மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) பொதுச் செயலாளர் விஜே டயஸ், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச நடவடிக்கை வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்ட, வெள்ளியன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றினார்.
கிட்டத்தட்ட ஒரு வார காலமாக, தீவு முழுவதிலும் உள்ள நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், வேலையற்றோர், இல்லத்தரசிகள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள், இராஜபக்ஷவும்அவரது அரசாங்கமும்பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கொழும்பு தேசிய நூலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டை முகநூல் ஊடாக நேரலையாக ஒளிபரப்பியதுடன் 160க்கும் மேற்பட்டோர் நேரலையில் பார்த்துள்ளனர். தமிழ் நாளிதழ் வீரகேசரி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சோசலிச சமத்துவக் கட்சி முந்தைய நாள், “இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குங்கள்!” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது.
டயஸ் நிலைமையை ஒரு வெகுஜன கிளர்ச்சியாக பண்பிடுவதோடு தனது கருத்துக்களை ஆரம்பித்தார். 'கடந்த சில நாட்களாக நாடு முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான மக்கள் — தொழிலாளர்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் கூட தங்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டங்களில் கலந்துகொள்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்.'
டயஸ், ஆகஸ்ட் 1953 ஹர்த்தாலுடன் (பொது வேலைநிறுத்தம் மற்றும் வணிகங்கள் மூடல்) ஒரு வரலாற்று சமாந்தரத்தை வரைந்தார்: “நாம் 1953 ஹர்த்தாலை நினைவு கூர்ந்தால், நாடு முழுவதும் அத்தகையதொருவெகுஜன எழுச்சி இருந்தது. ஆனால் அன்றைய உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் இருந்தலங்கா சம சமாஜக் கட்சி அதனை ஒரு நாளில் நிறுத்த தீர்மானித்தது.”
'தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்களாகவே மூன்று நாட்கள் போராட்டத்தைத் தொடர முயன்ற போதிலும், அந்த நேரத்தில் முதலாளித்துவ அரசாங்கம் ஒன்பது ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொன்றதோடு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர், இந்த நாட்டில் வெடித்துள்ள மிகத் தீவிரமான போராட்டம் இதுவேயாகும்.
“இன்றைய போராட்டம், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு ஒடுக்கப்பட்ட பிரிவினரால் சூழப்பட்ட தொழிலாளர்களின் உறுதியை காட்டியுள்ள போதிலும், போராட்டத்தின் முன்னோக்கு அல்லது வேலைத்திட்டத்தைக் கருத்தில் கொள்வதில்பாரியஇடைவெளி உள்ளது. இந்தபாரியஇடைவெளியை, அனைத்து இடது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுகள் என அழைக்கப்படுபவர்கள் கூட்டாக உருவாக்கி வருகின்றனர்.”
டயஸ் விளக்கினார்: “இப்போது இரவு பகலாக இடைவிடாது நடக்கும் போராட்டங்களில் முன்னோக்கு பற்றிய கேள்வி முன்னுக்கு வந்துள்ளது.'ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறவேண்டும்' என்ற முழக்கத்தில் மக்கள் திரண்டிருந்தாலும், அவர்களுக்கு ஒரு முன்னோக்கு அவசியம்.
'சோசலிச சமத்துவக் கட்சியும்அதன் இளைஞர் அமைப்பான, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியவை மட்டுமே தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்பட்டமக்கள்மற்றும் இளைஞர்களின் போராட்டங்களுக்கான முன்னோக்கு பற்றிய பிரச்சினையுடன் போராடும் ஒரே அமைப்புகளாகும்.'
'எரிபொருள், சமையல் எரிவாயு அல்லது பால் மாவு வாங்குவதற்கு தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் தெருக்களுக்கு வந்துள்ளனர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன' என டயஸ் குறிப்பிட்டார். இந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த, ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க தொழிலாள வர்க்கம் அரச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை முன்வைக்கிறது.
இந்த விடயங்கள் பரந்தளவில் பேசப்படவில்லை என டயஸ் கூறினார். இந்த அரசியல் கண்ணோட்டமின்மை, அரசாங்கம், எதிர்க் கட்சிகள் மற்றும் போலி-இடதுகளால் ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்கான கட்டமைப்பிற்குள் வெகுஜனங்களைச் சிக்க வைக்க சுரண்டிக் கொள்ளப்பட்டிருந்தது.
டயஸ் தொடர்ந்தார்: “இந்தப் பொறியில் மக்கள் வீழ்ந்துவிட வேண்டாம் என சோசலிச சமத்துவக் கட்சி தீவிரமாக எச்சரிக்கிறது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துடன் ஒரு இடைக்கால அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது முன்மொழியப்படுகிறது, இதுதான் வெகுஜன கிளர்ச்சிகளின் மீது அவசரகால சட்டங்கள் மற்றும் ஊரடங்குச் சட்டங்களை விதித்து, வெகுஜன போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை அனுப்பியது.”
