மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடனான போரை நேட்டோ தீவிரப்படுத்துகையில் பிரிட்டன் மீண்டும் தன்னை அதன் முன்னணியில் இருத்தியுள்ளது. திங்கட்கிழமை Times இதழ் “பிரித்தானியா உக்ரேனிய தானியங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு கப்பல்களை பாதுகாப்பதற்காக கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவது பற்றி நேச நாடுகளுடன் ஆலோசித்து வருகிறது” எனக் குறிப்பிட்டது.
வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், லித்துவேனிய வெளியுறவு மந்திரி கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பேர்கிஸுடன் இத் திட்டங்களை பற்றி விவாதித்தார். இதில் பங்கேற்கும் நாடுகள் 'கருங்கடலில் நிறுத்தப்படுவதற்கு கப்பல்கள் அல்லது விமானங்களை வழங்க முடியும். மற்றும் தானியக் கப்பல்கள் ஒடேசாவின் துறைமுகத்தை விட்டு வெளியேறி துருக்கியில் உள்ள போஸ்பரஸை (Bosphorus) அடைவதற்கு கடல் வழியை வழங்க முடியும்' என்று அவர் விளக்கினார்.
இந்த முன்மொழிவுக்கு பிரிட்டனின் பதிலைப் பற்றி லேண்ட்ஸ்பேர்கிஸ் 'எனது கண்ணோட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் உக்ரேனுக்கு எந்த வகையிலும் உதவ ஆர்வமாக உள்ளது' எனக் கூறினார்.
Guardian பத்திரிகையின் படி, 'துறைமுகத்தில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் துறைமுகத்தை பாதுகாக்க நீண்ட தூர ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்குதல்' உள்ளிட்ட நடைமுறைகள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் டிரஸ் இதற்கு ஆதரவாக இருப்பதாக ஒரு இராஜதந்தர தகவல் வட்டாரம் உறுதிப்படுத்தியது”.
இந்த திட்டங்கள் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ளன. டென்மார்க் உடனான ஒப்பந்தத்தின் மூலம் உக்ரேனுக்கு ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாஷிங்டன் வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் திங்களன்று அறிவித்தார். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் காங்கிரஸின் ஆதாரங்களின்படி, 'ஒரு சில நாடுகள்' இதைச் செய்யத் தயாராக இருப்பதாகDaily Mail தெரிவிக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில், முன்னாள் மூத்த நேட்டோ தளபதி அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ், மே 6 அன்று Bloomberg எழுதியது, “ஒடேசாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல விரும்பும் உக்ரேனிய (மற்றும் பிற தேசிய) வணிகக் கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்குவதைப் பரிசீலிப்பது முக்கியமானது … பரந்த கருங்கடலில் கூடிய பகுதி சர்வதேச நீர்ப்பரப்பாகும். நேட்டோ போர்க்கப்பல்கள் உக்ரேனின் பிராந்திய நீர்நிலைகள் மற்றும் அதன் 200 மைல் பிரத்தியேக பொருளாதார மண்டலம் உட்பட, தாங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கு சுதந்திரம் உள்ளது. அந்த நீர்ப்பரப்பை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதில் அர்த்தமில்லை. மாறாக, உக்ரேன் போரில் அது அடுத்த முக்கிய முன்னணியாக மாறவுள்ளது”.
லித்துவேனிய வெளியுறவு மந்திரி 'இது இராணுவரீதியானதாக அல்லாத மனிதாபிமான பணியாக இருக்கும். மேலும் விமானம் பறக்காத பகுதியுடன் இதனை ஒப்பிட முடியாது... கப்பல் பாதைகளை பாதுகாக்க கணிசமான கடற்படை சக்தி கொண்ட நாடுகள் மற்றும் இதனால் பாதிக்கப்படும் நாடுகளின் கூட்டணி எங்களுக்கு தேவைப்படும்' என்றார்.
2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பை நடத்திய ஏகாதிபத்திய தலைமையிலான கூட்டணியை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சூத்திரமே 'விருப்பமுள்ளவர்களின் கூட்டணி' ஆகும். ஏகாதிபத்திய சக்திகள் ஒருபோதும் கண்டுகொள்ளாத உலகளாவிய பட்டினி நெருக்கடியை தவிர்க்க 'மனிதாபிமானப் பணி' என்ற மறைப்பின் கீழ் ரஷ்யப் படைகளுடன் நேரடி மோதல் நடத்துவதற்காகவே நேட்டோ தலைமையிலான கடற்படைத் தலையீடு வேண்டுமென்றே செய்யப்படும் இராணுவ ஆத்திரமூட்டலாக இருக்கிறது.
மூலோபாய பகுப்பாய்வாளர்கள் இதில் உள்ளடங்கியுள்ளதைப் பற்றி மிகவும் நேர்மையானவர்களாக இருக்கின்றனர். Royal United Services Institute இராணுவ சிந்தனைக் குழுவைச் சேர்ந்த சித்தார்த் கௌஷால் Financial Times இடம், “செயல்படக்கூடிய போக்குவரத்தைப் பராமரிக்க, கருங்கடலில் சுற்றிவருவதற்கு ஒரு பெரிய மேற்கத்திய கடற்படையை நீங்கள் மத்தியதரைக்கடலில் நிறுத்த வேண்டும்” மற்றும் “ரஷ்ய போர்க்கப்பல்களுடன் விரிவான மோதலுக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்நோக்கவேண்டும்” எனக் கூறுகிறார்.
