மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஐரோப்பிய அரசுகளின் ஐரோப்பிய ஆணைய மற்றும் பின்னர் நேட்டோ இராணுவ கூட்டணியுடன் இரண்டு நாட்கள் சந்திப்புகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் இன்று புருஸ்ஸெல்ஸ் வந்தடைந்தார். அணு ஆயுதப் போரின் அபாயம் அதிகரித்துள்ள போதிலும், ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நேட்டோ பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்துவதை உறுதி செய்வதே அவரது வருகையின் நோக்கமாகும்.
பைடெனின் பயணம் குறித்து நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், பிப்ரவரி 23 அன்று உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த ரஷ்ய-உக்ரேனிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற்றதாக வெளியான செய்திகளை நிராகரித்து, காலவரையின்றி போர் தொடரும் என்று கூறினார்.
'இந்தப் போர் எளிதில் அல்லது விரைவாக முடிவடையாது' என்று சுல்லிவன் கூறினார். “கடந்த சில மாதங்களாக மேற்கு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன. நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதிசெய்யவும், நமது கூட்டுத் தீர்மானத்தை உறுதிப்படுத்தவும், எவ்வளவு காலம் எடுக்கும் போதும் இதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், உறுதியுடன் இருக்கிறோம் என்ற சக்திவாய்ந்த செய்தியை அனுப்ப ஜனாதிபதி ஐரோப்பாவுக்குப் பயணம் செய்கிறார்.
நேட்டோ துருப்புக்களை உக்ரேனுக்கு 'அமைதிகாப்பாளர்களாக' நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை முன்வைத்த போலந்துக்கு மார்ச் 25 அன்று தனது அடுத்த விஜயத்தின் போது, நேட்டோ உறுப்பு நாடுகளால் உக்ரேன் மீது தரைவழி ஆக்கிரமிப்புக்கான திட்டங்களை பைடென் விவாதிக்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் அமெரிக்க துருப்புக்கள் இப்போது உக்ரேனில் இருக்கிறது என்பதை மறுத்தார், ஆனால் மற்ற நேட்டோ நாடுகளுக்கு படையெடுப்பதற்கு பச்சைக்கொடி காட்டினார். “இந்த நேட்டோ மாநாட்டில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பதையும், [உக்ரேனில் அமைதி காக்கும் படையினரை நிலைநிறுத்துவது] போலந்து முன்மொழிவுக்கு நேட்டோ எவ்வாறு பதிலளிக்கும் என்பதையும் என்னால் முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நேரத்தில் அமெரிக்க துருப்புக்கள் உக்ரேனில் இருக்கமாட்டார்கள் என்று நான் சொல்ல முடியும்,' என்று அவர் கூறினார், 'மற்ற நேட்டோ நாடுகள் உக்ரேனுக்குள் துருப்புக்களை வைக்க விரும்பினால் முடிவு செய்யலாம்' என்று அவர் மேலும் கூறினார்.
தாமஸ்-கிரீன்ஃபீல்ட் உக்ரேனில் அமெரிக்க இராணுவத் தலையீட்டை மறுப்பது தவறான வழிகாட்டல் மற்றும் பொய்யானது. அகாடமி (முன்னர் பிளாக்வாட்டர்) மற்றும் சிஐஏ துணைப்படைகள் போன்ற அமெரிக்க தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனிய தேசியவாத ஆயுததாரிகள் மற்றும் இராணுவ பிரிவுகளுக்கு உதவுகின்றனர். எவ்வாறாயினும், ஒரு பெரிய விரிவாக்கம் தயாராகி வருகிறது: ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகள், பென்டகன் ஐரோப்பாவில் தற்போதுள்ள 100,000 துருப்புக்கள் பலத்தை இரட்டிப்பாக்கலாம் என்று கூறியுள்ளனர்.
