அசான்ஜின் சகோதரர் கேப்ரியல் ஷிப்டன் WSWS இடம் பேசுகிறார்: “ஜூலியனை கடத்துவதற்கான சிஐஏ திட்டம் சட்டப்பூர்வ பின்னணியில் இன்னும் தொடர்கிறது”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இந்த வாரம், திரைப்பட தயாரிப்பாளரும், ஜூலியன் அசான்ஜின் சகோதரருமான கேப்ரியல் ஷிப்டனுடன் பேசியது. விக்கிலீக்ஸ் ஸ்தாபகர், சட்டவிரோத அமெரிக்க போர்கள், மனித உரிமை மீறல்கள், பாரிய உளவு நடவடிக்கைகள் மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் உலகளாவிய இராஜதந்திர சதிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்திய “குற்றத்திற்காக” அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்க அவர் மீண்டும் பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறார்.

கேப்ரியல் ஷிப்டன்

ஷிப்டன் சமீபத்தில் இத்தாகா (Ithaka) என்ற ஒரு தனிச்சிறப்பு நீள ஆவணப்படத்தை எடுத்து முடித்துள்ளார், இப்படம் அடுத்த மாதம் சிட்னி திரைப்பட விழாவில் உலகளவில் திரையிடப்படவுள்ளது, மேலும் ஜனவரி 2022 இல் பொது வெளியீட்டிற்கு வரும். இந்தப் படத்தை பென் லாரன்ஸ் இயக்கியுள்ளார், இது அசான்ஜின் தந்தை ஜோன் ஷிப்டன், தனது மகனின் அவலநிலை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொது ஆதரவை திரட்டவும், அமெரிக்கா அசான்ஜ் மீது வழக்குத் தொடுப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும் மற்றும் அவரது சுதந்திரத்திற்காகவும் எடுத்த முயற்சிகளை காலக்கிரமமாக விவரிக்கிறது.

இந்த திரைப்படம், அசான்ஜ் மீதான தசாப்த கால துன்புறுத்தலால் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும், மற்றும் அவரது துணை ஸ்டெல்லா மோரிஸ், அவரது இரண்டு இளம் குழந்தைகள் மற்றும் அவரது தந்தை ஜோன் ஷிப்டன் உட்பட அவருக்கு நெருக்கமானவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை உருவகப்படுத்தி வழங்குகிறது. அவர்கள் இந்த படத்தில் அமெரிக்க வழக்கின் சட்டபூர்வமற்ற தன்மை, மற்றும் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் கொடிய தாக்கங்கள் குறித்து சக்திவாய்ந்த முறையில் பேசுகின்றனர்.

இந்த கலந்துரையாடல் சுருக்கப்பட்டு வழங்கப்படுகிறது. எந்தவித குற்றத்திற்கான தண்டனையாக அல்லாமல், அமெரிக்காவிடம் அசான்ஜை ஒப்படைப்பதை எளிதாக்கும் நோக்கத்திற்காக இலண்டன் பெல்மார்ஷ் சிறையில் இன்னும் அடைத்துவைக்கப்பட்டுள்ள அவரது சகோதரரை கேப்ரியல் ஷிப்டன் கடைசியாக எப்போது பார்க்க முடிந்தது என்ற கேள்வியுடன் WSWS உரையாடலைத் தொடங்கியது.

கேப்ரியல் ஷிப்டன்: கடைசியாக அக்டோபர் 2020 இல் நான் ஜூலியனைப் பார்த்தேன். அதன் பின்னர் சிறைச்சாலை கோவிட் பூட்டுதலில் இருந்ததால், கடைசி பத்து மாதங்களாக அங்கு பார்வையாளர்கள் செல்ல முடிவதில்லை. கோவிட் நெறிமுறைகளுக்கும் மேலாக, பெல்மார்ஷ் சிறைச்சாலை ஏற்கனவே உச்சபட்ச பாதுகாப்பு கொண்டதாகும்.

