மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பின்வரும் அறிக்கையின் ஊடாக, UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லெஹ்மன் அனைத்து தொழிலாளர்களும் இரயில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தார். WSWS லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலதிக தகவலுக்கும் ஈடுபடவும் WillForUAWpresident.org ஐப் பார்வையிடவும்.
அன்பான சகோதர சகோதரிகளே,
என் பெயர் வில் லெஹ்மன். நான் பென்சில்வேனியாவில் உள்ள மாக் ட்ரக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொழிற்சங்கத்தின் தேசிய தேர்தல்களில் ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) தொழிற்சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
UAW இன் தலைவர் வேட்பாளராக, நான் அமெரிக்காவில் உள்ள 100,000 இரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரளுமாறு எல்லா இடங்களிலும் உள்ள வாகனத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களையும் அழைக்கிறேன். முழு தொழிலாள வர்க்கத்திற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டத்தில் இரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரயில்வேயில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக ஒப்பந்தம் மற்றும் ஊதிய உயர்வு இல்லாமல் உள்ளனர். அவர்கள் உத்தரவாதமான நாட்கள் விடுமுறை அளிக்காத தண்டனைக்குரிய வருகைக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், குடும்பத்துடன் நேரம் செலவிடுவது அல்லது மருத்துவரின் சந்திப்புகளைத் திட்டமிடுவது கூட சாத்தியமற்றது. இரயில் பாதைகளில் உள்ள பயங்கரமான நிலைமைகள் சமீபத்திய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை தொழிலில் இருந்து வெளியேற்றியுள்ளன.
ஆனால் தொழிலாளர்கள் மீண்டும் போராடுவதில் உறுதியாக உள்ளனர், வேலைநிறுத்த நடவடிக்கைக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்துள்ளனர், இது வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டது, கூட்டாட்சியால் கட்டாயப்படுத்தப்பட்ட 'அமைதிப்படுத்தல்' காலம் காலாவதியானது.
வளர்ந்து வரும் இந்த எதிர்ப்பையும் போர்க்குணத்தையும் கண்டு பயந்த பைடென் நிர்வாகம், வேலைநிறுத்த நடவடிக்கையைத் தடுக்கவும், மாபெரும் இரயில் நிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாக்கும் சலுகை ஒப்பந்தத்தை முன்தள்ளவும் தலையிட்டது.
வியாழன் முற்பகுதியில், வெள்ளை மாளிகை, நிறுவனங்களுக்கும் இரயில் தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாக அறிவித்தது, அமைதிப்படுத்தல் காலத்தை நீட்டித்து, வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த ஒரு தேசிய இரயில் வேலைநிறுத்தத்தைத் தடுப்பதாக அறிவித்தது.
தொழிற்சங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்ட ஒப்பந்தம் கூட இறுதி செய்யப்படவில்லை, இந்த ஒப்பந்தம் ஒரு மாதத்திற்கு முன்பு பைடென் நியமித்த 'ஜனாதிபதி அவசர வாரியம்' பரிந்துரைத்த சலுகைகள் ஒப்பந்தங்களுக்கு கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளது.
இரயில் தொழிலாளர்கள், நிறுவனங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், காங்கிரஸ், வெள்ளை மாளிகை மற்றும் அவர்கள் அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் சதித்திட்டத்தை எதிர்கொள்கின்றனர். வாரன் பஃபெட் போன்ற கோடீஸ்வரர்களுக்குச் சொந்தமான இரயில் நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிக லாபம் ஈட்டக்கூடியவை. மேலும் அவை இரயில் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து இன்னும் அதிகமான செல்வத்தைப் பிரித்தெடுப்பதில் உறுதியாக உள்ளன.
இருப்பினும், தொழிலாளர்கள் இன்னும் இறுதி வார்த்தையைக் கொண்டிருக்கவில்லை. சுவருக்கு எதிராக அவர்களின் முதுகை நிறுத்தி, அவர்கள் மீண்டும் போராட ஏற்பாடு செய்கிறார்கள்.
பைடெனும், நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் புதன்கிழமை வாஷிங்டனில் சதி செய்து கொண்டிருந்த போது, 500க்கும் மேற்பட்ட இரயில் தொழிலாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் இரயில் தொழிலாளர்களின் நடவடிக்கை குழு, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) இணைந்து நடத்திய இணையவழி கூட்டத்தில் பங்குபற்றினர். நாடு முழுவதிலும் உள்ள இரயில் பாதைகளின் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டு, அவர்கள் உட்படுத்தப்படும் நிலைமைகளுக்கு எதிராகவும், தொழிற்சங்கங்களின் துரோகத்தைக் கண்டித்தும் பேசினார்கள்.
