மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பல்லாயிரக்கணக்கான ஸ்பானிய லாரி ஓட்டுனர்கள், சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் (Podemos) அரசாங்கத்தையும், 'புட்டினுடன் சண்டையிடுதல்' என்ற பெயரில் லாரி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற அதன் கோரிக்கைகளையும் தொடர்ந்து மீறுகின்றனர். நேட்டோ போர் உந்துதலில் ரஷ்யா மற்றும் உக்ரேன் போரின் போது அதன் எரிசக்தி ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 18 நாட்களாக லாரி ஓட்டுனர்கள் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்த நடவடிக்கையானது பாரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது: துறைமுகங்களைத் தடுப்பது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது மற்றும் பல்பொருள் அங்காடிகளில் எரிபொருள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
ஸ்பெயின் அரசாங்கம், வேலைநிறுத்தம் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டாலும், புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய திருத்தத்தின் கீழ் பங்கீட்டு நுகர்வோர் கொள்முதல் செய்ய பல்பொருள் அங்காடிகளை அங்கீகரித்துள்ளது. பால், மாவு, அரிசி மற்றும் பிற அடிப்படை பொருட்கள் இப்போது பங்கீடு செய்யப்படுகின்றன, இது 1940 களில் இருந்து காணப்படாத காட்சிகளாகும்.
வணிகப் பொருட்களின் சாலைப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கான தளம் (Platform), சிறிய லாரி நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் லாரிகள் வேலைநிறுத்தத்தை வழிநடத்தும் சங்கம், 'போராட்டத்தை கைவிட மாட்டோம்' என நேற்று கூறியது. 'அடுத்த நடவடிக்கைகளை முடிவு செய்ய' அவர்கள் சனிக்கிழமை மாட்ரிட்டில் தேசிய மட்டத்திலான கூட்டத்தை கூட்டுவார்கள். சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொடேமோஸ் ஆல் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என Platform நிராகரித்துள்ளது: ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 சென்ட் மானியம் வழங்கப்பட்டுள்ளது, அதில் 15 சென்ட் அரசு மற்றும் 5 சென்ட் எண்ணெய் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.
இருப்பினும் எரிபொருளின் சராசரி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் டீசலின் சராசரி விலை, இதில் ரஷ்யா முன்னணி ஏற்றுமதியாளராக உள்ளது, முதல் முறையாக பெட்ரோல் விலையை முந்தி, ஒரு புதிய வரலாற்று மட்டத்தை அடைந்துள்ளது. ஸ்பெயினில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சராசரி விலை €1.818 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் சராசரி டீசல் விலை €1.837 ஆக உள்ளது என ஐரோப்பிய ஒன்றிய ஆயில் புல்லட்டின் தரவு தெரிவிக்கிறது. 2022 ஆம் ஆண்டு முழுவதும் இதுவரை டீசல் விலை 36.29 சதவீதமும், பெட்ரோல் விலை 22.97 சதவீதமும் உயர்ந்துள்ளது.
நேற்று, கட்டலோனியாவில் உள்ள லாரி ஓட்டுனர்கள் பார்சிலோனாவில் உள்ள ஜோனா ஃபிராங்காவின் தொழில்துறை மற்றும் தளவாட பகுதிக்கான பிரதான சாலையை மறித்துள்ளனர். தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராஸில், கிட்டத்தட்ட 200 லாரிகள் துறைமுகத்தின் முன் மறியலில் ஈடுபட்டன. வடக்கு ஸ்பெயினின் முக்கிய துறைமுகமான பில்பாவோ துறைமுகம் இன்னும் மறியல் போராட்டங்களால் தடுக்கப்பட்டுள்ளது. பலேரிக் தீவுகளில், சமீபத்தில் உருவாக்கப்பட்ட பலேரிக் சரக்கு போக்குவரத்து சங்கத்தின் 100க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுனர்கள், தமது துறையில் 'பொறுத்துக்கொள்ள முடியாத' நிலைமை தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க மல்லோர்காவில் ஏப்ரல் 11 முதல் 13 வரை புதிய போராட்டங்களை அறிவித்தனர்.
சோசலிஸ்ட் கட்சி-பொடேமோஸ் அரசாங்கம் வேலைநிறுத்தத்திற்கு எதிராக 23,000 பொலிஸாரை அனுப்பிய பின்னர் வேலைநிறுத்தம் வேகத்தை இழக்கத் தொடங்கியுள்ளது என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. போலீஸ்காரர்கள் டஜன் கணக்கான லாரி ஓட்டுனர்களைக் கைது செய்து ஒருவரை சுட்டுக் காயப்படுத்திய பின்னரும் கூட, ஸ்பெயினின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்களான, பொடேமோஸ் உடன் இணைக்கப்பட்ட தொழிலாளர் ஆணையங்கள் (CCOO) மற்றும் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பொதுத் தொழிலாளர் சங்கம் (UGT) இரண்டும் வேலைநிறுத்தத்தைக் கண்டித்து தனிமைப்படுத்தியுள்ளன.
