வெப்ப அலை குறையத் தொடங்குவதால், காலநிலை பற்றி செயல்படப் போவதில்லை என ஐரோப்பிய அரசுகள் உறுதியளிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவை நாசம் செய்த வெப்ப அலை நேற்று படிப்படியாக குறைய தொடங்கியது. கடுமையான இடியுடன் கூடிய மழை பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் சில பகுதிகளில் குளிர்ச்சியான வானிலையைக் கொண்டுவந்தது. தெற்கு ஐரோப்பா முழுவதும் வெப்ப அலை தொடர்ந்தது, தெற்கு ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 40°C ஐ நெருங்கியது. மேலும் அப்பகுதியில் காட்டுத் தீவானிலையைக் தொடர்ந்து எரிந்து வருகிறது.

புவி வெப்பமடைதலால் ஏற்படும் ஐரோப்பிய வெப்ப அலைகளின் பயங்கரமான தாக்கம் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் மட்டும் 1,700 க்கும் மேற்பட்ட இறப்புகளை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர், ஏனெனில் தொழிலாளர்கள் கடுமையான வெப்பத்தில் வேலை செய்கிறார்கள் மற்றும் பல வயதானவர்கள் குளிரூட்டி (AC) வசதி இல்லாமல் வாழ்கின்றனர். கடந்த வாரம் ஸ்பெயின் தீயில் 15,000 ஹெக்டர் காடுகளை இழந்த நிலையில், ஐரோப்பாவில் மிகப்பெரிய காட்டுத் தீ பிரான்சின் ஜிரோண்டில் நிகழ்ந்துள்ளது, அங்கு இதுவரை 20,000 ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டு 40,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வெப்ப அலையின் மோசமான காலம் முடிந்துவிட்டாலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியை வறட்சி இன்னும் வாட்டி வதைக்கிறது. இத்தாலியின் போ பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நகரங்களும் நகர்ப்புறங்களும் தண்ணீரை பங்கீடு செய்து வருகின்றன. தெற்கு ஜேர்மனியில் ஆற்றின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் நதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் பல வாரங்கள் வருவதால், கடுமையான வெப்ப அலைகள், தொடர்ந்து வறட்சி மற்றும் பெரிய காட்டுத்தீ போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆயினும்கூட, மேற்கு ஐரோப்பாவில் உள்ள மூத்த அதிகாரிகள் புவி வெப்பமடைதலைத் தூண்டும் உமிழ்வைத் தடுக்கவோ அல்லது அதிகரித்து வரும் வறட்சி, கடல் மட்டங்கள் அதிகரிப்பு மற்றும் காட்டுத் தீயின் தீவிரத்தை சமாளிக்க தேவையான உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப கணிசமான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று ஏற்கனவே சமிக்ஞை செய்து வருகின்றனர்.

பிரிட்டனில், 2010 முதல் 11,500 தீயணைப்பு பணியாளர்களைக் குறைத்துள்ள டோரி அரசாங்கம், வெப்ப அலைக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக பாசாங்கு கூட செய்யவில்லை. ஞாயிற்றுக்கிழமை துணைப் பிரதம மந்திரி டொமினிக் ராப் பிரித்தானிய மக்களிடம் “வெப்பத்தை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்” என்று வெறித்தனமாக கூறினார். நேற்று, அமைச்சரவை மந்திரி கிட் மால்தவுஸ் இவ்வாறு அறிவித்தார்: “பிரிட்டன் இத்தகைய உயர் வெப்பநிலைக்கு பழக்கமில்லாததாக இருக்கலாம், ஆனால் இங்கிலாந்து, நமது ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் சேர்ந்து தீவிர நிகழ்வுகளுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.”

இந்தக் கருத்துக்கள், ஐரோப்பிய அரசாங்கங்கள் மக்கள் ‘கோவிட்-19 உடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியதை பிரதிபலிக்கின்றன, இது தொற்றுநோயை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாரிய இறப்பு மற்றும் தொற்றுநோயை உருவாக்குவதற்கான இடக்கரடக்கலாக மாறிப்போனது.

