ஆஸ்திரேலிய அரசாங்கம் துன்புறுத்தப்பட்ட ஊடகவியலாளரைப் பாதுகாக்க மறுப்பதால், அசான்ஜை நாடு கடத்தும் உத்தரவுக்கு உலகளாவிய கண்டனங்கள் விடுக்கப்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான உத்தரவுக்கு பிரித்தானிய உள்துறை செயலர் பிரித்தி பட்டேல் நேற்று ஒப்புதல் அளித்ததை, பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை சட்டவிரோதமாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக உள்ளது என்று மனிதஉரிமைக் குழுக்களும் மற்றும் பொதுஉரிமைகளுக்கான கொள்கைரீதியான பாதுகாவலர்களும் கண்டனம் செய்துள்ளனர்.

இலண்டனில் நடைபெறும் அசான்ஜை விடுதலை செய் ஆர்ப்பாட்டம் [WSWS Media]

மேலதிக சட்ட முறையீடுகளுக்கு உட்பட்டு, பட்டேலின் உத்தரவு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அசான்ஜை அழிக்க முயன்ற அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புக்களின் கைகளில் அவரை நேரடியாக ஒப்படைப்பது என்பது மரண தண்டனைக்கு ஒப்பாகும். ஏனென்றால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோதமான போர்கள், பாரிய உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய இராஜதந்திர சதிகளை அம்பலப்படுத்திய ‘குற்றத்திற்காக’ அசான்ஜ் கண்டிப்பாக அமெரிக்காவின் உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையில் தான் அடைக்கப்படுவார் என்ற நிலையில், அவரை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியாது.

உள்துறை அலுவலகத்தின் சுருக்க அறிக்கையானது, அசான்ஜ் மீதான நீண்டகால அமெரிக்க-பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய சூனிய வேட்டையின் கொடூரமான குற்றத்தை சுருக்கமாகக் கூறியது. “இந்த வழக்கில், திரு. அசான்ஜை நாடு கடத்துவது அடக்குமுறை, அநீதியான அல்லது துஷ்பிரயோகமான செயல் என இங்கிலாந்து நீதிமன்றங்கள் கண்டறியவில்லை. எனவே பட்டேல் உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்” என்று அது கூறியது.

அறிவிப்புக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அசான்ஜின் வழக்கறிஞர் ஜெனிபர் ரொபின்சன் இந்த உத்தியோகபூர்வ பொய்களை விளக்கினார். அதாவது, அசான்ஜை அமெரிக்கா பழிவாங்குவது என்பது “சட்டபூர்வமாக தனிச்சலுகை பெற்ற பொருட்களை கைப்பற்றுவது, அவர், அவரது சட்டக் குழு மற்றும் அவரது குடும்பத்தினரை சட்டவிரோதமாக உளவு பார்ப்பது, மற்றும் அவரை படுகொலை செய்வதற்கு அல்லது கடத்துவதற்கு சட்டவிரோதமாக சதித்திட்டம் தீட்டுவது” ஆகியவற்றை உள்ளடக்கியது என்று ரொபின்சன் குறிப்பிட்டார். மேலும் “இந்த வழக்கை விட அதிக முறைகேடு கொண்ட ஒரு வழக்கை கற்பனை செய்வது கடினம்” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான நாடு கடத்தல் நடவடிக்கைகளின் மூலம், பிரிட்டிஷ் நீதித்துறையின் அணுகுமுறை எந்த தீங்கையும் பார்க்காத மற்றும் கேட்காத புத்திசாலித்தனமான குரங்குகளை நினைவுபடுத்துகிறது.

ஒளிப்பதிவு மற்றும் புகைப்பட ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், அசான்ஜ் ஈக்வடோர் தூதரகத்தில் அரசியல் அகதியாக இருந்தபோது, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு அவருக்கு எதிராக ஒரு பாரிய சட்டவிரோத உளவு பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டது என்பதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்ற விசாரணைகளில் சிறிதளவு அடையாளத்தையே விட்டுச்சென்றது.

