உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக துனிசிய தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 16 அன்று, துனிசியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் அரசியலமைப்பை மாற்றி எழுதும் ஜனாதிபதி கைஸ் சாயீத் (Kaïs Saïed) இன் திட்டத்திற்கும் தொழிலாளர்களுக்கு கோதுமை மற்றும் ரொட்டியை மலிவாக வைத்திருக்கும் முக்கிய மானியங்களைக் குறைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பரவலான ஊகவணிகங்களின் காரணமாக உலகச் சந்தைகளில் கோதுமை மற்றும் தானிய விலைகள் உயர்ந்துள்ளன. மேலும் இப்போது உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர், அது ரஷ்யாவும் உக்ரேனும் தங்கள் கோதுமையை ஏற்றுமதி செய்வதைத் தடுத்துள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, துனிசிய நிதி மந்திரி சிஹெம் போஹ்டிரி, இந்த ஆண்டு கோதுமை மானிய விலை 1 பில்லியன் டினார்களில் இருந்து 4.2 பில்லியன் டினார்களாக (1.3 பில்லியன் யூரோ) உயரும் என்று அறிவித்திருந்தார். இது துனிசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.5 சதவீதம் மற்றும் சுகாதார, தொழில் அமைச்சகங்களின் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திற்கு சமமானதாகும் என்று அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தை (IMF) எதிரொலிக்கும் வகையில், 'கூலிச் செலவினங்களை கடுமையாக கட்டுப்படுத்துதல்' மற்றும் 'மானியங்களை சிறப்பாக இலக்கு வைப்பது' என்று அழைப்பு விடுத்து, போஹ்டிரி 'முக்கிய பொருட்களுக்கான மானியங்களை படிப்படியாக திருத்த வேண்டும், ஆனால் அவற்றை அகற்றாமல்' என்று அழைப்பு விடுத்தார்.

துனிசிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியால் ஜனாதிபதி ஜைன் எல் அபேடின் பென் அலி பதவி கவிழ்க்கப்பட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனவரி 2021 இல், இளைஞர்கள் துனிஸிலும் நாடு முழுவதிலும் ஜனநாயக உரிமைகள் இல்லாமைக்கும், ஏற்கனவே வேகமாக அதிகரித்து வரும் உணவு விலைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க வீதிகளுக்கு வந்தனர்.

Demonstrators in Tunis, Tunisia, Sunday, July 25, 2021. (AP Photo/Hedi Azouz)

“மக்கள் பசியுடன் இருக்கிறார்கள். அவர்கள் அரசை பழிவாங்க விரும்புகிறார்கள். நான் அதைப் பற்றி பொய் சொல்லப் போவதில்லை, அவர்களுக்கு இன்னொரு புரட்சி வேண்டும்” என்று துனிஸைச் சேர்ந்த ஒரு இளைஞன் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவரது நண்பர் சொன்னார், “போலீஸ் இங்கு வரத் துணியவில்லை. துனிசிய ஊடகங்கள் கூட இங்கு வருவதில்லை. நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை” என்றார்.

கிராமப்புறங்களில் இருந்து துனிஸுக்கு உணவு கொண்டு வரும் ஒரு வியாபாரி கூறினார்: “நான் [கிராமங்களில்] பேசிய அனைவருமே கோபமாக இருந்தனர். எல்லா வயதினரும் உள்ளனர். 10 வயதுக் குழந்தைகள் கூட கோபமாக இருக்கிறார்கள்... [உணவு விலை] வாங்க முடியாத 10 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களை பார்க்கிறேன். ஒரு பாண் வாங்க 200 மில்லிம் கூட அவர்களிடம் இல்லை.'

இந்த ஆண்டு, பணவீக்கம் மற்றும், குறிப்பாக, உணவு விலைகளின் வெடிப்பு உலகம் முழுவதும் நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும், இது இப்போது நேட்டோ-ரஷ்யா போரால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலக தானியச் சந்தைகளில் ஊகவணிகங்கள் ரொட்டி விலையை கட்டுப்படியாகாததாக ஆக்குவதைத் தடுத்திருந்த, அரசு மானியங்களை IMF உம் சாயீத் நிர்வாகமும் குறைப்பதன் மூலம், துனிசிய தொழிலாளர்களை பட்டினி போடும் வேலையில் ஈடுபடுகையில் தொழிலாள வர்க்கத்தின் கோபமும் எதிர்ப்பும் வெடிக்கும் அளவுகளை எட்டியுள்ளது.

