மெலோன்சோன் பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக கருத்துக் கணிப்புகளில் எழுச்சி பெறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இமானுவல் மக்ரோன் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு வாரங்களுக்குப் பின்னர், பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தலின் முதல் சுற்று நாளை நடைபெறவுள்ளது. இருப்பினும், மக்ரோனின் “Ensemble!” தேர்தல் கூட்டணி பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் 22 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஜோன்-லூக் மெலோன்சோனின் (Jean-Luc Mélenchon) புதிய ஜனரஞ்சக சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒன்றியத்திற்கு (NUPES) பின்னால் உள்ளது.

வியாழன் அன்று, மக்ரோனின் “Ensemble!” 27 சதவீதமும், NUPES வேட்பாளர்கள் மொத்த வாக்குகளில் 28 சதவீதமும் வாக்குகளில் முன்னணியில் இருப்பதாகக் காட்டும் பல கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. மரின் லு பென்னின் நவ-பாசிச தேசிய பேரணி (RN) 19.5 சதவீதத்திலும், வலதுசாரி குடியரசு கட்சி (LR) 11 சதவீதத்திலும் உள்ளன.

தேர்தல் முடிவு குறித்து பெரும் நிச்சயமற்ற நிலை உள்ளது. மெலோன்சோனின் வாக்குகள் நகர்ப்புற தொழிலாள வர்க்கப் பகுதிகளில் குவிந்திருக்கையில், மக்ரோனின் கூட்டணி பல சிறிய கிராமப்புற தொகுதிகளில் அதிக இடங்களைப் பெறக்கூடும். 577 இடங்கள் கொண்ட தேசிய சட்டமன்றத்தில், 'Ensemble!' 260 முதல் 300 இடங்கள், NUPES 175 முதல் 215, LR 35 முதல் 55, மற்றும் RN 20 முதல் 60 வரை இருக்கும். ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 289 ஆசனங்கள் பெரும்பான்மையை மக்ரோன் இழக்க நேரிடலாம், இருப்பினும் தேர்தலில் வெற்றி பெற்று மக்ரோனின் கீழ் பிரதம மந்திரி ஆவதற்கான மெலோன்சோனின் வாக்குறுதியும் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

ஓய்வு பெறும் வயதை மீண்டும் 60 ஆகக் குறைப்பதாகவும், எரிவாயு விலை உயர்வைத் தடுப்பதாகவும், ஓய்வூதியங்கள் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாகவும் உறுதியளித்து ஆதரவைப் பெற்ற மெலோன்சோனுக்கான வாக்குகள் அதிகரிப்பு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரி வாக்குகளைப் பதிவு செய்வதற்கான முயற்சியை பிரதிபலிக்கிறது. இரண்டு தசாப்தங்களாக நவ-பாசிசக் கட்சிகளின் எழுச்சிக்கான முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் விளக்கத்தை இது சிதைத்துவிட்டது: அதாவது பிரெஞ்சு தொழிலாளர்கள் இடைவிடாது வலது பக்கம் திரும்புகின்றனர்.

உண்மையில், தொழிலாளர்கள் ஒரு இடதுசாரி வாக்குகளைப் பதிவு செய்து, உலக முதலாளித்துவப் பொருளாதாரம் முழுவதும் பரவி வரும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தின் பேரழிவுத் தாக்கத்தைத் தடுக்க முயல்கின்றனர். வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியின் மத்தியில், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நவ-பாசிஸ்டுகள் 4 சதவீத வாக்குகளை இழந்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள சுகாதார மற்றும் விமான நிலைய ஊழியர்கள் குறைந்த ஊதியம், சமூக சிக்கன நடவடிக்கை மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste - PES) மெலோன்சோன் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க முடியாது என வலியுறுத்துகிறது. மெலோன்சோன் மீது வாக்காளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவிர்க்க முடியாமல் ஏமாற்றுவார். அவர், மெலோன்சோன்-மக்ரோன் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம் தொழிலாளர்களை பாராளுமன்ற முட்டுச்சந்துக்குள் தள்ளவும், தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் தீவிரமயமாக்கலை தணிக்கவும் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பை தடுக்கவும் இலக்கு வைத்துள்ளார்.

நேற்று, மெலோன்சோன் கடைசி நிமிட தேர்தல் முறையீட்டை வெளியிட்டார்: 'ஒரு சிறந்த தருணம் வந்துவிட்டது. ஞாயிறு, நீங்கள் விரும்பினால், நீங்கள் வாக்களிக்கச் சென்றால் ... நீங்கள் NUPES க்கு வாக்களித்தால், நம் நாட்டின் வரலாற்றையும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மாற்ற முடியும். போதுமான NUPES வாக்குகளுடன், அவர் மேலும் கூறினார், “நாங்கள் தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மையான பிரதிநிதிகளைக் கொண்டிருப்போம், அங்கே நான் பிரதமராக இருப்பேன். எனவே ஒரு எளிய முயற்சியை மேற்கொள்வதற்கான நேரம் இது […] இதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும், மேலும் அது அனைத்தையும் மாற்றும்.