அங்கு மூன்று அல்லது நான்கு வாயில்களை கடந்த பின்னரே நீங்கள் சிறைச்சாலைக்குள் செல்ல முடியும், ஒவ்வொரு வாயிலிலும், உங்கள் வாய் உட்பட நீங்கள் சோதனை செய்யப்படுவீர்கள், மற்றும் உங்கள் கட்டைவிரல் ரேகைகள் ஸ்கேன் செய்யப்படும். கோவிட் காரணமாக பார்வையாளர்கள் வருகை மிகக் குறைவாக இருந்தது, மேலும் பார்வை நேரமும் 45 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடுவதற்கு கட்டுப்பாடுள்ளது. ஜூலியன் கொஞ்சம் அரவணைத்து வழியனுப்பும் பழக்கமுள்ளவர், அதனால் சந்திப்பின் முடிவில் அவர் என்னை கட்டிப்பிடித்தபோது சிறைக் காவலாளி “தொடக்கூடாது” என்று எச்சரித்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பொதுவாக, ஒருவரிடம் விடைபெறுகையில் நீங்கள் கட்டிப்பிடித்திருப்பீர்கள், ஆனால் அந்த நேரத்தில் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை.

இத்தாகா

இப்போது பரவாயில்லை, ஆனால் 12 மாதங்களாக ஸ்டெல்லா அல்லது பிற பார்வையாளர்கள் எவரையும் அவரால் தொட முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக அவரது குழந்தைகள் சிறைக்குச் சென்று பார்க்க முடிகிறது, அவர்களை அவர் கட்டியணைத்துக்கொள்ள முடிகிறது, எனவே தற்போது நிலைமை பரவாயில்லை.

ஆனால், அது உச்சபட்ச பாதுகாப்புள்ள சிறைச்சாலையாகும். ஜூலியன் அங்குள்ள இரண்டு தடுப்புக்காவல் கைதிகளில் ஒருவர் என்பதுடன், அது தடுப்புக்காவல் சிறை இல்லை என்றே நான் நினைக்கிறேன். மேலும், அங்குள்ள கைதிகளில் 30 சதவீதம் பேர் வன்முறைக் குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஜூலியன் அடைத்துவைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை இங்கிலாந்தின் கொடிய வன்முறை குற்றவாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. அவர் ஒரு நிரபராதியே தவிர, தண்டனை விதிக்கப்பட்டவர் அல்ல. ஜூலியன் வழக்கில் நடந்த பல முறைகேடுகளில் இதுவும் ஒன்றாகும்.

WSWS: அசான்ஜ் துன்புறுத்தப்படுவது உங்களை எந்தளவிற்கு பாதித்தது?

GS: ஜூலியன் முதன்முதலில் ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பெல்மார்ஷ் சிறைக்கு அனுப்பப்பட்டபோது 2019 இல் நான் அவரை சிறைக்குச் சென்று பார்த்தேன். அப்போது வரை ஜூலியன் அல்லது விக்கிலீக்ஸ் தொடர்புபட்ட எந்த விவகாரத்திலும் நான் உண்மையில் தலையிட்டதில்லை. ஆனால் 2019 இல் நான் அவரைப் பார்க்கச் சென்றபோது, அதற்கு முன்னர் ஒருபோதும் நான் அவரை அவ்வாறு பார்த்திராத தோற்றத்தில் அவர் இருந்தார். அவர் தற்கொலை குறித்த கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார், அந்த நேரத்தில் அது எனக்குத் தெரியாது, ஆனால் நான் அவரை மீண்டும் பார்க்க முடியாது என்றே நினைத்துவிட்டேன். அப்படித்தான் உணர்ந்தேன். அதுவே முடிவாக இருக்கலாம் என நினைத்தேன். அன்றைய தினம் நான் வீட்டிற்கு வந்த பின்னர் அவரது வயது வந்த மகன் டானியலுக்கு, “நீங்கள் அப்பாவைச் சென்று பார்ப்பது நல்லது, ஏனெனில் இது உங்களுக்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம்” என்று தகவல் அனுப்பினேன்.

