போருக்கு எதிராக தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் சர்வதேச இயக்கத்தை அமைப்பதற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தனது அரசியல் ஆதரவை அறிவித்துள்ள ரஷ்யாவில் உள்ள ஒரு அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் (YGBL) இளம் காவலரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. YGBL இன் பிரதிநிதிகள் போருக்கு எதிராக இளைஞர்களின் இயக்கத்தை கட்டியெழுப்புவது பற்றி விவாதித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினதும் அக்டோபர் 9 கூட்டத்தில் பங்கேற்றனர்.

1. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் (IYSSE) உக்ரேன் தொடர்பாக அமெரிக்கா-நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போருக்கு எதிராக ஒரு சர்வதேச இளைஞர் இயக்கத்தை அமைப்பதற்கு வெளிப்படையாக தனது ஒற்றுமையை அறிவிக்கிறது.

2. இந்த ஒற்றுமைக்கு சான்றாக, அக்டோபர் 9 அன்று நடந்த போருக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினதும் சர்வதேச கூட்டத்தில் YGBL பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், YGBL நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பிற்கும் தனது அரசியல் ஆதரவை வெளிப்படுத்தியது. ஒரு சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தின் பாகமாக ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இளைஞர் இயக்கத்தை கட்டமைக்க நடவடிக்கை எடுக்க YGBL இன் பிரதிநிதிகளும் ஆதரவாக வாக்களித்தனர்.

3. உலக முதலாளித்துவ அமைப்பு இப்போது ஒரு கடுமையான நெருக்கடியில் உள்ளது. இது இறுதியில் முதலாளித்துவ நாடுகளின் பிற்போக்குக் கொள்கைகளையும் சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியலையும் தீர்மானிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பிரச்சனைகளான உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனியார்-முதலாளித்துவ வடிவ சொத்துடமைக்கும் இடையேயும் மற்றும் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் உலகம் தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையே உள்ள முரண்பாடுகளால் முழு முதலாளித்துவ அமைப்பும் வெடித்து சிதறுகிறது. இந்த முரண்பாடுகளின் தீவிரம் முதலாளித்துவ நாடுகளை பிற்போக்கு, பேரினவாத மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு இட்டுச் செல்கிறது. கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் அமெரிக்கா, உலகை புதிய விதிமுறைகளின்படி மறுபங்கீடு செய்ய முயல்கிறது.

4. அமெரிக்கா நிறுவ விரும்பும் புதிய உலக ஒழுங்கு மிகவும் பின்வரும் சாத்தியமான வடிவத்தை கொண்டிருக்கும் போல் தெரிகிறது. அதாவது ரஷ்யாவினதும் சீனாவினதும் இயற்கை, தொழிற்துறை-தொழில்நுட்பம் மற்றும் மனித வளங்களின் மீது நேரடிக் கட்டுப்பாட்டை பராமரிக்க தேவைப்பட்டால் அவை ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியச்செய்து, பிரிக்கப்பட வேண்டும்.

5. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உலகின் புதிய மறுபகிர்வில் தங்கள் சொந்த இடத்தினை பெற்றுக்கொள்ள அமெரிக்காவை ஆதரிக்கின்றன. அதே நேரத்தில், அமெரிக்காவினால் நிர்ப்பந்தமான நிலையில் வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஏகாதிபத்தியம், அதன் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் இக்கட்டான நிலையில் இருந்து வெளிவருவதற்கான ஒரு வழியை உலகின் மறுபகிர்வினூடாக மட்டுமே பார்க்கிறது.

6. பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தங்கள் நலன்களுக்கு ஏற்றவாறு மட்டுமே அமெரிக்காவை ஆதரிக்கின்றன. இந்த நாடுகள் சீனாவுடன் போட்டியிட அனுமதிக்கும் வரை அமெரிக்காவை ஆதரிக்கும். செல்வாக்கு மண்டலங்களை பிரிக்கும் செயல்முறையானது பசிபிக் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையேயான முரண்பாடுகளுக்கு புத்துயிர் கொடுப்பதுடன், அவை ஐரோப்பாவைப் போலவே புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

7. 2008 இன் நெருக்கடி உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டங்களுக்கு புத்துயிர் அளித்தது. 2010 களின் முற்பகுதியில் அரபு வசந்தம் இந்த மறுமலர்ச்சிக்கான தெளிவான சான்றாகும். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க கட்டாயப்படுத்தியது. 2014 இல், அவர்கள் உக்ரேனில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்தனர். இந்த ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், ரஷ்யாவிற்கு எதிரான எதிர்காலப் போருக்கான பாலத்தை அமைப்பதற்கான அனைத்து சூழ்நிலைகளையும் அமெரிக்கா உருவாக்க முடிந்தது.