உண்மை என்னவென்றால், அசான்ஜ் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் இடையேயான சலுகை பெற்ற தகவல் தொடர்புகள் உட்பட அவரது நடவடிக்கைகளை கண்காணிக்கும் தகவல்கள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நாடு கடத்தல் கோரிக்கை நிராகருக்கப்பட்டிருப்பதையும், அதனை வரைந்தவர்கள் கூட சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதையும் கண்டறிந்திருக்க வேண்டும்.

அதேபோல், பிரிட்டிஷ் நீதித்துறை, 2017 ஆம் ஆண்டில் அசான்ஜை கடத்துவது அல்லது படுகொலை செய்வது குறித்த விவாதங்களில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சிஐஏ இயக்குநர் மைக் பொம்பியோவும் ஈடுபட்டிருந்ததாக 30 அமெரிக்க முன்னாள் அதிகாரிகளின் செய்திகள் கடந்த செப்டம்பரில் Yahoo! செய்திகளில் பதிவிடப்பட்டதைக் கண்டு வியப்படையவில்லை.

Yahoo! அறிக்கை குறிப்பிடுவது போல, ஒப்படைப்பு கோரிக்கையின் அடிப்படையை உருவாக்கும் குற்றச்சாட்டு 2017 இன் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்டது. அதன்படி சிஐஏ முகவர்கள் இலண்டனில் இருந்து அசான்ஜை கைப்பற்றி, அவரை வேர்ஜீனியாவின் லாங்லிக்கு திருப்பி அனுப்பினால், அவர்களின் வழமைக்குமாறான விளக்கத்திற்கு போலி சட்ட ஆதரவு கிடைத்திருக்கும்.

இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கடந்த டிசம்பரில் பிரிட்டிஷ் நீதிமன்றம், கொலை உட்பட அத்தகைய சதிகளுக்கு திட்டமிட்ட குற்றவாளிகளின் கைகளில் அசான்ஜ் ஒப்படைக்கப்பட்டால் மோசமாக நடத்தப்படமாட்டார் என்ற சுய-முரண்பாடான மற்றும் பயனற்ற அமெரிக்க இராஜதந்திர ‘உறுதிமொழிகளை’ ஏற்றுக்கொண்டது.

நடைமுறையில், இது நீதிமன்றத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதாக விளக்கம் உள்ளது. முழு பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபகத்துடன் சேர்ந்து, நாட்டின் நீதித்துறையானது, சட்டபூர்வ விவாதங்களை நடத்துவது, முன் நடந்த மற்றும் நிலைநாட்டப்பட்ட நெறிமுறைகளை புறக்கணிப்பது மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை கடைப்பிடிக்க முற்றிலும் மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அசான்ஜின் சுதந்திரத்தை பறிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

அசான்ஜ் மீதான நீதித்துறை தாக்குதலை தான் தொடரும் அதேவேளை, பிரித்தானிய அரசு அசான்ஜின் வழக்கறிஞர் ரொபின்சனை சட்டவிரோதமாக அது கண்காணித்ததை தனி நடவடிக்கைகளில் அமைதியாக ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், கடந்த வாரம் El Pais செய்தியிதழ், அசான்ஜின் சட்டக்குழுவினர் சட்டவிரோதமாக உளவு பார்க்கப்பட்டது தொடர்பான மற்ற குற்றச்சாட்டுக்களை ஆராய்வதிலிருந்து ஸ்பானிய தேசிய உயர் நீதிமன்றத்தை பிரிட்டன் தடுக்கிறது என்று தெரிவித்தது.

அசான்ஜ் மீது திணிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் மற்றும் அவர் நீண்டகால துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் விதம் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொண்டால், அதை இந்த நூற்றாண்டின் அரசியல் குற்றங்களில் ஒன்றாக முத்திரை குத்தலாம்.

