முன்னோக்கு

ஓமிக்ரோன் வகை உலகெங்கிலும் அதிகரிக்கின்ற நிலையிலும் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அதிவேகமாக உலகெங்கிலும் பரவி வருகின்ற ஓமிக்ரோன் வகை, இந்தாண்டு இறுதியில் பல நாடுகளில் மேலோங்கிய வைரஸ் வகையாக இருக்கக்கூடும். தெற்கு ஆபிரிக்காவில் உருவானதாக தெரியும் இந்த வைரஸ் வகை அங்கேயும், அத்துடன் பிரிட்டன், டென்மார்க், நோர்வே மற்றும் பிற நாடுகளிலும் மிகவும் அதிகளவில் நோயாளிகளை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே இலண்டனில் இது மேலோங்கிய திரிபாக உள்ளது.

கடந்த இரண்டாண்டுகளில் இந்த பெருந்தொற்றால் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவுக்கு 800,000 ஐ கடந்துள்ள அமெரிக்காவில், நியூ யோர்க், நியூ ஹாம்ப்ஷைர், கனக்டிக்கட் மற்றும் பிற மாநிலங்களிலும் புதிய நோயாளிகள் கூர்மையாக அதிகரித்துள்ளனர். நியூ யோர்க்கில், மொத்த நோயாளிகளில் ஏற்கனவே 13 சதவீதத்தினரை ஓமிக்ரோன் வகை கணக்கில் கொண்டுள்ளது, இத்தாகாவின் கொர்னெல் பல்கலைக்கழகத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவர்களிடையே இது பாரியளவில் வெடித்திருப்பதும் அதில் உள்ளடங்கும், அந்த பல்கலைக்கழகம் நேரடி வகுப்புகளை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரித்து வரும் 'சுனாமி'க்கு பிரதான முதலாளித்துவ நாடுகளின் விடையிறுப்பு —குறிப்பிடத்தக்களவில் ஒன்றுமில்லை என்பது—அதிர்ச்சியூட்டும் அளவுக்கு குற்றகரமான பொறுப்பற்றத்தன்மை மட்டத்தைக் காட்டுகிறது. இதுவரை இந்த வைரஸ் குறித்து என்னவெல்லாம் அறிய வந்திருக்கிறதோ அவை அவசர நடவடிக்கை அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு உடைகளை அணிந்த மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர், நவம்பர் 21, 2021 ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் வோல்கோகிராடில் உள்ள மருத்துவமனையில்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குனர்-ஜெனரல் Tedros Adhanom Ghebreyesus செவ்வாய்கிழமை கூறுகையில், “ஓமிக்ரோன் வகை முந்தைய எந்த வகையிலும் நாம் பார்த்திராத அளவுக்கு வேகமாக பரவி வருகிறது,” என்றார். இந்த புதிய வகை 'மிதமானது' ஆகவே அபாயமற்றது என்ற அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களின் வாதங்களை அவர் கண்டித்தார், “ஓமிக்ரோன் மிதமானது என்று உதறித்தள்ளுவது கவலையளிக்கிறது,” என்று கூறிய அவர், “நம்மை ஆபத்துக்குட்படுத்தும் இந்த வைரஸை நாம் குறைமதிப்பீடு செய்கிறோம். ஓமிக்ரோன் மிகவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்றாலும் கூட, மீண்டுமொருமுறை பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் தயாரிப்பின்றி உள்ள சுகாதார அமைப்பில் நிரம்பி வழிவார்கள்,” என்றார்.

உலக சுகாதார அமைப்பில் கோவிட்-19 க்கு தொழில்நுட்ப தலைவராக உள்ள டாக்டர் மரியா வன் கெர்கொவ் இயக்குனர்-ஜெனரலின் கருத்துக்களையே எதிரொலித்ததுடன், அமெரிக்காவிலும் மற்றும் அமெரிக்காவிலுள்ள மற்ற நாடுகளிலும் மற்றும் ஐரோப்பாவிலும் இந்த பெருந்தொற்றுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 'தடுப்பூசி மட்டுமே போதும்' அணுகுமுறையைக் கண்டித்தார். “டெல்டா மற்றும் ஓமிக்ரோன் இரண்டும் சேர்ந்து, உலகில் நோய்தொற்றுக்களின் ஒரு சுனாமியை நாம் முகங்கொடுக்கிறோம் என்று நினைக்கிறேன். … தடுப்பூசி மட்டுமே போதாது. தடுப்பூசி கடுமையாக நோய்வாய்ப்படுவதையும் இறப்பையும் தடுக்கிறது என்றாலும் அது முற்றிலுமாக நோய்தொற்றைத் தடுத்துவிடாது,” என்றார்.

விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்துள்ளவாறு, ஓமிக்ரோன் வகை ஏதோவிதத்தில் உயிருக்குக் குறைந்த ஆபத்தே விளைவிக்கும் என்றாலும் கூட —இவ்வாறு அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை— நோயாளிகளின் பெரும் எண்ணிக்கையால் மருத்துவமனை அனுமதிப்புகளும் மற்றும் இறப்புகளும் கூர்மையாக அதிகரிக்கும் மற்றும் பேரழிவுகரமாக இருக்கும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

மிகவும் தீவிரமாக நோய்தொற்று ஏற்படுத்துவதற்கு கூடுதலாக, ஓமிக்ரோன் வகை முந்தைய திரிபுகளை விட குழந்தைகள் மீது மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாக தெரிகிறது.

தென் ஆபிரிக்க சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா குறிப்பிடுகையில், பிரிட்டனில் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 0.05 சதவீத கோவிட்-19 குழந்தை நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், ஓமிக்ரோன் நோய்தொற்று ஏற்பட்ட குழந்தைகளில் 5 சதவீதத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தென்னாபிரிக்காவின் கௌடெங்கில் மருத்துவமனை அனுமதிப்புகள் முந்தைய அதிகபட்ச மட்டங்களில் பார்த்ததை விட 45 சதவீதம் அதிகமாக அதிகரித்துள்ளன. ஓமிக்ரோன் வெடிப்பின் முதல் குவிமையாக இருந்த தென்னாபிரிக்காவின் ஷ்வானேயில் இரண்டு வயதுக்குட்பட்ட 100 க்கும் அதிகமான குழந்தைகள், வேறெந்த வயதுடைய பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக ஓமிக்ரோன் வகை தடுப்பூசியையே எதிர்க்கிறது, செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளுமே (மொடேர்னா, ஃபைசர் மற்றும் ஜோன்சன்&ஜோன்சன்) குறிப்பிடத்தக்களவில் குறைவான பாதுகாப்பே வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இரண்டு தவணை பைசர் தடுப்பூசியும் நோய்தொற்று அடையாளத்திற்கு எதிராக வெறும் 33 சதவீதம் மட்டுமே செயல்திறன் கொண்டிருப்பதாகவும், மருத்துவமனை அனுமதிப்புகளுக்கு எதிராக வெறும் 70 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு வழங்குவதாகவும் தென்னாபிரிக்காவில் இருந்து வரும் சமீபத்திய தரவுகள் கண்டறிந்தன, முந்தைய எல்லா வகைகளில் இருந்தும் செயல்திறன் கணிசமானளவுக்குக் குறைந்துள்ளது.

உலக மக்கள்தொகையில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே பூஸ்டர் மருந்து செலுத்தப்பட்டுள்ளனர் என்பதோடு சுமார் 46 சதவீதத்தினருக்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை வைத்து பார்க்கையில், உலக மக்கள்தொகையில் பெரும் பெரும்பான்மையினர் இப்போது நோய்தொற்று அடையாளங்களைப் பெறும் ஆபத்தில் இருக்கிறார்கள் மற்றும் ஓமிக்ரோனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சாத்தியக்கூறும் உள்ளது.

இந்த பேரிடரை எதிர்கொண்டிருக்கையில், அரசாங்கங்களோ கோவிட்-19 பரவலைத் தடுக்கும் எந்த முக்கிய நடவடிக்கைகளையும் தொடர்ந்து நிராகரிக்கின்றன. ஓமிக்ரோனுக்கு விடையிறுப்பாக 'எந்த சமூக அடைப்பும்' இருக்காது என்ற பைடெனின் வலியுறுத்தலை எதிரொலித்து, பிரிட்டன் பிரதம மந்திரி ஜோன்சனும் புதன்கிழமை அறிவிக்கையில், மேற்கொண்டு சமூக அடைப்புகளுக்கான 'எந்த திட்டமும் இல்லை' என்றார்.

விமானப் பயணங்களால் ஏற்படும் அபாயங்கள் தெரிந்தும், விடுமுறை ஒன்றுகூடல்களுக்கான உள்நாட்டு பயணங்கள் மீது எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதாக இல்லை. AAA அமைப்பின் தகவல்படி, கடந்தாண்டு எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக, வரவிருக்கும் விடுமுறை காலத்தில் சுமார் 6.4 மில்லியன் பேர் விமானப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில், பயணிகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை, பெரும்பாலானவர்கள் போதுமானளவுக்குத் தாக்குப்பிடிக்காத மருத்துவ முகக்கவசமோ அல்லது சாதாரண துணியிலான முகக்கவசங்களையோ பயன்படுத்துவார்கள், இதனால் பெருவாரியாக பரவும் சம்பவங்களுக்கான நிலைமைகள் உருவாகும் என்பதோடு, இது ஓமிக்ரோன் நோயாளிகளின் அதிவேக அதிகரிப்புக்கு அனுகூலமாக ஆகிறது.