அப்போதுதான் நான் அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டேன், பொது ஆதரவை திரட்டத் தொடங்கினேன், பேசுகிறேன் மற்றும் பேட்டிகள் அளிக்கிறேன், மேலும் அதுதான் இந்த ஆவணப்படத்திற்கான தொடக்கமாகவும் இருந்தது. நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதால், நாங்கள், “இந்த கதையின் மறு பக்கத்தை எப்படிச் சொல்ல முடியும், மக்கள் ஜூலியனையும் மற்றும் அவரது வேலையையும் வழமை போல் பார்ப்பதைத் தாண்டி, பார்வையாளர்களை உணர்ச்சிபூர்வமாக்கும் ஒருவரது தனிப்பட்ட பக்கத்தை நாம் எவ்வாறு கூறுவது” என்று நினைத்தோம். இறுதியில், ஜோனின் பயணத்தையும், அவரது மகனைப் பாதுகாக்க அவர் போராடுவதையும் பின்தொடரும் ஒரு யோசனையில் இறங்கினோம்.

அதற்கு முன்னைய ஆண்டில் பெல்மார்ஷ் சிறையில் மூன்று தற்கொலைகள் நிகழ்ந்திருந்தன, எனவே ஜூலியனும் அந்த எண்ணிக்கையில் சேர்ந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் நாங்கள் வாழ்கிறோம். [கம்யூட்டர் புரோகிராமரும் தொழிலதிபருமான] ஜோன் மெக்காஃபி ஸ்பெயினில் இருந்து அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படவிருந்தார், மேலும் அவரை நாடுகடத்த ஒப்புதல் வழங்கப்பட்டதும், அவர் தற்கொலை செய்து கொண்டார். அது எப்போதும் எங்கள் மனதில் பதிந்துவிட்டதால், அதுவே எங்களுக்கு ஒரு நிலையான பயமாகிவிட்டது.

ஸ்டெல்லா மோரிஸ் [புகைப்பட ஆதாரம்: இத்தாகா] [Photo: Ithaka]

ஸ்டெல்லா, ஜோன் மற்றும் நான் என மூவருமே இதை இப்போது முழுநேர வேலையாகச் செய்கிறோம், எனவே எங்கள் வாழ்க்கையை பொறுத்தவரை, இது அடிப்படையில் எங்கள் முழுநேர வேலையாகும். எனவே, அடுத்த விஷயம் அதற்காக நாம் போராட வேண்டியது தான். ஆனால் அது தான் யதார்த்தம். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள். ஜூலியனுக்காக வாதாட அமெரிக்காவில் ஒரு இடைவெளி எனக்குக் கிடைத்தது, அதனால் நான் அதைச் செய்ய ஆரம்பித்தேன். இந்த சிறிய விஷயங்களை ஜூலியனுக்காகவும் மற்றும் அவரது சுதந்திரத்திற்காகவும் வாதிடுவதற்கான வாய்ப்புகளாக நீங்கள் பாருங்கள், எனவே நீங்கள் வெளியே இறங்கி அவற்றைச் செய்யுங்கள். நாங்கள் வேலை செய்வது போலவே ஜோனும் ஸ்டெல்லாவும் செய்கிறார்கள்.

WSWS: ஆஸ்திரேலியா உட்பட ஜூலியனைப் பற்றி எடுக்கப்பட்ட சில புறநிலையான மற்றும் அனுதாபத்தைத் தூண்டும் ஆவணப்படங்கள் அல்லது திரைப்படங்களில் உங்கள் படமும் ஒன்றாக உள்ளதே. இதில் நீங்கள் சந்தித்த சவால்களைப் பற்றி கூற முடியுமா, மேலும் இதுபோன்ற அசாதாரண கதைகளை வைத்து ஏன் சில படங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன?