நேற்றைய (வெள்ளிக்கிழமை) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அசான்ஜின் மனைவி ஸ்டெலா மோரிஸ், பிரிட்டிஷ் சட்ட செயல்முறை “ஜூலியனின் துன்பத்தை நீட்டிக்க பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார். மேலும், பிரிட்டன், “ஒரு வெளிநாட்டு சக்தியின் சார்பாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது… அந்த வெளிநாட்டு சக்தி செய்த குற்றங்களைத்தான் ஜூலியன் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்” என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் நீதியமைப்பிற்குள் இறுதி முறையீடு செய்வது உட்பட “நாங்கள் இதை எதிர்த்துப் போராடப் போகிறோம்,” என்று மோரிஸ் சபதம் செய்தார். இது, வழக்கின் அரசியல் தன்மை, பிரிட்டிஷ்-அமெரிக்க ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் மீறல் மற்றும் அசான்ஜிற்கு எதிரான சிஐஏ சதிகள் உட்பட அவர் மீதான பல்வேறு முறைகேடுகள் குறித்து கவனம் செலுத்தும் என்று ரொபின்சன் விளக்கினார்.

மோரிஸ் மற்றும் விக்கிலீக்ஸூடன் சேர்ந்து, ஊடகக் குழுக்கள், ஊடகவியலாளர்கள் சங்கங்கள் மற்றும் சர்வதேச உரிமைகள் குழுக்கள் ஆகியவை, பட்டேலின் முடிவு மற்றவர்களுக்கும் எதிராகவும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய உரிமைகள் மீதான முன்னணி தாக்குதலை பிரதிபலிக்கிறது என்று எச்சரித்தனர்.

பாரிய NSA உளவு பற்றி அம்பலப்படுத்திய அமெரிக்க இரகசியசெய்தி வெளியீட்டாளரான எட்வார்ட் ஸ்னோவ்டென் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்: “நம்புவது கடினம், ஆனால் அது உண்மை என்றே தெரிகிறது. உலகில் உள்ள அனைத்து தீவிர பத்திரிகை சுதந்திரக் குழுவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மனித உரிமைகளுக்கான பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் அர்ப்பணிப்பு எவ்வளவு தூரம் குறைந்துவிட்டது என்பதற்கு இது ஒரு அச்சுறுத்தும் அடையாளமாகும்.”

பிரபல ஆஸ்திரேலிய புலனாய்வு பத்திரிகையாளர் ஜோன் பில்ஜர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: “ஜூலியன் அசான்ஜை அமெரிக்க நரகத்திற்கு நாடு கடத்த உள்துறை செயலர் பிரித்தி பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு புதிய மேல்முறையீடு இப்போது பிரிட்டிஷ் ‘நீதியின்’ அரசியல் அழுகலை சவால் செய்யும். ஒன்று நாம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது குரலை எழுப்புவோம், அல்லது ஒரு வீரமிக்க மனிதனின் மரணத்துடன் நமது மௌனம் இணையும்.”

அசான்ஜ் மீதான தொடர்ச்சியான அடக்குமுறையானது, உலகளாவிய இராணுவவாதத்தின் வெடிப்புடன் ஒன்றிணைந்து நடக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான போரின் ஒரு பகுதியாக உள்ளது.

அசான்ஜூக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கும் அரசாங்கங்கள், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அவர்களின் பினாமி போர் மற்றும் சீனாவுடனான மோதலுக்கான அமெரிக்க தலைமையிலான தயாரிப்புக்கள் ஆகியவற்றுடன், இன்னும் பெரிய போர்க்குற்றங்களுக்கு தயார் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தொற்றுநோய் காலம் முழுவதும் வெகுஜன நோய்தொற்று மற்றும் இறப்புக்களை கட்டவிழ்த்துவிட்டனர், மேலும், பெருநிறுவன இலாபங்கள் மீதான ஏற்றுக்கொள்ள முடியாத சுமையாக கருதி, கோவிட் நோயை கட்டுப்படுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகளை நிராகரித்துவிட்டனர். இப்போது அவர்கள் முன்னோடியில்லாத வகையில் உலகளாவிய பணவீக்க நெருக்கடியை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துகின்றனர்.

