முன்னோக்கு

“அமசன் எங்களை வெளியேற விடாது”: சமீபத்திய அமெரிக்க சூறாவளி பேரழிவு ஆளும் உயரடுக்கின் உயிர்கள் மீதான அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“அமசன் எங்களை வெளியேற விடாது” – வெள்ளிக்கிழமை இரவு இல்லினாய்ஸின் எட்வர்ட்ஸ்வில்லில் உள்ள அமசன் நிறைவேற்று மையத்தை சூறாவளி தாக்கியதில் தானும் தனது ஐந்து சகாக்களும் இறந்துபோவதற்கு முன்னர் லாரி விர்டன் என்பவர் தனது 13 ஆண்டுகால கூட்டாளி செரி ஜோன்ஸூக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தி.

மத்திய அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை வீசிய பலத்த சூறாவளி ஆர்கன்சாஸ் முதல் கென்டக்கி ஊடாக கடந்து சென்று பல உயிர்களை காவு கொண்டதோடு அப்பகுதியை கடும் அழிவுக்குள்ளாக்கியமை, அமெரிக்காவின் மையப்பகுதியில் நிலவும் மிருகத்தனமான மலிவு உழைப்பு வேலை நிலைமைகளையும், தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்த ஆளும் உயரடுக்கின் அப்பட்டமான அலட்சியத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இந்த கொடிய டிசம்பர் சூறாவளி வெடித்ததில் குழந்தைகள் உட்பட குறைந்தது 88 பேர் பலியாகியுள்ளனர், இன்னும் பலரைக் காணவில்லை. மீட்புப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் அளவிற்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை சல்லடை போட்டு தேடுகிறார்கள் என்பதுடன், சிக்கியவர்களில் பலர் பலத்த காயமடைந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பங்கள் தங்கள் குளியலறைகளில் தஞ்சமடைந்திருந்ததால் வீடுகள் காகித துண்டுகளைப் போல வீசியெறியப்பட்டன, மேலும் தொழிலாளர்கள் உள்ளிருந்த நிலையிலேயே தொழிற்சாலைகள் தகர்க்கப்பட்டுள்ளன.

இடது: அமசன் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெஃப் பெசோஸ், நவம்பர் 13, 2021 சனிக்கிழமையன்று, கலிபோர்னியாவின் மேற்கு ஹோலிவுட்டில் உள்ள பசிபிக் வடிவமைப்பு மையத்தில் உள்ள Baby2Baby Gala பிரிவுக்கு வருகிறார். (Photo by Jordan Strauss/Invision/AP); வலது: டிசம்பர் 11, 2021 சனிக்கிழமை, இல்லினாய்ஸின் எட்வர்ட்ஸ்வில்லில் உள்ள அமசன் நிறைவேற்று மையம் சூறாவளியால் தாக்கப்பட்டதற்கு பிந்தைய காட்சி. (AP Photo/Jeff Roberson)

ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் நியூ யோர்க் நகரில் Triangle Shirtwaist Factory இல் நிகழ்ந்த பெரும் தீ விபத்தின் போது வெளியேறும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் 146 ஆடைத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதான கோரக் காட்சிகளை நினைவூட்டுவதாக, சூறாவளி தங்களைத் தாக்கியபோது, நிர்வாகம் தங்களை தொழிற்சாலைகளிலேயே அடைத்து வைத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இல்லினாய்ஸின் எட்வர்ட்ஸ்வில்லில் உள்ள அமசன் நிறைவேற்று மையத்திலும் மற்றும் கென்டக்கியின் மேஃபீல்டில் உள்ள மேஃபீல்ட் நுகர்வோர் தயாரிப்புகள் (Mayfield Consumer Products) மெழுகுவர்த்தி தொழிற்சாலையிலும் உள்ள ஆலை மேலாளர்கள் பல மணிநேரங்களுக்கு முன்னதாகவே விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கைகளை நிராகரித்துவிட்டனர், காரணம் கிறிஸ்துமஸூக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், விடுமுறை கால உற்பத்தியை முழு வீச்சில் முடிக்க வேண்டும் என்பதே. அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒரு மாற்றுப்பணி நேர உற்பத்தியை கூட நிறத்த முடியாது, ஏனென்றால் பெருநிறுவனத்திற்கு சிறிதளவு வருமான இழப்பு கூட ஏற்படக் கூடாது.

