மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெருநிறுவன ஊடகங்களால் தூண்டப்பட்டு, கனடாவின் லிபரல் அரசாங்கம் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் அனைத்து தரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலில் மேலும் இறுக்கமாக தன்னை பிணைத்துக் கொண்டுள்ளது.
பிப்ரவரியில் நடக்கவிருக்கும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதற்கான பைடென் அரசாங்கத்தின் அழைப்புக்கு ஒட்டாவா ஒத்துப்போவதை அதன் சமீபத்திய நகர்வு காட்டியது.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெய்ஜிங்கின் வீகர் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றிய கூற்றுக்களை இழிவான முறையில் பயன்படுத்தி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்டுள்ள இராஜதந்திர ரீதியிலான ஒலிம்பிக் புறக்கணிப்பில் கனடாவும் சேரும் என்று அறிவித்துள்ளார். “சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள்” குறித்து கனடாவின் லிபரல் அரசாங்கம் “மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக” ட்ரூடோ அறிவித்தார். வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலியும் இதை அப்படியே பின்பற்றி, இவ்வாறு தெரிவித்தார்: “கனடா இந்த விஷயத்தில் தலைமைப் பாத்திரம் வகிக்கிறது, காரணம் இது நமது வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றதாக உள்ளது. மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளுக்கு கனடா எப்போதும் எழுந்து நிற்கிறது.”
ட்ரூடோ ஜனாதிபதி ஜோ பைடெனின் “ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டில்” கலந்துகொண்டு சில நாட்களுக்குப் பின்னர் தான் இதைப் பின்பற்றினார், இந்த உச்சிமாநாடு, சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்களையும், பிரேசிலின் ஜெய்ர் போல்சொனாரோ, இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் பிலிப்பைன்ஸின் ரொட்ரிகோ டுரேற்ற போன்ற அமெரிக்காவிற்கு ஒத்தூதும் தீவிர வலதுசாரி சர்வாதிகார பலசாலிகளையும் ஒருங்கிணைத்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதார மற்றும் புவி மூலோபாயப் போட்டியாளராக சீனா எழுச்சியடைவதைத் தடுப்பதற்கான வாஷிங்டனின் முனைப்பைப் பின்தொடர்வதில் ட்ரம்ப் விட்டுச் சென்ற இடத்திலிருந்து பைடென் தடையின்றி முன்னேறுகிறார். இருப்பினும், தனது பாசிசவாத முன்னோடி போலல்லாமல், “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகள்” பற்றிய பொய் பிரச்சாரத்தின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் கொள்ளையடிக்கும் நலன்களையும் இலட்சியங்களையும் பின்தொடர்வதை மூடிமறைக்க பைடென் விரும்புகிறார்.
கனடா, “சர்வதேச உதவி மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் பலவீனமான அல்லது வளர்ந்து வரும் ஜனநாயக நாடுகளுக்கு வேகமான மற்றும் நெகிழ்வான ஆதரவை வழங்குவதற்கான அதன் திறனை” வலுப்படுத்தி, “உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயகப் புத்துயிர்ப்பை ஊக்குவிக்கும்” என்று அறிவிப்பதற்கு முன்னதாக, உச்சிமாநாட்டிற்கான ட்ரூடோவின் உத்தியோகபூர்வ அறிக்கை, இந்த கூட்டம் “ஜனநாயகத்தை ஊக்குவிப்பதையும்” மற்றும் “பாதுகாப்பதையும்” மையமாகக் கொண்டது என வலியுறுத்தியது.