நேட்டோ ரஷ்யாவிற்கு எதிராக ஒரு நிலப் போரைத் தொடங்குவதற்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன, அது உலகளாவிய அணுசக்தி போராக அதிகரிக்கும். ரஷ்ய இராணுவத்தில் 1 மில்லியன் வழக்கமான துருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; அவர்களில், ஏறக்குறைய 150,000 பேர், பெரும்பாலும் உயரடுக்கு கவசப் பிரிவுகளில் இருந்து பெறப்பட்டவர்கள், உக்ரேனில் இரத்தக்களரி சண்டையில் மூழ்கியுள்ளனர். நேட்டோ ஆயுதப் படைகள், சுமார் 3.3 மில்லியன், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் மேன்மையை அனுபவித்து, உக்ரேனில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க பகிரங்கமாகத் தயாராகி வருகின்றன.
நேற்று, CNN கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவை நேர்காணல் செய்தது மற்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்யாவின் விருப்பம் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் அவரிடம் கேட்டது.
கிரெம்ளின் ரஷ்யாவின் தேசிய உயிர்வாழ்விற்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்று நம்பினால், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று பெஸ்கோவ் வலியுறுத்தினார். 'எங்களிடம் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றிய கருத்து உள்ளது, அது பொதுவில் உள்ளது, அணு ஆயுதங்கள் ஏன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அனைத்து காரணங்களையும் நீங்கள் படிக்கலாம். எனவே, இது நம் நாட்டிற்கு ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாக இருந்தால், அதை [அணு ஆயுதக் கிடங்கு] எங்கள் கருத்தின்படி பயன்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.
கிரெம்ளின் உக்ரேனை ஆக்கிரமிக்க வழிவகுத்த திவாலான கணக்கீடுகளின் கணக்கையும் பெஸ்கோவ் CNN க்கு வழங்கினார். கிழக்கு உக்ரேனின் டொன்பாஸ் போன்ற பிரிவினைவாத ரஷ்ய மொழி பேசும் பகுதிகள் மீது கியேவில் உள்ள தற்போதைய தீவிர வலதுசாரி உக்ரேனிய ஆட்சியால் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இது கவலையளிப்பதாக அவர் கூறினார். மேலும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1991ல் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததில் இருந்து பல தசாப்தங்களில் ரஷ்யாவை நேட்டோ நடத்தும் விதத்தில் கிரெம்ளின் பெருகிய முறையில் விரக்தியடைந்துள்ளது.
'ஜனாதிபதி [விளாடிமிர்] புட்டினின் நோக்கங்கள் உலகம் நமது கவலைகளைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் செய்வதற்காகும்' என்று பெஸ்கோவ் கூறினார். 'நாங்கள் எங்கள் கவலைகளை உலகிற்கு, முதலில் ஐரோப்பாவிற்கு, அமெரிக்காவிற்கு சில தசாப்தங்களாக தெரிவிக்க முயற்சிக்கிறோம், ஆனால் யாரும் செவிமடுக்க மாட்டார்கள்.'
அமெரிக்க மற்றும் நேட்டோ ஆயுதங்களையும் ஆதரவையும் உக்ரேனுக்குள் கொட்ட, இது நேரடியாக ரஷ்யாவின் எல்லைகளில் ஒரு பெரும் ஆயுதம் ஏந்திய நேட்டோ தளமாக மாறிய நிலையில், ரஷ்யாவின் விரக்தியானது பெருகியது. மாஸ்கோ 'டொன்பாஸுக்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரேன் ஒருபோதும் தயாராகாது என நம்புகிறது' என்று பெஸ்கோவ் கூறினார், மேலும் பேர்லின், பாரிஸ், கியேவ் மற்றும் மாஸ்கோ இடையேயான 'நோர்மண்டி வடிவ' பேச்சுக்களை எண்ணினார். இருப்பினும், பெஸ்கோவ் மேலும் கூறினார், “உக்ரேனியர்களை யாரும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கவில்லை [டொன்பாஸ் மீது தாக்குதல்]. நோர்மண்டி செயல்முறையின் கட்டமைப்பிற்குள் ஒரு தீர்வினை நோக்கி யாரும் உக்ரேனியர்களைத் தள்ள மாட்டார்கள். யாரும் செய்யவில்லை.'
நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு, அது அவர்களை இராணுவரீதியில் மிரட்ட வேண்டும் என்று கிரெம்ளின் முடிவு செய்ததாக பெஸ்கோவ் சுட்டிக்காட்டினார். டொன்பாஸில் உக்ரேன் சுமார் 120,000 துருப்புக்களை முன் வரிசையில் குவித்த பின்னர், பெஸ்கோவ் கூறினார், 'எங்களுக்கு ... எங்கள் இராணுவ நிபுணர்களுக்கு, உக்ரேன் டொன்பாஸுக்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடங்கப் போகிறது என்பது முற்றிலும் தெளிவாகிவிட்டது.' ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் தொடங்கும் வரை 'எங்கள் கவலைகளுக்கு யாரும் கவனம் செலுத்த மாட்டார்கள்' என மாஸ்கோ முடிவு செய்தது.
ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததன் பேரழிவு விளைவுகளில், உலகளாவிய இராணுவ மோதலின் தீவிர ஆபத்து வேரூன்றியுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நேட்டோ கிழக்கு ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளை உள்வாங்கியது, ரஷ்யாவின் எல்லைகளுக்கு நெருக்கமாக நகர்ந்து, அதே நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் ஊடுருவி, ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளைத் தாக்கியது. இப்போது, அது ரஷ்யாவின் எல்லைகளான போலந்து, பால்டிக் குடியரசுகள் மற்றும் இப்போது உக்ரேனில் நேரடியாக துருப்புக்களை நிலைநிறுத்துகிறது.
பெஸ்கோவின் கருத்துக்கள், ஏகாதிபத்தியத்துடன் 'அமைதியான சகவாழ்வு' என்ற தவறான ஸ்ராலினிச தத்துவத்தில் பயிற்றுவிக்கப்பட்ட ரஷ்யாவின் சோவியத்துக்கு பிந்தைய முதலாளித்துவ ஆட்சியின் தலைவர்களின் பிற்போக்குத்தனமான கருத்துருக்களை வெளிப்படுத்துகின்றன. தங்களின் 'மேற்கத்திய பங்காளிகள்' என்று அழைக்கும் நேட்டோ சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் தொடர்ந்து ஏமாற்றமடைந்த அவர்கள், பெஸ்கோவின் கூற்றுப்படி, நம்பகமான இராணுவ அச்சுறுத்தல் நேட்டோவை பேச்சுவார்த்தைக்குத் தள்ளும் என்று சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூதாட்டம் தோற்றுப் போகிறது.
கிரெம்ளின் முதல் சூட்டை நடத்தினாலும், ரஷ்யாவை மோதலில் தள்ளியது நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள்தான். இப்போது, அவர்கள் உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பு மற்றும் மாஸ்கோவின் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினையாற்றுகின்றனர். கிரெம்ளின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது என்று பெஸ்கோவ் வலியுறுத்தினாலும், நேட்டோ சக்திகள் பொறுப்பற்ற முறையில் அணு ஆயுதப் போர் ஆபத்தில் ஆழ்த்துகின்றன.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் உக்ரேனில் அதன் இராணுவ நடவடிக்கைகளுக்காக ரஷ்யாவை பேய்த்தனமாக சித்தரிக்கும் அதே வேளையில், நேட்டோ இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மாஸ்கோ ஒரு போரில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்கும் என்ற ஆதாரமற்ற மற்றும் மிகவும் ஆபத்தான முடிவை எடுப்பதாகத் தெரிகிறது.
நேற்று, இராணுவ நிருபர் வில்லியம் ஆர்கின், அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்களின் அடிப்படையில், உக்ரேனில் ரஷ்ய தந்திரோபாயங்கள் பற்றிய விவரத்தை நியூஸ்வீக்கில் எழுதினார். உக்ரேனிய நகரங்களுக்கு பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்திய மாஸ்கோவின் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான விமான சக்தி மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தல் பற்றி அவர்கள் வலியுறுத்தினர். ஏறக்குறைய ஒரு மாதப் போருக்குப் பின்னர், ரஷ்ய விமானம் 'சுமார் 1,400 தாக்குதல் வெளியேற்றங்களை பறக்கவிட்டு கிட்டத்தட்ட 1,000 ஏவுகணைகளை வீசியது' என்று ஆர்கின் எழுதினார். இதற்கு நேர்மாறாக, '2003 ஈராக் போரின் முதல் நாளில் அமெரிக்கா அதிக விமானங்களைச் செலுத்தியது மற்றும் அதிக ஆயுதங்களால் தாக்கியது' என்று அவர் குறிப்பிட்டார்.
