கடற்படை லேசர் வீச்சு சம்பவத்தை சீன "ஆக்கிரமிப்பு" என ஆஸ்திரேலிய அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானத்தின் மீது சீன கடற்படைக் கப்பல் ஒன்று லேசர் ஒளிவீச்சை நடாத்தியதாகக் கூறப்படுவதற்கு லிபரல்-தேசிய அரசாங்கம் எதிர்க் கட்சி தொழிற் கட்சி ஆதரவுடன் மிகவும் ஆத்திரமூட்டும் விதத்தில், அதனை சீனாவின் 'ஆக்கிரமிப்பு', 'அச்சுறுத்தல்' மற்றும் 'அடாவடித்தனம்' என்று குற்றம் சாட்டியது.

ஒரு PLA-N Luyang-வகை வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் மற்றும் PLA-N Yuzhao-வகை நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் போக்குவரத்துக் கப்பல் டோரஸ் ஜலசந்தியை விட்டு பிப்ரவரி 18, 2022 அன்று கோரல் கடலுக்குள் நுழைகின்றன [படம்: ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு]

இந்தச் சம்பவத்தை சுற்றியுள்ள அனைத்து சூழ்நிலைகளும் நேரங்களும், பிரதம மந்திரி ஸ்காட் மொரிசனும் மற்றும் அவரது தொழிற் கட்சி சகாவான அந்தோனி அல்பானீஸ் உம் சீனாவிற்கு எதிராக வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரைவதை காட்டுகின்றன. ஆழமடைந்துவரும் உள்நாட்டு அரசியல் நெருக்கடி மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அதிகரித்து வரும் அமெரிக்கா தலைமையிலான மோதலால் உந்தப்பட்டு, அதிகரித்தளவில் பெருகிய வெறித்தனமான சீன-விரோத சூனிய வேட்டையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுகின்றன.

மொரிசன் தனது குற்றச்சாட்டை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் வழங்காமல், ரோந்து உளவு விமானத்தின் மீது தூரத்தை அளவிடும் லேசர் கருவியை சுட்டிக் காட்டியது விமானக் குழுவினரை கொன்றிருக்கக்கூடிய 'அச்சுறுத்தல் நடவடிக்கை' என்று முத்திரை குத்தினார். இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் அறிவித்தார். இது 'ஆத்திரமூட்டப்படாதது' மற்றும் 'நியாயமற்றது' எனவும் மற்றும் 'ஆஸ்திரேலியா வற்புறுத்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு எதிராக நிற்கிறது' என்றார்.

தொழிற் கட்சித் தலைவரான அல்பானீஸ் உம் மிகவும் ஆத்திரமடைந்தார். அவர் இந்த சம்பவத்தை 'மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு செயல்' என்று முத்திரை குத்தினார். சீனா 'மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்த சமீபத்திய அறிக்கை ஒரு உதாரணம் மட்டுமே என்பதை நாங்கள் கண்டோம்' என்று அவர் இந்தக் குற்றச்சாட்டை விரிவுபடுத்தினார்.

எப்பொழுதும் இதுபோன்ற போர் வெறித்தனமான குற்றச்சாட்டுகளின் உண்மைகளை கவனமாக ஆராய்ந்து, பின்னர் அவற்றை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் வைத்து நோக்குவது அவசியம்.

இச்சம்பவம் பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 17 அன்று ஒரு நீரிலும் நிலத்திலும் பயணிக்கும்போக்குவரத்து கப்பல்துறை கப்பலுடன் ஒரு நாசகார கப்பல் என இரண்டு கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசிய மேற்கு பப்புவாவிற்கும் இடையில் அமைந்துள்ள அராஃபுரா கடலில் சர்வதேச கடல் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த கடல் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே ஒரு முக்கியமான உலகளாவிய கப்பல் பாதையின் ஒரு பகுதியாகும். ஆயினும்கூட, இரண்டு சீனக் கப்பல்களும் ஜாவாவின் தெற்கு கடற்கரையிலிருந்து தொடங்கி ஆஸ்திரேலிய விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களால் ஐந்து நாட்கள் தடமறிதல் மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

ஆஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய உத்தியோகபூர்வ விளக்கத்தின்படி, ஒரு சீனக் கப்பலில் இருந்து 'ஒரு P-8A Poseidon விமானத்தை ஒளிரச் செய்யும் லேசரைக் கண்டறிந்தது'. இது ஒரு 'தீவிரமான பாதுகாப்பு தொடர்பான சம்பவம்'. இன்னும் எந்த விவரங்களோ அல்லது புகைப்படங்களோ வழங்கப்படவில்லை. எந்தக் கப்பல் சம்பந்தப்பட்டது என்பதைக் கண்டறியவோ அல்லது ஆஸ்திரேலிய விமானப்படை கண்காணிப்பு விமானம் எவ்வளவு அருகில் வந்தது என்பதைக் பற்றி குறிப்பிடக்கூட இல்லை.

அனைத்து நவீன போர்க்கப்பல்களிலும் லேசர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அருகிலுள்ள பொருட்களின் தூரத்தை தீர்மானிக்கப் பயன்படுகின்றன. மேலும் இலக்கு வைப்பதற்காக துப்பாக்கிச் சூட்டு தூரவரம்புகளைக் கண்டறியவும் பயன்படுத்தலாம். எவ்வாறாயினும், 48 மணி நேரத்திற்குள், ஆஸ்திரேலிய பாகாப்புத்துறை அறிக்கை சீன அதிகாரிகளுடன் எந்த விசாரணையும் அல்லது தெளிவுபடுத்தலும் இல்லாமல் வெளியிடப்பட்டது. மேலும் மொரிசனும் அல்பானீஸும் சீனாவை இது ஒரு பெரிய ஆத்திரமூட்டல் என்று குற்றம்சாட்டுவதற்காக அதை பயன்படுத்திக்கொண்டார்கள்.

சீனாவின் பதில், இந்த கூற்றுகளை கண்டித்தது. ஆஸ்திரேலியாவின் அறிக்கை உண்மைகளுடன் முற்றிலும் முரணானது என்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த தளபதி டான் கெஃபே திங்களன்று தெரிவித்தார். ஆஸ்திரேலிய விமானம் நான்கு கிலோமீட்டருக்குள் சீனக் கப்பல்களுக்கு 'மிக அருகில்' பறந்ததாகவும், சீனக் கப்பல்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மேற்கோள்காட்டி, ஆத்திரமூட்டும் வகையில் ஒரு Sonar மிதவையை தண்ணீரில் இறக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஒலியியல் தகவல்களைச் சேகரிக்கவும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியவும் Sonar மிதவைகள் பயன்படுத்தப்படலாம். சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புகைப்படம் தண்ணீரில் முக்கோண ஆரஞ்சு நிற மிதவையைக் காட்டியது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “சீனா தொடர்பான தவறான தகவல்களைத் தீங்கிழைக்கும் வகையில் பரப்புவதை ஆஸ்திரேலியா நிறுத்த வேண்டும்” என்றார். வாங் மேலும்: 'இந்த பாதை வழியே உயர்கடலில் சீனக் கப்பல்களின் இயல்பான போக்குவரத்து, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப முற்றிலும் சட்டரீதியானதும் மற்றும் சட்டபூர்வமானது' எனக் கூறினார்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த விவகாரத்தில் மற்ற அமெரிக்காவுடன் இணைந்த ஏனைய நாடுகளை மொரிசன் விரைவாக இழுக்க முயன்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற பிற நாடுகளும் சீனாவின் நடவடிக்கைகளால் எச்சரிக்கை அடையும் என்று கூறினார். இதுவரை, ஜப்பான் 'இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு முற்றிலும் ஆதரவாக உள்ளது' என்று கூறியுள்ளது. எவ்வாறாயினும், அரபுரா கடல் எல்லையில் உள்ள மற்ற இரண்டு நாடுகளான இந்தோனேசியாவும் பப்புவா நியூகினியாவும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எனவே, இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆத்திரமூட்டலின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான பிரதான அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும் சீனாவிற்கு எதிரான மோதலை மேலும் தூண்டிவிட முயல்கின்றது.

சீனாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள், ஒரு மத்திய தேர்தல் வரவிருக்கும் நிலையில் பதினைந்து நாட்கள் நீடித்த நாடாளுமன்ற அமர்வினை தொடர்ந்து வந்தன. இது மொரிசனும் அவரது அமைச்சர்களும் தொழிற்கட்சியின் மீது நடாத்தப்பட்ட முன்னோடியில்லாத தாக்குதல்களைக் கண்டது. அதன் தலைவர்களை காட்டுக்கொடுக்கும் சீனாவின் கையாட்களாக அவர்கள் குற்றம்சாட்டினர். பதிலுக்கு, அல்பானீஸ் மற்றும் அவரது நிழல் அமைச்சர்கள் சீனாவிற்கு எதிரான தங்கள் சொந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கான அவர்களின் மொத்த இரு கட்சி அர்ப்பணிப்பு ஆகியவற்றை இரட்டிப்பாக்கினர்.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல், குற்றச்சாட்டுகளின் வெறித்தனமான தன்மையானது ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு நிகழ்வுகளின் விளைவாகும். ஒன்று, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான போருக்கான வாஷிங்டனின் தீவிரமான தயாரிப்புகள், மற்றையது ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு ஒரு முன்னணியில் இருக்கும் மற்றும் மோதல்மிக்க பாத்திரத்தை வகிக்க வேண்டும், குறிப்பாக சீனாவிற்கு எதிராக என்ற அதன் கோரிக்கையாகும்.

ஏனைய காரணிகள் மொரிசனின் அரசாங்கத்தினுள் நிகழும் உடைவுப்போக்காகும். இது கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் அதிகரிப்பிற்கு பொறுப்பாகும். கன்னை உட்பூசல்களால் சிக்கியுள்ளமையும் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் ஆதரவு மதிப்பீடுகள் மற்றும் தொழிற்கட்சியும் தொழிற்சங்கங்களும் அதிருப்தியைக் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் முயற்சித்த போதிலும், செவிலியர்கள், ஆசிரியர்கள் முதல் இரயில் தொழிலாளர்கள் வரை ஊதிய வீழ்ச்சி மற்றும் அதிர்ச்சியூட்டும் நிலைமைகள் தொடர்பான தொழிலாள வர்க்க அமைதியின்மை ஆகியவற்றை எதிர்கொள்கிறது.

மொரிசனை பதிலீடு செய்வதற்கு பொருளாளர் ஜோஷ் பிரைடன்பேர்க்கிற்கு எதிராகப் போட்டியிடும் பாதுகாப்பு மந்திரி பீட்டர் டட்டன், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சீனா 'ஆக்கிரமிப்பு, அடாவடித்தனமான செயல்களை' செய்ததாக அறிவித்ததை அடுத்து, சீன 'ஆக்கிரமிப்பு' பற்றிய மொரிசனின் குற்றச்சாட்டுகள் வந்தன.

ஞாயிற்றுக்கிழமை Sky News இல் பேசிய டட்டன், தாக்குதல் 'மிகவும் ஆக்ரோஷமானது' என்றும், பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா அதன் நட்பு நாடுகளுடன் நெருக்கமாக செயல்படும் என்றும் கூறினார். சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 'இந்த கூட்டணி' 'ஆழமான கவலைக்குரியது' என்று அவர் அறிவித்தார். டட்டன் ஒரு எரிச்சலூட்டும் அச்சுறுத்தலை வெளியிட்டார்: 'அந்த ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு ஒரு விலை கொடுக்க வேண்டும் என்பதை சீனாவைப் போலவே ரஷ்யாவும் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

சீனாவிற்கு எதிரான அனைத்து அரசாங்க மற்றும் தொழிற்கட்சி குற்றச்சாட்டுகளும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு பெருநிறுவன ஊடகங்கள் முழுவதும் ஒளிபரப்பப்பட்டன. அரபுரா கடல் சம்பவத்தின் உண்மைகள் மற்றும் அதன் பின்னணி பற்றி ஒரு முக்கியமான கேள்வியும் இவற்றால் கேட்கப்படவில்லை.