மே 17 அன்று, நேட்டோ 19 நாடுகளை உள்ளடக்கிய Neptune Shield என்ற “விழிப்புணர்வு நடவடிக்கையை” தொடங்கியது. இது மத்தியதரைக் கடலில் USS Harry S. Truman தாக்குதல் கப்பல் குழுவை மையமாகக் கொண்டிருந்தது. தாக்குதல் குழுவில் Harry S. Truman விமானம் தாங்கி கப்பல், USS San Jacinto கப்பல், ஐந்து அமெரிக்க நாசகாரக் கப்பல்கள் மற்றும் ஒரு நோர்வே போர்க் கப்பல் ஆகியவை அடங்கும்.
கிழக்கு மத்தியதரைக் கடலானது நேட்டோவின் நிரந்தர கடற்படைப் பிரிவு 2 இன் நிரந்தர தங்குமிடமாகும். இதில் 10 போர் கப்பல்கள் மற்றும் இங்கிலாந்தின் HMS Diamond நாசகாரி உட்பட 14 கப்பல்கள் உள்ளன. உக்ரேனிய வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா போர்த் திட்டங்கள் திரைக்குப் பின்னால் விவாதிக்கப்படுவதாக அறிவித்தார். கருங்கடலில் ரஷ்ய பிரசன்னத்தைப் பற்றி 'இதற்கு ஒரு இராணுவ தீர்வு உள்ளது: அது ரஷ்யாவை தோற்கடிக்கவும்' என்று கூறினார். அவர் தொடர்ந்து, 'இன்னும் கூடுதலான இராணுவ ஆதரவைப் பெற்றால், நாங்கள் அவர்களை பின்தள்ள முடியும்... கருங்கடல் கடற்படையை தோற்கடித்து, கப்பல்களுக்கான பாதையைத் தடுப்பதை அகற்றுவோம்' என்று கூறினார்.
ஒரு பாதுகாப்பு ஆலோசகர் பைனான்ஸியல் டைம்ஸிற்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி 'ரஷ்யாவின் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இடைவேளைகளில் நீர்மட்டத்திற்கு மேல்எழும்ப வேண்டும், இதனால் அவை தாக்குதலுக்கு ஆளாகக்கூடும்' என்று குறிப்பிட்டு, 'கிரிமியாவிற்கு வழங்க ரஷ்யா பயன்படுத்தும் கெர்ச் ஜலசந்தி பாலத்தை அழிப்பது' புட்டினின் படைகள் வேறு இடங்களில் எதிர்கொண்ட அதே வகையான வினியோக பிரச்சனைகளுடன் போராடும் நிலையில் விட்டுவிடும் என்று ஒரு பாதுகாப்பு ஆலோசகர் பைனான்ஸியல் டைம்ஸுக்கு விளக்கினார்.
விவாதிக்கப்படும் திட்டங்களின் தீமூட்டும் தன்மை பதட்டமான பிரதிபலிப்பைத் தூண்டுகிறது. கௌஷால், “எத்தனை நாடுகள் தங்கள் கப்பல்களை ரஷ்ய கடற்படையுடன் மோதலுக்குச் செல்ல விரும்புகின்றன?” என்று கேட்கிறார். Daily Mail இல் ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி, 'தங்கள் கையிருப்பில் இருந்து கிடைத்த ஹார்பூனால் கப்பல் மூழ்கினால் ரஷ்யாவிடம் இருந்து பழிவாங்கப்படும் என்று பயந்து ஹார்பூன்களை அனுப்பும் முதல் அல்லது ஒரே நாடாக இருக்க எந்த நாடும் விரும்பவில்லை' குறிப்பிட்டது. Daily Telegraph வெளிநாட்டு அமைச்சின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, “தற்போதைய விவாதங்கள், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் துறைமுகங்களின் தடையை நீக்க உதவுவதற்காக ‘போர்க்கப்பல்களை பயன்படுத்தும் அளவிற்கு செல்லவில்லை” என்றது.
ஆனால் நேட்டோ-ரஷ்யா மோதலின் பாதை இத்தகைய மோதல்களை நோக்கியே உள்ளது. லண்டனின் King’s College இன் போர் ஆய்வு பற்றிய ஓய்வுபெற்ற பேராசிரியரான லோரன்ஸ் பிரீட்மான் New Statesman இல் பின்வருமாறு எழுதுகிறார். “இது ஒரு தேவையற்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இருக்கும் என்ற அதே சந்தேகங்களுக்கு உட்பட்டே உக்ரேனுக்கு மேலே 'பறக்க தடை செய்யப்பட்ட பகுதிக்கான அழைப்புகளை நேட்டோ நிராகரிக்க வழிவகுத்தது. ஆனால் ரஷ்ய கடற்படை நடவடிக்கையானது 'இந்தப் போரின் ஒரு அம்சமாகும். என்பது இப்போது கவனத்திற்கு வருகின்றது. அங்கு நேட்டோ நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம்.' போர் இழுபட்டுச்சென்றால், இது ஒரு பிரச்சினை இல்லாதுபோய்விடாது... முக்கிய கடற்படை சக்திகள் முன்னோக்கி சிந்திக்க வேண்டும்.'
