கொலையாளி சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு மக்ரோன் பாரிஸில் வரவேற்பளித்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 28 அன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பாரிசில் முழு அரசு மரியாதையுடன் வரவேற்றார். பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை 2018 இல் கொடூரமான முறையில் கொலை செய்ய உத்தரவிட்டதாக உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த மனிதரை மக்ரோன் மரியாதையுடன் வரவேற்றதானது, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக பாசாங்குகளின் மோசடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது — குறிப்பாக, உக்ரேன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிற்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க அமெரிக்க-நேட்டோவிற்கு உதவுவதாக அதன் உரிமைகோரும் நடவடிக்கைகளாகும்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பாரிஸிலுள்ள எலிசே அரண்மனையில் இரவு விருந்திற்கு வரவேற்றார், ஜூலை 28, 2022 வியாழக்கிழமை. (AP Photo/Lewis Joly)

வாஷிங்டன் போஸ்டில் பணியாற்றிய சவூதி பத்திரிகையாளரான கஷோக்ஜி, அக்டோபர் 2, 2018 அன்று துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி துணைத் தூதரகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டார். துருக்கிய எழுத்தாளர் ஹாடிஸ் செங்கிஸைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கோரி அங்கு வந்திருந்தார். பின் சல்மானுடன் தொடர்புடைய சவூதி உளவுத்துறை முகவர்களின் குழுவால் அவரது உடல் பாகங்களாக அறுக்கப்பட்டு அகற்றப்பட்டன.

சவூதி அரேபியா உலகளவில் அறியப்பட்டதை அங்கீகரித்துள்ளது: அதாவது பின் சல்மான், கஷோகியை இரத்தம் உறையும் அளவிற்கு படு பயங்கரமாக துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றுள்ளார். அவருடன் ஒரு சண்டை வெடித்ததாகவும், இது 'அவரது மரணத்திற்கும் என்ன நடந்தது என்பதை மறைக்கும் அவர்களின் முயற்சிக்கும்' வழிவகுத்தது என்றும் செளதி அதிகாரிகள் துருக்கிய புலனாய்வாளர்களிடம் தெரிவித்தனர் என்பதாகும்.

ஆயினும்கூட, மக்ரோன் பின் சல்மானை எலிசே ஜனாதிபதி மாளிகையில் வரவேற்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் ஒரு நீண்ட கைகுலுக்கலைக் கொடுத்தார். சல்மானை சந்திப்பதற்கான மக்ரோனின் முடிவு, உள்நாட்டு அரசியல் ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக பகிரங்கமாகப் பயன்படுத்துவதற்கு பிரெஞ்சு அரசுத் தலைவர் பட்டத்து இளவரசரின் கொலையை உத்தியோகபூர்வ ஒப்புதலளிப்பதற்கு இது ஒப்பாகும். பிரான்சிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ ஆட்சி குற்றமாக்கப்படுவதை இது உறுதிப்படுத்துகிறது.

கடந்த வாரம், பின் சல்மானை வரவேற்கும் மக்ரோனின் முடிவை எழுத்தாளர் செங்கிஸ், சவூதி அரேபியாவிலிருந்து மலிவான எண்ணெயை பெறுவதற்கான முயற்சிகளுடன் பிணைந்துள்ள ஒரு குற்றகரமான சைகை என்று கண்டனம் செய்தார். 'எனது வருங்கால கணவர் ஜமால் கஷோக்ஜியின் மரணதண்டனையை நிறைவேற்றியவர்களுக்கு அனைத்து மரியாதைகளையும் இமானுவல் மக்ரோன் கொடுத்துவருவது குறித்து நான் அதிர்ச்சியாகவும் கோபமாகவும் இருக்கிறேன். உக்ரேனில் போர் காரணமாக எரிசக்தி விலைகள் அதிகரித்திருப்பது—உண்மையான அரசியல் என்று கூறப்படுவது என்ற பெயரில்—அரசியல் எதிரிகளை நோக்கிய சவூதி கொள்கைக்கு பொறுப்பான நபரை நாம் விடுவிக்கிறோம் என்பதை நியாயப்படுத்த முடியாது' என்றார்.