8. 2020 இல் வெடித்த கோவிட்-19 தொற்றுநோய் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியதுடன், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போருக்கான தயாரிப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரைவான விரிவாக்கத்திற்கான தூண்டுதலாக இருந்தது. ஆகஸ்ட் 2021 இல் நேட்டோ உச்சிமாநாட்டில் செலென்ஸ்கியின் 'கிரிமியன் மேடையை' ஆதரித்தபடி, 'ஒரே-சீனா' கொள்கையை கைவிட்டு, உக்ரேனுக்கான அதன் ஆதரவை அதிகரிக்க இன்னும் ஆத்திரமூட்டும் பாதையில் அமெரிக்கா இறங்கியது.

9. விளாடிமிர் புட்டினின் பிற்போக்கு ஆட்சியானது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் துரோகத்தனமாக கலைக்கப்பட்டதினாலும், அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ மறுசீரமைப்பிலிருந்தும் வெளிப்பட்டதாகும். புட்டினின் கொள்கைகள், இறுதிப் பகுப்பாய்வில், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கு எதிராக சோவியத்துக்குப் பிந்தைய தன்னலக்குழுவின் செல்வத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் முக்கியமாக, கீழே இருந்து எழும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு எதிராக உள்ளது.

10. இந்த புவிசார் அரசியல் மற்றும் சமூக உள்ளடக்கத்தில், பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீதான புட்டினின் சாகசப் படையெடுப்பு, நேட்டோவின் கிழக்கை நோக்கிய இடைவிடாத விரிவாக்கத்திற்கு ரஷ்ய தன்னலக்குழுவின் பிரதிபலிப்பாகும். புட்டினின் ஆட்சியின் முக்கிய நோக்கம், அதன் 'சிறப்பு நடவடிக்கையின்' அழுத்தத்தின் மூலம் அமெரிக்க-நேட்டோவுடன் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தையை அடைவதாகும். புட்டினின் படையெடுப்பைத் தூண்டும் வகையில், மேற்கு நாடுகள் 'சிவப்புக் கோடுகளை' கடந்து கடைசிச் சுற்றை முடிவுக்கு கொண்டுவந்தது.

11. மேற்கத்திய நாடுகளுடன் 'சமமான கூட்டாண்மை'க்கான ரஷ்ய முதலாளித்துவத்தின் விருப்பம் மிகவும் கற்பனாவாத மாயைகளில் ஒன்றாகும். இந்த மாயை, வரலாற்று ரீதியாக ஸ்ராலினின் 'மக்கள் முன்னணிகள்' மற்றும் பின்னர் 'சமாதான சகவாழ்வு' என்ற கொள்கையிலிருந்து பெறப்பட்டு, 1990களில் புதிதாக எழுந்த ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்டது.

12. புட்டின் ஆட்சி இந்த கற்பனாவாத மாயையிலிருந்து விடுபடவில்லை. ரஷ்ய தன்னலக்குழு 'சமமான நிலையில்' இருக்க விரும்பிய மேற்குலகுடன் சூழ்ச்சி செய்து சமரசம் செய்ய முயல்வதே அதன் முழுக் கொள்கையாகும். மேற்கத்திய ஏகாதிபத்தியம், ரஷ்யாவை வெற்றிகொள்ளும் நோக்கங்களுடன், புட்டினின் ஆட்சியின் இந்த இணக்கமான தொனிகளைப் பற்றி கவலைப்படவில்லை.

13. உக்ரேனிய தன்னலக்குழுவை பொறுத்தவரை, அதன் வெளிப்படையான தரகு-முதலாளித்துவத் தன்மையுடன், ஒரு சுதந்திரமான 'ஜனநாயக' உக்ரேனுக்கான கனவுகளை அதன் சுயநிர்ணயத்துடன் ஊக்குவிப்பது இலாபகரமானதாக இருந்தது. எவ்வாறாயினும், இந்த கற்பனாவாதம் ரஷ்யாவிற்கு எதிரான அதன் ஏகாதிபத்திய இலட்சியங்களில் மேற்கத்திய மூலதனத்தின் கருவியாக மாறிய உலக ஏகாதிபத்திய அமைப்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட யதார்த்தத்தின் முன்னே விரைவாக உடைந்தது.

