ரஷ்யாவை எதிர்த்துச் சண்டையிட அமெரிக்க-நேட்டோ ஜெட் விமானங்களை அனுப்பும் திட்டத்தை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் இது வரையில் இல்லாத மிகவும் ஆத்திரமூட்டும் விரிவாக்கமாக இருக்கக் கூடிய வகையில், நேட்டோ தயாரித்த போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

பென்டகன் 'உக்ரேனியர்களுக்குப் போர் விமானங்களை வழங்குவது' குறித்து விவாதித்து வருவதை, மூலோபாயத் தகவல் தொடர்புகளுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கெர்பி உறுதிப்படுத்தினார்.

உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்புவது, பைடெனின் வார்த்தைகளில் கூறினால், 'மூன்றாம் உலகப் போருக்கு' இட்டுச் செல்லும் என்பதால், அத்தகைய நகர்வை மேற்கொள்ள பைடென் நிர்வாகம் முன்னர் மறுத்திருந்த நிலைப்பாடு கைவிடப்பட்டிருப்பதையே கெர்பியின் அறிக்கை குறிக்கிறது.

அமெரிக்க-நேட்டோ போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்புவது குறித்து 'விவாதிக்கப்பட்டு வருகிறது' என்ற ஜெனரல் சார்லஸ் கியூ. பிரவுன் ஜூனியரின் முந்தைய அறிக்கையை வெள்ளிக்கிழமையின் அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.

ஆஸ்பென் பாதுகாப்பு மாநாட்டில் (Aspen Security Conference) பேசிய பிரவுனிடம், 'அமெரிக்கா உக்ரேனுக்கு இன்னும் அதிக அமெரிக்கப் போர் விமானங்களை விற்குமா அல்லது வழங்குமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, பிரவுன் பதிலளிக்கையில், 'அது ரஷ்யத் தயாரிப்பு அல்லாத ஒன்றாக இருக்கும் என்பதை என்னால் உங்களுக்கு உறுதியாகக் கூற முடியும்,' என்றார்.

சோவியத் தயாரிப்பான MiG போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்புவதற்கான போலந்தின் முந்தைய பரிந்துரையை, “அதிக ஆபத்தானது' என்று கூறி, பென்டகன் மே மாதம் நிராகரித்திருந்தது.

அந்த நகர்வு 'மூன்றாம் உலகப் போரை' தொடங்கி வைக்கும் என்று அப்போது பைடென் அறிவித்தார், “நாம் தாக்குதல் உபகரணங்களும், அமெரிக்க விமானிகள் மற்றும் அமெரிக்கக் குழுவுடன் போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் மற்றும் இரயில்களை அனுப்பப் போகிறோம் என்ற கருத்து — சரியாகப் புரிந்து கொள்ளுங்கள், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், அதை நீங்கள் என்னவென்று கூறினாலும், அது மூன்றாம் உலகப் போர் என்றழைக்கப்படும்,” என்றார்.

கெர்பி பென்டகன் திட்டத்தை அறிவிக்கையில், பயிற்சி, பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட தளவாட பிரச்சினைகளைப் பென்டகன் தீர்க்க விரும்புவதாகக் கூறினார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பின்வருமாறு அறிவித்தது: 'F-15 மற்றும் F-16 ரகப் போர் விமானங்களுக்குக் கணிசமான பயிற்சியும் பராமரிப்பும் தேவை என்றாலும், அவற்றை உக்ரேனுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு முன்னாள் பென்டகன் அதிகாரி தெரிவித்தார். இப்போது தனியார் துறையில் உள்ள அந்த முன்னாள் அதிகாரி, ஒரு தனிக் குழு உக்ரேனுக்கு A-10 ரகங்களை வழங்க அழுத்தமளித்து வருகிறது என்றார்.”