பின் சல்மானின் கஷோக்ஜியின் ஆணவக் கொலை முற்றிலும் குறிப்பிடத்தக்கதல்ல என்று கருதிய பிரெஞ்சு செய்தி ஊடகம், பாரிசில் பின் சல்மானை வரவேற்பதற்கு ஆதரவாக தொடர்ச்சியான நடைமுறை பூகோள அரசியல் வாதங்களையே முன்வைத்தது.

உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போர் என்பது ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு பதிலாக மத்திய கிழக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை என்பதை அர்த்தப்படுத்துகிறது என்று லண்டனின் மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் சிந்தனைக் குழுவின் ஆராய்ச்சியாளரான Camille Lons அறிவித்தார். அதாவது 'உக்ரைன் போரானது எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடுகளை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது, மேலும் அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்,' என்று அவர் கூறினார்.

மற்றவர்கள், ஒரு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் முறிந்தால், பாக்தாத்தில் ஒரு உச்சிமாநாட்டிற்கு பின் சல்மானை அழைப்பார் என்று மக்ரோன் நம்புவதாகத் தெரிவித்தனர்.

ஒருவேளை CAPmena ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாகியான Franois Touazi, மக்ரோன் மற்றும் முக்கிய பிரெஞ்சு பெருநிறுவனங்கள் சவூதி அரேபியாவின் கொலைகார இளவரசரின் பின்னால் அணிவகுத்து நிற்பதற்கு இட்டுச்செல்லும் உள்நோக்கங்களை Le Monde பத்திரிகைக்கு மிக அப்பட்டமாக முன்வைத்தார். அதாவது 'பின் சல்மானின் பெரிய திட்டங்கள், நியோம் (சுற்றுச்சூழல்-எதிர்கால மெகா-நகரம்) மற்றும் செங்கடலிலுள்ள கடற்கரை ஓய்வு விடுதிகள் ஆகியவற்றிற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. எண்ணெய் விலை உயர்வுடன், இராச்சியத்தின் கருவூலம் நிரம்பியுள்ளது. எங்கள் பெருநிறுவனங்கள் படகை இழக்க முடியாது' என்று தெரிவித்தார்.

துல்லியமான கணக்கீடுகள் எதுவாக இருந்தாலும், பாரிஸுக்கும் ரியாத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் கொலை மற்றும் பாசாங்குத்தனத்தின் மறுக்கவியலாத துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.

பிரான்சில் வெர்சாய்ஸிலுள்ள அரசர் பதினான்காம் லூயியின் உண்மையான அரச மாளிகைக்கும், இப்போது ஒரு தேசிய அருங்காட்சியகமாகவுள்ளதற்கும் அருகில் பாரிஸுக்கு வெளியே லூவீசியன்ஸில் புதிதாக கட்டப்பட்ட பதினான்காம் லூயிக்கு மாளிகைக்கு (Chateau Louis XIV) பின் சல்மான் வந்து சேர்ந்தார். பின் சல்மான் இந்த பாரிய வசதியுள்ள சொத்தை சொந்தமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, இது தொடர் ஷெல் நிறுவனங்கள் மூலம் 275 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்டது, இது முன்னணி இதழான Fortune ஆனது 'உலகின் மிக விலையுயர்ந்த வீடு' என்று அழைக்க இது வழிவகுத்தது. ஒரு வெறுப்பூட்டும் பயங்கர திருப்பமாக உள்ளது என்னவெனில், இது ஜமால் கஷோகியின் உறவினர் எமாத் என்பவரால் கட்டப்பட்டது, அவர் ஒரு பிரெஞ்சு சொத்து மேம்பாட்டு வணிகத்தை நடத்தி வருகிறார்.

