முன்னோக்கு

கடவுளின் பெயரால் அமெரிக்காவுக்கு உரிமை வழங்கியது யார்? திரு. பைடெனுக்கு ஒரு கேள்வி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிழக்கு உக்ரேனின் இரண்டு மாகாணங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்ததற்கு விடையிறுப்பாக, செவ்வாய்கிழமை பிற்பகல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இருந்து ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்.

வெள்ளை மாளிகையில் நிலவும் குழப்பம் அந்த கூட்டத்தின் போதே பிரதிபலித்தது. முதலில் மதியம் 2:00 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த அது, செவ்வாய்கிழமை நண்பகல் 1:00 மணிக்கு மாற்றப்பட்டது. ஆனால் பைடென் செயலற்ற அந்த 10 நிமிட அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் அங்கே வந்திருந்த செய்தியாளர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர், அவர் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் உடனடியாக அறையை விட்டு வெளியேறினார்.

அவர் கருத்துக்களின் போது, பைடென் ஒரு வெளிப்படையான கேள்வியை முன்வைத்தார்: 'புட்டின் தனது அண்டைநாடுகளுக்குச் சொந்தமான பிரதேசத்தில் புதிய 'நாடுகள்' எனப்படுவதை அறிவிக்க கடவுளின் பெயரால் அவருக்கு யார் உரிமை வழங்கியதாக நினைக்கிறார்?”

ஆனால் இந்த கேள்விக்கான பதிலை பைடெனிடமிருந்து உலகம் கேட்க விரும்புகிறது. ரஷ்யா, “சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாக' பைடென் என்ன குற்றஞ்சாட்டுகிறாரோ துல்லியமாக அதையே தான் அமெரிக்கா செய்து வருகிறது, இதில் பைடென் நேரடியாகவும் தனிப்பட்டரீதியிலும் சம்பந்தப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 22, 2022 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பிடன் (AP புகைப்படம்/அலெக்ஸ் பிராண்டன்)

ஒரு கட்டத்தில் பைடென் உக்ரேன் சம்பந்தமான தற்போதைய மோதலின் பின்னணியில் உள்ள வரலாற்றைக் குறிப்பிடத் தொடங்கினார். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கை அங்கீகரித்து திங்கட்கிழமை புட்டின் வழங்கிய உரையைக் குறிப்பிட்டு, பைடென் கூறுகையில்: “…என்று குறிப்பிட்டு, விளாடிமீர் புட்டின் நாவன்மையோடு பூசிமொழுகி ஒரு நூற்றாண்டுக்கும் அதிக காலத்திற்குப் பின்நோக்கி சென்று, வரலாற்றைத் திரித்து மாற்றி எழுதியதன் முழு வீச்சை நேற்று நாம் அனைவரும் தெளிவாக கேட்டோம். வாக்கியத்தின் நடுப்பகுதியில், வயதான அந்த அமெரிக்க ஜனாதிபதி எழுதப்பட்டிருந்த அவரது கருத்துக்களில் இருந்து சிறிது விலகுவது நல்லதென நினைத்தார்: “சரி, நான் அதற்குள் செல்லப் போவதில்லை” என்றார்.

ஆனால் நாம் அதற்குள் 'செல்வோம்.” சோசலிசவாதிகள் செய்வதைப் போல, ஒருவர் புட்டின் ஆட்சியின் நவ-ஜாரிச நினைவில் ஊறிய இந்த பிற்போக்குத்தனமான பேரினவாதத்தை எதிர்க்கலாம், அதேவேளையில் தற்போதைய நெருக்கடியில் அமெரிக்க கொள்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மேலோங்கி உள்ள அப்பட்டமான பொய்கள் மற்றும் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

மார்ச்-ஜூன் 1999 இல் சேர்பியாவில் 78 நாட்கள் குண்டுவீச்சில் உச்சத்தை அடைந்து, ஏகாதிபத்தியம் தூண்டுதலில் யூகோஸ்லாவியாவின் உடைவு குறிப்பாக அறிவூட்டத்தக்கதாக உள்ளது.