வெள்ளிக்கிழமை நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட 'கோவிட் எங்கும் போகப் போவதில்லை. இப்போது நாம் அதைப் போல நடந்து கொள்ள தொடங்கி விட்டோம்,” என்ற தலையங்கத்தில் ஆளும் வர்க்கங்கள் தரப்பில் பாரிய மரணங்கள் மீது காட்டப்படும் அலட்சியம் வெளிப்பட்டிருந்தது.

பைடென் நிர்வாக கொள்கைகளுடன் அடியொற்றிச் செல்லும் டைம்ஸ், கோவிட்-19 தொடர்பில் வந்த குழந்தைகளைத் தனிமைப்படுத்துவதை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தது. “அதிவிரைவாக பரிசோதனை அல்லது தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பதா வேண்டாமா என்பதை அவர்களே முடிவெடுக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அனுமதிப்பது அறிவுப்பூர்வமாக இருக்கும்,” என்றது குறிப்பிட்டது. “நாள் முழுவதும் பல மணி நேரம் காலவரையின்றி முகக்கவசங்கள் அணிந்திருக்குமாறு இளம் குழந்தைகளை நிர்பந்திப்பதை யாரும் விரும்பவில்லை,” என்று அறிவித்து, பள்ளிகளில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கு டைம்ஸ் கண்டனம் தெரிவித்தது.

ஓமிக்ரோன் அதிகரிப்பைத் தடுக்க செயல்படுவதற்குப் பதிலாக, பைடென் நிர்வாகம், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்கு அதன் எதிர்ப்பை அறிவித்தது, அதன் திட்டத்தில் 'அடைப்புகள் அல்லது முடக்கங்கள் உள்ளடங்கி இல்லை மாறாக பரந்தளவில் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் மருந்துகள் செலுத்துவதே உள்ளது' என்று அறிவித்தது.

ஓமிக்ரோன் வகை உருவெடுத்திருப்பதே இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கு 'தடுப்பூசி மட்டுமே போதுமானது' மூலோபாயம் தோல்வி அடைந்திருப்பதை அம்பலப்படுத்துகிறது, மேலும் உலகெங்கிலும் பாரியளவில் நோயாளிகள் அதிகரித்திருப்பது ஓமிக்ரோன் வகைக்கு கொள்கை மாற்றம் எதுவும் தேவையில்லை என்ற வாதங்களை முற்றிலுமாக மதிப்பிழக்கச் செய்கிறது.

ஓமிக்ரோன் இறுதியானது இல்லை. வேகமான பரிணாம் மற்றும் சமீபத்திய இந்த 'கவலைக்குரிய வகையின்' வேகமான பரவல் என்பது அடுத்த வகை இன்னும் அதிக வேகமாக பரிணமிக்கலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இந்த வைரஸ் தொடர்ந்து பரவும் வரையில், புதிய, இன்னும் வீரியமான, தடுப்பூசியையே எதிர்க்கக்கூடிய, கொடிய திரிபுகளாக இருக்கக்கூடியவை உருவெடுக்கலாம் என்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருக்கும்.

நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருக்கிறது, ஒரு புதிய மூலோபாயம் அவசியமாகும்! டிசம்பர் 4 இல் உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல,

அவசர பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் கோவிட்-19 ஐ அகற்ற முடியும், அல்லது முற்றிலுமாக ஒழிக்கவும் கூட முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால் பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்காக பாரியளவில் பல ட்ரில்லியன் டாலர் திட்டத்தை உருவாக்குவது, பரிசோதனை, நோயின் தடம் அறிதல், பாதுகாப்பான தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்துவது, உலகம் முழுவதும் விரைவாக தடுப்பூசி செலுத்த ஓர் உலகளாவிய திட்டம், எல்லா இன்றியமையா வேலையிடங்களிலும் உயர்தரமான N95 ரக முகக்கவசங்கள் அல்லது தரமான முகக்கவசங்கள் வழங்குவதாகும்.

உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணையைத் தொடங்கி உள்ளன. இந்த விசாரணை கடந்த இரண்டாண்டுகளாக அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும் பொய்கள் அனைத்தையும் ஆராய்ந்து மறுத்தளிக்கும், இது என்ன நடந்துள்ளது மற்றும் என்ன செய்யப்பட வேண்டும் என்ற ஒரு புரிதலைத் தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தி செய்ய ஓர் இன்றியமையா பாகமாக இருக்கும்.

ஒவ்வொரு வேலையிடத்திலும் அண்டைப் பகுதியிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலமாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான சக்தியாக ஒழுங்குப்படுத்தி அணித்திரட்டுவதுடன் இந்த விசாரணை இணைக்கப்பட வேண்டும். உலகளவில் இந்த வைரஸை அகற்றுவதற்கான மற்றும் முற்றிலும் ஒழிப்பதற்கான மூலோபாயத்தைக் கோர பாரியளவிலான ஒரு சமூக மற்றும் அரசியல் இயக்கம் இல்லாமல், ஒரு கொள்கை மாற்றத்தைக் கைவரப் பெற முடியாது.

Loading