ஒலிம்பிக்கை புறக்கணிப்பதற்கான தீவிரமான நோக்கத்திற்காகவும் மற்றும், மிகப் பரந்தளவில், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய கட்டமைப்பில் கனடா அதிகரித்தளவில் முக்கிய பங்கு வகிப்பதற்காகவும் “மனித உரிமைகள்” பெயரிலான சொல்லாட்சிகளை வைத்து எவரையும் முட்டாளாக்கக் கூடாது. கனேடிய ஏகாதிபத்தியம் கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்கத் தலைமையிலான தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போர்களில் தான் பங்கேற்பதற்கான சாக்குப்போக்காக “மனித உரிமைகள்” என்பதை தவிர்க்க முடியாமல் பயன்படுத்துகிறது. 1999 இல் யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் முதல் லிபியாவில் நடந்த 2011 ஆட்சி மாற்றப் போர் வரை, ஒட்டாவா, தமது காட்டுமிராண்டித்தனமான இராணுவ நடவடிக்கைகள் மூலம் தங்கள் ஏகாதிபத்திய நலன்களும் அபிலாஷைகளும் பின்தொடரப்படுவதற்கு “முற்போக்கான” மூடிமறைப்பை வழங்குவதற்காக, அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்குகளுக்கு எதிராக “இனப்படுகொலை” மற்றும் “மனித உரிமை மீறல்கள்” பற்றிய தெளிவற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதில் வாஷிங்டனுடன் இணைந்து கொண்டுள்ளது.
ட்ரூடோ அரசாங்கம் கருதும் “ஜனநாயகங்களுக்கான” “சர்வதேச உதவி” என்பது, ரஷ்யாவிற்கு எதிராக, உக்ரேனில் ஸ்டீபன் பண்டேராவின் உக்ரேனிய தேசியவாதிகளின் நாஜி சார்பு அமைப்பின் வம்சத்தினர் போன்ற தீவிர வலதுசாரி மற்றும் வெளிப்படையான பாசிச சக்திகளுடன் அது கொண்டுள்ள இராணுவ ஒத்துழைப்பின் மூலம் காட்டப்படுகிறது.
எந்தவித ஆதாரமும் இல்லாமல், வீகர் சிறுபான்மையினருக்கு எதிராக சீனா “இனப்படுகொலை” செய்கிறது என்ற கூற்று, ஆசிய-பசிபிக் பகுதியில் பாரிய இராணுவக் கட்டமைப்புக்கான ஏற்பாடுகளுடன் சேர்ந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு கனேடிய போர்க்கப்பல் அமெரிக்க கடற்படை போர்க் குழுவின் ஒரு பகுதியாக தைவான் ஜலசந்தி வழியாக ஆத்திரமூட்டும் வகையில் பயணித்தது. அதாவது, சில வருடங்களுக்குள் பெய்ஜிங் உடனான ஒரு முழுமையான போருக்கான வாய்ப்பு பற்றி அமெரிக்க உயர்மட்ட தளபதிகள் விவாதித்த நிலையில், இந்த ஆபத்தான முன்னேற்றம் நிகழ்ந்தது.
பெய்ஜிங்கில், முதலாளித்துவத்தின் மறுதொடக்கத்தை மேற்பார்வையிட்ட மற்றும் உலக நிதி மூலதனத்திற்கான மலிவு உழைப்பு களமாக சீனாவை மாற்றிய ஸ்ராலினிச ஆட்சிக்கு உலக சோசலிச வலைத் தளம் வக்காலத்து வாங்கவில்லை. “மனித உரிமைகள்” பற்றி ட்ரூடோ, ஜோலி மற்றும் பைடென் ஆகியோர் மெழுகுவர்த்தியுடன் பாடுவது போன்ற, மற்றும் தொற்றுநோய்களின் போது நூறாயிரக்கணக்கான மக்களின் தவிர்க்கக்கூடிய இறப்புக்களுக்கு அவர்களது அரசாங்கங்கள் தலைமை தாங்கிய நிலைமைகளின் கீழ் பெய்ஜிங்கை குறிவைப்பது போன்ற மிகக் கொடூரமான செயல்கள் எதுவும் இல்லை. இதற்கிடையில், சீனாவில், அமல்படுத்தப்பட்ட பூஜ்ஜிய கோவிட் கொள்கை, ஏப்ரல் 2020 இல் தொற்றுநோயின் முதல் அலை ஒடுக்கப்பட்டதிலிருந்து கோவிட்-19 இறப்புக்களை வெறும் மூன்றாக கட்டுப்படுத்தியுள்ளது. அதேவேளை, சீனாவின் மக்கள்தொகையில் நாற்பதில் ஒரு பங்கைக் கொண்ட கனடாவில் ஆறு மடங்கு அதிகமான கோவிட்-19 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. பெய்ஜிங் உண்மையில் வீகர் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய விரும்பினால், மனித உயிர்களைப் பாதுகாப்பதை விட பெருநிறுவன இலாபங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வாஷிங்டன் மற்றும் ஒட்டாவாவின் கொலைகார தொற்றுநோய் கொள்கையை அல்லவா அது ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடுவதன் மூலம் மேற்கத்திய பிரச்சாரத்திற்கு நியாயமான முறையில் அது பதிலளிக்க முடியும்.