சுலோவேனியா மற்றும் குரோஷியாவின் சுதந்திரத்தை ஜேர்மனி ஒருதலைப்பட்சமாக அங்கீகரித்த நிலையில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் சேர்ந்து, யூகோஸ்லாவியாவைக் கலைக்கும் செயல்முறை டிசம்பர் 1991 இல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 1992 இல் புஷ் நிர்வாகம் பொஸ்னியா-ஹெர்சகோவினாவை அதன் சொந்த அரசுக்குத் தகுதி உடையதாக மதிப்பளித்து, அதை ஒரு சுதந்திர 'தேசமாக' அங்கீகரித்தது. யூகோஸ்லாவியாவில் சுதந்திர அரசுகளை அங்கீகரிப்பதற்காக ஜேர்மன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நகர்வுகள், 1995 குரோஷியப் போர் உட்பட 1990கள் முழுவதும் இரத்தக்களரியான தேசிய மோதல்களைத் தூண்டின.

அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளால் தூண்டிவிடப்பட்ட அந்த பேரழிவு 1999 இல் நேரடி இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. 'மனிதாபிமானவாதம்' (humanitarianism) என்ற பதாகையை அசைத்து, உயர்மட்ட நடுத்தர வர்க்கம் மற்றும் கல்வித்துறை அடுக்குகளால் பேரார்வத்துடன் ஆதரிக்கப்பட்ட கிளிண்டன் நிர்வாகம், கொசோவோ மாகாணத்தின் பிரிவினையைச் செயல்படுத்த சேர்பியாவுக்கு எதிரான அதன் போரைத் தொடங்கியது. இந்த தாக்குதலுடன் சேர்பிய அரசாங்கத்தின் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களின் அனைத்து வகையான கூற்றுக்களையும் உள்ளடக்கி இருந்தது, இவை இறுதியில் ஒட்டுமொத்தமாக மிகைப்படுத்தப்பட்ட அல்லது அப்பட்டமான பொய் என்பது நிரூபணமானது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தைப் பெறாமலே நேட்டோ அந்தப் போரை நடத்தியது, எனவே இது சர்வதேச சட்டத்தை நேரடியாக மீறும் நடவடிக்கையாக இருந்தது. இது கொசோவோ விடுதலை இராணுவத்தால் நடத்தப்படும் ஒரு கொசோவோ அரசாங்கத்தை நிறுவுவதில் உச்சத்தை அடைந்தது, முன்னதாக அமெரிக்காவினால் ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டிருந்த இந்த கொசோவோ விடுதலை இராணுவம், பின்னர் போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம் மற்றும் மனித உறுப்புகள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக அம்பலப்பட இருந்தது.

கொசோவோ போருக்கு முன்னதாக, செனட் வெளியுறவுக் குழுவில் பைடென் ஜனநாயகக் கட்சியின் இரண்டாம் நிலை தரவரிசையில் இருந்தார், அங்கே அவர் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோன் மெக்கெய்னுடன் இணைந்து போருக்காக ஆக்ரோஷமாக பிரச்சாரம் செய்தார். 'நான் ஜனாதிபதியாக இருந்தால், நான் அவர் மீது [சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக் மீது] குண்டு வீசியிருப்பேன்,' என்று அக்டோபர் 1998 இல் பைடென் கூறினார்.

சேர்பியாவுக்கு எதிரான போரின் போது, தற்போதைய வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென், ஐரோப்பாவுக்கான கிளிண்டனின் முதன்மை ஆலோசகராக தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஐரோப்பிய விவகாரங்களுக்கான மூத்த இயக்குநராக பதவி வகித்தார். 2002 இல், அவர் பைடெனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றி, செனட் வெளியுறவுக் குழுவின் ஜனநாயகக் கட்சியின் பணியாளர்களுக்கான இயக்குநராகப் பதவியேற்றார்.

சேர்பியா மீது குண்டுவீசி ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் கொசோவோவின் நிலையைப் பற்றி விவாதிக்க கூடிய செனட் வெளியுறவுக் குழுவின் மார்ச் 2008 கூட்டத்தில், பைடென் 'புதிய 'நாடுகள்' எனப்படுவதை அறிவிப்பதற்கான உரிமையை' வெளிப்படையாக அறிவித்தார்.