இலண்டனின் தீயணைப்புப் படையினர் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை அவர்களின் பரபரப்பான நாளை எதிர்கொண்டதை அடுத்து, நாட்டின் மிகுந்த வெப்பமான அந்நாளில் பிரிட்டிஷ் தலைநகரைச் சுற்றி தீ பரவியது. இலண்டன் மேயர் சாதிக் கான் ஸ்கை நியூஸிடம் இவ்வாறு கூறினார்: “இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இலண்டனில் தீயணைப்பு சேவைக்கு இது மிகவும் பரபரப்பான நாளாகும். அவர்களுக்கு 2,600 க்கும் மேற்பட்ட அழைப்புக்கள் வந்துள்ளன, ஒரே நேரத்தில் டஜனுக்கும் மேற்பட்ட தீ விபத்துக்களில், சிலவற்றுக்கு 30 என்ஜின்கள் தேவைப்படும், சிலவற்றிற்கு 15 தேவை, மற்றும் சிலவற்றிற்கு 12 தேவைப்படும்.'

மற்ற ஐரோப்பிய அரசாங்கங்களின் அறிக்கைகள் குறைவான ஆத்திரமூட்டும் வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் செயலற்ற தன்மை மற்றும் அலட்சியத்தின் ஒரே கொள்கையை வெளிப்படுத்தியுள்ளன.

போலி இடது பொடேமோஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்து வரும் ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி (PSOE) பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், நேற்று தனது அனுதாப தோரணையை காட்ட முயன்றார். ஸ்பெயினின் கார்லோஸ் III நிறுவனம் முந்தைய நாளில் வெப்பத்தின் காரணமாக 678 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருந்தாலும், வெப்பத்தால் 500 க்கும் மேற்பட்ட ஸ்பானியர்கள் இறந்ததாக அவர் அறிவித்தார். 'குடிமக்கள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்' என கேட்டு, 'காலநிலை அவசரநிலை உண்மையானது' என்ற வெளிப்படையான உண்மையை ஒப்புக்கொண்டு சான்சேஸ் முடித்தார்.

புதன்கிழமை பிற்பகல், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜூலை 12 முதல் பிராந்தியத்தில் தீயைக் கட்டுப்படுத்த போராடி வரும் தீயணைப்புப் படையினரைச் சந்திக்க ஜிரோண்ட்டில் உள்ள La Teste-de-Buch பகுதிக்குச் சென்றார். அப்போது அவர், “நாம் பருவகாலத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம்… நிலைமையை முழுமையாக உறுதிப்படுத்த பல வாரங்கள் ஆகும் என்பது நாம் அறிந்ததே” என்று குறிப்பிட்டார்.

சூழ்நிலையை நல்லவிதமாக வைத்து எதிர்காலத்தை எதிர்நோக்க முயற்சிக்கிறேன் எனக் கூறி, மக்ரோன் மேலும் இவ்வாறு தெரிவித்தார்: “மறுநாள் இருக்கிறது. [தீ அணைக்கப்பட்ட] பின்னர் நாம் மீண்டும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்… இந்த காடுகளை மீண்டும் நட்டு இன்றும் நாளையும் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கும் வகையில் ஒரு பெரிய தேசிய திட்டத்தை நாம் தொடங்க உள்ளோம்.”

மரங்களை மீண்டும் நடுவதற்கு அப்பால் எந்த உறுதியான முன்மொழிவுகளும் இல்லாத இந்த தெளிவற்ற கருத்துக்கள், புவி வெப்பமடைதல் மற்றும் தீவிர வானிலை குறித்து அவரது அரசாங்கத்தின் அணுகுமுறையில் உண்மையான எந்த மாற்றமும் இருக்காது என்பதைக் குறிக்கிறது. உண்மையில், 2019 இல் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் குறைந்த பணியாளர் நிலைகள் மற்றும் மோசமான உபகரணங்கள் ஆகியவற்றுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அச்சுறுத்தினர். ஐரோப்பாவில் நீர்-வீழ்ச்சி விமானங்களின் பெரிய கடற்படையை கொண்ட நாடுகளில் பிரான்சும் இருந்தாலும், அதன் படை மிகவும் சிறியது, நீம்ஸ் நகரைச் சுற்றி குவிந்துள்ளது, மேலும் விமானங்கள் மூலம் அணைக்கக்கூடிய அளவைத் தாண்டி எழுந்த தீப்பிளம்பைக் கட்டுப்படுத்த அப்படை ஜிரோண்டுக்கு மிகவும் தாமதமாக வந்தது.

காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான பிரச்சினை தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களை அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டுவதாகும். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டம் தேவை என்பதை அத்தகைய போராட்டம் ஒரு தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பில் பரந்த முதலீடுகளைச் செய்ய விரும்பவில்லை என்பது வெளிப்படையானது. எதிர்கால வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீயின் போது ஏற்படும் இறப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்த முதலீடுகள் அவசியம். அல்லது புவி வெப்பமடைதலுக்கு காரணமான கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை நிறுத்த வேண்டும்.

விளக்கப்படுத்துவதில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், மக்ரோன், சான்சேஸ் மற்றும் டோரிகள் புவி வெப்பமடைதல் மற்றும் அதனால் உருவாகும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்து ஒரே அடிப்படைக் கொள்கையையே பின்பற்றுகின்றனர். அவர்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு டிரில்லியன் கணக்கான யூரோக்களை வாரி வழங்கும் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை வாரியிறைக்கும் அதேவேளை, காலநிலை மாற்றம் குறித்து அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க எந்த வளங்களையும் விட்டுவைக்கப்படவில்லை. ஐரோப்பா போரில் இறங்குவதால், முதலாளித்துவ அரசாங்கங்கள் சர்வதேச அளவில் அத்தகைய நடவடிக்கையை ஒருங்கிணைக்க இயலாது. எனவே, எதுவும் செய்யப்படவில்லை.

இது, பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து, கிரகத்தின் வெப்பநிலை 1.1° செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கை, புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவுகளுக்கான தீர்வு என உலக அரசாங்கங்களால் பாராட்டப்பட்டது, அது இந்த உயர்வை 2 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த வரம்பிற்குள்ளேயே இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும், இலக்கு மட்டத்தில் பாதியளவு கூட விளைவுகள் ஏற்கனவே கொடியதாக நிரூபித்து வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், கிரீஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முன்னோடியில்லாத காட்டுத்தீயால் ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ளது, அவை வரைபடத்தில் இருந்து முழு நகரங்களையும் அழித்துவிட்டன. கடந்த ஆண்டு, புவி வெப்பமடைதலின் மற்றொரு விளைவு, திடீர் வெள்ளம், ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது.

சமீபத்திய ஆண்டுகளில் மத்தியதரைக் கடல் முழுவதும் டஜன் கணக்கான கொடிய காட்டுத்தீகள் இருந்தபோதிலும், 2017 இல் போர்ச்சுகலில் 66 இறப்புகள் மற்றும் கடந்த ஆண்டு அல்ஜீரியாவில் 90 இறப்புகள் உட்பட, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது தேசிய அரசாங்கங்களோ தற்போது பொங்கி வரும் காட்டுத்தீகளை கட்டுப்படுத்துவதற்கு எந்தப் பெரிய மாற்றங்களையும் செய்யவில்லை.

கடந்த ஆண்டு பதிவான மிக மோசமான காட்டுத்தீ பருவத்தை எதிர்கொண்ட கிரீஸில், ஏதென்ஸின் வடகிழக்கில் உள்ள பென்டெலி மலையில் இருந்து வெளியேற்றங்கள் தொடர்கின்றன. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று அந்தப் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், Drafi, Anthousa, Dioni மற்றும் Dasamari ஆகிய பகுதிகளில் மருத்துவமனை உட்பட வெளியேற்றங்கள் நடந்துள்ளன. தீயை அணைக்க உதவ ருமேனியாவில் இருந்து அவசர தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

காட்டுத் தீ மற்றும் புவி வெப்பமடைதலுக்கு எதிராக ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் செயலற்ற தன்மையிலிருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது அரசியல், வர்க்கப் போராட்டமாகும். கோவிட்-19 தொற்றுநோய், போர் மற்றும் பணவீக்கத்தைப் போலவே, புவி வெப்பமடைதலுக்கான ஒரே தீர்வு, முதலாளித்துவ வர்க்கத்தின் முறைகேடான செல்வத்தை நேரடியாக பறிமுதல் செய்து, உலக சமுதாயத்தில் சோசலிச மாற்றத்தைக் கொண்டு வருவதாகும்.

Loading