GS: இந்த திரைப்படத்தால் நாங்கள் பிரச்சினைகளை சந்தித்தோம். இந்த செயல்முறையில் நீண்ட காலமாக எங்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது. என்றாலும், இந்த துறை மற்றும் பாரம்பரிய விநியோக விற்பனை நிலையங்களில் உள்ள பலர் ஜூலியனுக்காக வக்காலத்து வாங்குவதைப் பார்க்க விரும்பவில்லை என்பதால் அனைத்து எதிர்மறை பிரச்சாரங்களும் பாத்திரப் படுகொலைகளும் மிகவும் பரவலாக உள்ளன.

எங்களிடம் இப்போது உள்ளூர் திரை அமைப்புகள் உள்ளன, ஆனால் படத்தில் ஓரளவு வெட்டுக்களை மேற்கொள்ளும் வரை அவர்கள் அதை திரையிட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் களத்திலிருந்து எதையாவது பெறுவது மிகவும் கடினமே.

Netflix போன்ற தளத்தை நீங்கள் பார்த்தால், அதன் நிர்வாகக் குழுவில் [முன்னணி ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி] சூசன் ரைஸ் சமீபகாலம் வரை உறுப்பினராக இருந்தார். பைடென் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர் நெட்ஃபிலிக்ஸை விட்டு வெள்ளை மாளிகைக்குச் சென்றார். ஒபாமா நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 400 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தைப் பெற்றார். இந்த நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள், சுழலும் கதவுகளைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் பெருநிறுவன ஊடகங்கள் உடனான தொடர்பிலிருந்து இதுவும் வேறுபட்டதல்ல.

ஜூலியனின் எதிரிகள் யார் என்றும், நாம் ஏன் அவர்களை எதிர்க்கிறோம் என்றும் உங்களுக்குத் தெரியும், அது தனது விழுதுகளை எங்கும் பரவ விட்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு அரசாகும். அவர்களின் சொல்லாட்சிக்கு எதிராக நீங்கள் செல்லும்போது, உங்கள் தயாரிப்புகளை வெளியே கொண்டுவருவதற்கு நீங்கள் மாற்று வழிகளை தேட வேண்டியிருக்கும்.

WSWS: ஆஸ்திரேலியாவின் பதில் என்னவாக இருந்தது. அங்கு நடக்கும் திரைப்பட விழாக்களுடன் உங்களுக்கு தொடர்பு உண்டா?

இலண்டனில் ஜோன் ஷிப்டன் [புகைப்பட ஆதாரம்: இத்தாகா] [Photo: Ithaka]

GS: அந்த வகையில் ஆஸ்திரேலியா சிறப்பானதே. ஏராளமான மக்கள் ஜூலியனுக்கு ஆதரவளிக்கின்றனர். கோவிட், அத்துடன் சிட்னி திரைப்பட விழாவின் காரணமாக இப்படத்தை இணையத்தில் காட்சிப்படுத்துவதற்கு முன்னர், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் நாங்கள் இதை காண்பிக்கவிருந்தோம். இங்குள்ள மற்றவர்களும் இதைப் பார்க்க ஆர்வமாக இருந்தனர் என்பதால், ஒரு சர்வதேச விழாவில் இதை திரையிடுவதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

WSWS: அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனாகவும் ஊடகவியலாளராகவும் இருந்தும் கூட அவரது விஷயத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் பங்கு பற்றியும் அவரை பாதுகாக்க அது மறுத்தது பற்றியும் நீங்கள் கருத்து தெரிவிக்க முடியுமா?

GS: அவர்கள் ஜூலியனை பாஸ்போர்ட்டை இழந்த வழிப்போக்கர் போல நடத்துகிறார்கள். அவர்கள் தப்பித்துக்கொள்ளக் கூடிய குறைந்தபட்ச உதவியையே அவருக்கு வழங்குகிறார்கள். உண்மையில் அசான்ஜிற்காக ஏதாவது செய்ய இப்போது அவர்களுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் பிரதமர் தொலைபேசியில் பைடெனை அழைத்து, அமெரிக்காவுடன் நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும் என்று கூறி, அவர்களால் ஜூலியனை வீட்டிற்கு அழைத்து வர முடியாதா என்ன?

