வாக்காளர்களின் வாக்குப்பதிவு எண்ணிக்கை.

UAW வழக்கறிஞர் ரிச்சார்ட் கிரிஃபின், லீக்கு அளித்த பதிலில் லோசன் குறுக்கீடு செய்தார்: 'வாக்குப்பதிவு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன?' கிரிஃபின் 'எங்களிடம் ஒரு நல்ல பதில் இல்லை' என்று பதிலளித்தார், ஆனால் அவர் 2021 டீம்ஸ்டர்ஸ் தேர்தலை சுட்டிக்காட்டினார், இது 14 சதவீத வாக்குப்பதிவை நியாயப்படுத்தியது. 1991 ஆம் ஆண்டு டீம்ஸ்டர்களில் நடந்த முதல் நேரடித் தேர்தலில் 28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்ததையும், அடுத்த தேர்தலில் அதாவது 1996 இல் 33 சதவிகிதமாக இருந்ததையும் அவர் கவனிக்கவில்லை. உறுப்பினர்களுக்கு தெரிவிக்க UAW எடுத்த நடவடிக்கைகள் 'சட்டபூர்வமாக போதுமானவை' என்ற வாதத்தை கிரிஃபின் நாடினார்.

இதேபோல், குறிப்பாக வாக்கெடுப்பில் சிக்கல்கள் இருப்பதாக மானிட்டர் கூறியதிலிருந்து கண்காணிப்பாளரின் வழக்கறிஞர் மைக்கல் ரோஸிடமும், 'பதிலின் தன்மை, மோசமான வாக்குப்பதிவு குறித்து ஏதேனும் கவலைகள் உள்ளதா' என லோசன் கேட்டார். 'இது கவலைக்குரிய விஷயம் என்று முடிவு செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை' என்று ரோஸ் பதிலளித்தார்.

விசாரணையின் முடிவு, உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கும் வாக்குச் சீட்டுகளை அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படும் அமைப்பில் கவனம் செலுத்தியது, உள்ளூர் தொழிற்சங்க தகவல் அமைப்பு (Local Union Information System — LUIS), இது UAW எந்திரத்தில் உள்ளக தகவல்தொடர்பு அமைப்பாக அமைக்கப்பட்டது. லோசனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கண்காணிப்பாளர் LUIS ஐ 'உள்ளூர் மற்றும் சர்வதேசத்திற்கு இடையே தொடர்பு கொள்ள பயன்படும் பொறிமுறை' என்று விவரித்தார்.

லோசன் பதிலளித்தார், 'சர்வதேசத்திற்கும் உள்ளூருக்கும் இடையிலான தொடர்பு, எந்த வகையான உறுப்பினர்களை விலக்குகிறது.' வாக்கெடுப்புக்கு முன், LUIS ஒப்புதல் வாக்குகளில் வாக்குகளை விநியோகிக்க அல்லது முழு உறுப்பினர்களுடனும் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டதா என்று அவர் ரோஸிடம் கேட்டார். ரோஸ் தனக்குத் தெரியாது என்றும், UAW இன் வழக்கறிஞர் கிரிஃபினுக்கு ஒத்திவைத்தார், அவர் பின்னர் நீதிபதியிடம் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

UAW ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வாக்குகள் எவ்வாறு நடத்தப்பட்டன என்று லீ இடம் லோசன் கேட்டார். 'திரளான உறுப்பினர் கூட்டங்கள், பின்னர் வாக்களிப்பதன் மூலம்,' என்று லீ பதிலளித்தார். தொடர்ந்து, 'தேர்தல் குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவும் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கவும் அந்த முறை பயன்படுத்தப்படுவதற்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்' என்றார்.

செவ்வாய் மாலையில், UAW நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் பதிலைச் சமர்ப்பித்தது, இது LUIS அமைப்பு அனைத்து உறுப்பினர்களின் முகவரிகளையும் உள்ளடக்கியதாகக் கூறி, அது 'சர்வதேச தொழிற்சங்கத்திற்கும் அதன் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒரு தகவல் தளம்' என்று ஒப்புக் கொண்டது — அதாவது UAW எந்திரத்திற்கான ஒரு தகவல் தொடர்பு அமைப்பு.

Loading