14. மேற்கு நாடுகளுடன் ஒரு 'சமமான' கலந்துரையாடல் பற்றிய ரஷ்யாவின் கற்பனாவாதக் கனவுகளைப் போலவே உக்ரேனின் சுதந்திரமும் அது தொடங்குவதற்கு முன்பே முடிவடைந்தது. சோவியத் ஒன்றியத்தின் பேரழிவுகரமான வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளும் ஒரு மோசமான யதார்த்தத்தை எதிர்கொண்டன. அவர்களது பிற்போக்குத்தனமான இலக்குகளை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இருவருக்குமே இல்லை.

15. முதலாளித்துவ ரஷ்யா இன்னும் முன்னாள் சோவியத் குடியரசுகளில் இராணுவ தளங்கள், பரந்த அணு ஆயுதங்கள் மற்றும் பாரியளவிலான மூலப்பொருட்கள் போன்ற சோவியத் ஒன்றியத்தின் பாரம்பரியத்தை வைத்திருக்கும் அளவிற்கு மட்டுமே சுதந்திரமாக இருந்தது. ரஷ்ய தன்னலக்குழு விரைவாக இரட்டை நிலையைப் பெற்றது. இந்த மூலப்பொருட்களின் தங்கியிருப்பதால், மூலப்பொருட்களை கட்டுப்படுத்துவதையும் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் இலாபத்தை சுயாதீனமாக நிர்வகிக்கவும் விரும்புகிறது.

16. உக்ரேனின் உண்மையான சுதந்திரம் பற்றிய கனவுகள் தற்போதைய முதலாளித்துவ அமைப்பிற்குள் ஒரு மாயப்பிரமையாக இருக்கிறது. உக்ரேனியப் பிரச்சினைக்கான ஒரே உண்மையான தீர்வு உலக சோசலிசப் புரட்சியாகவே இருக்க முடியும். இது உக்ரேனிய கேள்விக்கு மட்டுமல்லாது அனைத்திற்கும் பொருந்தும். எந்தவொரு பிராந்திய கேள்வியும் இறுதியில் உலக அரங்கில், அதாவது உலகளாவிய வழியில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

17. உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பிற்குப் பின்னரான போரின் போக்கு, அந்த படையெடுப்பின் பிற்போக்கு தன்மையை அதிகளவில் வலியுறுத்துகிறது. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்ய மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டாலும், புட்டின் உண்மையில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தையும் நாட்டின் மூலப்பொருட்களையும் சுரண்டுவதற்கான ரஷ்ய தன்னலக்குழுவின் சுதந்திரத்தை மட்டுமே பாதுகாத்து வருகிறார்.

18. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் சமீபத்திய தோல்விகள், ரஷ்ய சமுதாயத்தின் தற்போதைய நெருக்கடிக்கு புட்டினின் ஆட்சியிடம் எந்த தீர்வும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எதிர்காலத்திலும் அதனிடம் தீர்வு இருக்காது. புட்டின் ஆட்சியின் அனைத்து இராணுவ, அரசியல் நடவடிக்கைகளும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கத்திற்கும், ரஷ்ய, உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளை சீரழிப்பதற்கும் மட்டுமே பங்களிக்கும்.

19. தற்போதைய போருக்கான தீர்வுகள் முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள் சிந்திக்கும் போது, மிகவும் குறைவானதாக உள்ளது. முதலாவதாக, இந்த போர் ஒரு நீண்ட கால தன்மையை எடுப்பதுடன், உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போராக மட்டும் இருக்காது. மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் தவிர்க்க முடியாதது என்ற நிலைக்கு உலகச் சூழ்நிலையை தூண்டுவதில் இது முதல் படியாகும். எதிர்கால போரில் உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்.

20. இரண்டாவதாக, போரின் தன்மை, இப்போது அப்பட்டமான மனித விரோத நிலைப்பாட்டை எடுக்கும் ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஆளும் வர்க்கங்கள் பொறுப்பற்ற முறையில் மோதலில் அணு ஆயுத பேரழிவை நோக்கி நகர்கின்றன. ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் பைத்தியக்காரத்தனமான கொள்கைகளில் இருந்து உலகத்தின் அழிவிற்கான பீதி எழுகிறது. ஆளும் முதலாளித்துவ உயரடுக்கின் பொறுப்பற்ற தன்மை இளைஞர்களுக்கு ஒரு எதிராகாலம் உள்ளதா என்று கேட்கத் தூண்டுகிறது.