ஆனால் ஆஸ்திரேலியாவோ அமெரிக்காவுக்கு கட்டுப்பட்டிருக்கிறது. இந்த வகையான விஷயத்தை பொறுத்தவரை நாங்கள் நினைக்கும் அளவிற்கு நாங்கள் சுதந்திரமாக இல்லை. ஜூலியனின் துன்புறுத்தல் விஷயத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்காவின் பாதையையே அடியொற்றுவதாக நான் நினைக்கிறேன்.

WSWS: இந்த ஆண்டின் தொடக்கத்தில் பைடென் பதவியேற்ற நேரத்தில், நீங்களும் ஜோன் ஷிப்டனும் அமெரிக்காவிற்குச் சென்றது இந்தப் படத்தில் காட்டப்படுகின்றது. இந்த புதிய நிர்வாகத்தை வலியுறுத்தும் முயற்சியில் உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தது?

GS: படத்தில் ஜனவரியோடு எங்கள் காட்சிகள் முடிந்தன, ஏனெனில் அந்த இடைப்பட்ட நேரத்தில் நிர்வாகங்களும் வரவிருக்கும் அரசாங்கமும் எதிர்கால கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருந்தன. புதிய நிர்வாகம் சம்பிரதாயமாகப் பொறுப்பேற்பதற்கு முன்னரே அதனைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் முயற்சித்தோம்.

பைடென் நிர்வாகத்தில் உள்ள மனித உரிமைகள் பிரிவுடன் எங்களுக்கு சில தொடர்புகள் இருந்தன. நாங்கள் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினோம், எங்களுக்கு கிடைத்த பதில், “தயவுசெய்து பதவியேற்பு விழா முடியும் வரை காத்திருக்கவும். ஒரு சந்திப்புக்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் அது பின்னர் தான் நடக்கும்” என்பதே. ஆனால் அதன் பின்னர் ஒருபோதும் அவர்களிடமிருந்து எங்களுக்கு பதில் வரவில்லை.

அதன் பின்னர், ஜூன் மாதம் நாங்கள் அமெரிக்காவிற்கு திரும்பி, அமெரிக்கா முழுவதும் 15 நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தோம், மேலும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகள், பேரணிகள், மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தினோம். களத்தில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசினோம், மேலும் மக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு கற்றுக்கொடுத்து ஆதரவாளர் குழுக்களை உருவாக்கினோம். நாங்கள் சில ஊடகங்களை உருவாக்கினோம், அதன் மூலம் அந்த நேரத்தில் ஜூலியனின் பிரச்சினையை பிரதான ஊடகங்களில் மீண்டும் ஒலிபரப்ப முடிந்தது. அது ஒருவிதத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜூலியனை கடத்திச் சென்று கொலை செய்வதற்கான சதித்திட்டங்கள் இருந்தது பற்றி நாம் ஏற்கனவே அறிந்திருந்ததை உறுதிப்படுத்தும் உளவுத்துறை சமூகத்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் யாகூ நியூஸ் நிருபர்கள் செய்த சமீபத்திய விசாரணையை நாங்கள் பார்த்தோம்.

பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே ஜோன் ஷிப்டன் ஊடகங்களிடம் பேசுகிறார் [புகைப்பட ஆதாரம்: இத்தாகா] [Photo: Ithaka]

ட்ரம்பின் கீழ் “சிஐஏ விக்கிலீக்ஸை குறிவைக்கப் போகிறது, அது ஒரு அரசு விரோத உளவுத்துறை அமைப்பாகும்,” என்று கூறிய மைக் பொம்பியோ போன்றவர்களும், மற்றும் ஜூலியன் மீது வழக்கு தொடர்வதற்கான அவர்களது திட்டங்களை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைந்த ஏனையோரும் இருந்தனர், அவர்கள் எதனடிப்படையில் விக்கிலீக்ஸூக்கு எதிராக அனைத்தையும் பரப்பவிருந்தனர்?