சில பிராந்திய லாரி ஓட்டுனர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் தற்காலிக சலுகைகளை ஏற்றுக்கொள்கின்றன. 700 க்கும் மேற்பட்ட சுயதொழில் செய்யும் லாரி ஓட்டுனர்களைக் கொண்ட Hiru Basque Autonomous Carrier சங்கம், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வாக்களித்துள்ளது. தொழிற்சங்கம் ஒரு கூட்டத்தை நடத்தியது, அதில் வேலைக்குத் திரும்புவதற்கான முன்மொழிவு 50 வாக்குகளால் ஆதரிக்கப்பட்டது, அதே நேரத்தில் வேலைநிறுத்தத்தைத் தொடர்வதற்கு ஆதரவாக 31 பேர் வாக்களித்தனர் மற்றும் 8 பேர் வாக்களிக்கவில்லை.
கான்டாப்ரியாவில், 500 லாரி ஓட்டுனர்களை ஒன்றிணைக்கும் சங்கமான Asemtrasam என்பதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைநிறுத்தத்தை கைவிட்டனர். பாஸ்க் நாட்டில் ஹிருவைப் போலவே, வாக்கெடுப்பு மிகவும் நெருக்கமாக இருந்தது மற்றும் அதிக எண்ணிக்கையிலான சங்க உறுப்பினர்கள் வெளியேறினர், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன.
Galician Federation of Freight Transport (Fegatramer) மற்றும் Navarrese Association of Carriers (Tradisna) சங்கங்களின் 212 லாரி ஓட்டுனர்களின் வாக்கெடுப்பின் முடிவை வெளியிடாமல், நிறுத்தத்தை ஆதரிப்பதை நிறுத்த முடிவு செய்தன. அஸ்டூரியாஸில் வேலைநிறுத்தங்களை ஆதரித்த இரண்டு போக்குவரத்து சங்கங்களில் ஒன்றான, தன்னாட்சி போக்குவரத்து சுதந்திர ஒன்றியம் (UITA) வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளது.
ஸ்பானிய அரசாங்கம், கனரக வாகன போக்குவரத்து மீண்டு வருவதாகவும், கடந்த திங்கட்கிழமை வேலைநிறுத்தத்தின் உச்சக்கட்டத்தின் போது பதிவு செய்யப்பட்டதை விட நேற்று இது 35 சதவீதம் அதிகம் என்றும் கூறுகிறது.
வேலைநிறுத்தத்தின் அடக்குமுறை அதிகரிக்கையில், ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் பணவீக்கத்திற்கான அடிப்படைக் காரணங்களாக, டிரில்லியன் கணக்கான யூரோக்களை பெரும் பணக்காரர்களின் பைகளில் செலுத்துவதன் மூலம் நாணயத்தை மதிப்பிழக்க செய்யும் வங்கி பிணையெடுப்புகள் மற்றும் ரஷ்ய எண்ணெய், தானிய ஏற்றுமதிகளை இலக்காகக் கொண்ட நேட்டோ தடைகள் உள்ளன என்பது தெளிவாகிறது. புதன்கிழமை, ஸ்பெயினின் தேசிய புள்ளியியல் நிறுவனம், பணவீக்கம் 10 சதவீதத்தில் இயங்குகிறது என தெரிவித்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்பு PSOE அரசாங்கம் பின்பற்றிய காட்டுமிராண்டித்தனமான சிக்கனக் கொள்கைகளுக்கு மத்தியில், 1985ல் இருந்து இந்த நிலை காணப்படவில்லை.
ஆலோசனை நிறுவனமான கந்தார் (Kantar) இன் கூற்றுப்படி, உக்ரேனில் ரஷ்ய படையெடுப்பிற்குப் பின்னர் இரண்டு வாரங்களில், நுகர்வோர் பொருட்களின் விலைகள் ஒட்டுமொத்தமாக 5 சதவிகிதம் அதிகரித்தன. ஆயினும்கூட, போர் மற்றும் லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் பல வாங்குபவர்கள் இருப்புக்கு சேமித்ததால் நுகர்வு 13 சதவீதம் உயர்ந்தது. விலைகள் முன்னோடியில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன: ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இந்த மாதம் சமையல் எண்ணெய் விலை 303 சதவீதமும், பாஸ்தா 183 சதவீதமும், அரிசி 181 சதவீதமும், பால் 145 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது.