மேஃபீல்ட் ஆலைத் தொழிலாளர்கள், அப்பகுதிக்கு பலமுறை சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னரும், புகலிடம் தேடி வெளியேறும் எவரையும் பணிநீக்கம் செய்வோம் என்று நிர்வாகம் மிரட்டியதாக தெரிவிக்கின்றனர். “இதுபோன்ற வானிலையில் கூட, நீங்கள் என்னை பணிநீக்கம் செய்வீர்களா?” என்று 20 வயது இவான் ஜோன்சன் ஒரு மேலாளரிடம் கேட்டார். அதற்கு அவர்களது பதில் “ஆம்” என்பதே. ஜோன்சனின் கூற்றுப்படி, யாராவது வெளியேறியுள்ளார்களா என்பதை தீர்மானிக்க ஒருமுறை அனைவரும் அழைக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டரான 37 வயது மார்க் சாக்ஸ்டன், NBC News இடம் பேசுகையில், தொழிலாளர்களுக்கு வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, மாறாக முதல் சூறாவளி எச்சரிக்கை வந்த பின்னரும் பணியிடத்திற்கே அவர்கள் திருப்பியனுப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தினார். “நாங்கள் வெளியேற முடிந்திருக்க வேண்டும், அதுதான் விஷயம்,” என்று சாக்ஸ்டன் விளக்கினார். “முதல் எச்சரிக்கை வந்தபோது அவர்கள் எங்களை நடைபாதையில் செல்ல வைத்தனர். எச்சரிக்கைக்குப் பின்னர் கூட, அவர்கள் எங்களை வேலைக்குச் செல்லும்படி கூறினார்களே தவிர, ஒருபோதும் எங்களை வீட்டிற்கு அனுப்ப முன்வரவில்லை.”

சூறாவளி தாக்கியபோது, கென்டக்கி மெழுகுவர்த்தி தொழிற்சாலையை அது தரைமட்டமாக்கியது, அப்போது இடிபாடுகளுக்கு அடியில் டஜன் கணக்கான தொழிலாளர்கள் சிக்கி, எட்டு பேர் இறந்தனர். தொழிலாளர்கள் ஒரு மணிநேரத்திற்கு 8 டாலர்கள் என்ற சொற்ப ஊதியத்திற்கு 10 முதல் 12 மணிநேரங்கள் வரையிலான மாற்றுப்பணியில் கட்டாயமாக கூடுதல் நேரம் வேலை செய்ய அடிமைப்படுத்தப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களில் ஒரு துணை அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் தொழிற்சாலையில் பணிபுரியும் வேலை விடுதலை கைதிகளும் இருந்தனர்.

அமசன் அதன் பங்கிற்கு, எட்வர்ட்ஸ்வில்லில் மாற்றுப்பணியை இரத்து செய்ய மறுத்துவிட்டது. அச்சுறுத்தல் பயங்கரமாக அதிகரித்த நிலையில், நிர்வாகம் கட்டிடத்தின் உட்புறத்தில் உள்ள தங்குமிடங்களுக்குள் தொழிலாளர்களை அடைத்து வைக்க முயன்றது, ஆனால் கட்டிடம் புயலைத் தாங்கி நிற்க முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்ததால், தொழிலாளர்களை சுற்றி அது இடிந்து விழுந்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இல்லினாய்ஸில் உள்ள அமசன் பிரிவு அழிக்கப்பட்ட செய்தி வெளியானவுடன், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாதது குறித்த தங்கள் கவலைகளை தெரிவிக்க உள் நிறுவன செய்தி பலகையைப் பயன்படுத்தினர்.

The Intercept செய்தியின்படி, ஒரு ஊழியர் “நான் ஆறரை ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன், எனது மாற்றுப்பணி நேரத்தில் ஒருமுறை கூட சூறாவளி பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டதில்லை, அத்துடன் சுமார் இரண்டு ஆண்டுகளாக தீ பாதுகாப்பு ஒத்திகையிலும் நான் பங்கேற்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த முழு சூழ்நிலையும் எங்கள் தளத்தில் உண்மையில் பாதுகாப்பு பயிற்சிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றே என்னை நினைக்க வைத்தது, ஏனென்றால் பேரழிவும் துயரமும் எப்போது தாக்கும் என்பது ஒருபோதும் எவருக்கும் தெரியாது” என்றும் கூறினார்.

அமசன் எட்வர்ட்ஸ்வில்லில் மீட்பு முயற்சிகளுக்கு 1 மில்லியன் டாலர் வழங்க உறுதியளித்துள்ளது, இது நிறுவனரும் செயல் தலைவருமான ஜெஃப் பெசோஸின் 7 நிமிட தனது நிகர சொத்து மதிப்பை அதிகரிப்பதற்கு சமமாகும். அவரது தொழிலாளர்கள் சூறாவளியால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கையில், பெசோஸ் தனது வார இறுதி நாட்களை ஒரு ஆடம்பர விருந்தளிக்கவும், தனது Blue Origin ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பெசோஸ் தனது விண்வெளிக் கப்பல் நிறுவனத்திற்காக 5.5 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் சூறாவளிகள் என்பது அரிதான அல்லது முன்கணிக்க முடியாத நிகழ்வு அல்ல. வானிலை ஆய்வாளர்கள் அவற்றின் உருவாக்கத்தையும் பாதையையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கணிக்க முடியும். உண்மையில் முதல் சூறாவளி எச்சரிக்கை வியாழன் அதிகாலை தேசிய வானிலை சேவையிலிருந்து வந்துள்ளது, அதிலும் மிசூரியின் செயின்ட் லூயிஸ் மற்றும் கென்டக்கியின் படுகா நகரங்களில் உள்ளூர் செய்தி நிலையங்கள் புதன் கிழமையிலிருந்தே சூறாவளிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்த புயல்கள் வழக்கமாக ஏற்படுத்தும் சேதங்கள் தவிர்க்க முடியாதது அல்ல, ஏனென்றால் சரியான பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பலத்த காற்றையும் இடிபாடுகளையும் தாங்கி நிற்கும் வகையில் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் கட்டமைக்க முடியும். மேலும், இந்த புயல்களின் பாதையில் சிக்கித் தவிக்கும் எவரையும் பாதுகாக்க அவசர முகாம்களையும் கட்டமைக்கலாம். இருப்பினும், இலாப நோக்கத்திற்காக, இந்த விலைவுயர்ந்த தெரிவுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, மேலும் சூறாவளி பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் டிரெய்லர் வீடுகள் போன்ற மலிவான வீடுகளைக் கட்ட அனுமதிக்கப்படுகிறது.