பைடென் பதவிக்கு வந்ததன் பின்னர், அது மிகவும் வித்தியாசமானது. ஜூலியன் வழக்கில் என்ன நடக்கிறது என்று நிர்வாகத்தில் எவரையேனும் கேட்டால், அதற்கு அவர்கள் வேறொருவரை கைகாட்டுவார்கள். பிரான்சில் ஜூலியனைப் பற்றி வெளியுறவுத்துறைச் செயலர் பிளிங்கனிடம் கேட்டபோது, அவர், “எங்களிடம் தனிப்பட்ட நீதித்துறை உள்ளது, அது அவர்களின் பொறுப்பு,” என்று கூறினார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியும் அவ்வாறே செய்தார்.

இப்போது நாம் பார்க்கும் நிர்வாகம் செயல்படும் விதம் வேறுபட்டதாகும். அவர்கள் ஆரவாரக் கூச்சலை விரும்புவதில்லை; அவர்கள் தங்களைச் சுற்றி ஒரு பெரிய ஊடக வெறித்தனத்தையும் விரும்புவதில்லை. ஆனால் வழக்கு வாபஸ் பெறப்படாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிஐஏ வெளிப்பாட்டை நீங்கள் திரும்பிப் பார்க்க முடியும், அப்போது அவர்கள் 2017 இல் ஜூலியனைக் கடத்தி கொலை செய்ய ஒரு திட்டம் வைத்திருந்தனர். அது நடத்தப்பட்டது. சட்டத்தின் பின்னணியில், அவர் அரசியல் தஞ்சம் புகுந்திருந்த ஈக்வடோர் தூதரகத்திலிருந்து நீதித்துறை ரீதியாக அவர் கடத்தப்பட்டுள்ளார்.

இன்னும் கூட அவரை கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைக்கக்கூடிய ஒரு வழியை அவர்கள் திறம்பட கண்டுபிடித்துள்ளனர், ஆனால் அதை சட்டத்தின் பின்னணியில் செய்கிறார்கள். சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர், இது நம் கண் முன்னே நடக்கும் ஒரு மெதுவான கொலை என்று கூறுகிறார். இது சிஐஏ திட்டங்களிலிருந்து வேறுபட்டதல்ல. பைடென் நிர்வாகத்தின் கீழ், சற்று மாறுபட்ட விதத்தில் இது தொடர்கிறது.

WSWS: அசான்ஜைப் பற்றி பேச பைடென் இப்போது விரும்பாமல் இருக்கலாம், ஆனால் 2010 இல் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் துணை ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு ஊடகவியலாளராக அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக ஜூலியன் ஒரு “உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி” என்று அவர் கண்டித்தார்.

GS: அது சரியே. பைடென் மற்றும் [குடியரசுக் கட்சியின் செனட் சிறுபான்மைத் தலைவர்] மிட்ச் மெக்கானெல் இருவரும் ஜூலியனை “உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி” என்றே அழைத்தனர். அவர்கள் இருவருமே கிளிப் பேச்சு போல ஒரே மாதிரி சொன்னார்கள். மேலும் ஜூலியனை ஒரு பயங்கரவாதியைப் போல தேசபக்த சட்டத்தின் கட்டமைப்பிற்குள் குற்றம்சாட்டவும், அதனால் அவர் ட்ரோன் மூலம் அல்லது தளத்தில் சுட்டுக் கொல்லப்படலாம் என பேசப்பட்டது. ஜூலியன் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று பிரதான ஊடகங்களில் இருந்து அழைப்புக்கள் வந்தன. இவை அனைத்தும் தங்களுக்குள் திட்டமிட்டன.