எலிசேயில் மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் பாரிஸுக்குச் சென்றபோது, பின் சல்மான் அலங்காரமான லூயி பதினான்காம் மாளிகையில் (Chateau Louis XIV) முழுவதாக தங்கியிருந்தார். டைம்ஸ் ஆப் இந்தியாவின் கூற்றுப்படி, 'தங்க இலைகள் கொண்ட நீரூற்று, ஒரு சினிமா, அத்துடன் வெள்ளை தோல் சோபாக்கள் கொண்ட ஒரு ராட்சத மீன் காட்சியகத்தை ஒத்திருக்கும் அகழியில் நீருக்கடியில் கண்ணாடி அறை' ஆகியவற்றை அவர் நிறுவியுள்ளார். பின் சல்மான் தங்கியிருந்தபோது பிரெஞ்சு கலகப் பிரிவு போலீசாரும், தனியார் பாதுகாவலர்களும் பதினான்காம் லூயி மாளிகையைச் சுற்றிப் பாதுகாத்தனர்.

இந்த விகாரமான காட்சி பிரான்சிலும் சர்வதேச அளவிலுமுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பின் சல்மான் போன்ற ஒரு கொலைகாரனை வரவேற்றுக் கொண்டாடக்கூடிய ஒரு ஜனாதிபதியும் ஊடக நிறுவனமும் எந்தக் குற்றத்திற்கும் தகுதியானவர்கள்.

உண்மையில், பட்டத்து இளவரசரின் வருகையின் திமிர்த்தனமான தன்மையானது, பின் சல்மானின் மனிதாபிமான விமர்சகர்கள் என்று காட்டிக் கொள்ளும் பிரெஞ்சு பாராளுமன்ற எதிர்க் கட்சிகளின் பாசாங்குத்தனத்துடன் மட்டுமே பொருந்துகிறது.

பசுமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சான்ட்ரைன் ரூசோ கூறுகையில், 'எண்ணெய்க்காக எங்கள் மதிப்புகளை சமரசம் செய்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது. சவூதி அரேபியா ஓரினச்சேர்க்கையை மரண தண்டனையுடன் தண்டிக்கும் ஒரு நாடு மற்றும் வெட்கமின்றி யேமனின் சிவிலியன் மக்களைக் கொல்கிறது.'

இது இருந்தபோதிலும், அதே நேரத்தில் யேமனில் போருக்கு சவூதி முடியாட்சிக்கு பிரான்ஸ் ஆயுதம் கொடுக்கிறது என்பதை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்கள் மீது வழக்குத் தொடரப்போவதாக மக்ரோன் அச்சுறுத்திய போது, பசுமைவாதிகள் ஒரு குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டத்திற்கு கூட அழைப்பு விடுக்கவில்லை.

ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் உறுப்பினரான டேனியேல் ஒபோனோ, 'புட்டின் உக்ரேனைத் தாக்குகிறார்: புறக்கணிப்பு செய்! யேமனில் போரில் 300,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டதற்கு தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகவும் மற்றும் பத்திரிகையாளர் ஜே. கஷோக்ஜியை கொலை செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட பின் சல்மானை: வரவேற்கிறோம். நயவஞ்சகர்களே!' என்றார்.

உண்மையில், ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் குட்டி-முதலாளித்துவக் கட்சிகள்தான் மிகப் பெரிய அரசியல் குற்றவாளிகள், அவைகள் தான் அவற்றின் போர்களுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்குகின்றன. பின் சல்மானின் பதிவைப் போலவே, 1991 ஸ்ராலினிச சோவியத் ஒன்றியத்தை கலைத்ததைத் தொடர்ந்து 30 ஆண்டுகால நேட்டோ போர்களுடன் ஒப்பிடுகையில் இது வெளிறிப் போயுள்ளது. ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி மற்றும் அதற்கு அப்பாலும் நேட்டோ நாடுகள் குண்டுகள் வீசின, படையெடுத்தன அல்லது உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டன. இந்தப் போர்கள் மில்லியன் கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, பல மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக மாற்றி, ஒட்டுமொத்த சமூகங்களையும் சிதைத்தன.