கருங்கடலில் நேட்டோ தாக்குதல் தயாரிப்பு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இங்கிலாந்து இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜூன் 2021 இல், நேட்டோ 32 நாடுகள், 5,000 துருப்புக்கள், 32 கப்பல்கள், 40 விமானங்கள் மற்றும் 18 சிறப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய Sea Breeze என்ற அதன் மிகப்பெரிய நடவடிக்கையை பிராந்தியத்தில் மேற்கொண்டது. இந்தப் பயிற்சியானது ரஷ்யாவை நேரடியாக குறிவைத்து அமெரிக்கா மற்றும் உக்ரேனிய கடற்படைகளால் கூட்டாக நடத்தப்பட்டது. நேட்டோவின் அறிக்கையின் படி, 'நேட்டோ அதன் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரித்து அதன் பிராந்திய கடல்கள் வரை நீட்டிக்கின்றது. நேட்டோ கிரிமியாவை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்ததை அங்கீகரிக்கவில்லை மற்றும் அங்கீகரிக்காது. அதன் தற்காலிக ஆக்கிரமிப்பைக் கண்டிக்கிறது”.
Sea Breeze நடவடிக்கை 2021 தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பிரிட்டிஷ் நாசகாரக் கப்பல் HMS Defender ரஷ்யா உரிமை கோரும் கிரிமியாவின் கடல் பகுதிக்குள் நுழைந்து பெரும் ஆத்திரமூட்டலில் ஈடுபட்டது. ரஷ்ய ஆயுதப் படைகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதுடன், போர்க்கப்பலின் பாதையில் ஒரு குண்டை வீசியது. பின்னர் இதுபோன்ற ஏதாவது நடந்தால் 'இலக்கை நோக்கி' குண்டு வீசக்கூடும் என்று அச்சுறுத்தியது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரித்தானிய கப்பல் அமெரிக்க உளவு விமானத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறி, 'ஒரு ஆத்திரமூட்டலை நிறுத்த எங்கள் ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது' என்றார்.
ரஷ்யாவுடனான போருக்கான அரங்கமாக இப்பகுதி தெளிவாகத் தயாராக உள்ளது. ஏப்ரல் 14 அன்று ரஷ்யாவின் முதன்மைக் கப்பலான மொஸ்க்வாவை மூழ்கடித்த உக்ரேனிய தாக்குதலில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகப் பட்டினி நெருக்கடியை தணிக்கும் பதாகையின் கீழ் இந்த நகர்வுகள் இப்போது செய்யப்படுகின்றன என்பது கோரமான பாசாங்குத்தனமாகும். இது பிரித்தானிய முன்னாள் வெளியுறவுச் செயலரும்/பழைமைவாத கட்சித் தலைவர் வில்லியம் ஹேக், Times இதழில் செவ்வாய் நாளுக்கான கருத்துப் பகுதியில், “புட்டினின் அடுத்த நகர்வு? மேற்குலகைப் பிளவுபடுத்த ஒரு போர்நிறுத்தமாக இருக்கும்” என எழுதியதில் எடுத்துக்காட்டப்படுகின்றது.
சமாதானப் பேச்சுக்களுக்கான எந்தவொரு ரஷ்ய முன்மொழிவுகளையும் நேட்டோ நாடுகளை ஏற்க வேண்டாம் என்று ஹேக் வலியுறுத்துகிறார். மேலும் போர் அல்லது உலகளாவிய விலைவாசி உயர்வின் மேலும் பேரழிவு அதிகரிப்பை தவிர்க்க அவ்வாறு செய்வதற்கான அழைப்புகளை வெளிப்படையாக கேலி செய்கிறார்.
புட்டினைப் பற்றி ஹேக் பின்வருமாறு எழுதுகிறார். “அதில் சிறப்பானது என்னவெனில், அவர் போரில் இருந்து வெளியேறுவதற்கு விரும்புவார் என்பது எமக்குத் தெரியும் என மேற்கின் வர்ணனையாளர்கள் குறிப்பிடுவார்கள். அனைத்து போர்களும் உடன்பாட்டிலேயே முடிவடையும் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி நீங்கள் தொடங்கிய போரிலிருந்து விலகுவதற்கான மிகவும் தாராளமான சலுகையை உங்களுக்கு வழங்கக்கூடும்' எனக் கலந்துரையாடுவார்கள். இது ஹேக் இனால் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருக்கு முக்கியமானது சமாதானமோ அல்லது பட்டினியோ அல்ல, மாறாக நேட்டோவின் போர் நோக்கங்களை தொடர்வதாகும்.