இந்தப் போர் தொடங்கியதில் இருந்து 16 ஆவது ஆயுத தொகுப்பாக, உக்ரேனுக்கு கூடுதலாக 270 மில்லியன் டாலர் ஆயுதங்களை அனுப்புவதாகவும் வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்தது. கூடுதலாக நான்கு HIMARS ஏவுகணை ஆயுத அமைப்புகளும், அத்துடன் நூற்றுக் கணக்கான பீனிக்ஸ் கோஸ்ட் 'கமிகேஜ்' (kamikaze) ரக டிரோன்களும் இந்தப் புதிய தொகுப்பில் உள்ளடங்குகின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த பினாமிப் போரின் தெளிவான மூலோபாயம் வெளிப்பட்டு வருகிறது. உக்ரேனுக்கு அனுப்பப்பட்டு வரும் ஆயுத அமைப்புகளின் வகைகள் மீதுள்ள எல்லாக் கட்டுப்பாடுகளையும் கைவிடுவது, போர் தொடங்கியதில் இருந்து இழந்த பிரதேசங்களைக் கியேவ் மீண்டும் கைவரப் பெறவும் மற்றும் உத்தியோகபூர்வ இராணுவக் கோட்பாடாக மார்ச் 2021 இல் முதன்முதலில் குறிப்பிடப்பட்டவாறு, ஒட்டுமொத்த டொன்பாஸ் (கிழக்கு உக்ரேனை) மற்றும் கருங்கடலில் கிரிமீயா தீபகற்பத்தை மீண்டும் கைப்பற்றும் அவர்களின் இலக்கை எட்டவும் உதவும் என்று வாஷிங்டன் வெளிப்படையாக நம்புகிறது.

'எங்கள் உதவி அம்மண்ணில் ஒரு நிஜமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது,' என்று அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் லாயிட் ஆஸ்டின் இந்த வாரம் கூறினார். 'உக்ரேனில் தாக்குப் பிடிக்க முடியும் — எங்களைத் தாக்குப் பிடிக்க முடியும் என்று ரஷ்யா நினைக்கிறது. ஆனால் ரஷ்யாவின் தவறான கணக்கீடுகளில் இது சமீபத்தியதாகும்,” என்றார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், உக்ரேன் அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 'எல்லாப் பிரதேசங்களும் முதலில் விடுவிக்கப்பட வேண்டும், பின்னர் நாம் என்ன செய்ய வேண்டும், வரவிருக்கும் நூற்றாண்டுகளில் எப்படி வாழலாம் என்பது பற்றி பின்னர் பேச்சுவார்த்தை நடத்தலாம்' என்று செலென்ஸ்கி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்தார். “எங்களால் இதைச் செய்ய முடியும் என்பதை எம் மக்கள் நம்புகிறார்கள். அதை நாங்கள் எவ்வளவு வேகமாகச் செய்கிறோமோ, அந்தளவுக்குக் குறைவானவர்கள் உயிரிழப்பார்கள்,” என்றார்.

ரஷ்ய இராணுவத்தைத் தோற்கடிக்க முடியும் என்று அவர்கள் நம்பும் ஒரு போர்ப் படையை உருவாக்கும் நிகழ்வுபோக்கில், அமெரிக்கா உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் அதே ஆயுத அமைப்புகளை வழங்கி வருவதுடன், அமெரிக்க இராணுவம் செய்வதைப் போலவே அவற்றைச் செயல்படுத்துவதற்கு உக்ரேனியப் படைகளுக்குப் பயிற்சிகளும் அளிக்கிறது.