இதில், மெலோன்சோனே ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் ஒரு பகுதியாக 1991ல் ஈராக்கில் வளைகுடாப் போருக்கு எதிரான எதிர்ப்புக்களை கைவிட அவர் வேலை செய்தார், மேலும் 2001ல் பிரான்ஸ் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது சோசலிஸ்ட் கட்சியின் மந்திரியாக இருந்தார். அவர் மாலியில் போரை ஆமோதித்ததோடு, 2014ம் ஆண்டு கியேவில் நேட்டோ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி உக்ரேனில் உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு வழிவகுத்த பின்னர் ரஷ்யாவைக் கண்டிக்கும் பிரெஞ்சு செய்தி ஊடகத்துடன் வக்காலத்து வாங்குவதில் சேர்ந்து கொண்டார்.

'முகம்மது பின் சல்மான்: ஒரு சங்கடமான விஜயம்' என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தில் மக்ரோனின் கொள்கையின் துர்நாற்றத்தை மறைக்க முயன்று, Le Monde குறைகூறியது: 'உக்ரேன் மீதான மேற்கத்திய நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குவதற்கு ரஷ்ய பிரச்சாரம் இந்த அத்தியாயத்தை சுரண்டிக்கொள்ளத் தவறவில்லை' என்றது.

அது தொடர்ந்து கூறியதாவது: 'நமது பூகோள அரசியல் நண்பர்களையோ அல்லது எதிரிகளையோ அது குறிவைக்கிறதா என்பதைப் பொறுத்து, பல்வேறு மட்டத்திலான சீற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய நிலைப்பாடுகளின் பாசாங்குத்தனத்தைப் பற்றி அதிகரித்துவரும் நாடுகளின் கண்டனங்கள் ஒன்றும் புதிதல்ல. மனக்கசப்பு நீண்ட காலமாக வளர்ந்து வருகிறது. ஈராக் மற்றும் பின்னர் லிபியா மீதான படையெடுப்புகளை நியாயப்படுத்திய பொய்கள் மேற்கத்திய ஜனநாயகங்களின் கூற்றுக்களை மதிப்பிழக்கச் செய்ய உதவியுள்ளன. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு மீதான சர்வதேச உணர்ச்சிக்கும் அணிதிரட்டலுக்கும், யேமனில் செளதி போர் குறித்து 2015ல் இருந்து செவிடன் காதில் ஊதிய மெளனத்திற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.'

' செவிடன் காதில் ஊதிய மெளனத்திற்கு' காரணம், Le Monde மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகள் போன்ற செய்தித்தாள்கள் ஒவ்வொரு நாளும் சவூதி அரேபியாவை மூடிமறைக்கும் அதேவேளையில் ரஷ்யாவை கண்டனம் செய்கின்றன. தங்கள் ஏகாதிபத்திய பூகோள மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதற்காக அவர்கள் பொதுமக்களிடம் சில்லறை விற்பனை செய்யும் பொய்களை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. மாறாக, இந்தப் பொய்கள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, வெகுஜன தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பையும் வெறுப்பையும் தூண்டிவிடுகின்றன என்று அவர்கள் சீற்றம் கொண்டுள்ளனர்.

அமெரிக்க-நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான முழு அளவிலான உலகப் போரின் விளிம்பில் ஐரோப்பா தள்ளாடிக் கொண்டிருக்கையில், அது ஆளும் வர்க்கத்தின் முற்றிலும் அழுகிய தன்மைக்கு ஒரு எச்சரிக்கையாகும். பாரிஸ் பின் சல்மானின் அடுத்த குற்றத்திற்கு அனுமதி அளிப்பது மட்டுமல்லாமல், இன்னும் கூடுதலான அளவில் அதன் சொந்த குற்றங்களைச் செய்வதற்கான அதன் விருப்பத்தை சமிக்ஞை செய்கிறது.

Loading