பென் அலி ஆட்சியின் நீண்டகால தூணான துனிசிய பொது தொழிலாளர் சங்கத்தின் (UGTT) தொழிற்சங்க அதிகாரத்துவம் இப்போது சாயீத் மற்றும் சர்வதேச வங்கிகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது. ஆனால், ஜூன் 16-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டது. தொழிலாள வர்க்கம் பெருமளவில் பதிலளித்தது. விமான நிலையங்கள், வெகுஜன போக்குவரத்து, தபால் நிலையங்கள், எரிசக்தி நிறுவனங்கள், துறைமுகங்கள், கோதுமை, எரிபொருள் மற்றும் உப்பு ஏகபோகங்கள் மற்றும் பிற பணியிடங்கள் ஜூன் 16 அன்று மூடப்பட்டன. UGTT உறுப்பினர்களில் மொத்தம் 96.2 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

Strikers outside the Tunisian General Labor Union headquarters in Tunis during the general strike [AP Photo/Hassene Dridi]

'எங்கள் ஊதியம் குறைவாக உள்ளது மற்றும் விலைகள் உயர்ந்து வருகின்றன... இதற்கிடையில், [கைஸ் சாயீத்] மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். அவர் எங்களைக் கலந்தாலோசிக்காமல் தனியாக முடிவுகளை எடுக்கிறார்,” என்று UGTT அதிகாரி Naza Zuhein, AP இடம் துனிஸில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் அணிவகுப்பில் கூறினார். துனிசியாவில் வாழ்க்கை 'சாத்தியமற்றதாகிவிட்டது' என்று வலியுறுத்தினார்.

'குடிமக்களாக, பொதுத்துறை ஊழியர்களாகிய நாங்கள், அரசுக் கடனுக்கான கட்டணங்களில் பெரும் பகுதியைச் சுமக்கிறோம்' என்று Zuhein உடன் மற்றொரு தொழிலாளி புகார் கூறினார்.

சாயீத் வேலைநிறுத்தம் குறித்து காது கேளாத மௌனத்தை கடைப்பிடித்து வரும் அதே வேளையில், எந்த ஒரு பகிரங்க அறிக்கையையும் வெளியிட மறுத்து, அவரது அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் கோபத்தால் தெளிவாக அச்சமடைந்துள்ளது. பென் அலியின் ஆட்சி தொழிலாளர்களால் கவிழ்க்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு நெருக்கமான ஆதரவாளராக இருந்த சாயீத்தின் கூட்டாளியான மெஸ்ரி ஹடாத் (Mezri Haddad), வேலைநிறுத்தத்தை ஒரு தேசத்துரோகச் செயல் என்று கண்டித்தார்: 'பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கும் UGTT இன் முடிவு ஒரு தேச-விரோத நடவடிக்கையாகும், அது மிக உயர்ந்த தேசத்துரோகம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற தன்மையைக் கொண்டுள்ளது' என ஹடாத் கூறினார்.

சாயீத் அரசாங்கத்திற்குள் அதிகரித்து வரும் பீதி இருந்தபோதிலும், அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்கள் UGTT அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன, இது ஒரு புதிய தொழிலாள வர்க்க எழுச்சியைத் தூண்டாமல் பட்டினிச்சாவு நிலைமைகளைத் திணிக்க மட்டுமே ஆகும். Fitch மதிப்பீட்டு நிறுவனம் எழுதியது: 'UGTT இன் ஆதரவு இல்லாமல் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது சவாலானதாக இருக்கும்.'

எவ்வாறாயினும், உண்மையில், கடந்த தசாப்தத்தில் உறுதியாகக் காட்டியிருப்பது, துனிசிய முதலாளித்துவம் மற்றும் UGTT இன் திவால்நிலை, துனிசியா மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உடைக்கும் ஒரு ஜனநாயக ஆட்சியை ஸ்தாபிக்க இயலாமை மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்களின் தொடர்ச்சியான அதிருப்தி ஆகியவை ஆகும். இந்த அரசியல் திவால்தன்மைக்கு கைஸ் சாயீத் ஒரு உதாரணமாக உள்ளார். முதலில் ஊழலுக்கு எதிரான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அவர், கடந்த ஆண்டு பாராளுமன்றத்தை இடைநிறுத்தி, துனிசியாவில் எதேச்சதிகார ஆட்சியை நிறுவ முயற்சிக்கிறார்.

துனிசியாவின் எழுச்சி எகிப்தில் ஒரு புரட்சிகரப் போராட்டத்தைத் தூண்டி, அது ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை கவிழ்த்தபோது, துனிசியாவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நேரடியாக உலக நிலைமைகளுடனும் சர்வதேச வர்க்கப் போராட்டத்துடனும் பிணைக்கப்பட்டிருந்தது. அது இப்போது 2011 ஐ விட அதிகமாக உள்ளது. பெரும் பணக்காரர்களின் வங்கிகளை பிணை எடுப்பதற்காக பிரதான மத்திய வங்கிகளால் ஒரு தசாப்த கால பொறுப்பற்ற பணத்தை அச்சடித்ததன் பின்னர், உலகம் முழுவதும் விலைகள் வெடித்து வருகின்றன. உக்ரேனில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் வட ஆபிரிக்காவிலும் உலகெங்கிலும் பயங்கரமான பஞ்சத்தின் விதைகளை விதைத்து வருகிறது.