இதற்கு நேர்மாறாக, சோசலிச சமத்துவக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதையும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தையும் முன்மொழிகிறது. “பாராளுமன்றத்தின் ஊடாக இவ்வாறான அரசாங்கம் நிறுவப்படமாட்டாது. அதற்கு தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் சொந்த அமைப்புகளை தயார்ப்படுத்தியாகவேண்டும்.
'அதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி நடவடிக்கைக் குழுக்களை முன்மொழிகிறது. ஒவ்வொரு பணியிடங்களிலும், தோட்டங்களிலும் இந்த தொழிலாளர் நடவடிக்கை குழுக்கள் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் அமைப்புகளில் இருந்து சுயாதீனமாக நிறுவப்பட வேண்டும்.”
டயஸ், உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய, நடவடிக்கைக் குழுக்களின் பணியை உயிர்ப்பிப்பதற்கான இடைமருவுக் கோரிக்கைகளை முன்மொழிந்தார்.
“அரசாங்கம் இப்போது ஒரு பில்லியன் டாலர்களை சர்வதேச நிதி மூலதனத்திற்கு செலுத்த முயற்சிக்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார். தொழிலாள வர்க்கம் விஷயங்களைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு, அனைத்துக் கடன் செலுத்துதலையும் நிறுத்தச் செயல்பட வேண்டும்.
'74 ஆண்டுகளாக சுதந்திரம் என்று அழைக்கப்பட்டதன் கீழ், அனைத்து அரசியல் வண்ணங்களை கொண்ட அரசாங்கங்களும் இந்தக் கடனை உருவாக்கியுள்ளன, மக்கள் நலனுக்காக அல்ல, மாறாக ஆயுதப்படைகளை உருவாக்கவும், முதலாளித்துவத்தைப் பாதுகாக்க முதலீட்டாளர்களின் தேவைகளை செயல்படுத்தவும் ஆகும்.
“இப்போது இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு எதிராகப் போராடுவது முற்றிலும் நியாயமானது... இந்தப் பணம் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களின் எரியும் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கம் செயல்படுத்த முயற்சிக்கும் சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், வேலைகள் வெட்டப்படுவதற்கும், வாழ்க்கைச் செலவுகள் மேலும் அதிகரிப்பதற்கும், தனியார்மயமாக்கலுக்கும் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை அகற்றுவதற்கும் வழிவகுக்கும் என டயஸ் எச்சரித்தார். நடவடிக்கை குழுக்கள் அந்த சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களுக்கு எதிராகப் போராடும்.
'அனைத்து பெரிய தொழிற்துறைகள், தோட்டங்கள் மற்றும் வங்கிகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.' அது, மக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான அனைத்து அத்தியாவசிய வளங்களின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவும்.
இலங்கைத் தொழிலாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில், இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா உட்பட சர்வதேச அளவில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகள் ஆவர் என டயஸ் கூறினார். அவர்களும் இதே போன்ற தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் நுழைந்துள்ளனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) 'உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை இலங்கைத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்தத் தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டவும் உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் போராடுகிறது' என்றார்.
உக்ரேனில் ஏகாதிபத்தியத் தலையீடு மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடக்கூடும் என்று டயஸ் கூறினார். ரஷ்யாவிற்கு எதிரான இந்த அமெரிக்க-நேட்டோ போர் உந்துதல், இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை எவ்வாறு மேலும் அதிகரித்தது என்பதையும் அவர் விளக்கினார்.சோசலிசத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தின் பாகமாக இலங்கை தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவிலும் தெற்காசியா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கப் போராட்டங்களை விவரித்த டயஸ், சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு உட்பட இந்த பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தைவிளக்கினார்.
சோசலிச சமத்துவக் கட்சி ஏன் தீவின் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் போராட்டக்காரர்களின் பங்கேற்பை வலியுறுத்துகிறது என வீரகேசரி பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார்.
இலங்கையின் ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாகப் பிளவுபடுத்துவதில் இழிபெயரெடுத்ததால், ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது என டயஸ் பதிலளித்தார்.
மேலும் படிக்க
- இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!
- இலங்கையில் மிகப் பெரிய சமூக போராட்டங்கள் வெடிக்கின்றன: உலகளாவிய வர்க்க போராட்டத்தில் ஒரு முக்கிய அபிவிருத்தி
- உலகளாவிய உணவுப்பொருள் நெருக்கடி சர்வதேச வர்க்க போராட்டத்திற்கு எரியூட்டுகிறது