இவை அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் பெரும் உக்கிரத்தை தூண்டிவிடுகின்றன. அசான்ஜ் மீதான பொய் குற்றச்சாட்டானது, பரந்தளவிலான போர்-எதிர்ப்பு உணர்வை நசுக்குவதற்கும், போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ‘அதிகம் பரவவிடும்’ கோவிட் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்குமான ஒரு முன்னோடியாக உள்ளது.

இந்த விடயத்தில், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிற்கின்றன. அமெரிக்காவில், குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் அசான்ஜைப் பழிவாங்குவதில் ஒன்றுபட்டுள்ளனர். ட்ரம்ப் விவாதித்ததாகக் கூறப்படும் படுகொலை சதியை செய்து முடிக்க பைடென் முயன்று வருகிறார். பிரிட்டனில், மதிப்பிழந்த டோரி நிர்வாகத்திற்கும், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிற் கட்சிக்கும் இடையே ஒரு சிறு வித்தியாசமும் இல்லை. முடிக்குரிய வழக்குத்தொடுனர் சேவையின் முன்னாள் தலைவராக, ஸ்டார்மர், விக்கிலீக்ஸூக்கு எதிரான பிரச்சாரத்தின் முதல் கட்டங்களில் நெருக்கமாக ஈடுபட்டார்.

அசான்ஜின் துன்புறுத்தலுக்குப் பின்னால் உலகளாவிய அரசாங்கங்களின், சர்வாதிகாரத்தை நோக்கிய அவர்களின் பரந்த திருப்பத்தின் ஒரு பகுதியாக, இது ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பதவிக்கு வந்ததில் இருந்து, தொழிற்கட்சி அரசாங்கம், கடுமையான சிக்கன நடவடிக்கை மற்றும் பிற வணிக சார்பு நடவடிக்கைகளின் அவசியத்தைப் பற்றி அறிவிக்கும் அதேவேளையில், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுடனான அமெரிக்காவின் மோதலில் தாக்குதல் நாயாக செயல்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஆஸ்திரேலிய குடிமகனான அசான்ஜை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்கான கோரிக்கைகளை அது நிராகரித்துள்ளது. நேற்றிரவு ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் மற்றும் அரச வழக்குத்தொடுனர் மார்க் ட்ரேஃபஸ் ஆகியோர் பட்டேலின் ஒப்படைப்பு உத்தரவை ‘கவனத்தில் எடுத்தார்கள்’.

முந்தைய தாராளவாத-தேசிய அரசாங்கத்தின் மொழியில், தொழிற்கட்சி “திரு அசான்ஜின் வழக்கில் ஒரு கட்சி சார்ந்தது அல்ல, அல்லது ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றொரு நாட்டின் சட்ட விவகாரங்களில் தலையிட முடியாது” என்று கூறியது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரிட்டிஷ் அரசாங்கம் அசான்ஜிற்கு தண்டனை வழங்க முடியும், மேலும் அவர்கள் வெறுமனே கவனத்தில் எடுப்பார்கள்.’ ஒரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் மீதான பொய் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்தும் இந்த நிலைப்பாடு, டஜன் கணக்கான முன்னுதாரணங்களால் முரண்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் வெளிநாடுகளில் குற்றம்சாட்டப்பட்ட குடிமக்களுக்கு தங்கள் கடைமையை நிறைவேற்றியுள்ளன.

அசான்ஜின் சுதந்திரத்திற்கு அதிகார வர்க்கங்களிடம் கவலையுடன் முறையீடு செய்வதன் மூலமாகவோ, அல்லது, தொழிற்கட்சியில் அல்லது அரசியல் ஸ்தாபகத்தின் வேறு எந்தப் பிரிவினரிலும் நம்பிக்கையற்ற மாயையை தூண்டுவதன் மூலமாகவோ வெற்றிபெற முடியாது என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.

போர், சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பறித்தல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தைப் போலவே அசான்ஜைப் பாதுகாப்பதற்கான போராட்டமும், உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலை சார்ந்துள்ளது. பட்டேலின் அறிவிப்பின் பொருள், அசான்ஜின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் இணைப்பதற்கு போராடுவதே இன்றைய அவசர பிரச்சினையாகும்.

Loading