சோசலிஸ்ட் கட்சி சார்பு நாளிதழ் El País எழுதியது: “இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, நுகர்வோர் வெவ்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்கின்றனர். பொதுவாக பின்பற்றும் தந்திரோபாயங்கள் மூன்று: சேமிப்புக்களை அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்துதல், மலிவான தயாரிப்புக்களை தேடுதல் அல்லது குறைவாக வாங்குதல். மார்ச் மாதத்திற்கான தரவு, இதுவரை குடும்பச் சேமிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறது, இது தொற்றுநோய்களின் போது நுகர்வு சாத்தியமற்றதாக இருந்தவேளையில் அடைந்த நிலையை எட்டியுள்ளது.
உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் (Aecoc) கருத்துப்படி, ஸ்பெயினில் உள்ள 15 சதவீத நுகர்வோர் அல்லது ஏழில் ஒருவருக்கும் அதிகமானோர், ஏற்கனவே குறைந்த உணவை வாங்கி உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பணவீக்கம் என்பது ஆளும் உயரடுக்கின் வர்க்கப் போர் கொள்கையின் விளைவாகும். தொற்றுநோய்களின் போது, முதலாளித்துவ அரசாங்கங்கள் விஞ்ஞானபூர்வ பூஜ்ஜிய கோவிட் மூலோபாயத்தை ஏற்க மறுத்துவிட்டன. மத்திய வங்கிகள் பெரும் பணக்காரர்களுக்கு பிணை எடுப்பதற்காக டிரில்லியன் கணக்கான யூரோக்களை அச்சிட்டபோதும், தொற்றுநோய் தொடர்ந்து விநியோகச் சங்கிலிகளை ஒழுங்கமைக்க அனுமதிக்கவில்லை. உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோ போருக்கு மத்தியில் உலகச் சந்தைகளில் இருந்து ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் தானியங்களை வெட்டுவது என்ற நேட்டோவின் கொள்கை விலைவாசி உயர்வை மேலும் துரிதப்படுத்தியுள்ளது.
முதலாளித்துவ வர்க்கம் லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் மற்றும் விநியோகச் சங்கிலிப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து, ஆயிரக்கணக்கான தற்காலிக பணிநீக்கத் திட்டங்களை (ERTEs) திணித்து, பரந்தளவில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த தற்காலிக பணிநீக்கத் திட்டங்கள் (ERTEகள்) அனுமதிக்கின்றன, அதற்குப் பதிலாக 30 சதவீத ஊதியக் குறைப்புடன் வேலையின்மை நலன்களைப் பெறுகிறார்கள்.
வாகன உற்பத்தியாளர்களான Seat, Ford மற்றும் Renault, Air Europa, துருப்பிடிக்காத எஃகு உற்பத்தியாளர் Acerinox, உணவு உற்பத்தியாளர் Ingapan, இரசாயன நிறுவனம் Asturquimia, காடிஸ் இல் உள்ள உலோக வேலை செய்யும் நிறுவனங்கள் மற்றும் காஸ்டெலோன் இல் உள்ள பீங்கான் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுடன் ERTE கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஒருதலைப்பட்சமாக சம்பளத்தை குறைக்க வேண்டும் என பெரு வணிக சங்கங்கள் கோருகின்றன. El Confidencial Digital இன் படி, ஸ்பானிய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பு (CEOE) 'நெருக்கடியான காலங்களில் சம்பளத்தைக் குறைக்கும் முழு சுதந்திரத்தையும்' கோருகிறது.
சோசலிஸ்ட் கட்சி மற்றும் போலி-இடது பொடேமோஸ் கட்சியின் வாக்குறுதிகளில் லாரி ஓட்டுநர்கள் நம்பிக்கை வைக்க முடியாது, அதன் போலீஸ்காரர்கள் மறியல் போராட்ட பாதைகளில் அவர்களைத் தாக்குகிறார்கள். ரஷ்யாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை நேட்டோ அதிகரித்துள்ள நிலையில், இந்த வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட காகிதத்திற்கு கூட மதிப்பு இல்லாதது. வேலை நிறுத்தத்திற்கு புதிய அரசியல் மூலோபாயம் தேவைப்படுகிறது.
ஸ்பெயின் லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம், சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டங்களின் தீவிர அலையின் ஒரு பாகமாகும், அமெரிக்கா மற்றும் கனேடிய இரயில் தொழிலாளர்கள் கதவடைப்பு மற்றும் வேலைநிறுத்த எதிர்ப்புத் தடைகளை எதிர்த்துப் போராடுகின்றனர், திடீர் வேலைநிறுத்தங்களின் அலை துருக்கியை உலுக்கியது, மேலும் பல மில்லியன் இந்தியத் தொழிலாளர்கள் அரசின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிட்-19 இன் பாரிய தொற்று கொள்கைகள், பணவீக்கம் மற்றும் போர் கொள்கைகளுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு உள்ளது. ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்தை ஏழ்மையில் ஆழ்த்தும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் பரந்த அணிதிரட்டலுக்காக போராடுவதே லாரி ஓட்டுனர்களுக்கான முக்கியமான பிரச்சினையாகும்.