'இந்த நவீன உலகில்,' கூட்டத்தைத் தொடங்கி வைத்து பைடென் கூறினார், 'இறையாண்மை என்பது பூர்வீக உரிமை அல்ல; அது அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையிலான ஒரு புனித நம்பிக்கை. … வரலாற்றுக்கு முக்கியத்துவம் உள்ள ஓர் உலகில் நாம் வாழ்கிறோம், ஆனால் இது மனிதர்களுக்கும் பொருந்தும். சேர்பியாவின் கடந்தகால ஏகாதிபத்திய மகிமையின் பிராந்திய நினைவுச்சின்னமாக கொசோவோ இருக்க முடியாது. ஆகவே ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தின் மூலம் கொசோவோவின் நிலையைத் தீர்ப்பது சிறந்ததல்ல என்றாலும், அது அவசியம் என்று நான் நம்புகிறேன். புதிதாக சுதந்திரம் பெற்ற கொசோவோவை அங்கீகரித்த உலகின் முதல் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாக இருந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்,” என்றார்.

2000 இல், கொசோவோ போரைத் தொடர்ந்து, கிளின்டன் நிர்வாகம் ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தை வெளியிட்டது, அது 'தேசிய நலன்கள்' அல்லது 'மனிதாபிமான நலன்கள்' அடிப்படையில் எந்த நாட்டிலும் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை இருப்பதாக வலியுறுத்தியது. இராணுவத் தலையீட்டிற்கு ஒரு நியாயப்பாடாக அந்த ஆவணம் பட்டியலிட்ட 'இன்றியமையா நலன்களில்', 'முக்கிய சந்தைகள், எரிசக்தி விநியோகங்கள் மற்றும் மூலோபாய வளங்களைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்வது,' ஆகியவை உள்ளடங்கி இருந்தன.

எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுப்பதற்கு கட்டுப்பாடற்ற உரிமையை வலியுறுத்தும் இது, புஷ் நிர்வாகத்தால் 'முன்கூட்டிய போர்' கோட்பாட்டின் கீழ் கூடுதலாக அபிவிருத்தி செய்யப்பட்டது, 2003 இல் ஈராக்கிற்கு எதிரான குற்றகரமான ஆக்கிரமிப்பு போருக்கு இந்த கோட்பாடு தான் பயன்படுத்தப்பட்டது, இது 1 மில்லியன் ஈராக்கியர்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது.

கொசோவோ போருக்கான 'மனிதாபிமான' சாக்குப்போக்கை தொடர்ந்து 'பாதுகாக்கும் பொறுப்பு' (responsibility to protect) கோட்பாடு வந்தது, இது 2011 இல் ஒபாமா நிர்வாகத்தின் கீழ், பைடென் துணை ஜனாதிபதியாக இருந்த போது, லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இந்த போர் லிபியா மீது பாரியளவில் குண்டுவீசியதுடன், மௌம்மர் கடாபியின் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து, மற்றும் அமெரிக்க மற்றும் நேட்டோ ஆதரவுப் படைகளால் அவர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதில் உச்சத்தை அடைந்தது.

இறுதியாக, 2014 ஆட்சி மாற்ற நடவடிக்கையில் இருந்து எழும் தற்போதைய நெருக்கடியின் பின்னணியும் உள்ளது. ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அமெரிக்கா கருதிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் அதி-தீவிர வலதுசாரி குழுக்களால் இந்த சதி முன்னெடுக்கப்பட்டது. ஒபாமா நிர்வாகம் அதன் நலன்களுக்கு வளைந்து கொடுக்கும் ஒரு அரசாங்கத்தை நிறுவ செயற்பட்ட போது, பைடென் துணை ஜனாதிபதியாக உக்ரேனுக்கு ஆறு முறை பயணம் செய்து, மீண்டும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார்.

மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா தொடர்ச்சியாக விரிவாக்கி வரும் இந்த போரில் அமெரிக்கா ஈடுபட்டதில்லை என்பதைப் போல பாசாங்கு செய்யும் ஊடகங்களில் இந்த வரலாற்றுக் கேள்விகள் எதுவும் இதுவரை கேட்கப்படவில்லை.