'கியேவின் இதயம் அரிதாகவே தொடப்பட்டது. மேலும் கிட்டத்தட்ட அனைத்து நீண்ட தூரத் தாக்குதல்களும் இராணுவ இலக்குகளை இலக்காகக் கொண்டவை,” என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் மூத்த அதிகாரி ஆர்கினிடம் தெரிவித்தார். “எனக்குத் தெரியும்... படுகொலையும் அழிவும் அதை விட மோசமாக இருக்கும் என்பதை விழுங்குவது கடினம். ஆனால் உண்மைகள் அதைத்தான் காட்டுகின்றன. இது, குறைந்தபட்சம், புட்டின் வேண்டுமென்றே பொதுமக்களைத் தாக்கவில்லை என்பதை எனக்குத் தெரிவிக்கிறது, ஒருவேளை அவர் பேச்சுவார்த்தைகளுக்கு வெளியே செல்வதற்கு சேதத்தை குறைக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டிருக்கலாம்.”
ஐரோப்பாவில், உத்தியோகபூர்வ வட்டாரங்கள் அணுசக்தி மோதலின் அதிகரித்த சாத்தியக்கூறுகளை தெளிவாகக் கணக்கிட்டு வருகின்றன, இது ஒன்று அல்லது அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் விரைவாக அழிக்கக்கூடும். நேற்று, பாரிஸில் உள்ள அரசியல் விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் அணு ஆயுத நிபுணரான பேராசிரியர் பெனுவா பெலோபிடா, பிரான்ஸ் இன்ஃபோவிடம் அணுவாயுதத் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தை எடுத்துரைத்தார்.
'பிரெஞ்சு இராணுவம் மற்றும் அரசியல் உயரடுக்குகள் அணுசக்தி தடுப்புக்கு பந்தயம் கட்டுகின்றன,' என்று பெலோபிடா கூறினார். எவ்வாறாயினும், தீவிர அரசியல் நிலைமைகளின் கீழ், பிரான்சின் அணு ஆயுதங்கள், ரஷ்யாவையோ அல்லது பிற சக்திகளையோ அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கப் போதுமானதாக இருக்காது, ரஷ்யாவும் நேட்டோவும் எப்போதும் பெரிய அளவில் அணுகுண்டுகளை வீசினால், அது பிரான்சை நிர்மூலமாக்கிவிடும்.
பெலோபிடா விளக்கினார், 'ஏற்கனவே 1950களில், தேசிய குடிமைப் பாதுகாப்புச் சேவை அறிக்கை பிரான்சை அழிக்க 15 தெர்மோநியூக்ளியர் குண்டுகள் போதுமானதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியது.' மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவில் பிரான்ஸ் மிகப்பெரியது, அதாவது மற்ற நாடுகளை அழித்தொழிக்க குறைந்த அளவு எடுக்கும். பெருமளவிலான நிலத்தடி தங்குமிடங்களைக் கட்டுவது மக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பெலோபிடா மேலும் கூறினார், 'மிகக் குறைந்த எண்ணிக்கையிலான [அணு] வெடிப்புகளை விட அதிகமாக எதையும் எதிர்கொண்டாலும், இந்த தங்குமிடங்கள் மாயையான பாதுகாப்பை மட்டுமே வழங்குகின்றன என்று காட்டப்பட்டுள்ளது.'
ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: நேட்டோ சக்திகள் ஐரோப்பாவில் இராணுவ விரிவாக்கத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, அணுசக்தி போர் இப்போது தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்தாக உள்ளது.
நேட்டோ ஆளும் வர்க்கங்களின் தரப்பில் நியாயப்படுத்துவதற்கான முறையீடுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன, மேலும் அவை செவிடன் காதில் ஊதும் சங்காகும். ஒரு பேரழிவுகரமான மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, உலகப் போரின் பெருகும் ஆபத்து குறித்து சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக எச்சரித்து, அதை ஒரு சக்திவாய்ந்த சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தில் அணிதிரட்டுவதுதான்.