உக்ரேன் நெருக்கடியில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீன வெளியுறவு மந்திரி சமிக்ஞை செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே வளர்ந்து வரும் மோதல் குறித்து சீனாவின் மிகவும் அப்பட்டமான கருத்துக்களில், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ வாஷிங்டனையும் அதன் கூட்டாளிகளையும் 'நெருக்கடியை அதிகப்படுத்த வேண்டாம்' என எச்சரித்தார். மேலும் அவர், “அமைதியாக இருங்கள், மேலும் பதட்டத்தைத் தூண்டும் செயல்களைச் செய்வதைத் தவிருங்கள்” என்று அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழனன்று அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் உடன் நடந்த இணையவழிக் கூட்டத்தில், வாங் இவ்வாறு தனது கருத்துக்களைக் கூறினார். உக்ரேனிய ஜனாதிபதி கூட பகிரங்கமாக மறுத்துள்ள போதிலும், உக்ரேனை ஆக்கிரமிக்க ரஷ்யா தயார் நிலையில் உள்ளது என்று மீண்டும் மீண்டும் அறிவித்து அந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கி பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஊடகங்களும் வேண்டுமென்றே தீவிர பதட்டங்களை உருவாக்கியுள்ளன.

ஏப்ரல் 21, 2021, புதன்கிழமை, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள மானேஜ் சதுக்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தேசத்தின் வருடாந்திர உரையை நிகழ்த்துகிறார். (Mikhail Metzel, Sputnik, Kremlin Pool Photo via AP)

மாஸ்கோவுக்கு பெய்ஜிங் உதவும் என்பதை வாங் தெளிவாக சமிக்ஞை செய்து, ரஷ்யாவின் “நியாயமான பாதுகாப்பு கவலைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்” என்று அறிவித்தார். உக்ரேன் நேட்டோ உறுப்பினராக சேர்க்கப்படாது என்பதற்கு உத்தரவாதமளிக்க அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் ரஷ்யா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது, காரணம் அத்தகைய நடவடிக்கை அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியை ரஷ்ய எல்லைக்குக் கொண்டுவரும் என்பதே.

1991 சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவுக்குள் நேட்டோ விரிவடைந்து வருவது பற்றி மறைமுகமாக குறிப்பிட்டு, “இராணுவ முகாம்களை வலுப்படுத்துவது அல்லது விஸ்தரிப்பதன்” மூலமாகக் கூட ஐரோப்பிய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று வாங் பிளிங்கெனுக்கு தீர்க்கமாக தெரிவித்தார்.

உக்ரேனில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சீனா எதிர்ப்பது, தைவான் மீதான சீன படையெடுப்பின் சாத்தியம் குறித்து வாஷிங்டன் எச்சரிப்பது பற்றிய கவலைகளுடன் தொடர்புடையவையாகும், ரஷ்யாவிற்கு எதிராக உருவாக்கப்பட்டதைப் போன்ற இத்தகைய கூற்றுக்கள் வெறுமனே பரப்பப்படுகின்றன. தீவின் நிலை குறித்த அமெரிக்காவின் நீண்டகால இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவதாக தைவான் உடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாக்குபோக்காக “சீன ஆக்கிரமிப்பு” பற்றிய இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பைடென் நிர்வாகம் பயன்படுத்திக்கொண்டது.

ஜனாதிபதி பைடென் அவரது சீன சமதரப்பினர் ஜி ஜின்பிங்கை நவம்பரில் சந்தித்ததன் பின்னர் சீனா உடனான அமெரிக்காவின் போக்கில் பெரியளவில் மாற்றம் இல்லை என்று வாங் அறிவித்தார். “இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அதிர்ச்சிகளை உருவாக்கி” சீனா தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து தவறுகளைச் செய்து வருவதாக சீன வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டினார். சீனா ஒரு துரோக மாகாணமாக கருதுவதான தைவான் குறித்தும், மற்றும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் “தலையிட்டும்” அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது என்று அவர் எச்சரித்தார்.

ஒலிம்பிக் நிகழ்வு குறித்த அமெரிக்க தலைமையிலான இராஜதந்திர புறக்கணிப்புக்கு தனது எதிர்ப்பை காட்டுவதன் ஒரு பகுதியாக அதில் கலந்து கொள்ள இந்த வாரத்தின் பிற்பகுதியில் பெய்ஜிங்கிற்கு வரவிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஜி சந்திக்கவிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னரான வெளிநாட்டு தலைவருடனான ஜி இன் முதல் சந்திப்பாக இது இருக்கும்.