இந்த சமீபத்திய பேரழிவும் மற்றும் சூறாவளியின் தொடர்ச்சியான கொடிய தாக்கமும், அமெரிக்க ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையை முற்றிலும் அலட்சியப்படுத்துவதையே அம்பலப்படுத்துகிறது. அவர்களின் பிடிவாதமான கொலைவெறி மனப்பான்மை என்னவென்றால், தொழிலாளர்கள் பிரதியீடு செய்யப்படக் கூடியவர்கள். அவர்கள் இறந்தால், இறக்கிறார்கள்; மற்றொரு தொழிலாளியை அவர்களின் இடத்தில் வேலைக்கு அமர்த்தலாம், எஞ்சியவர்களுக்கு காப்பீடு வழங்கப்படும், அவ்வளவுதான்.

மனித வாழ்க்கை மீதான இந்த கொலைகார அலட்சியம், 800,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் இறப்புக்கு வழிவகுத்ததான கோவிட்-19 தொற்றுநோய் காலம் முழுவதும் பின்பற்றப்பட்ட கொள்கைகளால் முழுமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள முதலாளிகள் நோய்தொற்று வெடிப்புக்கள் பற்றிய செய்திகளை மூடி மறைக்கவும், நோய்தொற்றுக்கு தொழிலாளர்கள் பலியானது பற்றிய செய்திகளை நசுக்கவும் தான் முயன்றனர். தொற்றுநோயின் முதல் ஆண்டில் மட்டும் 3,600 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் நோய்தொற்றை அதிகம் பரப்பும் தளங்களாக செயல்படும் நிலையில், நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமசன் அக்டோபர் 2020 இல், அதன் ஊழியர்களில் 20,000 பேருக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. இந்நிறுவனம் தொடர்ந்து மறைத்து வருவதால், இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.

மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட மாறுபாடுகளை எதிர்கொள்வதில் “தடுப்பூசி மட்டும்” மூலோபாயத்தை பின்பற்றுவது உட்பட, ஜனாதிபதி ட்ரம்ப் பின்பற்றிய பூட்டுதல்களுக்கான எதிர்ப்பு ஜனாதிபதி பைடெனின் கீழும் பின்பற்றப்படுவதானது, தொற்றுநோய் காலத்தின் முதலாம் ஆண்டை விட இரண்டாம் ஆண்டில் அதிக இறப்புக்களை விளைவிக்கின்றன. சராசரியாக, கிட்டத்தட்ட 1,300 அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் கோவிட்-19 நோயால் இறக்கின்றனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே, இந்த வார இறுதியில் புயல்களால் கொல்லப்பட்டவர்களும் சமூக படுகொலை கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்களே. 1911 ஆம் ஆண்டு Triangle Shirtwaist தீ விபத்துக்குப் பின்னர், பணியிட பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளுக்கான ஒரு இயக்கத்தை உருவாக்க தூண்டுதலளிக்கப்பட்டது, இந்த நேரத்தில் அப்படி எதுவும் நடக்காது. அமசன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து மிக சொற்பமான அபராதத்தை மட்டுமே எதிர்பார்க்கலாம், இது டிரில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய நிறுவனத்தில் நிர்வாகிகளின் வணிகச் செலவினங்களில் இது ஏற்கனவே ஒரு காரணியாக உள்ளது.

அமசன் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு பணியிடத்திலும் உள்ள தொழிலாளர்கள், வானிலை அல்லது கோவிட்-19 மூலம் அச்சுறுத்தல் வந்தாலும், நிர்வாகத்தின் குற்றங்களை எடுத்துக் காட்டவும், பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதிப்படுத்தவும் நிர்வாகத்தை அணுக சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை (rank-and-file safety committees) உருவாக்க வேண்டும். பெசோஸ் போன்ற கோடீஸ்வரர்களின் செல்வம் அபகரிக்கப்பட வேண்டும் என்பதோடு, அமசன் போன்ற பெரிய பெருநிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை இலாபத்தை விட முன்னுரிமை பெற வேண்டுமானால், சமூகத்தின் பொறுப்பை தொழிலாளர்கள் ஏற்று மனித தேவைக்கு ஏற்ற வகையில் பொருளாதாரத்தை நடத்த வேண்டும்.

Loading