கூட்டத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதன் போது நான் விளக்கியது போல, எனது பிரச்சாரம் தொழிற்சங்க எந்திரத்தின் சர்வாதிகாரத்தை உடைத்து, தொழிலாளர்களின் கைகளில் அதிகாரத்தை வைப்பதற்கான சாமானிய தொழிலாளர்களின் வெகுஜன இயக்கத்தை உருவாக்குவது பற்றியது. எல்லா இடங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன், இதற்கு எங்கள் சொந்த தகவல்தொடர்பு வழிமுறைகள் உள்ளன, இது எங்களை மற்ற தொழிலாளர்களுடன் இணைத்து, நிலைமையின் உண்மை என்ன என்பதைக் கேட்க அனுமதிக்கிறது.
கூட்டத்தின் முடிவில், 98 சதவீத வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானத்திற்கு வாக்களிக்க வருகை தந்தவர்களால் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
சாமானிய இரயில்வே துறை தொழிலாளர்களின் இந்த ஜனநாயக சபை பின்வரும் தீர்மானத்தை எடுக்கிறது:
1. வேலைநிறுத்தம் செய்வதற்கான எங்கள் ஜனநாயக உரிமையை மீறுகின்ற மற்றும் நாம் ஏற்றுக் கொள்ளாத மற்றும் சாமானியத் தொழிலாளர் குழு ஒப்புதல் வழங்காத ஓர் ஒப்பந்தத்தை நம் மீது திணிக்கின்ற காங்கிரஸின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
2. பல ஆண்டுகளாக சரிந்து வரும் சம்பளங்களை ஈடு செய்ய பெரியளவிலான ஒரு சம்பள உயர்வு; அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் வாழ்க்கைச் செலவுகளை மறுசீரமைப்பது; மிருகத்தனமான வருகைப் பதிவேட்டு கொள்கைகளை நிறுத்துவது; உத்தரவாதமான ஓய்வு நேரம் மற்றும் மருத்துவ விடுப்புகள்; ஒரு நபர் வேலைமுறையை முன்நகர்த்துவதை நிறுத்துவது உட்பட நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் ஒப்பந்தத்தை நாம் கோருகிறோம்.
3. நாங்கள் ஏற்றுக்கொள்ளாத மற்றும் வாக்களிக்காத ஒப்பந்தங்களை வலுக்கட்டாயமாக திணிக்கும் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் எங்களை வேலை செய்ய வைக்கும் எந்தவொரு முயற்சியும், சாமானியத் தொழிலாளர் குழுவின் தெளிவான அறிவுறுத்தல்களை மீறுவதாக இருக்கும் என்பதை நாங்கள் தொழிற்சங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இரயில் தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தில் முன்னணியில் உள்ளனர், இது உலகம் முழுவதும் பணவீக்கம் மற்றும் கொத்தடிமை வேலை நிலைமைகளின் அழிவுகளுக்கு எதிராக போராட முயல்கிறது.
இந்தத் தொழிலாளர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவருகின்றனர், எல்லா இடங்களிலும் தொழிலாளர்களும் அவர்களுடன் நிற்க வேண்டும். வாகனத் தொழிலாளர்கள், UAW இல் உள்ள மற்ற தொழிலாளர்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கமும் இரயில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அணிதிரளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.
ஃபேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களின் தீர்மானத்தைப் பகிரவும், மேலும் உங்கள் சக ஊழியர்களுக்கு அவர்கள் ஆபத்தில் உள்ளதைப் பற்றி தெரிவிக்கவும். உங்களின் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்கி, அவர்களுடன் இணைக்கவும். மேலும் எனது பிரச்சார ஆதரவு அறிக்கைகளை அனுப்பவும், இதனால் இரயில்வே தொழிலாளர்கள் தங்களுக்குப் பின்னால் உள்ள தொழிலாள வர்க்கத்தின் முழு பலத்தையும் அறிந்துகொள்ள முடியும்: willforuawpresident@gmail.com
மேலும் படிக்க
- வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக இரயில்வே தொழிற்சங்கங்கள் பைடெனைச் சந்திக்கும் நிலையில், 500 இரயில்வே தொழிலாளர்கள் சாமானியத் தொழிலாளர் எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்
- UAW தலைவர் வேட்பாளர் வில் லெஹ்மன்: இரயில் தொழிலாளர்கள் மீதான பைடென் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டவும்!
- பிரிட்டிஷ் இரயில் வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்