அதற்குமாறாக, போருக்கான தயாரிப்பில் இராணுவ செலவினங்களில் பாரிய அதிகரிப்புக்கான கோரிக்கைகளை வலுப்படுத்த இந்த விவகாரம் பயன்படுத்தப்பட்டது. பிப்ரவரி 20 ஆம் தேதி மூர்டோக் ஊடகத்தின் Australian இன் தலையங்கம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்ததற்காக அல்பனீஸைப் பாராட்டி, ஆனால் “வர்த்தக அவமதிப்பு போதாது” என்று கூறியது. இராணுவ தகமைகளைப் பற்றி ஒரு தீவிரமான எடுத்துக்காட்டல் தேவை என்றது.

அமெரிக்காவுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் நெருங்கிய உறவுகளை அனுபவித்து வரும் செய்தித்தாளின் வெளிநாட்டு ஆசிரியர் கிரெக் ஷெரிடன், தேவையான ஆயுதங்களின் நீண்ட பட்டியலை தயாரித்தார். அதில் பல நூற்றுக்கணக்கான நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் கடல் ரோந்து கப்பல்களில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வைப்பது ஆகியவை அடங்கும். மேலும் 'வேகமான ஜெட் விமானங்கள், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் 'அதிக போர்க்கப்பல்கள்' தேவை என்றார். இதைவிட, அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்காக காத்திருக்கும்வரை 'அவசரமாக' கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்குவதாக சீனாவிற்கு எதிராக இயக்கப்பட்ட கடந்த செப்டம்பரின் AUKUS உடன்படிக்கையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு உறுதியளித்தன.

ஷெரிடன் இதற்கான விலை தொடர்பாக குறிப்பிடவில்லை. ஆனால் அது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களாக இருக்கும். இதற்கு சமூகநல செலவுகள் மற்றும் தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்களில் ஆழமான வெட்டுக்கள் தேவைப்படும்.

ஆழ்ந்த செல்வாக்கற்ற கூட்டணி அரசாங்கம் உடையும் நிலையில், தொழிற்கட்சி முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் செய்தது போல், நாட்டை போருக்கு இட்டுச் செல்வதுடன் மற்றும் இந்த இராணுவவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் என்று ஆளும் வர்க்கத்திற்கு நிரூபிக்க முயல்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவிற்கு எதிராக கூட்டணி அரசாங்கம் எடுத்த ஒவ்வொரு ஆக்கிரோஷமான பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தொழிற்கட்சி ஆதரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் நாட்டின் முன்மொழியப்பட்ட 5G அகலஅலைவரிசை வலைப்பின்னலில் இருந்து Huawei தொழில்நுட்பத்தைத் தடை செய்தல், சீன நிறுவனங்களின் முதலீட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தல், சீனாவுடன் தொடர்புடைய 'வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு' எதிராக குற்றவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்தின் இலாப உந்துதல் கொள்கைகளால் ஏற்பட்ட உலகளாவிய பேரழிவிற்கு சீனாவை குற்றம் சாட்டும் முயற்சியில் கோவிட்-19 பற்றிய 'சுயாதீனமான' விசாரணைக்கு தூண்டுதல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த வார இறுதியில், உலக சோசலிச வலைத் தளம் போர் மற்றும் தொற்றுநோய்க்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய “கோவிட்டிற்கு எதிராக போராடுங்கள்! உயிர்களை காப்பாற்றுங்கள்! மூன்றாம் உலகப் போருக்கான உந்துதலை நிறுத்து!” என்ற தலைப்பின் கீழ் ஒரு சர்வதேச இணையவழி கருத்தரங்கை நடத்துகிறது. இந்த முக்கியமான நிகழ்வில் பதிவு செய்து கலந்துகொள்ளுமாறு எங்கள் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

Loading