எட்டு தசாப்தங்களுக்கும் மேலான வாஷிங்டனின் மிக நெருங்கிய கூட்டாளியாக, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் உக்கிரமான தாக்குதலுடன் கனடா முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் அதன் சீன விரோத “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு,” திட்டத்தை தொடங்கி சிறிது காலத்தில், ஹார்பர் கன்சர்வேடிவ் அரசாங்கம், கனேடிய-அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பையும், ஆசிய-பசிபிக் பாதுகாப்புக் கொள்கை ஒத்துழைப்புக் கட்டமைப்பையும் (Asis-Pacific Defense Policy Cooperation Framework) மேம்படுத்த அமெரிக்காவுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கனேடிய நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் இப்போது வழக்கமாக சீனாவின் கரையோரங்களில் நிலைநிறுத்தப்பட்டு, மலாக்கா ஜலசந்தி மற்றும் தென் சீனக் கடல் வழியாக செலுத்தப்படுகின்றன.
ஆகஸ்டில், ட்ரூடோ அரசாங்கம், சீனா மற்றும் ரஷ்யா உடனான “மூலோபாயப் போட்டியை” நடத்துவதற்காக, கனடா-அமெரிக்கா வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளையகத்தை (Canada-US North American Aerospace Defense Command - NORAD) “நவீனப்படுத்த” வாஷிங்டனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து முடித்தது. அவர்களது திட்டங்கள், வளங்கள் நிறைந்த மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்டிக் பகுதியில் கனேடிய மற்றும் அமெரிக்க இராணுவ திறன்களை வேகமாக விரிவுபடுத்துவது, அத்துடன் “அடிவானத்திற்கு அப்பாற்பட்ட” அச்சுறுத்தல்கள் என்றழைக்கப்படுவனவற்றை சமாளிக்க புதிய உயர் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களை உருவாக்குவது மற்றும் பிரயோகிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்துகையில், ட்ரூடோ அரசாங்கம், சீனா மற்றும், கண்டத்தின் இரட்டை ஏகாதிபத்திய சக்திகளின் மற்ற போட்டியாளர்களை இலக்காகக் கொண்ட அமெரிக்கத் தலைமையிலான பாதுகாப்புவாத வர்த்தகக் குழுவாக வட அமெரிக்காவை ஒருங்கிணைக்க ஏதுவாக, வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (North American Free Trade Agreement - NAFTA) குறித்து ட்ரம்ப் கோரிய மறுபேச்சுவார்த்தையில் அது பங்கேற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பைடென் நிர்வாகத்துடன் நடந்த இருதரப்பு சந்திப்பில், சுத்தமான எரிசக்தி பொருட்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய சந்தையில் வேகமாக விரிவடைந்துவரும் அமெரிக்க மற்றும் கனேடிய ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு விரிவான பொருளாதார மற்றும் பாதுகாப்பு மூலோபாயத்திற்கும் ட்ரூடோ அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கனேடிய ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிராக ஆசிய-பசிபிக் பகுதியில் அதன் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதியை மேலும் சுட்டிக்காட்டும் விதமாக, தென்கிழக்கு நாடுகளின் 10 நாடுகள் கூட்டமைப்பு (ASEAN) உடனான தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை ஒட்டாவா தொடங்கியுள்ளது. கடந்த மாதம் வர்த்தக பேச்சுவார்த்தைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்படுவதற்கு முன்னதாக, ட்ரூடோ வருங்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை “வெற்றி-வெற்றி” க்கான ஒப்பந்தம் என்று அழைத்தார், அதேவேளை சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி எங், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடனான கனடாவின் பொருளாதார உறவை ஆழப்படுத்துவதில்” இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும் என்று கருத்து தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் என்பது, ட்ரூடோ அரசாங்கம் தற்போது உருவாக்கி வருவதும், மற்றும் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் ட்ரூடோ பைடெனை சந்தித்த பின்னர் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதுமான புதிய “இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின்” ஒரு பகுதியாகும், இது வாஷிங்டனின் நெருக்கமான ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தோ-பசிபிக் என்பது சீனாவை தனிமைப்படுத்தி அதனை சுற்றி வளைக்கும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக பென்டகன் உருவாக்கியுள்ள ஒரு மூலோபாய உத்தியாகும், இதை கிழக்கு மற்றும் தெற்காசியா, மேற்கு மற்றும் தெற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முழுவதும் புதிய கூட்டணிகளுக்கு புத்துயிரூட்டி, இராணுவப் படைகளை அங்கு நிலைநிறுத்துவதன் மூலம் செயல்படுத்த அது திட்டமிடுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியை கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது, காரணம் அதன் கடல் பாதைகள் சீனாவின் ஏற்றுமதிகள் மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருக்கும் எண்ணெய் மற்றும் பிற வளங்களுக்கான வழித்தடமாக அவை உள்ளன.
ட்ரூடோ அரசாங்கம் கனடாவை வாஷிங்டனின் எப்போதும் அதிகரித்து வரும் சீன எதிர்ப்புத் தாக்குதலுடன் முறையாக ஒருங்கிணைக்கிறது என்றாலும், சக்திவாய்ந்த அரசியல் சக்திகள் அதை மேலும் தீவிரப்படுத்தக் கோருகின்றன. ட்ரூடோ அரசாங்கம் அதன் ஐந்து கண்கள் கூட்டாளிகளான அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இன்னும் இணைந்து கொள்ளவில்லை என்பது அவர்களது புகார்களில் ஒன்றாகும், காரணம் அதன் 5ஜி கைபேசி வலைப்பின்னல் திட்டத்திலிருந்து சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei ஐ அது தவிர்க்கவில்லை; மேலும் சீனாவால் தொடங்கப்பட்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடனான தொடர்பிலிருந்து அது பின்வாங்கவில்லை.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன், அமெரிக்க செனட்டில் Huawei நிறுவனம் விரைந்து தடைசெய்யப்படுவதை உறுதிப்படுத்தும் விசாரணையில் அதற்கு உடனடியாக முடிவு செய்யக் கோரினார். இந்த மாத தொடக்கத்தில் ஒரு பேட்டியின் போது கோஹன், ஒட்டாவாவில் தனது காலத்தில் சீனாவிற்கு எதிராக வாஷிங்டனுடன் இணைந்து கனடா இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக நிச்சயமற்ற வகையில் கூறினார். மேலும், “இரு நாடுகளும் மனித உரிமைகள் மற்றும் சமூகம் மற்றும் சமுதாயத்தின் பாதுகாப்புக்கும் மற்றும் பின்தொடர்தலுக்கும் தமது உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன என்றே நான் நினைக்கிறேன், ஆனால் சீனா அதற்கு எந்தவித உறுதிப்பாட்டையும் பகிர்ந்து கொள்ளவில்லை,” என்று அவர் அறிவித்தார். “நான் எதிர்பார்ப்பது என்னவென்றால், கனடாவும் அமெரிக்காவும், நம் நாடுகளின் பாரம்பரியத்தில், மீண்டும் ஒருமுறை ஒன்றிணைய வேண்டும் என்பது தான். … [மற்றும்] மனித உரிமைகள் குறித்த சீனாவின் கொள்கையை நாம் வெறுக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதுகுறித்து நமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம்,” என்றும் கூறினார்.