இன்றைய தேதி வரையில், அமெரிக்கா அதன் மிகவும் அதிநவீனத் தரையிலிருந்து வழி நடத்தப்படும் பதினாறு HIMARS ரக ஏவுகணை அமைப்புகளையும், அத்துடன் அதன் நிலையான கப்பல்-தகர்ப்பு ஏவுகணை ஹார்பூன், வெள்ளை மாளிகையைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் விமான தகர்ப்பு அமைப்புமுறை NASAMS, அத்துடன் 100 க்கும் அதிகமாக அதிக திறன் வாய்ந்த நீண்ட தூர பீரங்கிக் குண்டுகள், அத்துடன் சிப்பாய்களை ஏற்றிச் செல்லும் நூற்றுக் கணக்கான கவச வாகனங்கள், ஆயிரத்திற்கும் அதிகமான பயங்கரமான வான்வழி டிரோன்களையும் வழங்கி உள்ளது.

இவை மட்டுமின்றி, அமெரிக்கா நூறு ஆயிரக் கணக்கான பீரங்கி வெடி மருந்துகள், மில்லியன் கணக்கான சிறிய ரகத் துப்பாக்கித் தோட்டாக்களையும் வழங்கியுள்ளது.

போர்த் தொடங்கியதில் இருந்து, உக்ரேனுக்கு 7.6 பில்லியன் டாலர்கள் இராணுவ உதவி வழங்க அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. உக்ரேனுக்கான அமெரிக்க ஆயுதப் பாய்ச்சல் அமெரிக்காவின் சொந்த இராணுவக் கையிருப்புகளையே குறைத்து விடுமோ என்று இராணுவ அதிகாரிகளே கூறும் அளவுக்கு அது மிகப் பெரியளவில் உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், போரில் அமெரிக்கா ஈடுபடும் அளவின் வரம்புகளை ஒன்று மாற்றி ஒன்றாக அதிகரிக்கும் வகையில் மட்டுந்தான், மீண்டும் மீண்டும் அந்த வரம்புகளை மாற்றி உள்ளார்.

ரஷ்ய எல்லைக்குள் சென்று தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்காது என்று கூறிய பின்னர், உக்ரேனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் என்று பைடென் அறிவித்தார். இப்போது, இந்த மோதலைப் பாரியளவில் விரிவாக்கும் விதத்தில் போர் விமானங்களை அனுப்ப வெள்ளை மாளிகை வேகமாக நகர்ந்து வருகிறது.

அமெரிக்கா ரஷ்யா உடனான போரைப் பொறுப்பற்ற முறையில் விரிவாக்கி வரும் நிலையில், சீன அதிகாரிகள் ஓர் 'இராணுவ விடையிறுப்பு' காட்டும் வகையில், பிரதிநிதிகள் சபைச் சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்குப் பயணிப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இந்தப் பயணம் 'இப்போதைக்கு ஒரு நல்ல யோசனை அல்ல,” என்று பைடென் வியாழக்கிழமைக் கூறியதும், குடியரசுக் கட்சியின் பரந்த பிரிவுகள் அந்தப் பணயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரினர்.

இந்த முன்மொழியப்பட்ட பயணம் குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் இந்த வாரத்தில் வந்த அதன் இரண்டாவது தலையங்கம், “ஜனாதிபதி பதவியின் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள ஒருவரை ஏற்றிச் செல்லும் அமெரிக்க விமானத்தைச் சீனா சுட்டுத் தள்ளும் என்று பென்டகன் அஞ்சுகிறதா' என்று கோரியது, “ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தாய்வானுக்கு விஜயம் செய்வதைச் சீனா தடுக்க முடிந்தால், சுட்டுத் தள்ளும் ஒரு போரில் அமெரிக்கா எவ்வாறு உறுதியாக இருக்கப் போகிறது?” என்று அது அறிவித்தது.

இந்த பரபரப்பான நிலைமைகளின் கீழ் தான், Foreign Affairs பத்திரிகை, “உக்ரேன் போர் கட்டுப்பாட்டை மீறினால் என்னாவது' என்று தலைப்பிட்டு இந்த வாரம் வெளியிட்ட கட்டுரையில், “ஓர் அணு ஆயுதத் தாக்குதல் இன்னமும் நிஜமான சாத்தியக்கூறாக உள்ளது,” என்று அறிவித்தது.

Loading