உக்ரேன் குறித்த பதட்டங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் நடுப்பகுதியில் புட்டினும் ஜி யும் ஒரு இணையவழி கூட்டத்தை நடத்தினர், அப்போது ரஷ்ய ஜனாதிபதி, ஜி ஐ தனது “நெருங்கிய நண்பர்” என்று அழைத்ததுடன், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் “முன்னோடியில்லாத அளவிற்கு உயர் மட்டங்களை” எட்டியுள்ளன என்றும் கூறினார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதாக வேஷமிட்டு “சில சர்வதேச சக்திகள்” சீனா மற்றும் ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருவதுடன், “சர்வதேச சட்டத்தையும் நசுக்குகின்ற” நிலையில், இரு நாடுகளின் பாதுகாப்பு நலன்களை திறம்பட பாதுகாப்பதற்கான பெரும் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க ஜி அழைப்புவிடுத்தார்.

ரஷ்யாவுடனான அமெரிக்க தலைமையிலான மோதல், மற்றும் உக்ரேன் விவகாரத்தை தைவான் மீது படையெடுப்பதற்கான ‘சாதகமான’ வாய்ப்பாக சீனா பயன்படுத்துவது ஆகியவற்றின் விளைவுகளாக, மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையேயான உறவுகள் பெரிதும் வலுப்பட்டு வருவது குறித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் ஒரு நிலையான ஆவி பறக்கும் வர்ணனைகள் பரவலாக உள்ளன.

இன்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை, “உக்ரேன் மோதல் பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையே ஆழப்பட்டு வரும் உறவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்ற தலைப்பில் உள்ளது. உக்ரேன் நெருக்கடி, “நமக்கு தைவான் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாக இருக்கும்” என்று ஒரு வலதுசாரி சீன தேசியவாத பதிவரின் கூக்குரல்கள் சீனாவின் நோக்கங்களுக்கான “சான்றாகும்”.

இந்த வாதத்தின் உண்மையற்ற தன்மையானது அமெரிக்க பிரச்சாரத்தின் தலைகீழ் உலகத்தை பிரதிபலிக்கிறது, இதில் ரஷ்ய மற்றும் சீன படையெடுப்புக்களின் புனையப்பட்ட அச்சுறுத்தல்கள் இரு நாடுகளுக்கும் எதிரான அமெரிக்க இராணுவ ஆத்திரமூட்டல்களை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் துருப்புக்களை தயார் நிலையில் வைத்து, உக்ரேனுக்கு ஆயுதங்களையும் வழங்கியுள்ள நிலையில், அமெரிக்க கடற்படை தென் சீனக் கடலிலும் தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் தொடர்ச்சியான பெரிய இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது.

பைனான்சியல் டைம்ஸூம் ஒப்புக்கொண்டது போல், 2014 உக்ரேன் நெருக்கடியானது, “மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளை முறியச் செய்து, மாஸ்கோவை சீனாவின் கரங்களுக்குள் தள்ளியது.” இன்னும் துல்லியமாகக் கூறுவதானால், இறுதியில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே முறிவு ஏற்பட்டு தன்னிடம் சரணடைய வைக்க நோக்கம் கொண்டு இரு நாடுகளுக்கும் எதிராக அமெரிக்கா அதிகரித்து வருவதான அச்சுறுத்தல்களும் மற்றும் ஆத்திரமூட்டல்களும் இவ்விரு நாடுகளையும் ஒரு அரைக் கூட்டணிக்குள் தள்ளியுள்ளது.

ரஷ்யாவிற்கு சீனா தற்போது ஆதரவளிப்பது, 2014 மோதலுக்கு அது சமமாக பதிலளித்ததற்கு மாறாக உள்ளது, இது கியேவில் ஒரு ரஷ்ய சார்பு உக்ரேனிய அரசாங்கத்தை அகற்றிய அமெரிக்க ஆதரவுடனான தீவிர வலதுசாரி சதியால் தூண்டிவிடப்பட்டது. “வெளிநாட்டு தலையீடு தான் இந்த நெருக்கடிக்கு காரணம்” என்று சீனா மேற்கை குற்றம்சாட்டியது என்றாலும், ரஷ்யா கிரிமியாவை அதனுடன் இணைக்க முயல்வதையோ அல்லது கிழக்கு உக்ரேனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதையோ சீனா ஆதரிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டில், கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொள்வது தொடர்பான ஐ.நா. தீர்மானங்களில் இருந்து சீனா விலகியிருந்ததுடன், இன்னும் கிரிமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அது அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில், ரஷ்யா மீதான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத் தடைகளை சீனா நிராகரித்தாலும், அமெரிக்க நிதிச் சந்தைகள் மற்றும் சர்வதேச வங்கி அமைப்பில் இருந்து தான் துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அரசுக்கு சொந்தமான அதன் மிகப்பெரிய வங்கிகள் உட்பட, சீன நிறுவனங்கள் இந்த பொருளாதாரத் தடைகளுக்கு கட்டுப்பட அமைதியாக அனுமதித்தது.