ட்ரூடோ லிபரல் அரசாங்கம் சீனாவுடனான வாஷிங்டனின் மோதலில் தன்னை இன்னும் இறுக்கமாக பிணைத்துக் கொள்ள விரும்புகிறது என்பதற்கான அறிகுறி, டிசம்பர் 6 அன்று, சீனாவுக்கான கனடாவின் தூதுவராக இருந்த டொமினிக் பார்டன் திடீரென இராஜிநாமா செய்ததன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. உலகளாவிய ஆலோசனை நிறுவனமான McKinsey இன் முன்னாள் உயர்மட்ட மேலாளரான பார்டன் குறைந்தபட்சம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் தொடர்புபட்ட பிரச்சினைகளில் சீனாவுடன் மிகுந்த இணக்கமான அணுகுமுறையை கொண்டிருந்தார், மற்றும் அதன் விளைவாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் உயர்மட்ட அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தனித்து விடப்பட்டார்.
கனடாவின் முக்கிய எதிர்க்கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும் மற்றும் தொழிற்சங்க ஆதரவு பெற்ற புதிய ஜனநாயகக் கட்சியும் (NDP) கூட, சீனா குறித்து அரசாங்கத்தை வலதுபுறத்தில் இருந்து தாக்குவதை தொடர்வதுடன், அதனுடன் இன்னும் கடுமையான போக்கை செயல்படுத்தவும் கோருகின்றன. இரு கட்சிகளும் ட்ரூடோவின் ஒலிம்பிக் புறக்கணிப்பு அறிவிப்பை வெறுப்புடன் ஆமோதித்தன, அதேவேளை போட்டிகளை இடமாற்றம் செய்ய அழுத்தம் கொடுக்க ஒட்டாவா இன்னும் அதிக முயற்சி செய்திருக்க வேண்டும் என்று புகார் கூறின.
டிசம்பர் 2019 இல், சீனாவுக்கு எதிரான மிகுந்த ஆக்கிரோஷமான நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கனடா-சீனா உறவுகள் குறித்த சிறப்பு நாடாளுமன்றக் குழுவை நிறுவுவதற்கு, NDP உம் Bloc Quebecois உம் கடுமையான வலதுசாரி பழமைவாதிகளுடன் ஒன்றிணைந்து கொண்டன. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், மூன்று கட்சிகளும், முழு லிபரல் பின்வரிசையில் சேர்ந்து கொண்டு, வீகர் சிறுபான்மையினரை பெய்ஜிங் “இனப்படுகொலை” செய்வதாக விவரிக்கும் ஒரு பழமைவாத திட்டமிடல் பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.
அரசியல் ஸ்தாபகத்தின் தவறான சீன எதிர்ப்பு பிரச்சாரம், தொற்றுநோய்களின் போது, நாட்டின் முக்கிய நகரங்களில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக உள்ள சீன-கனேடியர்கள் மீது இனவெறி தாக்குதல்களை தீவிரப்படுத்த உதவியது. மார்ச் மாதம் வெளியான சீன கனேடிய தேசிய கவுன்சிலின் அறிக்கை, தொற்றுநோயின் முதல் ஆண்டில் ஆசிய கனேடியர்கள் மீது 1,150 இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது. மேலும், ஆசிய கனேடியர்கள் பெரியளவில் சிறுபான்மையினராக வசிக்கும் நகரங்களில் ஒன்றான வான்கூவரில் இனவெறி தாக்குதல்கள் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது பற்றியும் பதிவாகியுள்ளது.