ஆபிரிக்கா ஒட்டுமொத்தமாக அதன் கோதுமையில் 44 சதவீதத்திற்கு ரஷ்யா மற்றும் உக்ரேனைச் சார்ந்துள்ளது, மேலும் துனிசியா குறிப்பாக அதன் கோதுமையில் 70 சதவீதத்திற்கு மேல் உக்ரேனைச் சார்ந்துள்ளது. எவ்வாறாயினும், வாஷிங்டன் சர்வதேச வங்கிகளில் உள்ள ரஷ்ய டாலர்களை பறிமுதல் செய்வதாக அச்சுறுத்துவதால், ரஷ்ய போர்க்கப்பல்களால் தடுக்கப்பட்ட துறைமுகங்களில் உக்ரேன் வெடிபொருள் சாதனங்களை போட்டுள்ளதால், துனிசியா மற்றும் ஆபிரிக்கா முழுவதும் உள்ள நாடுகளுக்கு மிகவும் தேவையான தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது சாத்தியமில்லை.

இந்த நிலைமைகள், துனிசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஊதிய உயர்வு மற்றும் விலைவாசி உயர்வில் இருந்து பாதுகாப்பு கோரி தொழிலாளர்களின் வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பின்னால் உள்ளன. திங்கட்கிழமை, இத்தாலியில் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் மொராக்கோ மற்றும் பெல்ஜிய பொதுத் துறைகளில் ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் நடைபெறும். ஸ்பெயினின் எஃகுத் தொழிலாளர்கள் மற்றும் தபால்காரர்கள் மற்றும் பிரெஞ்சு லாரி ஓட்டுனர்களும் ஐரோப்பா முழுவதும் விமான மற்றும் விமான நிலையத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாயீத் ஆட்சி மற்றும் UGTT அதிகாரத்துவத்தில் அதன் கூட்டாளிகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் போராட்டம் துனிசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு இன்றியமையாத படிப்பினைகளைக் கொண்டுள்ளது. துனிசியாவில் 2011 ஆம் ஆண்டு எழுச்சி அதன் இலக்குகளை அடையத் தவறியது தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் தோல்வியால் அல்ல. அது வலிமையுடன் போராடியது, ஆனால் பென் அலியை வீழ்த்திய பின்னர் அதிகாரத்தை தன் கையில் எடுக்க அனுமதிக்கும் புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கு மற்றும் தலைமை இல்லாதிருந்தது.

துனிசியாவில், தனிநபர் சர்வாதிகாரத்தை நிறுவும் சாயீத்தின் முயற்சியானது, சமூக சமத்துவமின்மையுடன் தொடர்புடைய ஆழமாக வேரூன்றிய பொருளாதாரப் பிரச்சனைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது என பெருகிய முறையில் ஒப்புக் கொள்ளப்படுகிறது.

'இந்த வேலைநிறுத்தம், UGTT, IMF மற்றும் துனிசியாவின் சர்வதேச பங்காளிகளின் பத்து தொடர்ச்சியான அரசாங்கங்களின் கூட்டுத் தோல்வியின் உச்சகட்டமாகும். ஜனநாயகத்தை நோக்கிய மாற்றம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை,” என்று டெனிசன் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியரான Fadhel Kaboub, அரபு செய்தி இடம் கூறினார்.

2011ல் துனிசியப் புரட்சி வெடித்தபோது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) மதிப்பீட்டை இது உறுதிப்படுத்துகிறது. துனிசியாவில் புரட்சிகரப் போராட்டத்தை சோசலிசத்திற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வளர்த்தெடுப்பதுதான் தீர்க்கமான கேள்வி என்று அது விளக்கியது. முதலாளித்துவ அமைப்பை வீழ்த்த வேண்டும். இதற்கு முதலும் முக்கியமாகவும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப ICFI எழுதியது:

“பலவீனமாகவும் சார்புத் தன்மை கொண்ட நிலையிலும், அத்துடன் அந்நிய ஏகாதிபத்தியம் மற்றும் பூர்விக நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் எண்ணிலடங்கா தளைகள் மூலம் கட்டப்பட்டுள்ள நிலையிலும் இருக்கிற துனிசியா போன்ற நாடுகளின் முதலாளித்துவ வர்க்கங்கள் அவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு காட்டுவதை விடவும் ஆயிரம் மடங்கு கூடுதலான அச்சத்தையும் குரோதத்தையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தியை நோக்கிக் காட்டுகின்றன … ஒரு புரட்சிகரத் தலைமை உருவாக்கப்படாவிடின், இன்னொரு எதேச்சாதிகார ஆட்சி தான் தவிர்க்கவியலாமல் பென் அலியின் இடத்தை நிரப்பும்.”

பணவீக்கம் மற்றும் உலகப் போரின் ஆபத்துக்கு எதிராக துனிசிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெற்றுவரும் போராட்டங்கள் இந்த அறிக்கைக்கு புதுப்பிக்கப்பட்ட அரசியல் முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றன.

Loading