விக்கிலீக்ஸை “அரசு விரோத உளவுத்துறை அமைப்பு” என்று பொம்பியோ அழைப்பதைப் போலவே இதுவும் உள்ளது. 2017 இல் அதைப் பற்றி நான் ஜூலியனிடம் பேசினேன், அப்போது அவர், “எங்களுக்குப் பின்னர் முழுநேர சிஐஏ குழுவை நாம் கொண்டிந்தது அதுவே முதல் முறையாகும்” என்றார். அந்த வரையறையின் அர்த்தம், காங்கிரஸ் மேற்பார்வையின்றி ஜூலியன் விடயத்திற்கு சிஐஏ ஒரு முழு அணியை செயலில் ஈடுபடுத்த முடியும் என்பதுடன், விக்கிலீக்ஸ் குறித்து ஈரானிய அல்லது ரஷ்ய உளவுத்துறை சேவைகளுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இவர்களும் பயன்படுத்தலாம் என்பதாகும்.

ஜூலியனைக் கொல்வது அல்லது விக்கிலீக்ஸை பின்தொடர்வது பற்றிய வாஷிங்டன் டிசி இன் ஒருமித்த கருத்து புதிதல்ல, அதைச் செய்ய அவர்கள் நீண்ட காலமாக முயற்சி செய்கிறார்கள்.

WSWS: படத்தின் சக்திவாய்ந்த தருணங்களில் ஒன்றாக, அசான்ஜை நாடுகடத்துவது பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது, என்றாலும் குறுகிய உடல்நல பிரச்சினைகள் குறித்தே அது செய்யப்பட்டது என்பதைக் காட்டும் காட்சிகள் இருந்தன. அதனால் அவரது குடும்பத்தினர் மத்தியில் ஒரு தெளிவான நிம்மதியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. என்றாலும் சில நாட்களில், அதே பிரிட்டிஷ் நீதிபதி பிணை கோரிக்கையை மறுத்தார், அதனையடுத்து இப்போது அமெரிக்காவின் மேல்முறையீடுகளால், அவர் நாடுகடத்தப்படுவதற்கான அனைத்து ஆபத்துக்களும் தொடர்கின்றன. இது பற்றியும், இந்த வாரம் நடைபெறும் விசாரணைகள் பற்றியும் நீங்கள் பேச முடியுமா?

GS: இது ஒரு உணர்ச்சிகரமான திருப்புமுனையாகும். நீங்கள் படத்தில் காண்பீர்கள், அந்த தருணத்தில் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், சமாளித்தோம், மற்றும் அசான்ஜின் நாடுகடத்தல் நிராகரிக்கப்பட்டதை எங்களால் முற்றிலும் நம்பமுடியவில்லை. அடுத்து இரண்டே நாட்களில் அதே நிலை மீண்டும் திரும்பியது, பின்னர் இந்த புதிய விசாரணை நடக்கிறது.

அமெரிக்கா ஆரம்பத்தில் ஐந்து மேல்முறையீட்டு புள்ளிகளை முன்வைத்தது, ஆனால் நீதிமன்றம் அவற்றில் மூன்றை வைத்து மட்டும் வழக்கை தொடர அனுமதித்தது. அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ததன் பேரில், இப்போது மற்ற இரண்டு புள்ளிகளையும் வைத்து சவால் விடுக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த இரண்டில் ஒன்று, ஜூலியன் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்வார் என கண்டுபிடித்த மனநல மருத்துவரான பேராசிரியர் கோபல்மேனின் சாட்சியத்தை குறைமதிப்பிற்குட்படுத்தும் முயற்சியாகும். எனவே மீண்டும், இந்த விசாரணை ஜூலியனையும் அவரது மனநலத்தையும் மையமாக வைத்து நடக்கிறது. இந்த விசாரணையின் வழக்குரைஞர்களில் ஒருவரான கிளேர் டோபின், முன்பு நடந்த விசாரணைகளில் ஒன்றின்போது ஜூலியன் ஒரு “பாசாங்குப் பேர்வழி” என்று அழைத்தார். அதனால் தான், ஜூலியன் அம்பலப்படுத்திய மனித குலத்திற்கு எதிரான உண்மையான குற்றங்கள் மற்றும் ஊழல்களைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அவர் மீது ஒட்டுமொத்த கவனமும் செலுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2010 இல் இருந்தே இந்த தந்திரம் நடக்கிறது. அவர்கள் ஒரு மனிதருடன் விளையாடியிருக்கிறார்கள், பந்துடன் அல்ல.