நியூயார்க் டைம்ஸ், 'புட்டினின் ஆத்திரமூட்டல்களுக்கு ஒரு நேரடியான விடையிறுப்பு' என்று செவ்வாய்கிழமை வெளியிட்ட ஒரு தலையங்கத்தில், 'உக்ரேனை நோக்கிய விளாடிமிர் புட்டினின் தடுமாறிய ஆக்கிரமிப்பு' என்று அது எதை குறிப்பிட்டதோ அதற்கு விடையிறுப்பாக பைடென் அறிவித்த தடையாணைகளை பாராட்டுகிறது.

டைம்ஸ் அதன் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது 'இவை அனைத்தும் 2022 இல் ஐரோப்பாவில் நடக்கிறது, கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியிலிருந்து. … சோவியத் ஒன்றியத்தை போன்ற ஒரு பரந்த சாம்ராஜ்யம் பின்னடைவுகள் இல்லாமல் சரிந்துவிடாது என்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவில் இவை தொடர்ந்து உடைந்துவிட்டன —கிரிமியாவை ரஷ்யா இணைத்தது உட்பட— ஐரோப்பாவில் பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றுவது என்ற கருத்து. ஒரு முழு அளவிலான போர் மூலம் இனி சாத்தியமில்லை என்று தோன்றியது.'

இது அர்த்தமற்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது உலகளாவிய உறவுகளை மறுகட்டமைக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அதை விளங்கப்படுத்தினார்கள். இந்த செயல்பாட்டில், உலகெங்கிலுமான நாடுகள் மீது படையெடுக்க, குண்டுவீச, ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தூண்ட 'உரிமை' இருப்பதாக அமெரிக்கா பிரகடனப்படுத்தி உள்ளது, செயல்படுத்தியும் உள்ளது. நேட்டோ இராணுவக் கூட்டணியானது கிழக்கு ஐரோப்பா முழுவதிலும், ரஷ்யாவின் எல்லைகள் வரை முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது, உக்ரேனை நேட்டோவில் சேர அனுமதிக்கும் புனிதக் 'கோட்பாடு' தொடர்பாக ரஷ்யாவுடன் அமெரிக்கா மோதலை தூண்டி வருகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ரஷ்யாவையே உடைக்கும் வடிவில் ஒரு 'பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்ற' பார்க்கிறது.

ஒரு கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கு அமெரிக்காவின் முனைவு (1990-2016) என்ற நூலின் முன்னுரையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு எழுதினார்: “அமெரிக்கா தூண்டிவிட்ட கடந்த கால் நூற்றாண்டு போர்கள் ஒன்றோடொன்று பிணைந்த நிகழ்வுகளின் ஒரு சங்கிலியாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் மூலோபாய தர்க்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நவகாலனித்துவ நடவடிக்கைகளுக்கும் அப்பால் நீள்கிறது. தொடர்ந்து வரும் பிராந்தியப் போர்கள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் வேகமாக தீவிரமடைந்து வரும் அமெரிக்க மோதலின் உட்கூறுபாடுகளாகும்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆய்வு முடிவு யதார்த்தமாகி வருகிறது. ஒட்டுமொத்த உலகமும், மூன்றாம் உலகப் போர் அபாயத்தையும், அதனால் விளையக்கூடிய அனைத்தையும் எதிர் கொண்டுள்ளது. ஆனால் ஆளும் வர்க்கம் போரில் ஈடுபடுவது பலத்தின் வெளிப்பாடல்ல மாறாக பலவீனத்தின் வெளிப்பாடாகும். அமெரிக்காவிலும் எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள், தீர்க்கவியலாத உள்நாட்டு நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, இரண்டு ஆண்டுகால கோவிட்-19 பெருந்தொற்றால் எரியூட்டப்பட்டுள்ள வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியிலிருந்து தப்பிக்கும், ஒரு வழியைக் காண்பதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் போருக்குத் திரும்புகின்றன.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக, சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஓர் இன்றியமையா கூறுபாடாக சர்வதேச தொழிலாள வர்க்கம் என்ற இந்த சமூக சக்தி அணித்திரட்டப்பட வேண்டும்.

Loading