எவ்வாறாயினும், 2014 முதல், ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியிலான உறவுகளை சீராக பலப்படுத்தி வருகின்றன. பைனான்சியல் டைம்ஸின் கூற்றுப்படி, 2013 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ரஷ்யாவின் வெளி வர்த்தகத்தில் சீனாவின் பங்கு 10 இல் இருந்து 20 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது. ஜி யும் புட்டினும் அவர்களின் டிசம்பர் சந்திப்பின்போது, 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் முதல் முறையாக 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது, அதுவே முழு ஆண்டில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.

ரஷ்யாவும் சீனாவும் 2001 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் தங்கள் இராணுவ உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. ஜனவரி 21 முதல், சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை “பாதுகாப்பையும்” “பல்தரப்பு ஒத்துழைப்பையும்” வலுப்படுத்த ஓமன் வளைகுடாவில் மூன்றாவது கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தின. இது, அக்டோபரில் தூர கிழக்கில் ரஷ்ய கடற்கரையில் ரஷ்யாவும் சீனாவும் நடத்திய கடற்படை பயிற்சிகள் மற்றும் ஆகஸ்டில் வடமேற்கு சீனாவில் அவை நடத்திய கூட்டு இராணுவப் பயிற்சிகளை அடுத்து நடத்தப்பட்டது, இப்பயிற்சிகளில் சுமார் 13,000 துருப்புக்களும் மற்றும் நூற்றுக்கணக்கான போர் விமானங்களும், அத்துடன் பீரங்கிப் படை, விமான எதிர்ப்பு பேட்டரிகள் மற்றும் கவச வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன.

சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரான அலெக்சாண்டர் கொரோலெவ், மிக அடிக்கடியான மற்றும் கணிசமான கூட்டுப் பயிற்சிகள், ஆயுத மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு, இராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான வழமையான ஆலோசனைகள் மற்றும் நீண்டகால இராணுவப் பணியாளர் பரிமாற்றங்கள் ஆகியவை எதிர்காலத்தில் உண்மையான போர்களில் ரஷ்ய மற்றும் சீன இராணுவங்கள் கூட்டாக செயல்பட உதவுகின்றன என்று பைனான்சியல் டைம்ஸூக்கு தெரிவித்தார்.

கடந்த வியாழனன்று தனது செய்தியாளர் சுருக்கக் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், சீனாவும் ரஷ்யாவும் தங்கள் உறவுகளை முன்னுரிமை மிக்கதாக கருதுகின்றன என்று அறிவித்தார். “சீன-ரஷ்ய பரஸ்பர நம்பிக்கைக்கு உச்சவரம்பு இல்லை, எங்கள் மூலோபாய ஒத்துழைப்பில் தடைசெய்யப்பட்ட பகுதியில்லை மற்றும் எங்கள் நீண்டகால நட்பு தொடர முடிவதற்கான வரம்பு இல்லை,” என்றும் கூறினார்.

முன்னாள் சீன இராஜதந்திரியான ஜாவோ மிங்வென், ரஷ்யாவும் சீனாவும் முறையான கூட்டணி நாடுகள் இல்லை என்றாலும், இதே கருத்தை பைனான்சியல் டைம்ஸூக்கு சுட்டிக்காட்டினார். “நாங்கள் கூட்டாளிகளை விட மிக நெருங்கிய கூட்டாளிகள் என்று நீங்கள் கூறலாம்,” என்று அவர் கூறினார். வெளிப்புற சக்திகளால் மோதல்கள் தூண்டப்பட்டால் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கும் என்றார். மேலும், “தைவானை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்க சீனாவை கட்டாயப்படுத்துவதில் அமெரிக்கா தலையிடுமானால், ரஷ்யா சும்மா இருக்காது என்று நான் நம்புகிறேன்,” என்றும் ஜாவோ கூறினார்.

அமெரிக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பொருட்டு சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இராணுவ உறவுகள் வலுப்படுத்தப்படுவதானது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முற்றிலும் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. உக்ரேன் மீது அமெரிக்கா வேண்டுமென்றே மோதலைத் தூண்டி வருவதால், இப்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியான சீனாவையும், மிகப்பெரிய அணுவாயுத களஞ்சியத்தைக் கொண்டுள்ள ரஷ்யாவையும், கைக்கோர்க்க வைத்துள்ளது. உள்ளூர் விவகாரம் தவிர்த்து, உக்ரேனில் நடக்கும் எந்தவொரு போரும், உலகளவில் ஒரு பேரழிவுகரமான போராக வேகமாக விரிவடைவதற்கு அச்சுறுத்தும் என்பதே உண்மை.

Loading