பிரதம மந்திரியாக மக்ரோனின் கீழ் பணியாற்ற மெலோன்சோனை தேர்ந்தெடுப்பது 'எல்லாவற்றையும் மாற்றும்' என்று கூறுவது ஒரு மோசடியாகும். மக்ரோன், 'செல்வந்தர்களின் ஜனாதிபதி' என்று தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக வெறுக்கப்படுகிறார். அவருடைய முதல் பதவிக் காலத்தில் சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவ-பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் வேலைநிறுத்தங்களையும் நசுக்கினார். மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை. அவரை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி வர்க்கப் போராட்டம் மற்றும் அவரது ஆட்சியை வீழ்த்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான்.

மக்ரோன் ஜனாதிபதியாக வெளியுறவுக் கொள்கைக்கு பொறுப்பாக இருப்பதால், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரை பிரான்ஸ் தூண்டுகிறது. வெளித்தோற்றத்தில் உக்ரேன் அதன் துறைமுகங்களை ரஷ்ய தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதன் துறைமுகங்களில் விதைத்த கண்ணிவெடிகளை அகற்றவும், பின்னர் உக்ரேனிய தானிய ஏற்றுமதிகளை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்லவும் ரஷ்ய கடற்படையை எதிர்கொள்ள கருங்கடலுக்குள் பிரெஞ்சு போர்க்கப்பல்களை அனுப்பத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் அபாயத்தின் மத்தியில் உக்ரேனிய ஆயுதப்படைகளுக்கு கனரக பீரங்கி மற்றும் ஏவுகணை அமைப்புகளை அனுப்புவதற்கு மக்ரோன் எண்ணற்ற மில்லியன் யூரோக்களை செலவிடுகிறார்.

மக்ரோன், பணவீக்கத்தைத் தூண்டும் பெரும் பணக்காரர்களின் பலடிரில்லியன் யூரோ ஐரோப்பிய வங்கிப் பிணையெடுப்புகளைத் தொடர்கிறார் மற்றும் COVID-19 மீதான அவரது வெகுஜன தொற்றுக் கொள்கையை பராமரிக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டன் டிசியில் ஜோ பைடெனின் தேர்தல் வெற்றியை நிறுத்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்த சிறிது காலத்திலேயே, கடந்த ஆண்டு பிரான்சில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்போவதாக அச்சுறுத்திய தீவிர வலதுசாரி டு வில்லியே குடும்பத்தைச் சுற்றியிருக்கும் பிரெஞ்சு அதிகாரிப் படைகள் மீதும் அவர் தனது வழக்கமான காது கேளாத மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

மக்ரோனின் அப்பட்டமான பிற்போக்குத்தனமான வேலைத்திட்டம் இருந்தபோதிலும், தேசிய நலன் கருதி என்ன விலை கொடுத்தாவது மக்ரோனுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போவதாக மெலோன்சோன் சமிக்ஞை செய்கிறார்.

மக்ரோனை தங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு கோரிய உக்ரேனிய அதிகாரிகளின் விமர்சனங்களுக்கு எதிராக, உக்ரேனில் மக்ரோனின் முற்றிலும் பொறுப்பற்ற போர்க் கொள்கையை அவர் பாதுகாத்தார். உக்ரேனிய அசோவ் பட்டாலியன் போன்ற நவ-நாஜி படைகளை ஆயுதபாணியாக்கும் ஐரோப்பிய சக்திகளை ஆதரித்து, மெலோன்சோன் கூறினார்: 'உக்ரேனியர்கள் எங்களுடன் அப்படி பேசக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் பிரான்ஸ் ஆயுதம் ஏந்துகிறது, பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது, பிரான்ஸ் உக்ரேனிய மக்களை ஆதரிக்கிறது.”

பிரான்ஸ் இன்டர் வானொலியில், மெலோன்சோன், மக்ரோனுடன், 'நமது நாட்டின் நலன் சார்ந்தது என்பதால் நாங்கள் பழகுவோம்' என உறுதியளித்தார். பிரான்சில் உள்ள அல்ஜீரிய சுதந்திரத்திற்கு விரோதமான அதிகாரிகளின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு மத்தியில், அல்ஜீரியப் போரின் போது ஜெனரல் சார்லஸ் டு கோல் ஆல் 1958 இல் நிறுவப்பட்ட தற்போதைய ஐந்தாவது குடியரசை மாற்றுவதற்கு ஆறாவது குடியரசைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தனது முந்தைய கூற்றுகளிலிருந்தும் அவர் பின்வாங்கினார்.