21. எவ்வாறாயினும், மனிதகுலம் தவிர்க்க முடியாது அழிவுக்குள்ளாக வேண்டியிருக்கும் என்று விதிக்கப்படவில்லை. YGBL, தலைவிதிப்படியே நடக்கும் என்ற அவநம்பிக்கையாளர்களின் வாதத்தை நிராகரிக்கிறது. அவர்களின் கண்ணோட்டம் இந்த தற்போதைய உலக முதலாளித்துவ ஒழுங்கிற்குள் சாத்தியமானவற்றின் எல்லைக்குள் சிக்கியுள்ளது. ஒரு சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு நம்பிக்கையான தேர்வும் உள்ளது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அரசியல் போராட்டத்தினால் யதார்த்தமாகலாம். உலகம், ஏகாதிபத்தியவாதிகளையும் தன்னலக்குழுக்களையும் மட்டும் கொண்டது அல்ல. ஒரு மகத்தான தொழிலாள வர்க்கமும் உள்ளது. அதன் கூட்டு உழைப்பு, அதன் படைப்பு பல்வேறு, சிக்கலான மற்றும் எல்லையற்ற வடிவங்களில், மனித முன்னேற்றத்தின் உந்து சக்தியாக உள்ளது.

22. வறுமை, சமத்துவமின்மை, போர், நோய் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கையாள்வதில் முதலாளித்துவ நெருக்கடியைத் தீர்க்கும் திறன் கொண்ட சமூகத்தில் உள்ள ஒரே புரட்சிகர சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே. இந்த புரட்சிகர தன்மை தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளில், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான அதன் போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சியில் பொதிந்துள்ளது.

23. எனவே, மேற்கத்திய ஏகாதிபத்தியம், புட்டினின் ஆட்சி உட்பட பிற முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவ சமுதாயத்தை கம்யூனிச சமுதாயமாக மாற்றுவதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த அணிதிரட்டலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது தொழிலாள வர்க்கத்தில் கற்பனையானதல்லாத ஒரு உண்மையான, புரட்சிகர தலைமையை கட்டமைப்பதற்கான சவாலை முன்வைக்கிறது. அத்தகைய தலைமையின் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை சோசலிசப் புரட்சியை அடையும் நிலைக்கு உயர்த்த முடிவதுடன், உலகம் முழுவதும் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்.

24. தொழிலாள வர்க்கத்திற்கு நமது காலத்தின் மிகப்பெரிய நெருக்கடி புரட்சிகர தலைமையின் நெருக்கடியாகும். புரட்சிகர தலைமை என்பதே முதலாளித்துவத்திற்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்தில் முக்கியமாக இல்லாதிருப்பதாகும். இயல்பிலேயே அகநிலையான இந்தக் காரணி, உலகம் முழுவதும் சோசலிசப் புரட்சி வெற்றிகரமாகப் பரவுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் கடைசிப் படியாக இருக்க வேண்டும்.

25. தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகர தலைமை என்பது மார்க்சிசம் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் கடந்தகால வரலாற்று அனுபவங்கள் அனைத்தையும் முறையாக உள்ளடக்கிய அமைப்பாக மட்டுமே இருக்க முடியும். நவீன உலகில் பாட்டாளி வர்க்கத் தலைமையின் புரட்சிகர மூலோபாயமும் தந்திரோபாயங்களும் இந்த அனுபவங்களை உள்ளீர்த்துக்கொள்வதன் மூலமும் மற்றும் புறநிலை நிலைமைகளின் அடிப்படையில் துல்லியமான வடிவம் பெறும்.

26. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையின் நெருக்கடியைத் தீர்க்கும் திறன் கொண்ட ஒரே சர்வதேச அமைப்பாகும். நான்காம் அகிலத்திற்கும் லியோன் ட்ரொட்ஸ்கிக்கும் ஒரே முறையான வாரிசாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையே நான்காம் அகிலம் என்று கூறுவது இன்னும் பொருத்தமானது.

27. ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கிய YGBL இன் நோக்குநிலையானது, ட்ரொட்ஸ்கிக்கு அனுதாபம் கொண்ட பல தனிநபர்களின் வெறும் விருப்பமல்ல. ட்ரொட்ஸ்கிசம்தான் மார்க்சிசத்தின் ஒரே முறையான வாரிசு, ட்ரொட்ஸ்கிசம் சோசலிசத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமான நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ட்ரொட்ஸ்கிசம்தான் 21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசம் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. ட்ரொட்ஸ்கிசத்தின் அடித்தளத்தில் மட்டுமே உலகப் புரட்சி யதார்த்தமாதல் சாத்தியமாகும்.

28. போல்ஷிவிக் கட்சிக்கும் அக்டோபர் புரட்சிக்கும் புதைகுழி தோண்டியதற்காக எப்போதும் இழிபெயர் பெற்றிருக்கும் ஸ்ராலின் தலைமையிலான பிற்போக்குத்தனமான தேசியவாத அதிகாரத்துவ ஆட்சிக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் வீரம் மிக்க போராட்டம் வரலாற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்ராலினிச ஆட்சி தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்படாவிட்டால், சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்ற அவரது எச்சரிக்கை 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

29. மேலும், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம், 'முதலாளித்துவத்தின் மரண ஓலம்' என மிகவும் ஆழமாக விவரித்த ஒரு சகாப்தத்தில், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அரசியல் இயக்கவியல் பற்றிய ஒரு விஞ்ஞாரீதியான ஆய்வை வழங்கியது. ட்ரொட்ஸ்கிசமே உண்மையான வெளிப்பாடாக இருக்கும் யதார்த்தத்தின் மார்க்சிச புரிந்துகொள்ளல் மட்டுமே பாட்டாளி வர்க்கத்திற்கு அதன் நிலையை உணர்ந்துகொள்ள உதவும்.

30. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் பிரிவாகும். சோசலிசத்திற்கான அவர்களின் பொதுவான போராட்டத்தில் இளைஞர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு தொடர்பை உறுதி செய்வதே இந்த இயக்கத்தின் முக்கிய பணியாகும். மூன்றாம் உலகப் போர் தொடங்குவதன் சாதகமான நிலைமை காரணமாக, இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலம் பற்றிய கேள்வி முன்னெப்போதையும் விட இப்போது முக்கியமானது.

31. இளைஞர்கள் தங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை விரும்பினால், அதற்காக அவர்கள் போராட வேண்டும். எதிர்காலத்திற்கான போராட்டம் தவிர்க்க முடியாமல் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாக மாறும். இது இளைஞர்களை ஒரு சோசலிச முன்னோக்கிற்கு இட்டுச் செல்கிறது. எவ்வாறாயினும், இளைஞர்களின் போராட்டம் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க, எதிர்காலத்திற்கான போராட்டத்தில் தங்கள் முக்கிய கூட்டாளி தொழிலாளி வர்க்கம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

32. சர்வதேச அளவில் இளைஞர்களை ஒழுங்கமைத்து ஒருங்கிணைப்பதே IYSSE இன் நோக்கமாகும். தற்போதைய சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமான முக்கியமான தத்துவார்த்த மற்றும் வரலாற்று கேள்விகளை இளைஞர்களுக்கு விளக்காமல் இது சாத்தியமற்றது. ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான சுயாதீனமான தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய பகுதியாக இளைஞர் இயக்கம் உள்ளது.

33.YGBL இன் தற்போதைய பணிகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு பற்றியும் மேலும் இந்த அமைப்புகள் மற்ற நாடுகளில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பற்றியும் சுமாரான அறிவே ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் உள்ளது என்ற தெளிவான புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள வெகுஜனங்களின் நனவின் மீது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினதும் செல்வாக்கை விரிவுபடுத்த YGBL முயல்கிறது.

34.YGBL இன் அறிக்கையுடன் நீங்கள் உடன்படுவீர்களானால், ரஷ்யா, உக்ரேன் மற்றும் பிற முன்னாள் சோவியத் குடியரசுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் பிரிவுகளைக் கட்டமைக்கும் எங்கள் போராட்டத்தில் எங்களுடன் சேருங்கள். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினதும் பிரிவுகளை கட்டியெழுப்புவது, புரட்சிகர தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், உலகம் முழுவதும் ஒரு சோசலிசப் புரட்சியைக் வெல்வதற்கும் இன்றியமையாத படியாக இருக்கும்.

Loading