WSWS: நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கு எப்போதும் அசாதாரணமானதே. அசான்ஜை நாடுகடத்த முயற்சிக்கும் அமெரிக்க அரசாங்கம் அவரை கொலை செய்ய சதி செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது. அந்த குற்றச்சாட்டின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான ஐஸ்லாந்திய குற்றவாளியும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக தண்டனை பெற்றவருமான சிக்கி தோர்டார்சன், அமெரிக்க வழக்கிலிருந்து விடுபடுவதற்கு ஈடாக அவர் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டார். உங்கள் கருத்துப்படி, முழு அமெரிக்க வழக்கையும் நிராகரித்திருக்க வேண்டிய பிரிட்டிஷ் நீதிபதி ஏன் இந்த வழக்கைத் தொடர்கிறார்?

GS: ஆஸ்திரேலிய அரசாங்கம் இன்னும் அதிகமாக ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை இது சற்று ஒத்திருக்கிறது. இதைப் பற்றிய விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஊழல் நிறைந்தவை என்பதைக் காட்ட ஜூலியன் எவ்வாறு அவற்றை அயராது பின்தொடர்ந்தார் என்பது பற்றிய இதுவும் கிட்டத்தட்ட விக்கிலீக்ஸின் மற்றொரு வெளிப்பாடு போன்றதாகும்.

இது சுவீடன் வழக்கு விசாரணையுடன் தொடங்கியது, பின்னர் கிரவுன் வழக்கு விசாரணை சேவை, பிரிட்டிஷ் நீதித்துறை, அமெரிக்க நீதித்துறை, அடுத்து FBI, தோர்டார்சனின் சாட்சியத்திற்கு ஈடாக அவரை விடுவித்தது எனத் தொடர்கிறது. என்னைப் பொறுத்தவரை இது மற்றொரு வெளிப்பாடாகும், அவை நீண்டு கொண்டே செல்லும்.

டேவிட் மற்றும் கோலியாத்தின் உருவகங்கள் எனக்குப் பிடிக்கும். சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிறிய மனிதனை எதிர்த்து ஒரு குருட்டு இராட்சதர் போராடுகிறார், இந்த இராட்சதர் இந்த நிறுவனங்கள் அனைத்தையும் வெறுமனே தட்டுகிறார். இறுதியில், அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஊழல் நிறைந்தவை என்பதையே இது காட்டுகிறது. நாம் வாழும் ஜனநாயக அமைப்பின் மீதான மக்களின் அதிகமான நம்பிக்கையை இழக்க நேரிடும் அளவிற்கு அவர்கள் அதிகம் விளையாடுகிறார்கள்.

1970 களில் நடந்த டானியல் எல்ஸ்பேர்க்கின் வழக்கை நீங்கள் திரும்பிப் பார்த்தால், அவரது மனநல மருத்துவர்கள் அமெரிக்க அரசாங்கத்தால் வேவு பார்க்கப்படுவது தெரியவந்தது, மேலும் அவருடைய வீட்டில் கொள்ளையடிக்க குழாய் செப்பனிடுபவர்கள் போல மாறுவேடத்தில் முகவர்களை அவரது வீட்டிற்கு அனுப்பினர், அனைத்தும் ரிச்சார்ட் நிக்சன் மீதான அரசியல் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டிருந்தது. நீங்கள் யாரையாவது மிக உயர்ந்த மட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஜூலியன் விவகாரத்தில் அதையொத்த ஒன்றை நாம் கண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

Loading