மெலோன்சோன் பிரான்ஸ் இண்டர் வானொலியில், 'ஐந்தாவது குடியரசின் அரசியலமைப்பை எதிர்த்துப் போராடுகிறேன்' என்று கூறியபோது, 'அது இருக்கும் வரை அதுவே நடைமுறைப்படுத்தப்படும்' என்று சேர்க்க அவர் விரைந்தார். அவர் அடிக்கடி உரக்கக் கண்டித்து வந்த ஒரு அரசியலமைப்பை, ஆதரிக்குமாறும் மதிக்குமாறும் ஏன் அவர் திடீரென முன்மொழிகிறார் என்பதை விளக்குமாறு கேட்டதற்கு, மெலோன்சோன் அப்பட்டமாக அறிவித்தார்: 'இந்த நாட்டில் ஒரு அரசியல் கிளர்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு நான் ஆதரவாக இல்லை.'

அவர் ஒரு இழிந்த மற்றும் பிற்போக்குத்தனமான சமநிலைப்படுத்தும் செயலைச் செய்கிறார் - பிரான்சின் 'செல்வந்தர்களின் ஜனாதிபதியின்' கொள்கைகளை ஆதரிக்கும் அதே வேளையில், வாழ்க்கைத் தரத்தை பெருமளவில் மேம்படுத்துவதாக உறுதியளிக்கிறார் மேலும் புரட்சியை எதிர்க்கும் அதே வேளையில் இடதுசாரி உணர்வு மற்றும் முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பின் சார்பாகப் பேசுவதாகக் கூறுகிறார். இருப்பினும், வட்டத்தை சதுரப்படுத்தவோ அல்லது சரிசெய்ய முடியாததை சரிசெய்யவோ வழி இல்லை.

மக்ரோனுடன் பணிபுரிவதற்கான மெலோன்சோனின் உறுதிமொழி அவரது தீவிரமான விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை, வெற்றி பெறும் பட்சத்தில், மக்ரோனின் வேலைத்திட்டத்தை செயல்படுத்த உதவுவதற்கு NUPES சட்டமன்ற உறுப்பினர்கள் அவசியம் அழைக்கப்படுவார்கள்.

ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாள வர்க்கம் NUPES போன்ற போலி-இடது கட்சிகளுடன் கசப்பான அனுபவங்களைக் கொண்டுள்ளது, அவை 'எல்லாவற்றையும் மாற்ற' உறுதியளிக்கின்றன, ஆனால் புரட்சியை எதிர்க்கின்றன. கிரேக்கத்தில் மெலோன்சோனின் கூட்டாளியான சிரிசா ('தீவிர இடது கூட்டணி') கட்சி, 2015ல் ஆட்சிக்கு வந்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து காட்டிக்கொடுப்பிற்கு ஒரு பழமொழியாக மாறியது. அது உடனடியாக அதன் வாக்குறுதிகளை கைவிட்டு, சமூக வெட்டுக்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை சுமத்தியது மற்றும் கிரேக்க தீவுகளில் அகதிகளுக்கான சிறை முகாம்களின் பரந்த வலையமைப்பைக் கட்டியது.

ஸ்பெயினில், மெலோன்சோனின் கூட்டாளியான பொடேமோஸ் கட்சி தற்போது அரசாங்கத்தில் உள்ளது, வேலைநிறுத்தம் செய்யும் எஃகுத் தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்களை தாக்க கலக தடுப்புப் பொலிஸை அனுப்பியது, சிக்கனக் கொள்கைகளை திணித்தது மற்றும் ஸ்பெயினில் உள்ள நவ-நாஜி அசோவ் பட்டாலியனுக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பியது.

போலி-இடதுகளின் சூழ்ச்சிகளால் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலையும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியையும் தடுக்க முடியாது. ஐரோப்பா உலகப் போரின் விளிம்பில் இருக்கும் அதே வேளையில், விலைவாசி உயர்வு சர்வதேச அளவில் தொழிலாளர்களை நாசமாக்குகிறது, முதலாளித்துவம் அபாயகரமான உள் முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ளது, பிரான்சில், மக்ரோனுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு மோதல் உருவாகி வருகிறது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கேள்வி, மக்ரோனின் பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுப்பது அல்ல மாறாக புரட்சிகரப் போராட்டத்திற்குத் தயாராவதுதான்.

மக்ரோனுடன் சமாதானம் செய்து வரும் NUPES லும் அதைச் சுற்றியும் உள்ள போலி-இடது சக்திகளுக்கு ஒரு ட்ரொட்ஸ்கிச மாற்றாக PES உள்ளது. NUPES உடன் இணைந்த ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கைகளில் இருந்து தொழிலாளர்களின் போராட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், சாமானிய தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது. ட்ரொட்ஸ்கிச முன்னோக்கில் ஆயுதபாணியான சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவது, தொழிலாளர்கள் மக்ரோன் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்துடன் கணக்குகளைத் தீர்த்து, ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளைக் கட்டமைக்க அனுமதிக்கும்.

Loading